Wednesday, January 11, 2017

அதிமேதாவி குஞ்சிதபாதம்

பண்டிகைகளும் அர்த்தமற்ற கொண்டாட்டங்களும்
குஞ்சிதபாதத்தைச் சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டன. நட்பு முறிந்துவிடக்கூடாதே என்று இடைவிடாமல் நான் தான் அவனைச் சந்தித்து வருகிறேன். ஒரு நாள் கூட அவன் என்னை வந்து பார்த்ததே கிடையாது.  ஒரு போன் கூட செய்ததில்லை. நான் தான் வெட்கமின்றி அவனைத் தொடர்ந்து போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய ஆத்மார்த்த நண்பன் யார் என்று கேட்டால் செல்லமாக ”குஞ்சிதம் தான் என் ஒரே நண்பன்” என்று பெருமிதப்பட்டுக் கொள்வேன். ஆனால் அப்படி ஒரு நினைப்புக் கூட அவனுக்குக் கிடையாது. அவனுக்கு இருக்கும் நட்பு வட்டாரத்தில் நான் பத்தோடு பதினொன்று. பெயரைக் குறிப்பிட்டுக் ”கட்டியங்காரனைப் பற்றி தெரியுமா” என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான். சொல்லப்போனால் அவனுக்கு நண்பர்கள் என்ற வகையில் உயிருக்குயிரான நண்பர்கள் என்று செண்டிமெண்டெல்லாம் எதுவும் கிடையாது. அவன் பாட்டுக்கு அவன் உண்டு பல்கலைக்கழகம் உண்டு அவனுடைய விடுதி அறை உண்டு என்று வாழ்பவன். கற்கண்டைத் தேடி அலையும் எறும்புகளைப் போன்று அவனைத் தேடி எங்கிருந்து வந்துவிடுவார்களோ தெரியாது. எப்படி அவன் அநேக நண்பர்களைச் சம்பாத்தித்து வைத்திருக்கிறான் என்றெல்லாம் கூடத் தெரியாது. அவன் அந்த விடுதி அறைக்கு வந்துவிட்டால் ஒரு எறும்புக்கூட்டமே அவன் ரூமுக்கு அணிவகுத்துவிடும். அனைத்தும் அரைக்கிறுக்குப் பைத்தியங்கள். என்ன பெரிதாகப் பேசிவிடப் போகிறார்கள். புத்தகங்களைப் பற்றித்தான். வாழ்க்கையில் எவ்வளவு இருக்கிறது. சினிமா, கடற்கரை என்று அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றன. அட, கடற்கரைக்குச் செல்வது என்றால் கூட வாசிக்கவும் விவாதிக்கவும் தான். முற்றும் துறந்த சாமியார் பயல்கள். ஆனால் குஞ்சிதத்தை மாத்திரம் அப்படித் தப்பாக எடைபோட்டுவிட முடியாது. “குஞ்சிதம் குஞ்சிதம்” என்று செல்லமாக பேரைப் பாதி குறைத்து எப்போதும் அவனைச் சுற்றியே ஒரு பெண் சுற்றிக் கொண்டிருப்பாள். அதைப் பற்றி நாம் பின்பு ஒருநாள் பேசுவோம். அவன் எதையும் தேடிச் செல்வதில்லை. அனைத்தும் அவனையே மையமிட்டுக் கொண்டிருக்கும். நட்பு, காதல், என எதையும் அவன் உழைத்துப் பெற்றது கிடையாது. அனைத்தும் அவனைத் தேடியே வந்துகொண்டிருந்தன. அறிவும் அப்படித்தான். நான் மாங்கு மாங்கு என புத்தகங்களைப் படித்தாலும் ஒன்றும் மண்டையில் ஒட்டுவது கிடையாது. அவனுக்கு மாத்திரம் எப்படி இதெல்லாம் வாய்க்கிறது என்பது எனக்கு ஒரே பொறாமையாக இருக்கும்.

