Thursday, February 13, 2020

இருவர் என்பது முழுமை சார்ந்த விசயம்




இலட்சிய கதைகளின் நாயகர்கள் தங்களுடைய சிந்தனைத் திறனுக்கு முற்றிலும் மாறுபட்டவர்களையே நண்பர்களாக எற்றுக் கொள்கிறார்கள். டான் குவிக்சாட் அப்படிப்பட்ட இலட்சிய நாயகன். தன் வீர சாகச பயணத்தில் தனக்கென்று தோழன் ஒருவனை கண்டடைந்தான். குவிசாட்டுக்கு கொஞ்சமும் இணையானவன் அல்ல அவன். தன்னோடு ஒப்பிடும் போது அவ்வளவு பெரிய அறிவாளி ஒன்றும் கிடையாது. ஆனாலும் குவிசாட்டுக்கு அவனை பிடித்திருந்தது. இத்தனைக்கும் பண்ணை தொழிலாளி என்ற தகுதி நிலைதான் அவனுக்கு. குவிக்சாட் அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டான். சொல்லப்போனால்  சான்சோ இலட்சிய நாயகனின் கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிரதி பிம்பம். பார்த்த மாத்திரத்தில் எப்படி தன்னுடன் இலட்சிய பயணத்தில் துணைக்கு அழைக்க முடியும். சாஞ்சோ வேறொருவன் அல்ல. குவிக்சாட்டை கண்ணாடியில் நிழலாக பிரதிபலிப்பவன் அவன்.  
சந்தித்த போது இருவருக்கும் அறிமுகம் ஏதும் தேவை இருந்திருக்கவில்லை. அழைத்தவுடனேய அவனும் எதிர் கேள்வி எதுவும் கேட்க்காமல் கிளம்பிவிடான்.
 பயணம் மிகப்பெரியது. அதன் இலக்கு குவிக்சாட்டுக்கு வேண்டுமானால்  பொருள் கொண்டதாக இருக்கலாம். சான்சோவுக்கு அப்படியல்ல. யதார்த்தவாதி அவன். பயணத்தின் இலக்கு கண்டிப்பாக அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் ஏற்படும் லாப நட்ட கணக்கு வழக்கும் தெரிந்திருக்க வேண்டும். இவைகள் எதுவும் அறியாமல் அவனால் குடும்பத்தை விட்டு விட்டு வெளியேற முடியாது. யதார்த்தவாதி ஒருவன் இலட்சிய நாயக்கனுக்காக காத்துக் கொண்டிருந்து இருக்கிறான் போலும். அவன் வந்து “என்னுடன் சாக பயணத்திற்கு வா” என்று ஒரு அழைப்பு மாத்திரம் தான் விடுக்க வேண்டும். அனைத்தையும் விட்டு விட்டு தன் கழுதையுடன் கிளம்பி விட தயாராக இருந்திருக்கிறான். 
இது பதினாறாம் நூற்றாண்டுக்கான கதை மட்டும் அல்ல. நவீன யுகமும் இது போன்ற நாயகர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. டாக்டர் வாட்சன் எங்கிருந்து வந்தார் என யாருக்கும் தெரியாது. Holmes இருக்கும் போது அங்கே கண்டிப்பாக வாட்சனும் இருப்பார். இருந்தாக வேண்டும்.  வாட்சன் இல்லாமல் Holmes இல்லை Holmes இல்லாமல் வாட்சன் இல்லை. யாரோ யாருக்காகவோ பிரதி பிம்பமாக இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இருக்கிறார்கள். 
இதில் யார் நிஜம் யார் மாயமான பிரதிபிம்பம் என்பதுதான் கேள்வி. வாசக மனம் Holmesஇன் பக்கம் அதிகம் ஈர்க்கப்பட கூடும். வாசகனுக்கு Holmes தான் மிகவும் முக்கியமானவர். வாட்சன் இருப்பதை வாசகன் பொருட்படுத்துவதே இல்லை. சான்சோவும் அப்படித்தான். இவர்கள் இருவரையும் முக்கியமாக கருதி யார் இவர்களை வாசித்து இருப்பார்கள். பொருள் அற்றவர்கள் இவர்கள் இருவரும். ஆனால் நவீனத்தின் மிக முக்கியமான முகங்கள் இவர்கள். James Joyceக்கு Bloom மற்றும் Daedalus எப்படியோ அப்படியே நவீன இலக்கியத்தின் தவிர்க்க முடியாத முகங்கள் இவர்கள். 
சான்சோ, வாட்சன், ப்ளூம் ஆகியோர் நவீனம் உண்டாக்கிய நாயகர்கள். வாசகர்கள் கொண்டாட மறந்து போனவர்கள். கோமாளிகள் இவர்கள். வாசகன் இலட்சிய நாயகன் மீது உள்ள மோகத்தைக் கடந்து இந்த யதார்த்தவாதிகள் மீது கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும் அப்போது நவீன புனைவு இதுவரை வாசிக்கப்பட்ட விதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு விடும். அதற்கு வாசிப்பின் கோணம் மாற வேண்டி இருக்கிறது. 
வாசிப்பின்  இந்த கோணம் மாறும் போது யார் நிஜம் யார் பிரதி பிம்பம் என்பது புரிதலுக்கு வரும். யதார்த்தம் எப்போதும் நிஜ உருவாக இருந்து வருகிறது. அடிக்கடி அது தன்னை புனைவு என்ற கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறது அப்படி பார்க்கும் போது பிரதிபலிக்கும் பிம்பம் தான் இலட்சிய முகம். அது யதார்த்தம் ஏக்கத்தோடு தன்னையே உற்று பார்க்கும் முழுமையின் முகம்.  இது வெறுமனே பிரதிபலிப்பு சார்ந்த விசயம் அன்று. நிஜ உருவத்திற்கு என எவ்வளவு தன்னிட்ச்சையான செயல்பாடு உண்டோ அதே செயல்பாட்டுதான் பிம்பத்திற்கும் உண்டு. உருவமும், பிரதிபிம்பமும் தன்னிட்ச்சையானவர்கள்  இருப்பினும் இவ்விருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பூரித்து கொள்கிறார்கள். ஒருவருடைய முகம் மற்றவரின் முகம் பார்க்கும் கண்ணாடி.
இது எப்படி இருக்கிறது என்றால்: திரைப்படம் ஒன்றில் எம் ஆர் ராதா  தலை சீவுவதற்காக கண்ணாடி முன் நிற்பார். அதே அறையில் எற்கனவே இன்னொரு எம் ஆர் ராத ஒளிந்து கொள்வதற்காக வந்து மாட்டிக் கொள்வார். தப்பிப்பதற்கு வழி இல்லாமல் முகம் பார்க்கும் நிலை கண்ணாடியில் இருந்த mirrorயை கழற்றி விடுவார். Mirror இல்லாத கண்ணாடியில் அந்தப்பக்கம் ஒரு எம் ஆர் ராதாவும் இந்தப்பக்க்கம் தலைசீவும் எம் ஆர் ராதாவும் இருப்பார்கள். தலை சீவுபவர் கண்ணாடியில் தெரிவது தன்னுடைய முகம் என்று நம்பி கொஞ்சம் நேரம் சேஷ்ட்டைகள் பல செய்வார். இவருக்கு ஏற்ப அந்த பக்கத்தில் இருப்பவர் அதே போன்று நடித்து காட்டுவார். தான் யூகித்த அந்த பிரதி பிம்பம் உண்மையில் தன்னுடைது அல்ல என்றும் அது வெறுமனே ஏமாற்று வேலை என்பதை கடைசியில் original  எம் ஆர் ராதா கண்டுபிடித்து விடுவார். எதிரி இவருடைய முகத்தில் ஒரு குத்து குத்தி விட்டு ஒடிவிடுவான். 
பிரதி பிம்பங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன. இவர்கள் இருவருமே வெவ்வேறானவர்களாக இருந்தாலும் ஒன்றுபோல் தான் தெரிகிறார்கள். ஆனாலும் சான்சோவையும், வாட்சனையும் முக்கிய பாத்திரங்களாக பார்ப்பதற்கு கொஞ்சம் பக்குவம் தேவைப்படுகிறது. Holmes ஒரு illusion. அது  போன்று Quixote புலப்பட ஆரம்பித்தால் அதுவும் நல்ல வாசிப்பனுபவம் தான். அதிகம் முக்கியத்துவம் பெறாத வாட்சன் உடலின் இடது கை போன்றவர். அதிக கவனமும் வேலையும் கொடுக்கப்படுவது வலது கைக்குத்தான். ஆனால் வலது கையின் அதீத ஆற்றல் என்பது  வேலைக்கு அதிகம் பயன்படுத்தாத இடது கையில்  இருந்துதான் கிடைக்கிறது. உடலின் வடிவமைப்பும் அப்படித்தான் இருக்கிறது. அது ஒரு symmetric வடிவமைப்பு. ஒரு பக்கம் எவ்வளவு உடற்கூறு பகுதிகள் உள்ளனவோ அதே போன்று மற்றொரு பக்கமும் உள்ளன. இருமையான இந்த உடர்க்கூறு அமைப்பு  முழுவதும் ஒரு முழுமையான மனிதனை உருவாக்குகிறது. முழுமையான மனிதன் என்பவன் ஒற்றை அலகினால் ஆன மனிதன் அன்று. ஒன்றை பற்றி பிடிக்க இரு கைகள், நடக்க இரு கால்கள், பார்க்க இரண்டு கண்கள், கேட்க இரு செவிகள். இவைகள் தனித்து ஒன்றாக இருப்பின் முழுமை என்பது இல்லை. இருவர் என்பது முழுமை சார்ந்த விசயம். 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...