Monday, March 23, 2020

பேரிடர் காலங்களும், நீடிக்கும் பெருங்காதல் கதைகளும்


Giovanni Boccaccioவின் The Decameron  நூறு கதைகளின் தொகுப்பைக் கொண்ட மறுமலர்ச்சி காலகட்டத்தின் பேரிலக்கியம். அதில் இருந்து ஒரு கதையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. வாசித்த அந்த கதை லத்தின் அமெரிக்க இலக்கியத்தில் உள்ள மற்றொரு கதையை நினைவுக்கு கொண்டு வந்தது. இந்த இரண்டு கதைகளும் கொள்ளை நோயை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதைகள். மையக்கதை என்னவோ என்றும் அழியாத மானுடத்தின் ஒப்பற்ற கதையான பெருங்காதலைப் பற்றியது. டெக்கமரனின் அந்த கதை நீண்ட நட்களுக்கு மனதில் இருந்து அகலாமல் அப்படியே நிலைகொண்டுவிட்டது. அக்கதையின் தலைப்பு "Federigo's Falcon".
கதைக்குள் செல்வதற்கு முன்பு Boccaccioவின் நூறு கதைகள் உருவான கதையை தெரிந்து கொண்டால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். நூறு கதைகளும் இந்த சுவாரசியமான ஒரு கதைக்குள் பொதிந்து இருக்கிறது. அதாவது கதைக்குள் கதை. Florenceல் Black Death என்னும் கொள்ளை நோய் ஊரையே வாரி வாயில் போட்டுக் கொண்டிருக்கிறது. பத்து பேர் மாத்திரம் கொள்ளை நோய்க்கு தப்பி Florenceயை விட்டு வெளியேறுகிறார்கள். Florenceக்கு வெளியே ஒரு நாட்டுபுற மாளிகையில் பத்து பேரும் தஞ்சம் அடைகிறார்கள். பத்து நாட்களுக்கு வெளியே போக முடியாது. அந்த பத்து நாட்களையும் ஒன்றும் செய்யாமல் அந்த நாட்டுபுற மாளிகையில் சும்மாவே இருக்க வேண்டும். பத்து நாட்களும் எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்க வேண்டும். அந்த பத்து பேரில் ஏழு இளம் பெண்கள் மூன்று இளம் ஆண்கள். பத்து பேருக்கும் யோசனை ஒன்று பிறக்கிறது. பத்து நாட்களையும் கொள்ளை நோயைப் பற்றின பயம் இன்றி, நாட்களின் சுமையைப் பற்றின அலுப்பின்றி கடத்தியாக வேண்டும். அதற்கு ஒரே ஒரு வழி பத்து நாட்களுக்கும் பத்து பேரும் ஒவ்வொரு நாளும் ஆள் ஒருவருக்கு பத்து கதைகள் சொல்ல வேண்டும். இப்படி கதைகள் மொத்தம் சொல்லித் தீர்ந்த பின்பு இறுதியில் அவர்களிடம் 10X10=100 கதைகள் இருக்கும். அந்த பத்து பேரின் நூறுகதைகள்தான் The Decameron . டெக்கமரன் என்றாள் ’பத்து நாட்கள்’ என்று அர்த்தம்.
பத்து கதைகளில் ஒரு கதையான Federigo's Falcon அவ்வளவு சிறப்பாக இருக்குமானால் மத்த 99 கதைகளும் சிறப்பாதத்தான் இருக்க வேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இந்த கதை ஐந்தாவது நாளில் சொல்லப்பட்ட ஒன்பதாவது கதை.
முன்பொரு காலத்தில் Federigo என்ற வாலிபன் ஒருவன் இருந்தான். அவன் பேரழகு கொண்ட Monna Giovanna என்ற பெண்ணை காதலித்து வந்தான். அவளை எவ்வளவு பின் தொடர்ந்தும் அப்பெண் Federigoவின் கதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அவளுக்காக அவன் தன் சொத்து முழுவதையும் இழக்கிறான். கடைசியில் அவனுக்கு எஞ்சியிருந்தது அவனுடைய Falcon மாத்திரமே. அந்த பெண்ணுக்கு அடுத்தபடியாக அவன் நேசித்த ஒன்று இருக்குமானால் அது அந்த Falcon மட்டும்தான். Monna வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள். சீக்கிரத்தில் அவனும் இறந்து விடுகிறான். தன் மகனோடு Monna தனிமையில் வாழ ஆரம்பிக்கிறாள். Federigoவுக்கு Monna மீது கொண்ட காதல் காலத்தால் கொஞ்சமும் குறையவில்லை. அவன் அவள் நினைவாகவே தன் Falconனோடு வறுமையில் தனித்து வாழ்கிறான். Federigonவின் Falcon மீது Monnaவின் மகனுக்கு பெரும் ஆசை. Falconயை Federigoவிடம் நேரில் சென்று கேட்க தைரியம் இல்லை. அவனால் அந்த விருப்பத்தை வெளியில் சொல்லவும் முடியவில்லை. Falcon பற்றிய ஏக்கத்தில் சிறுவன் நோய்வாய் படுகிறான். தாய் அவனிடன் அவன் ஏக்கத்திற்கான காரணம் என்ன என்று கேட்கிறாள். அவன் Federigoவின் Falconயைப் பற்றி சொல்கிறான். தான் சென்று கேட்டால் கண்டிப்பாக ஃபெடரிகோ Falconயை தருவார் என்று அவள் உறுதி அளிக்கிறான். சிறுவனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. உடல் நிலையும் தேற ஆரம்பிக்கிறது.
ஃபெடெரிகோ இன்னும் தன்னை காதலிக்கிறான் என்பது அவளுக்கு நன்றாக தெரியும். நிச்சயம் அவன் Falconயை தன் மகனுக்கு தருவான் என்பதும் உறுதி. உதவிக்கு ஒரு வயதான பெண்ணை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஃபெடெரிகோவை சந்திக்க செல்கிறாள். என்றும் வராத ஒருவர் அதுவும் யாருக்காக வாழ்க்கையையே தொலைத்துவிட்டு காத்திருக்கிறானோ அவள் இப்போது தன் வீட்டிற்கு வந்திருக்கிறாள். அவனோ வறுமையில் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறவன். வந்தவருக்கு விருந்தளிக்க வீட்டில் எதுவும் அவனிடம் இல்லை. யாருக்காக தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்தானோ அவள் இப்போது அவன் வீட்டு படியேறி வந்திருக்கிறாள். அவளுக்கு என்று கொடுப்பதற்கு அவனிடம் இப்போது எதுவும் இல்லை. அவர்களை அமரச்செய்துவிட்டு. சமையலறைக்குச் சென்று என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறான். அவன் எதிரில் அவனுடைய செல்லமான Falcon நின்று கொண்டு இருக்கிறது. யோசனை பிறக்கிறது. Falcon கழுத்தை திருகி கொன்றுவிடுகிறான். இறக்கைகளை அகற்றி சுத்தம் செய்து நல்ல சூப் ஒன்றை தயார் செய்து தன் பிரியமான மோனாவுக்கு விருந்தளிக்கிறான்.
சூப்பை அருந்தி முடித்தவுடன் தான் வந்த நோக்கத்தை ஃபெடெரிகோவிடம் சொல்கிறாள். மரணப் படுக்கையில் இருக்கும் தன் மகனை காப்பாற்றக் கூடியது அந்த Falcon ஒன்றுதான் என்று சொல்கிறாள். இதை கேட்டுவிட்டு அதிர்ச்சியில் ஃபெடரிகோ கத்தி அழ ஆரம்பிக்கிறான். Falconனைக் கொன்று சூப் செய்து உபசரித்ததை கேட்டபோது மோனாவுக்கு முதலில் கோபம் வருகிறது. தனக்காக மாத்திரமே அவன் இதனை செய்திருக்கிறான் என்பதை உணர்ந்த பிறகு பதில் ஏதும் பேசாமல் வீடு திரும்புகிறாள். வீட்டில் மகன் Falcon எங்கே என கேட்கிறான். Falcon இல்லை என்று தெரிந்ததும் மீண்டும் அவன் உடல் நிலை மோசமாகிறது. சிறுவன் இறந்து விடுகிறான்.
தன் கணவனும் இல்லாமல் மகனும் இல்லாமல் யாருமற்று இருக்கும் நிலையில் மோனா ஃபெடரிகோவின் தூய்மையான காதைலை உணர ஆரம்பிக்கிறாள். அவளுடைய சகோதரர்கள் அவளிடம் “உனக்கிருந்த மகனும் இப்போது இல்லை. தனியாக இருக்கிறாய். ஏன் நீ இன்னொரு திருமணம் செய்து கொள்ள கூடாது” என்று கேட்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்த தனக்கு இனி இன்னொரு வாழ்க்கை வேண்டாம் என்கிறாள். மீண்டும் மீண்டும் அவள் சகோதர்கள் அவள் திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்துகிறார்கள். வேண்டுமென்றால் தான் ஃபெடெரிகோவை திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறாள். காரணம் அவன் மாத்திரமே அவளுக்காக மாத்திரமே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறவன். இதைக் கேட்டு அவள் சகோதரர்கள் சிரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒன்றுமற்ற ஓட்டாண்டியான அந்த பைத்தியக்காரனையா திருமணம் செய்து கொள்ள போகிறாய்? என்று அவர்கள் கேலி செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவன் தன் மீது கொண்ட காதல் உண்மையானது என்றும் அவன் இன்நாள் வரைக்கும் தனக்காகவே வாழ்கிறான் என்றும் அவர்களிடம் சொல்லிவிட்டு ஃபெடெரிகோவுடன் வாழ மோனா புறப்படுகிறாள்.
இந்த கதையை வாசித்து முடித்தவுடன் காபிரியேல் கார்சியா மார்க்யேசின் Love in the Time of Cholera நாவல் நினைவுக்கு வந்தது. அப்படியே இந்நாவல் அந்த ஐந்தாவது நாளில் சொல்லப்பட்ட ஒன்பதாவது கதையை விரிவுப்படுத்தி நாவலாக எழுதியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. பெரும் இலக்கியங்கள் இது போன்று பேரிடர் காலகட்டங்களை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது. கதை என்னவோ ஒன்றுதான். ஒப்பற்ற பெருங்காதலின் காவியக்கதை. அதன் விரிவாக்கமும் சுருக்கமும் வேண்டுமானால் காலத்துக்கு காலம் மாறுபடலாம் கதை என்னவோ ஒன்றுதான்.
Florentino Ariza ஃபெடெரிகொவைப் போன்றே தன் வாழ் நாள் முழுமையும் ஒரு பெண்ணுக்காக காத்திருப்பில் செலவிடுகிறான். அவள் கிடைப்பாள் என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. எனினும் திருமணமான அந்த பெண் நிமித்தம் தன்கென்று ஒரு வாழ்க்கையை தேடிக் கொள்ளாமல் தனிமையில் அவன் வாழ்கிறான். அல்லது காத்திருக்கிறான். Fermina Daza அவனுக்கு கிடைக்காமல் போகலாம், எனினும் காதல் நிமித்தம் அவன் அவளுக்காக காத்திருக்கிறான். Fermina Dazaவின் கணவன் ஒரு மருத்துவர். அவர் செல்லமாக பேசும் கிளி ஒன்றை வளர்க்கிறார். மிகவும் துஷ்ட கிளி அது. Dr. Urbino பேசும் வசவு வார்த்தைகளைக்கூட அப்படியே திரும்ப சொல்லும் கிளி அந்த கிளி. Scoundrel என்று திட்டினால் திரும்ப “You Scoundrel” என்று பதில் சொல்லும். ஒரு நாள் அவர் வீட்டின் கொல்லை புறத்தில் இருக்கும் மாமரத்தில் போய் அமர்ந்து கொள்கிறது. அதை பிடிக்க Urbino ஏணியை வைத்து மரத்தில் ஏறுகிறார். ஏணியில் இருந்து இடறி கீழே விழுந்து இறந்துவிடுகிறார். நல் அடக்கத்திற்காக ஆலய மணி அடிக்கிறது. செத்துப் போனது Urbinoதான் என்பதை நிச்சயித்து கொள்கிறான் Florentino. இறுதி அடக்கம் முடிந்தவுடன் தனிமையில் Daza வீட்டில் இருக்கிறாள். பல ஆண்டுகளுக்கு பிறகு கணவனை இழந்த காதலியை அதுவும் வயோதிகத்தில் இருக்கும் தன் காதலியை பார்க்க வருகிறான். அவளை சந்திக்கும் போது அவனுடைய பதில், “Fermina, I have waited for this opportunity for more than half a century, to repeat to you once again my vow of eternal fidelity and everlasting love.”  பொருத்தமற்ற நேரத்தில், தன் காதலை இவ்வாறு சொன்னதற்கு அவனை வசைபாடி அனுப்புகிறாள். Florentinoவின் காதலை உணர்ந்த Fermina கடைசியில் அவனுடனே வாழ செல்கிறாள். இதை அறிந்த அவளது மகள் அவளை விமர்சிக்க ஆரம்பிக்கிறாள். அவளுடைய இந்த இறுதியான முடிவுக்கு மகள், மகன்கள் யாரும் இசைவு தெரிவிக்க மறுக்கிறார்கள். கப்பல் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கும் Florentino ஃபெர்மினாவை அழைத்து கொண்டு குறிக்கோள் எதுவும் இல்லாமல் எங்கேயோ பயணிக்க ஆரம்பிக்கிறான். காலரா தொற்று நோயின் கால கட்டம் அது. அந்நேரத்தில் எந்த கப்பலிலாவது காலரா தொற்று பீடித்தவர்கள் இருந்தால் அதற்கான கொடியை கப்பல் மீது ஏற்றுவார்கள். அது உதவிக்கான அழைப்பு. கொடியை பார்த்ததும் ஒருவர் கூட உதவிக்கு வரமாட்டார்கள். பயந்து கொண்டு தப்பி ஓடிவிடுவார்கள். யாரும் தங்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக அந்த கொடியை அவன் தன் கப்பலில் ஏற்றி கொள்கிறான். கப்பல் காலத்தின் கணக்கின்றி, சென்று சேரும் இலக்கின்றி ஏதோ ஒரு திசையில் காதலின் கதையைச் சுமந்து கொண்டு பயணிக்கிறது.
கொள்ளை நோய் மக்களை அச்சுறுத்திக் கொண்டும் உயிரை வாங்கிக் கொண்டும் இருக்கின்ற பேரிடர் கால கட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் தனிமையில் ஒரு மூலையில் எழுத்தாளன் ஒருவன் பேரிலக்கியம் ஒன்றை படைக்கிறான். அல்லது அதனை பின்புலமாகக் கொண்டு. இது காலம் காலம்காலமாக நடந்து கொண்டிருக்கும் இலக்கியத்தின் மாறாத சுழற்சி முறையாக இருந்து வருகிறது. அரசியல்வாதிகள், சமூக ஆர்வளர்கள், சாமானியர்கள் பயந்து பீதி கொண்டிருக்கும் நேரத்தில் இலக்கியவாதி ஒருவன் மாத்திரம் அக்கறையின்றி இலக்கியம் படைக்கிறான் என்று சொல்வோமா. புறம்பாக நம்பிக்கை அற்று இருந்த போதிலும் ஏதோ ஒரு இடத்தில் உயிர் மீட்சி அழிவில் இருந்து நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. அந்த அழிவின் மத்தியில் நடக்கும் உயிர்மீட்சியின் நிகழ்வுக்கான சிறிய பதில் கிரியைதான் இந்த மாபெரும் இலக்கியங்கள் என்று சொல்வோமா. எது எப்படியோ பேரிடர் காலங்களில் உயிர் மிட்சிக்கு பிரதிக்கிரியையாக எப்பொழுதும் ஒரு காதல் காவியம் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.               

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...