அதிமேதாவி குஞ்சிதபாதம் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Thursday, January 5, 2017

அதிமேதாவி குஞ்சிதபாதம்அகட விகடம் பத்திரிக்கையில் தனக்கு ஒரு பத்தியை ஆசிரியர்கள் ஒதுக்கியது தனது பூர்வ ஜென்மத்துப் பலன் என்று எழுத்தாளர் கட்டியங்காரன் தன்னைப் பற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கு தம்பட்டம் அடித்துக் கொண்டார். எரிச்சல் தாங்க முடியவில்லை. பொதுவாக எழுத்தாளர்களின் படைப்பு என்னவோ மகா அற்புதம் ஆனால் அவர்களை நேரில் சந்தித்தால் தான் ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது. பளார் என்று ஒரு அரை விடவேண்டும் போல் தோன்றும். தாங்கள் தான் இந்த பூமியில் வாழும் ஒரே ஜீவ ராசி என்றும் தாங்கள் மாத்திரம் தான் புதிதாக சுவாசிப்பது போலவும் வாழ்வது போலவும் மற்றவர்கள் வெறும் ஜடங்கள் போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் எழுத்தாளர்களின் நட்பு முகவும் முக்கியம். அதனால் ஏதாவது நமக்கும் கொஞ்சம் அறிவு ஊற்றெடுக்கும். நம்ம ஊர் பேராசிரியர்களுக்கு தற்பெருமை படைப்பாளிகள் எவ்வளவோ மேல். சிறிதும் எதிர்ப்புக் காட்டாமல் மௌனமாக கட்டியங்காரன் பேசியதற்கு எல்லாம் மாடு போல் தலையாட்டினேன்.


குஞ்சிதபாதத்தின் அடுத்த தொடருக்கான தலைப்பு, கருப்பொருள் என்ன என்று விசாரித்தேன். சிறிது நேரம் அமைதியானார். ஏதோ ஆழ்ந்த யோசனை. யோகிகளையும் சரி படைப்பாளிகளையும் சரி அந்த ஆழ்  யோசனையில் இருந்து டிஸ்டர்ப் செய்யவேக் கூடாது. அப்படி செய்தால் காரியம் கெட்டுவிடும். ஒன்றும் இல்லை பேசிய தலைப்பை மறந்து விடுவார்கள் அவ்வளவுதான். அவர் பாட்டிற்கு யோசனையில் அவரை மிதக்கவிட்டேன்.

ஏதோ ஞானம் பெற்றது போன்று யோசனையில் இருந்து வெளிவந்து தலையை ஆட்டினார்.

“என்னுடைய கதாநாயகன் குஞ்சிதபாதத்தை நினைக்கும் போதெல்லாம் எனக்கு தாஸ்தாவஸ்கியின் அல்யோஷா தான் நினைவிற்கு வருகிறான். அல்யோஷாவை வாசிக்கும் போதெல்லாம் மனிதன் யார் என்ற விசாரணையை நாம் மேற்கொள்கிறோம். மனிதன் என்றால் என்ன அவன் யார் என்ற மிகப் பெரிய தேடுதலை தாஸ்தாவஸ்கி அவன் மூலம் பரிசோதனை செய்திருக்கிறார்”.
நான் குறுக்கிட்டு ”ரஸ்கோல்நிக்கொவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க” என்று கேட்டேன்.

”அட அவன் ஒரு பைத்தியக்காரப் பயல்” தாஸ்தாவஸ்கியின் ஆரம்பகால படைப்பு அவன். அவனிடத்தில் எந்தத் தேடலுக்கும் பதில் கிடைக்காது. சொல்லப் போனால் அவன் மேற்கத்திய அப்சர்ட் கேரக்டர். அவன் ஒரு சுரைக் குடுக்கை ஒன்றுக்கும் உதவமாட்டான். தேடுதலில் ஆழம் அற்றவர்கள் தான் அவனை வாசிப்பார்கள். அவனை வைத்து நாடகம் கூட போடுகிறார்கள். ஸ்டேஜ்ல அவன நடக்க விட்டு அப்படியே வெடிக்கை பார்ப்பாங்க போலிருக்கு. ஆனால் அல்யோஷா தான் மிக முக்கியமானவன். உலக இலக்கியத்தின் உச்சகட்டம் அவன். இருப்பினும் அது வெறுமனே பரிசோதனை மாத்திரமே. தாஸ்தாவஸ்கிக்கு பதில் கிடைக்கவே இல்லை. அவர் பதிலைவிட தேடலைத்தான் அதிகம் விரும்பினார். ரஷ்யக் கிறிஸ்தவம் அவருக்கு தேவையான பதிலை பூரணமாக வழங்கவில்லை. பதில் அவர்களுக்கு சாத்தியம் இல்லை.

பதில் நம்மிடம் தான் இருக்கிறது. நம்முடைய இந்திய சித்தாந்தத்தின் அடிப்படையிலும் மேற்கத்திய கிறிஸ்தவ மத போதனையின் அடிப்படையிலும் (ஒன்றாகக் குழைத்து) இந்தத் தேடலை ஆரம்பித்து இருக்கிறேன். இதில் நம்முடைய புதுமைப்பித்தனின் “உபதேசம்” கதையை விட என்னால் சற்று சிறப்பாக என்னுடைய அடுத்தத் தொடரை வடிவமைக்க முடியும் என்று நினைக்கிறேன். முதல் தேடலுக்கே பதில் கிடைத்து விட்டது. அதனை குஞ்சிதபாதம் என்ற ஆளுமையின் மூலம் கடைந்தெடுத்திருக்கிறேன். தலைப்பு “அதிமேதாவி குஞ்சிதபாதம்”.

”பேஷ் பேஷ். தலைப்பே இவ்வளவு கேட்சியாக இருக்கிறதே” என்று நான் புலங்காகிதப்பட்டுக் கொண்டேன்.
இருப்பினும் உள்ளூர பொறாமைத் தீ காட்டியங்காரன் மீது ஏற்பட்டது. அவருக்கு போட்டியாக எப்படியாவது ஆங்கில நாளிதழின் எடிட்டோரியல் பத்தியில் நானும் காட்டுரைகளை எழுதி….” அதெல்லாம் எங்கு நடக்கப் போகிறது.
அதிமேதாவி குஞ்சிதபாதம் Reviewed by Arul Scott on 5:59 AM Rating: 5 அகட விகடம் பத்திரிக்கையில் தனக்கு ஒரு பத்தியை ஆசிரியர்கள் ஒதுக்கியது தனது பூர்வ ஜென்மத்துப் பலன் என்று எழுத்தாளர் கட்டியங்காரன் தன்னைப் ப...

No comments: