Saturday, March 21, 2020

பொந்தன் மாடன்



பொந்தன் மாடன் ஒரு வீட்டுக்கு சொந்தமானவன் அல்ல. எந்த வீடும் அவனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. குடும்பம் அவனுக்கு கிடையாது. வீடு, குடும்பம் என எதை அவன் தேடிக்கொண்டாலும், அல்லது அவனுக்கு கொடுக்கப்பட்டாலும் அவைகள் நீடிக்கப்போவதில்லை. எதுவுமற்று தன் மண்ணில் சுற்றித் திரிவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை. மிகவும் வித்தியாசமான மனிதன் இந்த பொந்தன் மாடன். வீடு கட்டிக் கொள்வதும், குடும்பத்தை தேடிக் கொள்வதும் மனிதன் காலம் காலமாக தனக்கென நிறைவேற்றிக் கொள்ளும் அத்தியாவசியக் கடன்கள். இவைகள் எதுவுமே இல்லாமல் ஒருவன் வாழ்வின் முடிவுவரை வாழ்ந்துவிட்டால் அவன் பெரும்பான்மையில் இருந்து தனித்து நிற்பவனாக மாறிவிடுகிறான். இந்திய சமூகம் அப்படிப்பட்ட மனிதனை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. பொந்தன் மாடன் முக்கியப்படுத்திப் பார்க்க வேண்டிய ஒருவன். அவனை தனித்தவனாக பார்க்கும் போது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவனாக தெரியமாட்டான். பொந்தன் மாடனை தனித்து காட்டி முக்கியத்துவம் பெற்ற மனிதனாக பார்க்க வேண்டும் எனில் அவனை போன்று அவனல்லாத வேறு ஒருவனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாத்திரமே அவன் தனித்து தெரிவான்.     
இங்கிலாந்தில் இருந்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சீமை தம்பிரான் பொந்தன் மாடனை யார் என்று தனித்துக் கட்டும் மற்றமையின் இடம். சீமைத்தம்பிரான் மூலமாக பொந்தன் மாடனை பார்க்கும் போது அவன் இலக்கிய நாயகனாக மாறிவிடுகிறான். பிரிட்டிஷ் இந்தியாவில் வந்து வசிக்கும் சீமை தம்பிரான் வேண்டுமானால் வரலாற்றுக்கான முக்கிய பாத்திரமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவன் மூலம் கேரளாவில் ஏதோ ஒரு மூலையில் முக்கியத்துவம் அற்று காடு மேடுகளைச் சுற்றித்திரியும் பொந்தன் மாடனை பார்க்கும் போது அவன் யதார்தத்தில் இருந்து விடுபட்டு கதைக்கான பாத்திரமாக மாறிவிடுகிறான். இது சீமைத்தம்பிரான் மூலம் சாத்தியப்படுகிறது.
சீமைத்தம்பிரான் நாடற்றவனாக இந்தியாவுக்குள் பிரவேசிக்கும் போது அவன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரே நபர் மாடன் மாத்திரமே. இருப்பினும் இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிக அதிகம். வீடுகளுக்குள் அனுமத்திக்கப்படாத ஒருவனுக்கு, அருகில் நின்று பேசுவதற்கு தகுதியற்ற ஒருவனுக்கு ஊரே கைகூப்பி கும்பிடும் சீமைத்தம்பிரான் நண்பனாகிறான். நட்பு தனிமையில் பரிமளிக்கிறது. அருகில் நின்று பேசுவதற்கு மக்கள் மத்தியில் அவர்களுக்கான இடைவெளி மிக அதிகம். அந்த இடைவெளியின் தூரம் நட்பின் அணுக்கத்தை தூரப்படுத்துவதில்லை.
இரவு முழுவதும் இருவருக்கும் பேசிக் கொள்வதற்கு விசயங்கள் பல இருக்கின்றன. அந்த நட்பின் உரையாடலுக்கு மத்தியில் மிகப்பெரிய இடைவெளி ஒன்று உள்ளது. தடையாக நிற்கும் இடைவெளியை எவ்வாறு பொந்தன் மாடன் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறான் என்பது கவித்துவமானது. சீமைத்தம்பிரானின் முதல் மாடி அறையின் ஜன்னலுக்கு வெளியே பாக்கு மரம் ஒன்று நிற்கிறது. பாக்கு மரத்தில் பாதி ஏறிக்கொண்டால் ஜன்னல் வழியே சீமைத்தம்பிரானை பார்க்க முடியும். அங்கிருந்து சீமைத்தம்பிரான் பொந்தன் மாடனோடு உரையாட ஆரம்பிக்கிறார். மிக ஒல்லியான பாக்கு மரத்தில் ஒருவன் பாதியில் நின்று பொந்தன் மாடன் சீமைத்தம்பிரானுடன் பேசுவதையும் ஜன்னலுக்கு அந்த பக்கத்தில் இருந்து சீமைத்தம்பிரான் பொந்தன் மாடனிடன் அவன் ஏதோ தன் எதிரில் சொகுசு இருக்கையில் அமர்ந்து பேசுவது போன்று அவனுடன் உரையாடுவதும் யதார்த்தவாதம் தன்னுள் கட்டமைத்திருக்கும் அழகியல் என்றுதான் சொல்ல வேண்டும்.
சீமைத்தம்பிரான் பாக்கு மரத்தில் நின்று கொண்டு பேசும் பொந்தன் மாடன் மீது இரக்கம் காட்டியிருக்கலாம். தன் அறைக்குள் அவனை அழைத்திருக்கலாம். இவைகள் எதுவுமே மாடனுக்கு வாய்க்காத வசதிகள். அவனுடைய இருப்பிடம் வீட்டுக்கும் குடும்பத்துக்கும் வெளியே இருக்கும் வெட்ட வெளி. இதே நிலைதான் இங்கிலாந்தில் சீமைத்தம்பிரானுக்கும். அவர் நாடுகடத்தப்பட்டவர். மாடன் ஒதிக்கி வைக்கப்பட்டவன். இந்த ஒதுக்கி வைத்தலுக்கும், நாடுகடத்தலுக்கும் இடையேயான மிக நீண்ட இடைவெளியை வலியின்றி இருவரும் நட்புக்கான களமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இல்லையெனின் எப்படி ஒருவன் ஒரு இரவு முழுவதும் தன் சினேகிதனுடன் பாதி மரத்தில் நின்று கொண்டு உரையாடிக்கொண்டிருக்க முடியும்.
நட்பின் இனிமைக்கு முன்னால் இந்த இடைவெளியும், பாதி மரத்தில் நிற்கும் உடல் வலியும் பொந்தன் மாடனுக்கு பொருட்டள்ள. இருவருக்கும் இடையில் இருப்பது ஜன்னலும் வெட்டவெளியும் தான். மாடன் இடைவெளிகளைக் கடந்து சீமைத்தம்பிரானின் உள்ளத்திற்குள் பிரவேசிக்கிறான். சீமைத்தம்பிரானின் உள்ளத்திற்குள் சென்று அவனுடன் பேச முடிந்த மாடனால் அவன் அறைக்குள் பிரவேசிக்கவே முடிவதில்லை. இடைவெளி சீமைத்தம்பிரானிடம் அருகில் செல்ல விடாமல் ”வழிமறைத்திருக்குதே” என்றுதான் சொல்ல வேண்டும். சீமைத்தம்பிரானின் அந்த அறை மாடன் உடலால் ஸ்பரிசிக்க முடியாத ஸ்தலமாக மிக தூரத்தில் இருக்கிறது.
சீமைத்தம்பிரான் ஊரைவிட்டு சென்ற பின்பு அந்த அறை மாடனுக்காக திறக்கப்படுகிறது. உள்ளே பிரவேசிக்கும் அவனுக்கு அது ஒரு புது அனுபவமாக இருக்கவில்லை. சீமைத்தம்பிரானின் நினைவுகளோடுதான் அவன் பிரவேசிக்கிறான். அவனுக்கு அது நினைவுகளின் குவியல் நமக்கு மாறுபட்ட எதிர்கோணங்கள் சங்கமிக்கும் இடம்.  திரைக்கும் பிரதிக்கும் வெளியே நின்று கொண்டு பார்க்கும் நமக்கு மாடனால் ஸ்பரிசிக்கப்படும் அந்த அறை அதி முக்கியமாக படுகிறது. இப்போது அந்த இடம் சீமைத்தம்பிரான் இல்லாத இடம். அது உயிரற்ற இடம். மிக நீண்ட நாட்களுக்கு பின்பு ஜன்னல் வழியே ஒருகாலத்தில் தான் அந்த அறையில் இருந்த சீமைத்தம்பிரானை தரிசித்த அந்த பாக்கு மரத்தை மாடன் பார்க்கிறான். இதுவும் யதார்த்தவாதத்தின் கவித்துவமான தருணம். அந்த அறையும், மரமும் இப்போது பொருள் அற்றவைகள்.
முன்பு இருந்த அந்த தூரத்தின் இடைவெளி இப்போது கிடையாது, சமுக ஏற்றத்தாழ்வின் படிநிலைகளும் கிடையாது. மாடனால் மிக எளிதில் அறைக்குள் நுழைய முடிகிறது. மிகப்பெரிய இடைவெளியின் மத்தியில் பராமரித்த நட்பு இப்போது இல்லை. சீமை தம்பிரான் இல்லாத ஊரில் இப்போது மாடன் திரும்பவும் யதார்த்தத்தில் பொருள் அற்றவனாக கரைந்து போய்விடுகிறான்.   

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...