நெப்(போலியனின்) கைக்குட்டை - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Friday, March 10, 2017

நெப்(போலியனின்) கைக்குட்டை

போரும் வாழ்வும் நாவலில் ஓரிடத்தில் டால்ஸ்டாய் நெப்போலியனைப் பற்றி இவ்வாறு சொல்லுவார் “ அவன் உள்ளுக்குள் ஒரு இத்தாலியன், வெளிப்பாவனையில் ஒரு பெரென்சுக்காரன்” என்று. அத்தனையும் நடிப்பு. உண்மைத்தன்மை என்று எதுவும் அவனிடத்தில் கிடையாது. அது இருக்கட்டும். அந்த நெப்போலியனைப் பற்றி இப்போது நமக்கு என்ன கவலை என்று கேள்வி எழலாம். இப்போது நூறு ஆண்டுகளுக்கு முன் சர்வாதிகாரியாக வாழ்ந்த நெப்போலியனைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்கள். ஹிட்லர் என்றால் கூடப் பரவாயில்லை. நமக்கு இங்கு முக்கியமாகப்படுவது டால்ஸ்டாய் காட்டும் நெப்போலியன்தான். நாவலில் நாவலாசிரியன் காட்டும் ஒரு மனிதன் நிஜத்தைக் காட்டிலும் தத்ரூபமானவன். நெப்போலியனை அநேகர் புகழ்ந்துதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அனால் போரும் வாழ்வும் மாத்திரம்தான் நெப்போலியன் என்றால் யார் என்று மிக அருகில் நம்மை அழைத்துக் கொண்டு போய்க் காண்பிக்கிறது. நாம் கேட்டறிந்த நெப்போலியன் வரலாறு கட்டமைத்த நெப்போலியன். அதில் தகவல்கள் மாத்திரம் அதிகமே தவிர உண்மைக்கு எந்த இடமும் கிடையாது.
ஏற்கனவே சொன்னது போல நெப்போலியன் என்பவன் இரண்டு கலாச்சாரக் கூறுகளின் கலவை. அது பெருமைக்குறியதாக நாம் கொண்டாட முடியாது. அது சர்வாதிகாரிகளின் ஆரம்பம். மன்னர்களின் முறைமை முடிந்து வேறு வகையான ஆட்சியாளர்கள் தோன்றுகிறார்கள் என்பதற்கு இவன் போன்றவர்கள் உதாரணம். அவன் இவன் என்று சொல்வதினால் நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த நேப்போலியனுக்காக அவருடைய அபிமானிகள் ஒன்றும் சண்டைக்கு வரமாட்டர்கள் என்று நினைக்கிறேன். நான் முதலில் போரும் வாழ்வும் வாசிக்கும் போது நெப்போலியனின் இந்த கலவைத் தன்மையைப் பற்றி தெளிவாக பார்க்கவில்லை. இப்போது என்னுடைய வாசிப்பில் மிகத் தெளிவாக மிக அருகில் என் கண் முன் அவன் உலவியலின் ஒட்டத்தோடு தோலுரித்துக் காட்டப்படுகிறான்.
எப்போதும் அதிகாரத்தை ருசித்துக் கொண்டிருக்கும் ஒரு நபர்தான் இந்த நெப்போலியன். எங்கு சென்றாலும் தான் ஒரு அதிகாரத்தின் மையம் என்பதை மற்றவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பவன். நாவலில் நாம் பார்ப்பது அதிகாரத்தின் ஒரு மையத்தை மாத்திரமே. தான் எங்கு சென்றாலும் தானே முதன்மையானவன். தனக்கு இணையாக யார் எதிரில் நின்றாலும் அவர்களை தனக்குக் கீழானவர்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணமாக எதையாவது செய்துவிடுவான். எதிரில் நிற்பவர்களும் அதை அங்கீகரிக்கும் வண்ணமாக அவன் எதை அவர்கள் செய்யவேண்டும் என்று நினைத்தானோ அதையே செய்து அவனுக்கு தான் கீழ்பட்டிருக்கிறேன் என்பதைக் காட்டிவிடுவார்கள்.
அப்படித்தான் கைக்குட்டைச் சம்பவமும். இது மிகவும் புகழ் பெற்ற சம்பவம். போரின் காலக்கட்டத்தில் தன்னை பார்க்க தனக்கு இணையான ஒரு அதிகாரி வருகிறார். இப்போது நெப்போலியன் முழு ரஷ்யாவையும் கைப்பற்றும் பேராசையில் இருக்கிறான். பேச்சுவார்த்தைக்காக வந்த அதிகாரியை எப்படியாவது மூக்கை உடைத்து “நான் தானடா உன் அதிகாரி” என்று அவருக்கு நிரூபித்துக் காட்டவேண்டும். பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கும் சமயத்தில் நெப்போலியன் கைக் குட்டையை கீழே நழுவட்டுவிடுகிறான். அது தற்செலானதாம். அதை போட்டுவிட்டு அப்படியேப் பேசிக்கொண்டிருக்கிறான். அனைவருக்கும் கீழேக் கிடக்கும் கைக்குட்டையின் மீதே கவனம். இப்போது அந்தக் கைக்குட்டைதான் அந்த விவாதத்தின் மையம். அதுவே யார் பெரியவன் என்பதை தீர்மாணிக்கப் போகிறது. பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரி அதை எடுத்து நெப்போலியனின் கையில் கொடுத்துவிட்டால் எல்லாம் முடிந்தது. நெப்போலியனே எல்லாரிலும் உயர்ந்தவன். நெப்போலியன் நிச்சயமாக தான் கீழே போட்ட கைகுட்டையை எடுக்கவே மாட்டான். அவனுக்கு மாத்திரம்தான் அந்தக் கைக்குட்டையின் மீதிருக்கும் அதிகாரம் தெரியும். இப்போது பேச்சு வார்த்தை முக்கியம் கிடையாது அந்தக் கைக்குட்டையின் மீது இருக்கும் அதிகாரத்தை எப்படி கையாள்வது என்பதே பெரிய பிரச்சனையே.
நெப்போலியன் எதிர்ப்பார்க்காத வகையில் கைகுட்டை வேறுவிதமாக கையாளப்பட்டது. அதன் அதிகாரம் முற்றிலும் நகைப்பிற்குள்ளாகியது. அதிகாரி நெப்போலியனின் கைக்குட்டையைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் வேறொரு தந்திரத்தைக் கையாள்கிறார். தானும் தவறுதலாக தன் கைகுட்டையை கீழே போட்டுவிட்டு அதை எடுத்துக்கொள்கிறார். இப்போது இது நெப்போலியனுக்கான ஒரு பாடம். “முட்டாள் நீ நழுவவிட்ட கைக்குட்டையை நான் எடுத்துக் கொண்டது போல நீயே உன் கைக்குட்டையை எடுத்துக் கொள்” என்பதுதான் அந்தப் பாடம். அதிகாரம் சமச்சீர் விகிதத்தில் பங்கிடப்பட்டுக்கொண்டது. ஒருவேளை நெப்போலியனின் கைக்குட்டை கண்டுக்கொள்ளப்படாமல் போய் இருந்தால் அதுவும் நெப்போலியனின் வெற்றியாகத்தான் இருந்திருக்கும். தான் வீசியெரிந்த அதிகாரத்தைக் கையில் எடுக்க யாருக்கும் திராணிக்கிடையாது என்பதே அதன் பாடமாகப் போய் இருக்கும். அதே நேரத்தில் கைக்குட்டையை எடுத்துக் அவனிடம் கொடுத்திருந்தால் “உடனே சிரமத்திற்குள்ளாக்கியதற்கு மன்னிப்புக் கேட்டு தான் எவ்வளவு மேன்மையானவன் அதுவும் ஒரு சர்வாதிகாரி நானே மன்னிப்புக் கேட்கிறேன் பார் என்று தம்பட்டம் அடித்திருப்பான். இதில் ஏதோ ஒன்று நடந்திருக்கும். எனினும் அந்தக் கைக்குட்டையில்தான் முழு அதிகாரத்தின் விளையாட்டும் இருந்தது. அவர்களுடைய உரையாடல் வெறுமனே வெற்றுப் பேச்சு. அதில் எந்த போர் சம்பந்தமான உரையாடல்களும் இருந்திருக்க முடியாது. போர் பற்றிய பேச்சுவார்த்தை முழுவதும் அந்தக் கைக்குட்டையின் மூலம் பேசாமல் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது.
அதிகாரத்தின் மையத்தில் அல்லது இருப்பிடத்தில் நாம் எதிர்கொள்ளும் ஓவ்வொரு நொடியும் போர்ச்சூழலுக்கு ஒப்பானதுதான். இதனை வெறுமனே ஒரு சம்பவமாக மாத்திரம் நாம் பார்த்துவிடமுடியாது. நெப்போலியன் என்பவன் ஒற்றை மனிதன் கிடையாது. அதுவும் டால்ஸ்டாய் காட்டியிருக்கும் மனிதன் ஒற்றைமனிதனேக் கிடையாது. அவன் அதிகாரத்தில் இருக்கும் ஒரு மனிதனுக்கான குறியீடு. இன்றைக்கும் நாம் அணுகுகிற அதிகாரிகள் யாவருக்குமான குறியீடுதான் இந்த நெப்போலியன். நெப்போலியனைப் படிக்கும் நாம் யாவரும் இன்றைய அதிகாரத்தின் ஓவ்வொரு ஏஜன்டையும் அவன் மூலம் வாசிக்கிறோம். அவர்கள் எவ்வளவு உன்னதமானவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் இந்த நெப்போலியன் காட்டும் பிம்பங்கள் மாத்திரமே. நாம் எப்படி நெப்போலியனை சமாளிக்கப்போகிறோம் என்பது பொருட்டன்று அதைவிட நெப்போலின்கள் கீழேத் தவறவிடும் கைக்குட்டைகள் தான் மிக முக்கியமானவைகள்.
கைக்குட்டைக்கான அதிகாரம் அந்த அதிகாரத்தின் சுற்றெல்லைக்குள்ளாகவே அடக்கியிருக்கிறது. அந்த அதிகாரத்தின் சுற்றெல்லையில் இருந்து வெளியே வந்துவிட்டால் வெளியே யாரும் சர்வாதிகாரிகள் கிடையாது. கைக்குட்டையும் வெறும் பஞ்சு நூலை உட்பொருளாகக் கொண்டு செய்யப்பட்ட ஒரு சிறு துண்டுத்துணி. அவ்வளவுதான் அதன் மதிப்பு. அந்த சுற்றெல்லைக்குள் யாராவது வரட்டுமே. பிச்சைக்காரனை அரியணையில் அமர்த்தி அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்களேன் ஆட்சிப்பீடத்தில் அமரும் அந்தத் தருணத்தில் அந்தக் கைக்குட்டையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அவன் நன்றாகக் கற்றுக் கொள்வான். அந்த சூழல் அவனை அதற்குப் பழக்கப்படுத்திவிடும். இல்லை இல்லை பக்குவப்படுத்திவிடும்.
இன்றைக்கு நமக்கு முன் இருக்கும் ஒற்றைச்சவால் அந்த கைக்குட்டையை எவ்வாறு நாம் சமாளிக்கப்போகிறோம் என்பதுதான். இந்தக் கைக்குட்டைக்கு எதுவும் தெரியாது. யார் தன்னை கைப்பற்றுகிறானோ அவனுக்கான அதிகாரத்தை அது கொடுத்துவிடும். அதற்கு நண்பன், சகோதரன், என்று யாரையும் தெரியாது. ஏன் ஆருயிர் காதலியாக இருந்தால் கூட அது காதலின் கண்ணைக் கட்டி விடும். காதலுக்குக் கண் இல்லையென்றால் கண்மூடி பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக்குருட்டுக் காதலின் கண்களையும் குருடாக்கக்கூடியது இந்தக்கைக்குட்டை. ஐயோ! அந்த கொடுமைக்காரக் கைக்குட்டை அநியாயமாக எந்தப் பாவமும் அறியாத அந்த டெஸ்டிமோனாவைக் கொன்றுவிட்டதே.  
நெப்(போலியனின்) கைக்குட்டை Reviewed by Arul Scott on 2:34 AM Rating: 5 போரும் வாழ்வும் நாவலில் ஓரிடத்தில் டால்ஸ்டாய் நெப்போலியனைப் பற்றி இவ்வாறு சொல்லுவார் “ அவன் உள்ளுக்குள் ஒரு இத்தாலியன், வெளிப்பாவனையில் ஒ...

No comments: