அறிவுக் கொழுந்து குஞ்சிதபாதம் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Wednesday, January 4, 2017

அறிவுக் கொழுந்து குஞ்சிதபாதம்


நேற்று இரவு ஒரே மனச் சோர்வு. யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும். இல்லை என்றால் அதுவே விஷமாக மாறி என்னையே கொன்றுவிடும் போல் இருந்தது. தற்போது அனைவருக்கும் மன நோய் பிடித்திருப்பதால் யாரிடமும் போய் பேச்சுக் கொடுக்கவும் முடியாது. மீறி பேசச் சென்றால் உலகத்தில் உள்ள விஷமிக்க வைரஸ்களை விட நம்முடையவர்களின் மன நோய் வைரஸ் நம் மனதை எளிதில் பாத்தித்து விடும். மிகவும் ஆபத்தான தொற்று நோய் இது. இந்த நோய் தாக்கப்படாத ஒரே நபர் நம்முடைய குஞ்சிதபாதம் ஒருவர் தான். அவருடைய விடுதி அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம். வெறுப்பைக் காட்டமாட்டார்.  
இரவு மணி பன்னிரெண்டு இருக்கும். திருவல்லிக்கேணி, நல்ல தம்பி தெருவின் கடைசியில் இருக்கும் அவருடைய விடுதிக்கு சென்று விட்டேன். குறைந்தது மூன்று மணி நேரமாவது செலவிடலாம். மனுஷன் விவாதம் என்று வந்து விட்டால் சளைக்கவே மாட்டார். விடுதியை நெருங்கும் போது அவரது அறை மாத்திரம் அந்த நல்லிரவில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மடிக்கணினியில் எதோ வாசித்துக் கொண்டிருந்தார்.
”இன்னும் தூங்களையா பாதம்” என்றேன்.
”இப்பத்தான் பளாட்டோவின் ”கேவ் மென்” கதையை படிச்சு முடித்தேன். நேரம் போனதே தெரியல”. என்றார்.
            குஞ்சிதபாதம் எப்போதும் இப்படித்தான். எப்போது பார்க்கச் சென்றாலும் அன்றைக்கான தன்னுடைய வாசிப்பை கட்டாயம் நம்மிடம் பகிர்ந்து கொள்வார். என்னுடைய பாடு தான் படு மோசம். படித்ததை அப்படியே ஆண்டாண்டு காலமாக மனதில் புதைத்து வைத்திருக்க வேண்டியது. யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாது. காதிருந்தும் கேளாதவர்கள். பேராசிரியர்களிடம் ஓரிரண்டு முறை பகிர்ந்து கொள்ள முயற்சித்தேன் (மண்ணிக்கவும்) முயன்றேன். விளைவு விபரீதமாகிவிட்டது. மனநோய் வைரஸ் என்னை தொற்றிக்கொண்டுவிட்டது. நான் என் நிலைக்கு திரும்ப ஒரு மாதம் ஆகிவிட்டது. சரி உடன் படித்தவர்களிடம் சென்று பேசலாம் என்றால் அவர்கள் என்னை ஏதோ வேற்று கிரக வாசி போன்று ஏற இறங்க பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர். இவைகளுக்கும் மீறி மாணவர்களிடமாவது பேசலாம் என்றால் அறிவுப்பூர்வமாக எதையாவது பேச நினைத்த மாத்திரத்திலேயே நான்கு முகங்களிலாவது கொட்டாவி வாயைப் பிளந்து கொண்டு எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடும். என்ன செய்வது படிக்கவும் வேண்டும் அதனை பேசவும் கூடாது என்றால் கொடுமைதான். இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை குஞ்சிதபாதம் மாத்திரமே.
            என்னுடைய இந்தச் சுமையை குஞ்சிதபாதத்திடம் கொட்டித் தீர்த்துவிட்டேன். அமைதியாக கேட்டுவிட்டு. தன்னுடைய மடிக்கணிணியின் திரையை என் பக்கம் திருப்பினார். யாரோ வாசகர் ஒருவருடைய கடிதம். அதற்கு ஜெ ஜெ பதில் தந்திருக்கிறார். வெறுப்பின் உச்சத்தில் என்னால் ஒரு வரி கூட வாசிக்க முடியவில்லை. குஞ்சிதபாதம் கடிதத்தின் முழு சாரம்சத்தையும் என்னிடம் கூறினார்.
            ”யாரோ பேராசிரியர் நம்மைப் போன்று வாசிப்பு பழக்கம் உள்ள பேர் வழி போலிருக்கு.” கல்வி நிலையங்களில் தற்போது இருக்கும் சிறுமைகளைப் பார்த்து பொறுக்க முடியாமல் வேறு வழியின்றி எழுத்தாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஜெ ஜெ மனச் சோர்வைப் பற்றி ஒரு வார்த்தைப் பயன்படுத்தி இருக்கிறார். மிக அற்புதமான வார்த்தை. “செயல்கொல்லி”. மனச் சோர்வு அப்படிப்பட்டதுதான்.” என்று கடிதத்தின் சாராம்சத்தை ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார் குஞ்ஜிதபாதம்.    
            ஏதோ சூரியனை சூழ்ந்த மேகங்கள் விலகுவது  போன்று என்னுடைய மனத்திரையில் இருந்த சோர்வு இதைக் கேட்டவுடன் காணாமல் போய்விட்டது. குஞ்சிதபாதத்தின் அதற்கடுத்த விவாதம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
”கடிதத்தோட லிங்கை எனக்கு கொஞ்சம் மெயில் பண்ணுங்களேன் என்றேன்”.
“லிங்க் எதற்கு அவருடைய வளைதலத்திற்கு நேராகவே சென்று பார்க்கலாமே என்றார்.” இருந்தாலும் லிங்கை நண்பர்களுக்கும் பகிர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அதனை அனுப்பும்படி வற்புறுத்தினேன்.
            என்னுடைய மனதின் பாரம் நீங்கியபோது உடற்சுமையும் நீங்கியது போன்று உணர்ந்தேன். மனதின் வலியும், சுமையும் தான் எத்தனை அழுத்தமானது பளுவானது. அதனைக் கொட்டித்தீர்க்க நமக்கு இருக்கும் குஞ்சிதபாதம் போன்றவர்கள் குறைந்தது பத்து நண்பர் குழுவிற்கு ஒருவர் இருந்தாலே போதும். இதனால் நாடு சீர்படுகிறதோ இல்லையோ நாளைய இளைய சமுதாயம் அறிவின் ஒளியில் நிச்சயம் நடக்க ஆரம்பித்து விடுவார்கள். நம்முடைய குஞ்சிதபாதம் சந்தேகம் இன்றி ஒரு அறிவுச் சுடர்தான். அறியாமையின் பயம் அறிவின் வெளிச்சத்தைப் பற்றி அல்ல அதனுடைய இருந்தலைப் பற்றித்தான். எப்படியாவது அதனை ஊதி அனைத்து விட வேண்டும். இருப்பினும் குஞ்சிதபாதம் மாத்திரம் எப்படி இப்படிப்பட்ட மனச்சோர்வுகளுக்கு ஆளாகமல் இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. மனுஷன் தளராமல் தன் வேளையை செய்வது சற்று பொறாமையைக் கூட ஏற்படுத்துகிறது. இப்படி யோசித்துக் கொண்டே நான் அவருடைய விடுதியின் அறையைவிட்டு இறங்கி ரோட்டில் நடக்கும் போது அறையின் விளக்கு அணைக்கப்பட்டது. ”மறக்காம கடிதத்தை படித்துவிடுங்கள்” என்ற குரல் அறை எண் 117ல் இருந்து ஜன்னல் வழியே வந்தது. இனிமேல் கடிதம் எதற்கு. லிங்க்கை மாத்திரம் நண்பர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இருந்தாலும் வாசகரகளின் வாசிப்பு அரசியலை அலசி ஆராய்ந்து விட்டுதான் பகிர வேண்டும். இல்லையென்றால் எதிர்வினைகள் மிக காட்டமாக இருக்கும். அதனை எதிர்கொள்ள இப்போதைக்கு மனதில் தெம்பு கிடையாது. யார் யாருக்கு அனுப்ப வேண்டும் என்றும் குஞ்சிதபாதத்திடமே கேட்க வேண்டியதுதான்.
அறிவுக் கொழுந்து குஞ்சிதபாதம் Reviewed by Arul Scott on 2:49 AM Rating: 5 நேற்று இரவு ஒரே மனச் சோர்வு. யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும். இல்லை என்றால் அதுவே விஷமாக மாறி என்னையே கொன்றுவிடும் போல் இருந்தது. த...

No comments: