Thursday, March 28, 2019

மொழி எனும் சுயேச்சை அதிகாரம்


உலகத்தில் எங்கேயோ யாராலோ பயன்படுத்தப்படும் மொழி ஏதோ ஒருவகையில் மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கும் புரியும்படி செய்தாக வேண்டும். மொழி பெயர்ப்பு இதனை சாத்தியப்படுத்திக் கொண்டு வருகிறது. மொழிக்கு மொழி நடக்கும் உரையாடல் இது. ஒரே இடத்தில் புழக்கத்தில் இருக்கும் மொழி அவ்விடத்தில் உள்ளவர்களுக்கே புரியவில்லை எனில் பிரச்சனை கெட்பவரிடத்தில் இல்லை. மொழியைப் பயன்படுத்துபவரிடம் இருக்கிறது. அடிப்படையில் மொழியின் இயங்கியல் உரையாடலுக்காகவே இருக்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும்வண்ணம் ஒலி வடிவில் மனிதன் கண்டடைந்த மகத்தான உரையாடல் கருவிதான் மொழி.
இதில் ஒரு மொழியைப் பயன்படுத்தும் ஒருவர் பிரிதொரு மொழியை பயன்படுத்தும் மற்றொருவருடன் தொடர்பு கொள்ளும் போது தனது மொழியில் இருந்து அந்த மற்றவருடைய மொழிக்கோ அல்லது அவருடைய மொழியை தன்னுடைய மொழிக்கோ எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்.
இதில் பிரச்சனை என்னவெனில் ஒரே மொழியை பேசும் இருவர் சந்திக்கும் போது ஒருவன் பேசுவது மற்றொருவனுக்கு புரிவதில்லை. பேசுவது இருவர் மொழி ஒன்று எனினும் தன் எண்ணத்தில் தோன்றிய ஏதோ ஒன்றை அவன் மற்றொருவனுக்கு பரிமாரிக் கொள்ள முடிவதில்லை. அல்லது கேட்பவனுக்கு புரிவதில்லை. இதில் பிரச்சனை கேட்பவனுடையதா,  பேசுபவனுடையதா அல்லது இருவரும் கையாளும் அந்த ஒற்றை மொழியா?
இரண்டு மொழிக்காரர்கள் தங்கள் இருவேறு மொழிகளுடன் உரையாட வரும் போது நூறு சதவீதம் தங்களுடைய எண்ணங்களை தாங்கள் பேச நினைத்ததை பரிமாறிக் கொள்கிறார்கள். இது சாத்தியமற்ற நிலை. சம்பந்தமே இல்லாத இரண்டு பேர், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு மொழிகள். இருப்பினும் இந்த சாத்தியமில்லாத நிலையில் ஒருவன் மற்றவனை புரிந்து கொள்கிறான்.
மொழி ஒன்று, நிறம் ஒன்று இருப்பினும் ஆயிரம் குழப்பங்கள், ஆயிரம் பிரிவினைகள், ஆயிரம் பாகுபாடுகள், ஆயிரம் ஜாதிகள். குழப்பத்தின் மொழி நம்முடைய மொழி. இந்த ஒற்றை நிலையில் இருந்து வெளியேறும் போது வேற்றுமை களைந்து மானுடம் என்ற ஒற்றை புள்ளியில் வேறுபாடுகளுக்குள் இருந்து வெளியேறி மய்(மை)யப்படுகிறோம்.
இதை விடுத்து எது ஒன்றை நாம் ஒற்றை அடையாளமாக கருதுகிறோமோ அந்த ஒற்றை நிலையே நம்மை பிரித்து வைக்கிறது. தேசத்தின் பிராந்தியங்கள் பலவற்றினை அதன் போக்கில் சுயாட்சி நிலையில் விட்டுவிட்டால் ஒற்றுமைக்கு வாய்ப்புண்டு போலும். ஆரம்பத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்று நம்ப வைத்தார்கள். இப்போது ஒற்றை நிலை. அனைத்தையும் ஒன்றை கொண்டு ஒரு மொழியைக் கொண்டு ஒருங்கிணைத்து மையப்படுத்தப்பார்க்கிறார்கள். ஆயிரம் யானைகள் குழுமியிருக்கும் இடத்தில் அவைகள் அனைத்தையும் கடிவாளமிட்டு கட்டுப்படுத்த ஒற்றை எறும்பு முயற்சி செய்தால் சாத்தியப்படுமா? அப்படி எறும்பு நினைப்பது யானைகளின் முட்டாள்தனம் காரணமா அல்லது எறும்பின் அலட்சியம் காரணமா? எப்படியாவது இருந்துவிட்டு போகட்டுமே. ஓசையற்ற ஒரு எறும்பு யானைகளின் பிளிறல்களை தன்னுடைய ஒலியற்ற மொழிக்குள் உட்படுத்த வேண்டும் என்பது இயற்பியலுக்கு ஒவ்வாத ஒன்று.
எப்படியாயினும் அதுவும் மொழிதானே. குறைந்த அளவு முயற்சியாக யானைகளின் காதில் சென்று பேசினால் கூட போதுமே. அதைவிட்டுவிட்டு காதுக்குள் நுழைந்து குடாய ஆரம்பித்தால் அது உரையாடலுக்கான முயற்சி அல்ல. சதி. உன்னிடம் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு காட்டுக் கத்து கத்தும் எரும்பிற்கு தெரியாது அது  தன் சத்தம் தனக்குத்தான் பெரியதே அன்றி அந்த சத்தம் அந்த கரிய மலைகளில் மோதியாவது எதிரொலிக்கும் சக்தி அற்றது என்று.
நீ பேசுவது யானைகளின் காதுகளுக்குள்ளாவது சென்று நுழைய வேண்டும். அல்லது அந்த மாபெரும் உடல்களின் மீது மோதி உன்னிடமே திரும்பி வர வேண்டும். எதுவும் நிகழவில்லை என்றால் நீ பேச மொழியற்றவன் என்றுதானே சொல்ல வேண்டும். வெள்ளிப்பனி மலையின் மீது உச்சத்தில் நின்று கொண்டு உன் சக்தி உள்ள மட்டும் கத்தி பார். அந்த வெள்ளிப் பனி மலையின் உச்சியில் இருந்து நேராக நெடிய இந்த யானைகள் நிறைந்த அகண்ட நிலத்தைத் தாண்டி கடைசியில் பாற்கடலின் அலைகளின் மத்தியில் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருக்கிறார் அவருக்கு கேட்க வேண்டும். மலை அடிவாரத்தில் உள்ளவனுக்கே கேட்காது போலும் இந்த எறும்பு கத்தும் கத்தல்.
யானைக்கோவெனில் நீ காதில் நுழைந்துவிடுவாய் என்ற அச்சம் மாத்திரம்தான். அதற்கு மேல் அந்த எறும்பை இலட்சியப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. யானைகள் எரும்பை எப்போது இலட்சிப்படுத்தியிருக்கிறது.
அவைகள் தங்கள் சுயேச்சையில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் தங்களுக்குள்ளாக தனித்துவமான மொழிகளைக் கொண்டு உரையாடிக் கொள்கின்றன. இதில் குறுக்கீடு எதுவும் நடக்கக் கூடாது. ஏற்கனவே கொடியில் துணியைப் போட்டுக் காயவைத்தாற் போன்று காட்சியளிக்கிற ஒரு உயிரற்ற மொழியை உள்ளே விட்டு ஒற்றுமை என்ற பேரில் சிதறுண்டு ஆயிரம் ஆண்டுகளாக ஆயிரம் ஜாதிகளாகிவிட்டோம். உயிரற்ற மொழி தான்தான் மொழிகளுக்கான ஊற்று என்று இன்றும் பிதற்றிக் கொண்டிருக்கிறது. இப்போதும் அதே போன்றதொரு வடிவத்தில் அதாவது வீட்டின் மொட்டை மாடியில் கயிற்றில் தொங்கவிடப்பட்ட துணிகளைப் போன்று உருக்கொண்ட ஒரு மொழி உட்புக நினைக்கிறது. நிற்கவே திராணியற்ற எழுத்துக்களை நூலில் கோர்த்து ஏதோ இரண்டு கம்பங்களில் மீது கட்டி வைத்திருக்கிறார்கள். அந்த இரண்டு முடிச்சுகளையும் அறுத்துவிட்டால்  நிற்பதற்கு திராணி இருக்காது.
சுதந்திரமாக சுயாட்சி அந்தஸ்த்தில் இந்த அகண்ட நிலத்தின் பிராந்தியங்கள் தங்கள் தனித்துவத்தில் ஆட்சி அதிகாரம் செலுத்தட்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சமாதானம் நமக்கு தேவை இல்லை. அல்லது ஒற்றை அடையாளத்தை வலுவற்ற மொழியை கொண்டு கட்டமைக்கும் முயற்சியும் வீண். வேண்டும் என்றாள் கிரேக்கத்தைவிட ஐயாயிரம் ஆண்டுகள் மூத்த ஒரு மொழியை இங்கு கொண்டு வரட்டும். அது இன்றும் உயிர்ப்புடன் இருக்குமாயின் உரையாட தயார். அடிபணிய அல்ல. 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...