நான் சந்திக்கப் போகும் நேரத்தில் மாத்திரம் அவனுடைய நட்பு வட்டாரம் அவன் விடுதியில் முகாமிட்டிருக்காது. காரணம் நான் சந்திக்கச் செல்லும் நேரமே இரவு பதினோரு மணிக்கு மேல்தான். இன்றும் நான் அதே நேரத்திற்கு அவன் அறைக்குச் சென்றேன். வழக்கம் போல் அந்த இரவில் அவன் அறையில் மாத்திரம் டியூப் லைட்டின் வெண்ணொளிப் பரவல் அன்றைய பௌர்ணமி நிலாவுக்கே போட்டி போடும் விதத்தில் அவன் அறையை நிரப்பியிருந்தது. அட இது என்ன அசட்டுத்தனம்! பௌர்ணமி வெளிச்சத்திற்கும் டியுப் லைட் வெளிச்சத்திற்கும் என்ன சம்பந்தம். சரி கிடக்கட்டும், கதைதானே.
எதையோ வாசித்துக் கொண்டிருந்தான். ஏதோ ஆங்கிலப் புத்தகம். எம்மாந்தடிப் புத்தகம்! பார்ப்பதற்கே தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. இது போன்ற பெரிய பெரிய புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பயமாக இருக்கும். ஒருமுறை குஞ்சிதத்திடமே சொல்லிவிட்டேன்.
“நான்கூட இதுமாதிரி பெரிய பெரிய புத்தகம் எல்லாம் படிச்சிருக்கேன்”
அலட்சியப் பார்வையோடு என்னை ஏற இறங்கப் பார்த்தான்.
                ”கல்கியோட பொன்னியின் செல்வன் படிச்சிருக்கேன். ஆயிரம் பக்கத்துக்கு மேல தெரியுமா?” என்றேன்.
                குஞ்சிதபாதத்தினுடைய வாசிப்பனுபவத்தை என்னுடைய் இந்த ஒரு வாசிப்பு மிஞ்சி விட்டது என்ற பெருமிதத்தில் அவனைப் பார்த்தேன்.
ஒரு நக்கல் சிரிப்போடு,

                ”அப்புறம், சாண்டில்யனோட கடல் புறா, பொண்ணுங்க Mills and Boons. லிஸ்ட் போகும் போல.”
வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. நான் சில நேரங்களில் Mills and Boons கூடப் படிப்பேன். என்னுடைய ஜூனியர் ஒருத்தி Mills and Boons படிக்கிறேன் என்று ஒரு ஆண் சொல்லறதே தைரியமான விசயம் என்று சொல்லி விட்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டாள். எனக்கு அசிங்கமாகப் போய் விட்டது.
                இன்றைக்குக் குஞ்சிதம் அந்தப் புத்தகத்தை வேறு நினைவுப் படுத்தி விட்டான். இருந்தாலும் கல்கியை இப்படி Mills and Boons கதைகளோடு வைத்து மட்டம் தட்டியது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
“நல்ல புத்தகங்களா படிச்சு மூளைக்கு நல்ல வேலை கொடுக்கணும். அப்பதான் அது செறிவுடன் இருக்கும். இது போல கதைங்கள படிச்சா துருபிடிச்சுப் போய்டும். ”இந்தப் பக்கத்தில் இருக்கிற வரிங்கள படி” என்று அந்தத் தடிப் புத்தகத்தை நீட்டினான்.
                புத்தகத்தின் பெயர் Rabelais and His World. கீழே பக்தின் என்று ஆசிரியரின் பெயர் இருந்தது.
”யார் இவர்” என்று கேட்டேன்.
”அவரப் பத்தி இன்னொரு நாளைக்கு சொல்றேன். மொதல்ல அதப் படி” என்று அதட்டலாகச் சொன்னான்.
                மிகவும் சிக்கலான சொற்றொடர்கள். குஞ்சிதத்தின் பாஷையில் மிகவும் ஆழமான வரிகள். எப்படியோ திக்கு முக்காடி வாசித்து முடித்துவிட்டேன். ஒன்றும் மண்டைக்குள் ஏறவில்லை.
ஏதோ பண்டிகைகளைப் பற்றி இருந்தது. குஞ்சிதம் அதனை விளக்க ஆரம்பித்தான். இடைக்காலத்தில் ஒரு பண்டிகை இருந்ததாம். அதற்கு பெயர் ’கார்னிவெல்’. இப்பொது இருப்பது போன்று அல்ல அது. வருடத்தில் ஒரு நாள் இந்தப் பண்டிகை கொண்டாடப் படுமாம். அரசாங்கமே இதைக் கொண்டாடச் செய்ததாம். ஒரு இடத்தில் அனைவரும் ஒன்று கூடுவார்களாம். அங்கே யாரும் பெரியவன் சிறியவன் என்ற பாகுபாடு கிடையாதாம். அன்று ஒரு நாளைக்கு, அதுவும் அந்த கார்னிவல் மைதானத்தில், அந்த இடத்தில் வரும் யாரும் யாரையும் கிண்டலும் கேலியும் செய்து கொள்ளலாமாம். அது அரசானானாலும் சரி, சமய போதகரானாலும் சரி. அனைவரும் சரிசமம். சாதாரணக் குடிமகன் கூட அரசனை, சமயகுருமாரை ”அடே” என்று அழைக்கலாமாம் (அந்த இடத்தில்). கடைசியில், இதுவே மிக ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறதென்று நினைத்துப் பண்டிகையை நிறுத்திவிட்டார்களாம்.
                ”எப்படிங்க ஒரு பண்டிகையை அரசாங்கம் ஆரம்பித்து நிறுத்த முடியும்? பண்டிகை என்பது கலாச்சாரத்தின் அடிப்படையில் இயல்பாக ஒரு இனக்குழுவுக்கோ அல்லது மக்கள் கூட்டத்திற்கோ ஏற்படுகின்ற ஒன்று. இதில் எப்படி அரசாங்கம் செயற்க்கையாக ஒரு விழாவை திடீர் என்று ஆரம்பித்து நிறுத்த முடியும்?”
 ”குட் கொஸ்டியன்! அதைத்தான் பக்தின் அடுத்த பத்தியில் விளக்குகிறார்.”
பண்டிகைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரசாங்கம் ஏற்படுத்தும் விழாக்கள். மற்றொன்று ஒரு இனக்குழுவே தன்னுடைய பண்பாட்டின் முன்னேற்றத்தில் தானாக விழாக்களை ஏற்படுத்திக் கொள்வது. இதில் யார் எப்போது ஆரம்பித்தார்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்க முடியாது. அதன் ஆரம்பத்தையும் நம்மால் கண்டடைய முடியாது. ஆனால் அரசு விடுக்கும் பண்டிகைகள் ஒரு விதத்தில் செயற்கைத் தோற்றத்தைப் போன்று காணப்படும். பண்பாட்டோடு ஒட்டிப் பிறந்த ஒரு விழாவை அழிக்க முடியாது. ஆனால் செயற்கையின் ஒரு கொண்டாட்டம் இயல்பாகக் காலப்போக்கில் அழிந்துவிடும்.
நான் பெரும் வியப்புக்குள் ஆழ்ந்துவிட்டேன். இவ்வளவு காரியங்கள் இருக்கின்றனவா?
சரி நம்மிடையே பொங்கல் விழா இருக்கிறதே, அதைப் பற்றி என்ன?
அது சற்று சிக்கலான விசயம். அவ்வளவு எளிதில் விளக்கி விட முடியாது. அது முழுக்க முழுக்க இயற்கையோடு தொடர்புடைய பண்டிகை. நாம் செய்யும் மிகப் பெரிய தவறு எந்தப் பண்டிகையையும் மிக எளிதில் நகர்ப்புறமயமாக்கி விடுகிறோம். பண்டிகைகள் மண்ணோடும் சீசனல் மாற்றத்தோடும் தொடர்புடையது. எனவே மண்ணோடும் இயற்கையின் சீசனல் சுழற்சியோடும் தொடர்புபட்ட எந்த ஒரு சடங்கும் பண்டிகையும் அர்த்தமற்றது அல்ல. அவைகள் தத்துவார்த்தமானவைகள். அதுவே நகர்மயமாகும் போது அதன் தத்துவார்த்ததன்மையை அது இழந்துவிடுகிறது. காரணம் அது இயற்கைக்கு மிக தூரமானது.
                ”என்னைக் கேட்டால் இந்த வருடம் நாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடவே கூடாது.” 
”என்ன குஞ்சிதம் இப்படி சொல்லீட்டீங்க. ஏன்? எதற்கு?”
”இந்த வருடத்தில் தான் அதிக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட வருடம். இதில் நாம் பொங்கல் கொண்டாடினால் அதைவிட அபத்தமானது ஒன்றும் இல்லை.”
நாளைக்கு ஜூனியர் மாணவிகள் கூட ”அண்ணா, நாளைக்கு பொங்கல் செலப்ரேட் பண்ணப் போறோம். அதனால ட்ரடிஷனல் டிரஸ்லதான் வரணும்” என்றார்கள் என்பதைக் குஞ்சிதத்திடம் சொன்னேன்.
“தஸ் புஸ்ஸு இங்லீஷ வைச்சிக்கிட்டு வாத்தியாருங்கள ஏமாத்துற பொண்ணுங்கதான அதுங்க. ஒரு செண்டன்ச ஒழுங்காப் பேசவும் தெரியாது, எழுதவும் தெரியாது. இது போல மாடர்னா சுத்திக்கிட்டுத் திரியத்தான் தெரியும். ஒரு நெல்மணிக்கு பின்னாடி இருக்கிற உழைப்பு என்னானு அதுங்களுக்குத் தெரியுமா. வியர்வைன்னா என்னானாவது தெரியுமா. பொங்கல் என்பது உழைப்பும் நெற்றி வியர்வையும் கொடுத்த பலனின் கொண்டாட்டம். இது புராணம் தந்த விழா இல்ல. மற்ற விழாக்கள் அனைத்தும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். அவைகளுக்கு பின்னால் ஒரு தத்துவார்த்தமும் கிடையாது. இப்போது இந்தப் பெண்கள் விழாவில் பொங்கல் பொங்க வைப்பது உழவனின் உழைப்புக்கான நன்றி அல்ல. அவன்  தற்கொலைக்குப் பிறகு அவன் பிணத்திற்குச் செய்யும் அவமரியாதை.”
குஞ்சிதபாதம் இவ்வளவு ஆவேசப்பட்டு நான் பார்த்ததே இல்லை.
”சரி குஞ்சிதம் நான் கிளம்புறேன்.”

என் மனது கனத்துவிட்டது. நாளை அந்த மார்டன் கேர்ள்ஸ் கொண்டாடப் போகும் விழாவை நினைத்தாலே அடிவயிற்றில் ஏதொ செய்வது போன்று இருந்தது. இன்றைய தலைமுறை எதையும் யோசிப்பதும் கிடையாது, ஆராய்ந்து நிதானிக்கவும் தெரியாது. எதெல்லாம் அறிவாக, கொண்டாட்டமாகத் திணிக்கப்படுகிறதோ அதையெல்லாம் கேள்வியின்றி அப்படியே மண்டைக்குள் புகுத்திக் கொள்வது. நானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் குஞ்சிதபாதத்தால் மாத்திரம் எப்படி இது போன்று யோசிக்க முடிகின்றது என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் என் இருப்பிடம் செல்ல நல்லதம்பி தெருவில் வானத்தையே அந்த நல்லிரவில் அண்ணாந்து பார்த்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தேன். நடு வானில் பௌர்ணமி நிலா என்னப் பார்த்து கேலியாக சிரிப்பது போன்று எனக்குத் தோன்றியது.

1 comment:

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...