Thursday, March 9, 2017

காவியமான ஆனைச் சாத்தான்


கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

   கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடைய பெயர் ஆயர்பாடி பெண்கள் மத்தியில் பெரும் கீர்த்திப் பெற்ற பெயர்.
நிலக்கடலை விதைக்கும் போதெல்லாம் இவர்கள் கூட்டம்தான் அதிகம் இருக்கும். அதிகம் தொந்தரவு செய்யமாட்டார்கள். காகம் என்றால் தான் தனியாக ஒரு ஆளை காவல் காக்க வைக்க வேண்டும். வயிறு பெருத்த பறவைக்கு எவ்வளவு தீனி போட்டாலும் காணாது. கரிச்சான் குருவிகள் அப்படிக் கிடையாது. விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும்  தொந்தரவே கொடுக்க மாட்டார்கள். அவர்கள் கூட்டம் கூடுவது நிலக்கடலையைத் திருடுவதற்காகக் கிடையாது. உழுத மண் மீது நெளியும் புழுக்களை உண்பதற்காகவே கூட்டம் கூடுவார்கள்.
காகங்களுக்கு இதுதான் உணவு என்று கிடையாது. உலகத்தில் செத்த/உயிருள்ள அனைத்தையும் கொடுத்தாலும் அவர்களின் வயிற்றை நிறைக்க முடியாது. உடலும் அலகும் பெரிசுதானே தவிர எல்லாம் திண்பதற்கு மாத்திரமே. அந்த நீண்ட அலகு எவ்வளவு தன் பசிக்கு உணவு கொள்ளுமோ அவ்வளவையும் கொத்த வேண்டும். உணவில் ஒரு வறைமுறையே கிடையாது. சதா தின்று கொண்டே இருப்பது.
கரிச்சான் குருவிகளை இந்தக் காகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதெல்லாம். இந்தக் காகங்கள் எப்படி இவர்களை உயிரோடு விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படும். பள்ளிக்கூடம் விட்டு வரும்போது அந்த திடுக்கிடும் காட்சி அந்த முந்தைய எண்ணத்தை முற்றிலும் மாற்றி விட்டது. ஒரே ஒரு கரிச்சான் குருவி பத்து பதினைந்து காகக்கள் மத்தியில் ஒரே ஒரு காகத்தை குறி வைத்து துடிக்கத் துடிக்கக் கொத்திக் கொண்டிருந்தது. மற்ற காகங்கள் அந்த ஒரு காகத்தைக் காப்பாற்ற வழியில்லாமல் உதவிக்கு ஊரையே கூப்பாடு போட்டுக் கத்திக்கொண்டிருந்தன. பின்பு அந்தக் காகம் செத்ததா பிழைத்ததா என்பதுகூட தெரியாது. அது ஒரு வினோதமானக் காட்சி. காகங்களின் மீது சிறிதும் எனக்குப் பரிதாபம் வரவில்லை.
இதே போன்று ஒரு காட்சியை இதற்கு முன்பு என் ஊரில் பார்த்திருக்கிறேன். பத்து பதினைந்து காகங்கள் ஒரு குயிலை போட்டு வதைத்துக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. இவர்களின் சண்டையில்தான் எவ்வளவு பெரிய வித்தியாசம். இணையான உடல் பருமன் கொண்ட ஒரு பறவையால் ஒரு காகத்தைக் கூட சமாளிக்க முடியவில்லை. அதற்கு எதிராக  இருபது காகங்களினால் ஒரே ஒரு காகத்தை அந்தக் கரிச்சான் குருவியின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அவ்வளவு சிறிய உடல் கொண்ட குருவிக்கு எங்கிருந்து அத்தனைப் பெரிய கூட்டத்தைத் தாக்கும் ஆற்றல் வந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. மேலும் பறவை என்றால் என்ன குருவி என்றால் என்ன என்பதை நிதானித்து வகையறுப்பதே பெரிய விஷயம். அந்த நாள் முதற்கொண்டு கரிச்சான் குருவி என்றால் ஒரு தனி மரியாதை.
பெரியவர் ஒருவர் இந்தக் கரிச்சான் குருவியைப் பற்றி கதை ஒன்றைச் சொன்னார். கடவுள் ஒருமுறை பறவைகள் எல்லாவற்றிற்கும் போட்டி ஒன்றை வைத்தாராம். யார் யார் எவ்வளவு தூரம் பறக்கிறார்களோ அதுதான் அவர்களின் வாழ் நாள் முழுவதும் பறப்பதற்கான தூரத்தின் எல்லை என்றாராம். அவரவர் ஆசைக்கு ஏற்றபடி பறந்தார்களாம். கோழி அதிகம் பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டதாம். அதனால் அதற்கு பறப்பதற்கான ஆற்றலே இல்லாமல் போய் விட்டது. வாத்து மந்தமாக எனக்கென்ன என்று இருந்ததினால் கோழி பறக்கும் அளவிற்குக் கூட வழி இல்லாமல் தரையிலேயேக் கிடந்ததாம். இறக்கைகள் இருந்தும் வீணாகிப் போய்விட்டதாம். ”சோம்பேறி வாத்தே!” என்று கடவுள் அதன் மீது கோபித்துக் கொண்டாராம்.  
கரிச்சான் குருவிக்கு மாத்திரம் பேராசை அதிகம். கழுகையும் மீறி அதிக தூரத்தைக் கடந்து மேலும் மேலும் பறக்க ஆரம்பித்ததாம் கரிச்சான் குருவி. மேலும் மேலும் பறந்து சூரியனையே கிட்ட நெருங்க ஆரம்பித்து விட்டதாம். கடவுள் கோபப் பட்டு “உனக்கு இவ்வளவு பேராசை கூடாது” என்று சொல்லி சூரியனை வைத்து அதன் வாலை சுட்டெரித்து விட்டாராம். அப்படியே பூமிக்கு வந்து விழுந்து விட்டதாம் கரிச்சான். கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுத் தப்பித்து விட்டதாம். அதனால்தான் கரிச்சானின் வால் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறதாம். அது கடவுள் கொடுத்த தண்டனை என்று அந்தப் பெரியவர் கதையை முடித்தார்.
நான் பார்த்த வீரம் மிக்க கரிச்சான் குருவியை அந்தக் கதை மேலும் அழகு படுத்திக் காட்டியது. கூட்டமாக மரக்கிளைகளில் உட்கார்ந்துக் கொண்டு ஏதோ கிசி கிசு பேசிக்கொள்வார்கள். பார்ப்பதற்கு அப்படியே மனிதர்கள் கதை பேசுவது போன்று இருக்கும். என்னதான் பேசுவார்கள் என்பது நமக்குத் தெரியாது. மிகவும் விந்தையான பேச்சு அவர்களுடைய பேச்சு. இவர்களைப் பற்றி நான் பார்த்து மகிழ்ந்த அத்தனைத் தகவல்களும் கதைகளும் ஒரே புள்ளியில் என்னை அவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து சிந்திக்க வைத்தது. இவர்களின் பெயர் ஆயர் பாடிப் பெண்கள் மத்தியிலே கீர்த்திப் பெற்ற பெயர் என்பதுதான் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இலக்கியம் மான்களைப் பற்றிப் பாடியிருக்கிறது, குயிலின் குரலைப் பற்றி புகழ்ந்திருக்கிறது. கிளியைப் பற்றி சொல்லவே வேண்டாம். கரிச்சான் குருவியையுமா என்பதுதான் ஆசாரியத்திலும் ஆச்சரியம்.
சோ. தர்மனின் சூல் நாவலை வாசித்து முடித்தப் பின்பு அந்த உலகம் முழுவதும் பறவைகளால் நிறைந்த உலகமாக இன்னும் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது. ஒரு முக்கியமானப் பறவை என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது. கரிச்சான் குருவி. மேலும் ஆண்டாள் பாடிய ஆனைச் சாத்தான்தான் இந்தக் கரிச்சான் குருவி என்றதும் என் வாழ் நாளில் பல இடங்களில் நான் பார்த்து கவனத்தில் கொள்ளாது அலட்சியம் செய்த கரிச்சான் ஒரு நெடுந்தொடராக என் கண் முன் விரிந்தது.
”கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே”.
இந்த அழியா வரிகளில் நான் பார்க்கும் ஆனைச்சாத்தானுக்கும் நிஜத்தில் அதுவும் என் நிஜ உலகத்தில் பார்த்த கரிச்சான் குருவியும் ஒன்று சேர்ந்தபோது அந்தக் குருவி என் மனதில் காவியமாகிவிட்டது.

இந்தக் கன்னங்கரேல் குருவிக்கு வந்த வாழ்வைத்தான் பாருங்களேன்! ஆண்டாள் பாசுரத்தில் இன்றும் இந்தக் குருவிகள் அதிகாலையில் இரகசியம் பேசிக்கொண்டிருக்கின்றன.  

2 comments:

  1. Great visual impact. After submission, you can become a columnist.

    ReplyDelete
  2. Great visual impact. After submission, you can become a columnist.

    ReplyDelete

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...