Wednesday, April 24, 2019

ஓவியம்: ஒரிஜினலை காப்பியடிக்கும் Imitation



டிக்கடி நாம் பார்க்கின்றவைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. முக்கியமாக பழகிய மனிதர்கள். மனது விரும்புவது புதுமையான ஒன்றை.  அதே இடம் அதே பழகிய மனிதர்கள் என்றால் இந்த பழகிய எல்லைக் கோட்டில் இருந்து தப்பித்து புதிய உலகத்தை கண்டடைய மனம் ங்கும். நம் வரப்புக்கு மீறி அன்னியமான இடத்திற்கு நகரும் போது விட்டுப் பிரிந்த பழகிய இடத்தின், மனிதர்களின்,  பொருட்களின் மீதான பந்தம் பிரிவின் ஏக்கத்தை ஏற்படுத்தும்.  புதிய சூழல் பழகும் வரை எற்கனவே விட்டுப் பிரிந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மனதில் இருந்து நீங்காது வாதிக்கும்.  புதிய அனுபவம் பழக்கத்திற்கு உட்படும் வரை பழைய’ என்ற ஒன்று பிரிவின் வேதனையாக மனதிற்குள் நின்று கொண்டே இருக்கும்.  
ஒரே இடத்தில் தேங்கிக் கிடப்பது வெறுப்பின் அனுபவம்.  ஒன்று ஒரு இடத்தில் வசிப்பவர் அவ்விடம் விட்டு நகர வேண்டும் அல்லது அந்த இடம் அவருக்கு புதிதானதாக மாற வேண்டும்.  புதிய இடத்திற்கு இடம் பெயறுவதும் இருக்கும் இடம் புதிதானதாக மாறுவதுமே மனித உள்ளம் பாழடைந்து போகாமல் இருப்பதற்கான வழி.  
இரண்டில் ஒன்று எப்போதும் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.  நீண்ட நாள் தங்கி விட்ட மண், நெடு நாள் பராமரித்த பிரியம் கொண்ட சுற்றம் எப்போதும் அதே வாசனையில் பிரியத்தில் இருக்க வேண்டுமானால் ஒரு நாள் பிரிவே  போதும். நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பார்கள்.  நிழல் எல்லைக்குட்பட்டது.  நிழலின் விளிம்பு வெய்யிலின் வெளிச்சம் தொடாத கரு நிற பாய்விறிப்பு. எல்லைக் கோட்டை தாண்டாத இடம் மரக்கிளைகள் படர்ந்து விரித்த நிழல். அது இதமானது என்பது வெளிச்சத்தின் தகிப்பு உணர்த்தும் வரையில் தெரியாது.
ஒன்றின் அர்தத்தை மற்றொன்று வழங்குகிறது. அல்லது பூர்த்திசெய்கிறது. இந்த இருமையின் நிலை ஒன்றையொன்று பூர்த்தி செய்ய அவசியமாகிறது. வெளியில்  இருக்கும் அகமும் புறமும் மாறாதவைகள்.  அவைகளின் புதுத்தன்மைகள் தொடர்ந்து மனதின் மாற்றத்தால் முதலில் பழையதாகி பின்பு புதியதாகி விடுகின்றது. மாறாதது என்னவோ புறம்பான அகமும் புறமும் தான். மாறிக் கொண்டிருப்பது என்னவோ மனதின் நிச்சயமற்ற நிலை.
இருப்பினும் மனது தன்னுள் உள்ளடக்கிக் கொள்ள தன்னை விட மிகப் பெரிய ஒன்றை நாடுகிறது. அல்லது தனக்கிணையான ஒன்றை நாடுகிறது. மனதின் விஸ்த்தாரம் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.  சில நேரங்களில் இப்பிரபஞ்சத்தையே விழுங்கும் அளவுக்கு தன் வாயைதிறந்து வைத்துக் கொள்கிறது.  சில நேரங்களில் கவிதையின் இரண்டு வரிகளைக் கூட உள் வாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. மனம் ஒரு ஏமாற்றுக்காரன்.
மனதின் உள்வாங்கும் திறனுக்கும் மீறி பேரண்டத்தை விழுங்க மனிதனின் அகம் தயாராக இருக்கிறது.  எதையும் யோசிக்கவும் முடிவெடுக்கவும் திறனற்ற நேரத்தில் மனதின் செயல்பாடு ஸ்தம்பித்து விடுகிறது.  இந்த நேரத்தில் நடை பயணம் மிகுந்த செயலூக்கி என்று சொல்லலாம்.  அப்படியும் மனம் தன் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால். தன்னைக் காட்டிலும் மிக பிரம்மாண்டமான ஒன்றை சற்று நேரம் ஆழ்ந்து உற்று நோக்கினாலே போதுமானது. செயலற்று கிடப்பது தன்னிலைக்கு திரும்பிவிடும். தன்னைக் காட்டிலும் மிகப் பெரிய ஒன்று எப்போதும் கண் முன்னால் இருக்க வேண்டி இருக்கிறது.
நடை பயணம் மனதின் அளவை சற்று விசாலமாக்குகிறது என எண்ணம் கொள்ளும் போது அதுவும் தவறான கருத்தோ என எண்ணத் தோன்றுகிறது. ஊதினால் வீங்கிப் பெருகும் பலூன் என்று வேண்டுமானால் மனதின் நிலையை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இயல்பு நிலை என்னவோ சிறியதுதான். காற்றின் அடர்த்திக்கு ஏற்றவாறு வீங்கி விடுகிறது. தகவல்கள்,  கருத்துக்கள் என காற்றை உட் செலுத்தி அதன் அடர்த்தியை திடமாக்கபடுகிறது. காற்றின் அடர்த்தி அதிகமாக அதிகமாக கொள்திறனுக்கும் மீறி வெடித்து பைத்திய நிலையை அடைந்து விடுகிறது. புத்திசுவாதீனம்.
நடை பயணம் காற்றின் அடர்த்தியை சற்று குறைக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதுவும் சரிப்படாத நிலையில் இயற்கையின் எழில் உதவி செய்யும்.  வெடிக்கும் தருவாயில் அழகு நிறைந்த இயற்கையின் காட்சி மனதில் Cataclysm ஒன்றை  நிகழ்த்துகிறது. அதுவரை சேமித்து வைக்கப்பட்ட கருத்துக்கள் தரவுகள் அகத்தின் ஆழத்திற்குள் தன்மயமாக்கப்படுகிறது. தரவுகளின் இந்த அடுத்த பரிணாமம் மெய்ஞானம்.
மனது ஒன்று உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்குமான வாசல் மாத்திரமே. அதுவே தங்கும் அறை அன்று.  தவறாக அதீதமான கருத்துக்கள் இங்கேயே தங்கி விடுகின்றன. உள்ளே எதுவும் நகருவதில்லை. வாசலில் அப்படியே வைத்து திரும்பவும் தெருவுக்கே அனுப்பப்படுகிறது. இப்பொது பிரச்சனையே வேறு.  தங்கிவிட்ட ஒன்றை எப்படி வெளியில் அனுப்புவது என்பதுதான் அது. மனது தான் தேவையில்லாமல் சேமித்து வைத்தவற்றை மறக்க வேண்டும்.  அப்படியே மறப்பது கடினமான செயல் என்றால் தன்னுள் மறக்க முடியாமல் இருக்கும் வேறு ஒன்றை உற்று நோக்க வேண்டும்.  நடைபயணம் கொழுப்பை கறைப்பது போன்று நினைவுகளை கரைக்க வேண்டும்.  அதுவும் சரிப்படாமல் போனால் அதி சிறந்த ஔஷதம் இயற்கையின் எழில்.
நீலமான நீளம் சந்திக்கிற இடம் இறைவன் தன் கற்பனையை வண்ணங்கள் குழைத்து தூரிகை கொண்டு சித்திரம் தீட்டும்
திரைச்சீலை
.  கண்ணுக்கு புலப்படாத அந்த மாபெரும் கலைஞனின் கற்பனைக்கு எல்லையே கிடையாது.  அம்மாபெறும் கற்பனாவாதிக்கு அந்த நீளமான நீலக்கடலும், மற்றொரு நீளமான நீலவானமும் தான் தோதான திரைச்சீலைகள். அதிகாலையில் இந்த பிரம்மாண்ட நீலங்கள் மத்தியில் மேகங்களையும் சூரியக்கதிர்களையும் குழைத்து உண்டாக்கும் மஞ்சல் சிவப்பு வண்ணங்கள் பிரென்சு ஓவியர்களுக்கு ஒரு மாடல். அதற்கு முன் மனிதனின் கலை அதைக் காட்டிலும் சற்று குறைவானதுதான். ஒரிஜினலை காப்பி அடிக்கும் வெறும்imitation’. இறைவன் ஆகச் சிறந்த கர்பனாவாதி. ஓவியர்களோ அம்மாபெரும் கலைஞனின் நிழலாட்டங்கள். நாம் யாருடைய நிழலாட்டங்கள் என இப்போது மௌனிக்கு தெரியும் என நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...