குஞ்சிதபாதத்தின் பூர்வாங்கம்: சில கிசு கிசுக்கள் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Monday, March 6, 2017

குஞ்சிதபாதத்தின் பூர்வாங்கம்: சில கிசு கிசுக்கள்

குஞ்சிதபாதத்தை அடிக்கடி சந்தித்துவருகிற நமக்கு அவருடைய பூர்வாங்கத்தைப் பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரியாது. தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. அதனால் அப்படியே விட்டுவிட முடியாது இல்லையா? ஒரு மகா புருஷன், அதுவும் கதையின் நாயகன். ஆரம்பம் என்று இல்லாமலா பொய் விடும்? யார் இந்த பூமியில் சுயம்புவாக இருந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஆதியும் முடிவும் இருந்தாக வேண்டுமே. நம்முடைய குஞ்சிதபாதம் மாத்திரம் விதிவிலக்கா என்ன! அவனும் சொற்ப ஆயுள் கொண்ட அற்பப் பிறவிதானே. எனினும் எப்போதும் அரித்தெடுக்கிற நம்முடைய துருதுரு மண்டைக்கு அவனைப் பற்றி சில தகவல்களைத் தீனிபோட வேண்டியிருக்கிறது. தீர்மாணமான தகவல்கள் ஏதும் கிடைக்காவிட்டாலும் எதாவது ’கிசு கிசு’வாவது நிச்சயம் இருந்தாக வேண்டும். உண்மைக்கு அடுத்து நாம் நம்பியிருக்கிற தார்மீகத் தகவல் கிசு கிசு மாத்திரம்தானே.
குஞ்சிதப்பாதத்தைப் பற்றிய தெள்ளத்தெளிவான தகவல் அவர் ஒரு ஆய்வு மாணவர். இந்த ரெண்டாங்கெட்டான் நிலைமையில் ஜீவனம் செய்பவர். அவருடைய உலகம் மிகச் சிறிய வட்டத்திற்குள் இயங்குகின்ற உலகம். திருவல்லிக்கேணி நல்லத்தம்பி தெருவில் இருந்து பல்கலைக் கழகத்திற்கும் அப்படியே அங்கிருந்து நல்லதம்பி தெருவிற்கும் ஆன ஒரு பயணமே நம்முடைய கதா நாயகனின் பொழுது போக்கு உடற்பயிற்சி அனைத்தும். இப்படி ஒரு இடத்தையும், வழியையும் குறிப்பிட்டு சொல்வதினால் யாரையும் நம்முடைய நாயகன் சுட்டுக்காட்டும் signifier என்று மாத்திரம் சந்தேகப்பட்டுவிடாதீர்கள். குஞ்சிதபாதம் என்பது எங்குமற்று ஒரே நிலையில் அதுவும் ஆய்வு மாணவர்கள் என்ற நிலையில் இயக்கும் ஒரு புண்ணிய ஆத்துமாவின் பரமானந்த நிலை. அதனை யாரோடும் ஒப்பிட்டு உங்களூக்குள் சிரித்துக் கொள்ளக்கூடாது. அவன் நகைப்பதற்கும் நையாண்டிசெய்வதற்குமான பாத்திரம் அல்ல. கட்டியங்காரன் என்ற உலகப்புகழ் எழுத்தாளன் மண்டையில் இருந்து உதித்த ஒரு தனி மனிதன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கென்று தனி உலகமும் அதற்கென்று ஆசா பாசங்களும் இருக்கின்றன. ஞாபகம் இருக்கட்டும் அவன் ஒரு தனிமனிதன். யாரையும் குறிப்பிட்டுக் காட்டும் இடுகுறி புள்ளி அல்ல அவன். குஞ்சிதபாதம் தனியொருவன். அவன் தனக்காகவே பிறந்திருக்கிறான். அவன் தன் சொந்த மனசாட்சியின் குரலுக்காகவே வாழ்கிறான். ஆதலால் அவனைக் கொண்டு யாரையும் நாம் மதிப்பிட முடியாது. அதே நேரத்தில் அவன் மீது நம்முடைய எண்ணங்களின் தாக்கத்தையும் செலுத்தவும் முடியாது.
அவன் தனியொருவன் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அவன் உள்ளக்குமுறல்கள் அவனுக்கானது என்று நிறுத்திவைத்து அந்தக் குமுறலுக்கான சமூகப் பொறுப்பை அலட்சியம் செய்துவிடாதீர்கள். சமூகத்தில் எங்கேயாகிலும் ஏதாவது அநீதி நடக்குமாயின் அதற்காக முதல் குமுறுகிற உள்ளக்குமுறல் அவனுடையாகத்தான் இருக்கும். எனவே அதனை அலட்சியம் செய்துவிட முடியாது. அவன் கட்டியங்காரன் சிருஷ்டித்த மகா சிருஷ்டி.  
இப்படி அவனைப் பற்றி உண்டு, இல்லை என்று தீர்க்கமாகவும் அல்லாது பூடகமாகவும் அல்லாது பேசுவதனால் நாம் சொல்லும் குஞ்சிதபாதம் என்பவன் ஒரு கற்பனைக் கிடையாது. அது ஒரு மாயை. மாயை என்பதினால் இல்லாமை என்றும் அர்த்தம் கிடையாது. மாயை என்பது நம் மனம் புலப்படுத்திக் கொள்ளாத ஒரு உண்மையின் பூடக நிலை. எனவே மாயைக்கு இல்லாமை என்று பொருள் தந்து நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்ளக் கூடாது. இருக்கிறது ஆனால் இல்லை. இதுதான் குஞ்சிதபாதம் என்ற சிருஷ்டியின் பூர்வாங்கம்.
அவனைப் பற்றிய மற்ற அனைத்துத் தகவல்களும் கிசு கிசு மாத்திரமே. அவைகளை நம்புவதும் நம்பாமல் போவதும் நம்முடைய மன சுவாரசியத்தைப் பொருத்து இருக்கிறது. கிசு கிசு என்று வந்த பின்பு அனைத்தையும் நம்பியாக வேண்டும். அனைத்தும் பொய் என்றால் அந்த பொய்மையின் உண்மையை மெய் என்றே நம்பியாக வேண்டும். பாதிப் பொய், பாதி உண்மை என்றால் பொய்யோடு சேர்ந்து உண்மையும் பலியாக்கப்படும். அல்லது உண்மையோடு சேர்ந்து பொய்யும் உண்மையென நம்பப்படும். சரி, அனைத்தையும் உண்மை என்று சொன்னால் அதுவும் பிரச்சனை. உண்மை என்று சொன்ன உடனேயே அது எந்த அளவிற்கு உண்மை என்று பொய்யைக் கொண்டு அதன் உண்மைத்தன்மை அலசப்படுகிறது. அனைத்தையும் பொய் என்று சொல்லி விட்டால்  நட்டம் என்ன? ”பொய் பொய்” என்று கதைத்துக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் உண்மையாக இருக்குமோ என்று சந்தேகம் வர ஆரம்பிக்கிறது. பொய்யும் உண்மையும் நம்ப முடியாத இரட்டையர்கள். இவர்களை நாம் நம்புவானேன்?
ஆக, நாம் இனி சொல்லப்போகும் அனைத்துத் தகவல்களும் பொய்யும் அன்று உண்மையும் அன்று. வெறுமனே கிசு கிசு அவ்வளவுதான். மிகவும் சுவாரசியமானது. நன்றாக காதைக் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். கழுதைக்காதாகிவிடும் என்று பயப்படுகிறீர்களா? அது சுத்தப் பொய். உண்மைவாதிகள் கட்டிய பச்சைப் பொய். நம்பாதீர்கள். சரி, காதைக் கொடுங்கள். நாம் மனதில் பேசிக் கொண்டாலும் மிகத் தெளிவாகக் கேட்க வேண்டும். ஏற்கனவே சொன்னது போல அவர் ஒரு ஆய்வு மாணவர். விட்டால் பேராசிரியர்களே அவர் பாதத்தில் அமர்ந்து அமைப்பியல் பாடத்தைக் கேட்கும் அளவிற்கு மொழிஞானத்தோடு தத்துவ ஞானமும்  ஜாஸ்தி. குஞ்சிதபாதத்தின் வகுப்பிற்கு செல்லும் ஓவ்வொருவருக்கும் இந்த குறிப்பிட்ட சொற்களுக்கான பொருள் தெரிந்திருக்க வேண்டும்.

1.    Langue
2.    Parole
3.    Difference
4.    Aporia
5.    Binary opposition
6.    Rupture
7.    Ecrites
8.    Trace
9.    Sing
10. Signifier
11. Signified
ஞான சூன்யமாட்டம் ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் சொற்கலஞ்சியங்களைத் தேடினால் பொருள் கிடைக்கவேக் கிடைக்காது. முதலில் இலக்கியச் சொல் அகராதியைப் பார்க்க வேண்டும். அதன் பொருள் ஓரளவிற்குத்தான் விளங்கும். பின்பு அதனை தத்துவக் கையேட்டுக் குறிப்பில் மற்றுமொருமுறை பார்க்க வேண்டும். அப்போதுதான் ஏதோ புரிந்தது மாதிரி இருக்கும். இவைகளை பாடம் கற்றுக் கொள்வதற்கே ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஆகிவிடும். இவ்வளவு பயிற்சியும் இருந்தால்தான் ஏதோ புரிந்தது மாதிரி இருக்கும். குஞ்சிதபாதத்தின் வகுப்பில் நம்மால் தொடர்ந்து இருக்கவும் முடியும். இல்லையென்றால் கேட்பது என்னவோ ஆங்கிலமாகத்தான் இருக்கும். ஒன்றும் புரியாது. நடையைக் கட்டிவிடுவோம். சரி, வார்த்தைக் கணக்கு ஐநூறுக்கும் அதிகமாகிவிட்டதால். அடுத்த ஐநூறுவார்த்தைகளில் அவருடைய அமைப்பியல் வகுப்பைப் பற்றி பார்போம்.  
குஞ்சிதபாதத்தின் பூர்வாங்கம்: சில கிசு கிசுக்கள் Reviewed by Arul Scott on 3:29 AM Rating: 5 குஞ்சிதபாதத்தை அடிக்கடி சந்தித்துவருகிற நமக்கு அவருடைய பூர்வாங்கத்தைப் பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரியாது. தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமு...

No comments: