Sunday, February 16, 2020

வாசி(ரி)ப்பு எனும் தொற்று நோய்க் கிருமி



சென்ற ஆண்டு மே மாத விடுமுறையை வீணாக்காமல் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. வருட இறுதியில் வாசிப்புக்கு ஒரு தமிழ் ஒரு ஐரோப்பிய நாவல் என இருந்தது அந்த முடிவு. முப்பது நாட்கள் விடுமுறை எதையுமே செய்யாமல் வீணடிக்கப்பட்டால் அது குறித்த வருத்தம் காசை வீணாக்கியதற்கு இணையாக இருக்கும். தொடர் விடுமுறைகள் பலனற்ற விதத்தில் விரயம் ஆகும் போது அங்கே மிக பெரிய வெற்றிடமும் வெறுமையும் ஆட்கொண்டு விடுகிறது. 
சென்ற ஆண்டு அது ஏற்படக் கூடாது என்பது மிகத் தெளிவாக இருந்தது. ஏற்கனவே Ph.Dக்காக செலவிட்டு பலன் கிடைக்காமல் போன நாட்களின் வெற்றிடம் வேறு இன்னும் விரிந்து பாதாளம் போன்று பூதாகரமாகிக் கிடக்கிறது. எதை கொண்டு அதனை பூர்த்தி செய்து கொள்வது என்பது தெரியவில்லை. நாட்களின் வெற்றிடத்தை நல்ல கதைகள் மாத்திரமே பூர்த்தி செய்யக்கூடும் என்பது நம்பிக்கை. 
வெறுமைக்கும் வெற்றிடத்திற்கும் சோக ராசம் ததும்பும் கதைகள் சரி வராது. அதற்கு Carnival என்னும் களியாட்டக் கதை அவசியப்படுகிறது/அவசியப்பட்டது. சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் கதையாகவும் அது இருத்தல் வேண்டும். சிரிப்பை தவிர  மன நோய்க்கு நல்ல மருந்து வேறெதுவும் இல்லை. Shellyயும் Keatsம் அப்படிப்பட்ட கதையை வாசித்திருந்தார்கள் என்றால் ‘அல்ப ஆயுசில்’ போயிருக்க மாட்டார்கள். Melancholy என்ற உயிர் குடிக்கும் தேவதையை விட ஆரோக்கியமாக வாழ வைக்கும் Laughter என்னும் தேவதையே ஆகச் சிறந்தவள். 
அந்த ரஷ்ய விமர்சகன் Laughter தேவதையை நம்பினான் பிழைத்துக் கொண்டான். ஆயுசு கெட்டியாக இருந்தது. அவன் காலத்தை சார்ந்த அநேகம் பேர்  காலாவதி ஆகி போனாலும் அவன் மாத்திரம் தனக்கு பின் இருபது வருடங்கள் கழித்து  வரப்போகும் பின் அமைப்பியலுக்கே அச்சாரம் வழங்கியவன். வாசிப்புக்கும் ஆய்வுக்கும் அவன் தெரிந்தெடுத்த பிரெஞ்சு கதை அப்படிப்பட்டது. விசயத்துக்கு வருவோம் அந்த ரஷ்ய விமர்சகன் மானசீகமாக தனக்கு என்று தெரிந்தெடுத்த கதை சென்ற மே மாதத்திற்கு தெரிந்தெடுத்த அதே ஐரோப்பிய கதைதான். நாவல் பதினாறாம் நூற்றாண்டு மறுமலர்ச்சி கால கட்ட நாவல். Gargentua and Pantagruel என்பது அதன் பெயர். மேற்சொன்ன ரஷ்ய விமர்சகன் கார்னிவல்  என்ற கருத்தியலை இந்த நாவலில் இருந்துதான் எடுக்கிறார். அல்லது இடைக்கால திருவிழாவான இந்த carnival என்ற விழாவை கருத்தியாலாக கதையின் மூலம் தெரியப்படுத்தினான். அதெல்லாம் நமக்கு எதற்கு.  பேசிக்கொண்டே போகிற போக்கில் விமர்சகன் பெயரை சொல்ல மறந்து விட்டோம். அவசியம் இல்லைதான். அது ஒரு பக்கம் கிடக்கட்டும். நமக்கெல்லாம் “ஒரு ஊர்ல ஒரு ராஜா” கதைதான் வசதியானது. “எந்த ஊர்? எந்த ராஜ?” என குறுக்கு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. 
சென்ற வருடம் இந்த நாவலை எடுத்து வாசிக்கும் போது விமர்சகன் சொன்ன அந்த Carnival, Grotesque என எதுவும் நினைவுக்கு வரவில்லை. Rabelais, நாவலாசிரியர், நகைச்சுவை என்னும் சித்து (Alchemy) வேலையை திறம்பட நாவலில் செய்திருக்கிறார் எப்பது மட்டும் உணர்ந்து வாசிக்கப்பட்ட ஒன்று. வாசித்து முடிக்க பதினைந்து நாட்கள் எடுத்துக் கொண்டன.  வாசித்து கொண்டிருக்கும் போதே சிரிப்பு என்னும் ரசவாதம் கதைக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்து கொண்டிருந்தது. 
வாசித்து முடித்த ஓராண்டு கழித்து திடீர் என்று ஒரு துணுக்குரள். Carnival!. ஆமாம் எங்கே Carnival?. அது மிகைல் பக்தினுக்குத்தான் வெளிச்சம். நமக்கு அப்படி ஒன்றும் எந்த carnival, Grotesqueம் நாவலில் தென்பட வில்லை. 
இருப்பினும் சென்ற ஆண்டின் அந்த வாசிப்பில் ஏதோ ஒரு carnival என்னும் களியாட்டம் நிகழ்ந்தது. நிச்சயம் அது நாவலில் நிகழ்ந்த ஒன்று அல்ல. ஆனாலும் நாவலில் அல்லாத அந்த carnival நாவலுக்கு உரியதுதான். அது என்ன என்பது கடைசி வரையிலும் நாவலுக்கு உள்ளே தேடினாலும் கிடைக்கவே இல்லை. எனினும் அந்த விடுமுறை நாட்களில் அந்த carnival கொண்டாட்டம் அரங்கேறியது. வாசித்து முடிக்கும் வரை தமிழகத்தில் ஒரு மாபெரும் கொண்டாட்டமாக முகநூலில் அது இருந்தது. நாவலில் தேடிய அந்த கொண்டாட்டம் அல்லது களியாட்டம் முற்றிலும் ஒரு கோமாளியை  சுற்றிலும் மையமிட்டு இருந்தது. நேசமணி அப்போது ட்ரென்டிங்கில் இருந்தார். நேசமணி தமிழகத்தின் தலைசிறந்த கோமாளி கூத்தனாக வலம் வந்தார். எப்படி இந்த நேசமணி அவ்வளவு பிரபலம் ஆனார் என்பது இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இரகசியமகவே இருக்கிறது. 
சென்ற வருடத்தைய அந்த நகைச்சுவை என்னும் ரசவாத வாசிப்புதான் அப்படி செய்திருக்க வேண்டும். காரணம் வாசி(ரி)ப்பு என்பது தொற்று நோய்க் கிருமி போன்றது. ஒருவரிடம் அது இருந்தால் மற்ற எல்லாருக்கும் பரவி விடும். ஆச்சரியம் என்னவெனில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து வாசித்த அந்த ரசவாத சிரிப்பு கதை எப்படி ஒரு கொட்டாவி போன்று தமிழ் நாடு முழுவதும் பரவியது என்பதுதான். 
தமிழகத்தில் அப்பொது அந்த Carnival கொண்டாட்டத்தின்  நாயகனாக  கான்ட்ராக்ட்டர்  நேசமணி மாறிவிட்டு இருந்தார். இந்த நாவலில் சற்றேறகுறைய 300 விதமான கோமாளிகளை Rabelais பட்டியல் இடுகிறார். அதில் ஒரு வகை கூட இன்று எச்சம் சொச்சமாக இருக்குமா என்பது ஐயம். நவீன யுகம் சிரிப்பை தொலைத்து விட்டது. தற்போதைக்கு Hollywoodஇல் கோமாளிகள் psychopathகளாக மாறிவிடார்கள். நோலன்கள் Shakespeareயும்,  Cervantesயும்,  Rabelaisயும் வாசிக்க மறந்து விட்டார்கள். மறுமலர்ச்சி காலகட்டத்தின் மாபெரும் மாஸ்டர்களை  தவற விட்டதுதான் இதற்கு எல்லாம் காரணம். இவர்கள் உருவாக்கும் ஜோக்கர்கள்  அவர்களையும் அழித்துக் கொண்டு நம்மையும் அழித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது இருக்கும் ஐரோப்பிய கோமாளிகளுக்கு சிரிப்பு பஞ்சம் வந்து விட்டது போலும்.  நம்முடைய நேசமணி நல்ல கலைஞன். அவரிடம் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. ஆனாலும் குறிப்பாக ஏன் அந்த “Save நேசமணி” வாசகம். அந்த முகநூல் ட்றென்டிங் வெறும் களியாட்டம் போன்று இப்போது யோசிக்கும் போது தெரியவில்லை. அது இனி தமிழகத்துக்கு laughter என்பதே கிடையாது என்ற அபாய மணி போல் தோன்றுகிறது. இன்று சுற்றிலும்   Psychopathகளால் சூழபட்டு இருக்கிறோமோ எனவும் தோன்றுகிறது.  
நேசமணி இந்த ஒரு ஆண்டில் முற்றிலும் நம் நினைவில் இருந்து அழிந்து போய்விட்டார். கான்ட்ராக்ட்டர் நேசமணியின் இடத்தை நோலன்களின் இரத்த வெறிபிடித்த ஜோக்கர்கள் இடம்பிடித்துக் கொள்ளட்டும். நாம் நம்முடைய தேவைக்கு Cervantesயும், Rabelaisயும், Shakespeareயும், Boccaccioவையும் மருந்துக்காவது அல்லது ஊறுகாய் அளவுக்கேனும் வைத்துக் கொள்வோம். நவ்வீன யுகத்தின் பெரும் பாரத்தை தொலைக்க சிரிப்பு தேவைப்படுகிறதே.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...