Monday, February 24, 2020

தனித்து நிற்கும் எருக்கஞ்செடி


இன்று காலையில் நடை பயணம் செல்லும் போது எருக்கஞ்செடி ஒன்று கண்ணில் பட்டது. நகரத்தில் செடிகளும் பறவைகளும் அபூர்வமாக கண்ணில் படும் போது அவைகள் அதி முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. அதுவே கிராமம் என்றால் அவைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இங்கே ஜன நெருக்கடியின் மத்தியில் ஒற்றை ஆளாய் இவைகள் முக்கியத்துவம் பெற்று தனித்து நிற்கின்றன. தனித்து நிற்பவர்களுக்கே எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நகரத்திலேயே பிறந்த ஒருவனுக்கு இவ்வளவு மக்கள் நெருக்கடியை பார்க்கும் போது அது புதிதானது அல்ல. கிராமத்தானுக்கு அது மிரட்சியை உண்டாக்கும். செடியும், பூவும், பறவைகளும்  நகரவாசிகளுக்கு அபூர்வமானவைகள். எருக்கஞ்செடி இன்று கண்ணில் பட்டவுடன் அது அவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாகிவிட்டது. அதுவும் கடற்கரை ஓரத்தில் ஒரு செடி தனித்து நிற்கும் போது ”இங்கே ஒருவன் உன் பார்வைக்காக தனித்து நிற்கிறேன். என்னிடம் அருகில் வா. வந்து மலர்களையும், இலைகளையும், பிஞ்சு விட்டு இருக்கிற பச்சைக் காயையையும் கொஞ்சம் உன் கேமராவில் படம் எடுத்துக் கொள்” என்று அழைப்பு விடுப்பது போன்று இருந்தது.
எருக்கம் செடியும் சரி, இலவம் மரமும் சரி காய்த்து பயனில்லை. இலவம் பஞ்சாவது தலையணைக்கு பயன்படும். எருக்கஞ்செடியின் பஞ்சு உபயோகமற்றது. கோடைக்காலத்தில் பழுத்து வெடிக்கும் போது வெண் பஞ்சு இழை இழையாக காற்றில் பறக்க ஆரம்பிக்கும். யாருமற்ற வெட்ட வெளியில் வெண்மையான பஞ்சு இழைகள் பறப்பதை பார்க்கும் போது அழகாக இருக்கும். யாரோ ஒருவர் செடியின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு இழையாக பிரித்து எடுத்து காற்றில் பறக்க விடுவது போன்று இருக்கும். பச்சையான அதன் காய் உண்பதற்கு ஏற்றது போன்று தோன்றும். எருக்கஞ்செடியின் நெடி அருகே அண்ட ஒட்டாது. இலையையோ, பூவையோ, காயையோ பறித்தால் பால் சொட்ட ஆரம்பித்துவிடும். ஒருவரின் கையை கத்தியை வைத்து கீறும் போது ரத்தம் வடியுமே அது போன்று. ஒரு செடி அவ்வளவு உயிர் சாரத்தை தன்னுள் வைத்திருப்பதை பார்க்கும் போது மனித உடலின் ஓடும் இரத்தம் நினைவுக்கு வரும். மற்ற செடிகள் அப்படி அல்ல. மரங்களில் ஆலமரமும் செடிகளில் எருக்கஞ்செடியும் வெள்ளை ரத்தத்தை அளவுக்கு அதிகமாக சேமிப்பில் வைத்திருக்கின்றன.
கைபேசியின் கேமராவில் படம் பிடித்து விட்டு வீடு திரும்பும் போது எருக்கஞ்செடியின் குணமும் மனித குணமும் ஒன்றுகொன்று ஒத்திருப்பது போன்று தோன்ற ஆரம்பித்தது. சிலர் ஆலமரம் போன்று அருகே அழைத்து ஆதரவோடு நேசம் கொண்டாடுகிறார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் அவர்களை காயப்படுத்திக் கொள்ளலாம். காயப்படுத்தினால் அழுகையில் வடியும் கண்ணீர் போன்று வெண்மையான திரவம் சொட்ட ஆரம்பித்து விடுகிறது. அவர்கள் பதிலுக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. மனிதர்களில் சிலர் ஆலமரம் போன்றவர்கள். அருகில் சென்று நம் கோபம், மகிழ்ச்சி, சோர்வு, இயலாமை என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். முடிவில் நிம்மதிப் பெருமூச்சோடு பாரத்தை இறக்கி வைத்து விட்டு திரும்பிவிடலாம்.
எருக்கஞ்செடி அப்படி அல்ல. அருகில் செல்லும் போது சீற்றம் கொண்ட மனிதர்கள் போன்று நம்மிடம் நடந்து கொள்கிறது. நம் விருப்பப்படி அருகில் சென்று நமக்கு தேவையானதை பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நம்முடனான சகவாசம் ஓரளவிற்குத்தான். மிதமிஞ்சி நட்பு பாராட்ட முடியாது. அதன் நிழலில் அமர்ந்து இளைப்பாற யாருக்கு மனம் வரும். அநேகர் வெறுத்து ஒதுக்கும் செடி எருக்கஞ்செடி.
அதே நேரத்தில் முற்றிலும் வெறுத்து ஒதுக்க முடியாத செயும் கூட. நம் வீட்டின் முன்புறம் வளர்ந்தால் அகற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. அது அதன் இடத்தில் அதன் பாட்டிற்கு இருந்து கொள்ளும். நீங்கள் வேண்டாம் என்று நாமும் சரி அதுவும் சரி ஒருவரை ஒருவர் ஒதுக்கி வைத்து கொள்ளவில்லை. எருக்கஞ்செடியின் குணம் கோபத்தின் குணம். கோபம் அதனுடைய இயல்பு. அந்த கோபம் யாருக்கும் எந்த தீங்கையும் செய்வதில்லை. அருகில் அண்டவிடாமல் இருப்பது மனிதர்களின் ஒவ்வாமையே அன்றி செடியின் பிரச்சனை ஒன்றும் இல்லை.
அதன் கோபத்தை சற்று பொறுத்துக் கொண்டால் நமக்கும் நல்லதுதான். இச்செடியில் நல்ல மருத்துவ குணம் உண்டு என்றும் சொல்லிவிட முடியாது. தன்னிடம் மருத்துவ குணம் உண்டு என்று அதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. எந்த மருத்துவனும் அதில் இருக்கும் மருத்துவ குணம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. எனினும் இதில் முன் எச்செரிக்கை மருத்துவ குணம் உண்டு. நாய் கடிக்கு உடனடியாக செய்ய வேண்டிய மருத்துவமாக இதன் பாலை கடிபட்ட இடத்தின் மீது தடவுவார்கள். பூச்சி கடி பட்டு வீக்கம் கண்டால் அதே போன்று இதன் பாலை தடவ சொல்வார்கள். தோலுக்கு வெளியில் இருந்து விஷத்தினால் ஏற்படும் வீக்கங்களுக்கு சிகிழ்ச்சை அளிக்கும் நல்ல மருந்து இதுதான்.
வித்தியாசமான நஞ்சினால் வீக்கம் கொண்ட அனேக தடிப்புகள் மனிதர்களிடம் அதிகம் உண்டு. இந்த எருக்கஞ்செடி போன்றவர்கள் அப்படிப்பட்ட தடிப்புகளுக்கும், வீக்கங்களுக்கும் நல்ல மருந்தாக அமைந்து விடுகிறார்கள். அவர்களின் கோபம் வீக்கங்களை கொஞ்சம் ஆரச்செய்கிறது.
தனித்து நிற்கும் எருக்கஞ்செடி ஒற்றை ஆளாய் இன்று மனதில் நீங்காக நினைவாக நின்று விட்டது. இத்தனை நாளும் அந்த வழியாக நடை பயணம் செய்தும், இந்த செடியை பார்த்தும் பார்க்காமலும் இருந்து வந்தாயிற்று. இன்று கவனத்தை அதிகம் ஈர்த்துவிட்டது. வண்டுகளில் குளவிகள்தான் அதிகம் இந்த செடியின் பூவிடம் வந்து தேன் சேகரிக்கின்றன என்பது போன்ற மன பிரம்மை ஏற்படுகிறது.
எருக்கஞ்செடியின் சுவை எது என்று யாருக்கும் தெரியாது. எருக்கஞ்செடியின் பூவை யாரும் சூடிக்கொண்டது கிடையாது. எருக்கஞ்செடியின் கனிந்த காயும் யாருக்கும் பயனில்லாதது. சுவைக்கப்படாத இலைகள், முகரப்படாத மலர்கள், உண்பதற்கு பயனற்ற காய்கள். ஆனாலும், அதன் வெண்மையான பால் வீக்கத்திற்கு நல்லது, அதன் மலரின் வடிவமைப்பு எந்த மலருக்கும் அமையபெறாதது, அதன் வெண்பஞ்சு இழைகள் சிறுவர்கள் பிரித்து விளையாடும் விளையாட்டுப் பொருள். ”உன் வீக்கத்தின் வலியை குறைக்க உன் தோலின் தடிப்பைப் போக்க உன்னிடம் வருகிறேன். அதற்கு மேல் உனக்கும் எனக்கு ஒன்றும் இல்லை” என்று சொல்லும் கோபக்காரனின் வன்மையான சொற்கள் அதனுடையது.   

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...