Saturday, April 6, 2019

மனிதன், தலை சிறந்த சல்லிப்பயல்


ஒருவனது அறிவுத் திறன் எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். மற்றொருவனின் பாராட்டுதலின் பேரில் அதன் சிறப்பு  அறியவருகிறது. ஒருவர் பாராட்டி நான் சிறப்படைய வேண்டும் என்று யாரும் யாரிடத்திலும் கூசாமல் கேட்பதில்லை. எனினும் பாராட்டப்படும் தருணம் ஒருவருக்கு மிக மிக அறிய தருணம். இந்த கொடுக்கல்  வாங்களில் உள்ள சூட்சமம் மிக நுட்பமானது.
போற்றுதலும் இலமே இகழ்தலும் இலமே என்பது பண்பட்ட மானுடத்தின் இயல்பு. அந்த நிலையை எட்டுவது மிக மிக அரிது. நமக்கு காணக் கிடைப்பது கிழ்மையின் இயல்பு நிலை.
கீழ்மையின் நிலையில் ஒருவர் மற்றொருவரை பாராட்ட அல்லது இகழ காரணம் வேண்டும். அறிவுத்திறன் பெற்ற ஒருவரை இணையான அறிவுத்திறன் கொண்ட மற்றொருவர் பாராட்ட நேர்ந்தால் காரணம் அவர் தனக்கிணையானவர் என்பதினால் அல்ல. தன்னிடத்தில் உள்ள தான் நேசிக்கும் ஒருவரின் பண்பை அந்த எதிர் நிலை நண்பர் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அல்லது இவரால் அவர் வசை பாடப்படுகிறார் என்றால் இவரிடம் உள்ள அந்த சிறுமை அவரால் சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறது.
யாரும் யாரையும் பாராட்டவோ இகழவோ அவசியம் இல்லை. இகழப்பட்டால் ஒழிய அதன் குறைகள் தெரிய வருவதில்லை. ஒருவரின் படைப்பு பாராட்டப்பட்டால் ஒழிய அதன் நிறைகள் யாருக்கும் தெரிய வருவதில்லை. போற்றுதலும் வேண்டும் இகழ்தலும் வேண்டும். மானுடத்தின் உயர் பண்புக்கு இவைகள் இரண்டும் அவசியம் இல்லை. கீழ்மைக்கு இவைகள் அவசியமானவைகள்.
இரண்டையும் வேண்டாம் என சொல்ல மானுடம் இன்னும் மாட்ச்சியுறவில்லை. இன்னும் இவைகள் நமக்கு மிக அவசியமானவைகள். கீழ்மையின் சிறந்தது தாழ்வுற்றது என இனம் காண போற்றுதலும் இகழ்தலும் அவசியாமான அளவீடுகள். உயர் நிலயில் உள்ள ஒன்றுக்கு அளவீடு கொண்டு அளவின் சிறப்பை வகுத்துணர்த்த வேண்டிய அவசியம் இல்லை போலும்.
கண்டிப்பாக கீழ்மையில் உள்ள ஒன்று தன் அடையாளத்தை  நிறுவ வெண்டுமெனில் இந்த அளவீடுகள் அவசியம். இங்கு ஒன்றை ஒன்று நல்லது கெட்டது என கூற முன்வரும் போது அரசியல்  சார்பு கொண்டதாகிவிடுகிறது. இவர்தான் இத்துறையில் மிகவும் திறன் கொண்ட அறிவாளி என்று ஒருவரை அவருக்கிணையான மற்றொருவர் சொல்லும்போது பாராட்டப்படுபவர் உண்மையில் அறிவாளியா என யோசிக்க தோன்றுகிறது. ஏதோ ஒரு அரசியலை முன் வைத்துதான் நம் வெறுப்பு விருப்புகள் அமையப்பெறுகின்றன.
அரசியல் சார்பின்றி நம் மதிப்பீடுகள் அமைவதில்லை. என்னுடையது மிகச்சிறப்பானதாக இருக்கலாம். அது மற்றொருவரால் உதாசீனம் செய்யப்படும்போது என்னுடையது சிறப்பானது அல்ல என்று அதற்கு  பொருள் அல்ல. அதுவே மற்றொருவருடையது அகா! ஓகோ! என்று கொண்டாடப்படும் போது அவருடையது மிகச்சிறந்தது என்று அர்த்தம் அல்ல. அரசியல். அது கருத்தரசியலாக இருக்கலாம், மதப்பற்றாக இருக்கலாம் அல்லது ஜாதி வெறியாக கூட இருக்கலாம்.
இம்மூன்றின் பேரில் நாம் நடத்தும் அரசியல் விளையாட்டுதான் நாம் மற்றவர்களை வியத்தலும் இகழ்தலும். ஒருவரிடம் உள்ள பெரிய குறை நமக்கு மிகச்சிறியதாக தெரிகிறது. காரணம் அவருடன் உள்ள நம் அரசியலுக்கிணையான ஏதோ ஒன்று அவரின் குறையின் அடர்த்தியை மிகச்சிறியதாக்கி விடுகிறது. அவரிடம் உள்ள உண்மையான ஒன்று பனைதுணையாக இருக்கலாம். பனைத்துணை அளவு கொண்ட ஒன்றின் சிறப்பினை தினைதுணையின் சிறுமை பெரிதாக்கி சிறுமைப்படுத்தவும் வாய்ப்பு உண்டு. அந்த தினைதுணை அரசியலாகவோ, மதமாகவோ ஜாதி வெறியாகவோ இருக்கலாம்.
இந்த சார்பு நிலைக்கு விலகி ஒருவரால் மற்றொருவரை எளிதில் பாராட்டிவிட முடியாது. ஓருவர் மற்றவரை உயர்த்தி பாராட்டுகிறார். நமக்கே நன்கு தெரியும் அவ்வளவு விதந்தோதலுக்கு அவர் அருகதை அற்றவர் என்று. சாதனைகள் கண்ட ஓருவர் இகழப்படுகிறார். காரணமற்ற வெற்றுக் கூச்சல் என்று நமக்கே நன்றாக தெரியும். ஏன் இத்தனை வன்மம்? காரணம் விளங்கவில்லை. நீண்ட நாட்கள் கழித்துதான் தெரிகிறது இகழும் இவரின் வன்மத்திற்கு காரணம் இவருடைய தினைதுணையான சிறுமையை அவர் அலட்சியம் செய்து இருக்கிறார். அதனால் அவரது பெரிதான ஆற்றல் மிக்க ஒன்று அவர் கண்களுக்கு இகழ்வாக தெரிகிறது போலும்.  
ன் பார்வையில் பேறாற்றால் கொண்ட அந்த கலைஞன், படைப்பாளி அல்லது பேராசிரியன் ஏன் ஒருவரது பார்வையில் மாத்திரம் மிகச்சிறியவனாக போனான். வியப்பிலும் வியப்பு இது. தூற்றுதல் சில நேரங்களில் நியாயமானதாகவும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சார்பு நிலையின் அடிப்படையில்.
மிகப்பெரிய எழுத்தாளர் மற்றொரு மாபெறும் எழுத்தாளரை நிராகரிக்கிறார் என்றால் அந்த நிராகரிக்கும் செயல் அவர்களிடையே உள்ள அரசியல் காரணமாக இருக்கலாம். இவருடைய அரசியல் கொள்கை அவருக்கு ஒத்து வராது. அதனால் ஏற்படும் கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒருவரை ஒருவர் நிராகரிக்கின்றனர்.
அதுவே பல ஆண்டுகள் கழித்து இருவரும் கைக் கோர்க்கிறார்கள் என்றால் அரசியல் கொள்கையில் அல்லது நம்பிக்கையில் ஒன்றித்துவிட்டார்கள் என்று சொல்வோமா? அதுவும் முடியாது. வேறு ஏதோ அரசியல் ஆதாயத்திற்காக சமரசம் அடைந்திருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். மானுடம் என்ற ஒற்றை கருத்து நமக்கு இங்கு இல்லை. அது ஒரு இலட்சியக் கனவு. அதனை எற்றுக் கொள்வதோ அல்லது அதனிடம் சென்றடைவதோ அரசியல்வசப்பட்ட மனிதர்களால் இயலாது.
தான் விருப்பங்கொண்ட ஒரு கருத்தோ கொள்கையோ அல்லது அரசியல் சித்தாந்தமோ மானுடத்தை செம்மைப்படுத்த போவதில்லை. வேண்டுமானால் தன்னுடைய கருத்து சார்பிற்காக மனுடம் என்ற இலட்சிய கனவை கழுத்தறுத்துக் கொல்லலாம்.
அதற்கும் மீறி நம்மிடம் இருப்பது மனிதம் என்ற  உயர் இலட்சியம் அல்ல, சல்லித்தனம். மனிதன், தலை சிறந்த சல்லிப்பயல்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...