Wednesday, April 15, 2020

பொன் பரப்பி



தெரு முனையில்தான் மருந்து கடை. இந்த மிகக் குறுகிய தூரத்தை நடந்து சென்று வருவதற்குள் எத்தனை அதிசயங்கள் கண் முன் நடக்கின்றன. இது சென்னைதானா! சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் போது தேன் சிட்டுக்கள் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. சொஞ்சம் கவனித்து பார்த்தால் சிறிய மரங்களில் ஒன்று இரண்டு என ஆங்காங்கே தேன் சிட்டுக்களை காண முடிகிறது. தனித்தனியாக ஒவ்வொரு பறவையின் சத்தத்தையும் தனித்து கேட்கமுடிகிறது. கிளியின் சத்தமும் கேட்கிறது. தூரத்தில் குயிலின் ஓசை. கவித்துவமாக இருக்கட்டுமே என்று சொல்லவில்லை. உண்மை. இவர்கள் எல்லாம் இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள். ஏதோ காக்கைகள் மாத்திரமே நிரந்தர சென்னைவாசிகள் போன்று முன்பெல்லாம் நகரத்தை வட்டம் வருவார்கள். அத்தனை காக்கைகள் இருந்தும் இப்போது அவைகளை பொருட்படுத்த முடியவில்லை. சிங்காரமான தேன்சிட்டும், கண்ணுக்கு தெரியாமல் கூவிக்கொண்டிருக்கும் குயிலும் எண்ணிக்கையில் குறைவுதான். விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போது தெருவில் அவர்களே முக்கிய பிரஜைகள் என்று ஆகிவிட்டார்கள். காகங்களின் இருப்பு பொருளற்று போய்விட்டது.  

பறவைகள் எதுவும் அற்று காகங்கள் மாத்திரமே இருந்தபோது அவைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்திவிட்டன.  பாழடைந்த கோட்டையில் வெறும் வவ்வால்கள் மாத்திரமே இருப்பதை போன்று பிரம்மாண்டமான இந்த நகரத்தை காகங்கள் ஆட்ககொண்டு இருந்தன. பாழடைந்த இடத்தில் உலாவும் வவ்வால்களை யார் ரசிப்பார்கள்? அதே போன்றுதான் இந்த நகரமும் அப்போது இருந்தது. இப்போது எங்கிருந்தோ இருந்து வந்திருக்கும் இந்த புது விருந்தாளிகள் காகங்களுக்கே கூட புது பொலிவை ஏற்படுத்திவிட்டன. சுற்றுப்புறத்தை மிகவும் அழகுபடுத்திவிட்டார்கள். காகங்களை பொருட்படுத்தமுடியவில்லை என்றாலும் வெறுக்கத்தக்க பறவைகளாக அவைகள் இப்போது இல்லை. பறவை இனங்களோடு அவைகளும் பத்தோடு பதினொன்றாக சேர்ந்து கொண்டன.

இந்த சுற்றுச்சூழல் இப்போது மனிதர்களை அனுமதிக்க மறுக்கிறது. சிறிய தெருவை கடந்து வருவதற்குள் ஒருவித அந்நிய தன்மை ஏற்படுகிறது. இங்கு உலாவுவதற்கு உனக்கு அனுமதி இல்லையே? என்று சுற்றுச்சூழலே நம்மைப் பார்த்து சொல்வது போன்று இருக்கிறது. செல். இங்கு நிற்காதே. இங்கு உனக்கு அனுமதி இல்லை. நான்கு சுவர்களுக்குள் இரு. இல்லை என்றால் மொட்டை மாடிக்கு போ என கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. செய்வதற்கு எந்த வேலையும் இப்போது இல்லை. துவைத்த துணிகளை மொட்டை மாடிக்கு கொண்டு போய் காய வைப்பதே இந்நாட்களின் மிகப்பேரிய வேலையாக அமைந்து விட்டது.

மொட்டை மாடிக்கு சென்று துணிகளை காயவைக்கும் போது மஞ்சள் நிற மலர்களை தன்னிடமிருந்து உதிர்த்துவிட்ட மரத்தை காண நேர்ந்தது. நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் போது நிச்சயம் இதனை கவனித்து இருக்கமுடியாது. அந்த மரத்தின் தழைகளின் அடர்த்தியின் சுற்று வட்டத்திற்கு ஏற்ப மஞ்சள் மலர்கள் தரையில் வட்டமாக சிதறிக் கிடக்கின்றன. மரம் தன்னைத்தானே அலங்கரித்துக் கொண்டது போலும். முதல் நாள் மஞ்சள் மலர்களை அள்ளியிறைத்து அலங்கரித்திருக்கும் அந்த காட்சி அதிகமாக கவனத்தை ஈர்த்துவிட்டது. பொன் மஞ்சள் நிறம் அம்மலர்களின் நிறம். யாரோ கூடை நிறைய மலர்களை அள்ளிக் கொண்டு வந்து மரத்தடியில் தூவி விட்டது போன்ற பேரழகு கொண்டது காட்சி அந்த காட்சி.

இரண்டாவது நாள் துணி காய வைக்க செல்லும் போதும் வாடியும் வாடாமலும் இருக்கும் அள்ளித்தெளித்த அந்த மலர்களின் அழகிய காட்சியை கண்டிப்பாக மொமைலில் படம் எடுத்துவிட வேண்டும் என்ற தீர்மானம். குருவிகளின் சத்தத்தைக் கேட்பதற்கு மாத்திரம் அல்ல இந்த மரம் தன்னில் இருந்து உதிர்த்து தன்னையே அழகுபடுத்தியிருக்கும் காட்சியைக் காண்பதற்கும் நிசப்தம் தேவைப்படுகிறது. இது வீட்டுக்கு பின்புறம்.

வீட்டின் முன்பு இருக்கும் இரண்டு கொன்றை மரங்கள் செந்தூர நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் மலர்களை நீண்ட நாட்களாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அம்மலர்களின் மீது அவ்வளவு பிரியம் அந்த கொன்றை மரத்திற்கு. பொன் மலர்களைக் கொண்ட கொன்றை மரம் தன் மலர்கள் மீது பற்றே இல்லாமல் உதிர்த்து பற்றற்று நிற்கிறது. நெருப்புத் தீகளாக மரமே பற்றி எறிவது போன்று நிற்கும் கொன்றை மரம் சுடும் தீயை உதரிவிட மனம் வராமல் அதனை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறது. பொன் மலர்கள் கொண்ட மரம் மாத்திரம் அவைகளின் மீது துளியும் விருப்பம் இல்லாத துறவி போன்று மொத்த மலர்களையும் உதிர்த்து விட்டு நிற்கிறது. எனக்கு வேண்டாம் இந்த பொன் மலர்கள் என்று நிற்கிறது அந்த மரம்.  

சுடும் நெருப்பை உதறிவிடுவதும், கண்ணைக் கவரும் பொன்னை வாரி அள்ளிக் கொள்வதும் மனித இயல்பு. அதற்கு நேர்மாறாக இருக்கும்  இயற்கையின் இந்த இயல்பு விச்சிதிரமானது. உதிர்த்தலும் சேர்த்துக் கொள்ளுதலும் நமக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள ஒற்றுமையின் முரண்பாடு. 

கொன்றை மரங்கள் தங்களுக்கு என மலர் என்று ஒரு நிறத்தை கொண்டு நிற்பதில்லை. அதன் வடிவங்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. புலி நகத்தைப் போன்ற சிவப்பு நிற மலர்கள் கொண்ட கொன்றை மரங்கள், செம்பருத்தி இதழ்கள் போன்று மலர்கள் கொண்ட கொன்றை மர மரங்கள், காந்தல் மலர் இதழைப் போன்று வடிவங்கொண்ட கொன்றை மரங்கள் என சுற்றிலும் கொன்றை மரங்கள் பொன் மஞ்சள் நிறத்திலும், செந்தூர நிறத்திலும், அடர் சிவப்பு நிறத்திலும் இந்த வேனிற்காலத்தில் வண்ண மலர்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருக்கின்றன.

இப்போது வீட்டின் பின்னால் இருக்கும் இந்த வேனிற்காலத்து கொன்றை மலர் தன்னை பற்றின ஆழ்ந்த பதிவை இந்த பேரிடர் காலத்தில் மனதுக்குள் ஏற்படுத்திவிட்டது. அள்ளி தெளித்த அந்த பொன் மலர்களுக்கு சொந்தமான கொன்றை மரத்தை பொன் பரப்பி என்று அழைக்கத் தோன்றுகிறது. 

          காகங்கள் பறந்து செல்கின்றன, தெருவின் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு விட்டுக்கு இணைக்கப்பட்டுள்ள கம்பி ஒன்றின் மீது தேன் சிட்டு அமர்ந்து கொண்டு ட்வீக் ட்வீக் என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இந்த பெருநகரத்தின் பேரிரைச்சல் இவைகளின் அழகை முற்றிலும் மனதில் இந்து அகன்று போக செய்திருந்தது. கடலின் பேரிரைச்சலே அதற்கு போட்டி போட முடியாமல் இருந்தது. இன்னும் கொஞ்சம் நாட்கள். நகரம் மீண்டும் இயல்பற்ற பழைய நிலைக்கு திரும்பிவிடும். அப்போது நிறங்களின் அழகும், குருவிகளின் இனிய குரல்களும் மீண்டும் கரைந்து போய் விடும்.     

 


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...