Wednesday, March 1, 2017

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தாளர் கட்டியங்காரனை சந்தித்தேன். உற்சாகத்தின் மிகுதியில் இருந்தார். நான் எதுவும் வாய் கொடுக்கவில்லை. ஏன் தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று பக்திப் பழமாக அருகில் சென்று அமைதியாக அமர்ந்தேன். அவர்தான் முதலில் பேச வேண்டும். அதுவே நியதி. மெல்ல பேச்சை ஆரம்பித்தார். ஆறு மாதமாக ஒரு கதை கருவை மனதில் போட்டு ஊறவைத்திருந்தேன். இன்று ஏனோ தெரியவில்லை அதைப் பற்றிய ஒரு புதிய அதுவும் முழுமையான பார்வை கிடைத்தது. எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு கதையை எழுத முற்பட்டுவிட்டேன். ஒரே மூச்சாகக் கதையை எழுதி முடித்துவிட்டேன். எங்கும் எதுவும் கொடுக்காத பரமானந்த நிலை என்னுள் இப்போது நிலவுகிறது என்றார். டைட்டில் ”கோமாளிக் கூத்தன் பஃப்பூன்”. இந்தக் கதை புதுமைப்பித்தனின் ”கயிற்றரவு” கதைக்கு இணையான புகழை எனக்கு ஈட்டித்தரப்போகிறது பார். சரி, டைட்டில் எப்படி என்றார். அவர் பேசுவார் பதில் எதிர்பார்க்க மாட்டார். அது ஒரு பொருட்டே அல்ல. எனக்குள் சிரிப்பு வந்துவிட்டது. இந்தச் சாமியார்களுக்கும் சரி படைப்பாளிகளுக்கும் சரி பரமானந்த நிலை  என்றால் என்ன என்பது இன்றுவரை நமக்கு விளங்கியபாடில்லை. இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா. மேலும், எப்போது பார்த்தாலும் தன்னைப் புதுமைப்பித்தனோடு ஒப்பிட்டுக்கொள்வதற்கு எப்படித்தான் இந்த மனுஷனுக்கு மனம் வருகிறதோ. இப்படியே விட்டால் இன்னும் சில நாட்களில் தன்னைத் தாஸ்தாவஸ்கியுடன் ஒப்பிட்டுக்கொள்ளவும் செய்வார். அதற்குள் நல்ல மனநல மருத்துவரைப் பார்த்தாக வேண்டும்.


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...