Friday, January 1, 2016

”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்



 ”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்

உயிர்மை நவம்பர் இதழில் வெளியானஈசனருள்கதையை வாசித்தேன். பொதுவாக கதை படித்த உடன் என் போன்ற நபர்கள் கதசூப்பர்சார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். காரணம் கதைகள் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதனால் கதையைப் பற்றி பேசுவதற்கு எதுவும் வார்த்தைகள் இருக்காது. ஆனால் சிறந்த கதைகளோ மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி குறைந்தது சில நாட்களுக்காவது சிந்திக்க வைக்கும், அதைப் பற்றி பேசவும் வைக்கும். உங்களுடைய எங்கதெ அப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கி நீண்ட நாள் விவாதங்களை துறையில் நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.  நான் இந்த கதையை பாராட்டசூப்பர்என்று சொல்லி கதையை கொச்சைப் படுத்த விரும்பவில்லை.
கதையை படித்த உடன் உடனடியாக என் எண்ணங்கள் கதை சொல்லப்பட்ட முறையைப் பற்றிதான் அதிகம் சிந்திக்கலாயின. நம் மத்தியில் அநேகர் கதை சொல்வதில்தான் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். கதை தான் அவர்கள் நோக்கமாக இருந்திருக்கிறது. அதனால் கதையில் கதை சொல்லி என்று யாரும் இல்லையோ என்ற கேள்வி எழுகிறது. உங்களுடைய கதை சொல்லப்பட்ட விதமும் அதில் கதை சொல்லியின் நிலையும் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
முக்கியமாக முழுக்கதையும் இசையாக மீட்டப்பட்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கதையின் பொருளைக் காட்டிலும் கதை கொடுக்கும் இசை உணர்வு அதை புரிந்து கொள்ளவதைக் விட ரசிக்கவே என்னை தூண்டுகிறது. சந்திரவதனம் தன் வாழ்க்கையை இசையால் வாழ்கிறாள் இசையால் மற்றவர்களுடன் சம்பாஷிக்கிறாள் இசையைக் கொண்டே தன் காதலையும் தெரிவிக்கிறாள். மற்றவர்களுக்கு அது வெறுமனே பொழுது போக்கு மற்றும் பக்தி பாடல்களாகவே புரிகிறது. அதன் நாதத்ததை இரசித்தது அவளுடைய வயோதிகக் காதலன் மட்டுமே. இதை நம்மாலும் ஏன் சந்திரவதனத்தாலும் கூட புரிந்து கொள்ள முடியாது. காரணம் காதலும் இசையைப் போன்றது தான். அதை உணரச் செய்ய முடியுமே அன்றி புரியவைக்க முடியாது. புரியப்படாததால் சந்திரவதனத்தின் வாழ்க்கை கடைசியில் மற்றவர்களின் புறியாமை என்ற புற்று நோயால் சிதைக்கப் படுகிறது.       
ஒருவேளை கதை சந்திரவதனத்தின் கதையாக மட்டுமாகவே இருந்திருந்தால் எனக்கு கதை மாத்திரமே போதும். படித்துவிட்டு சூப்பர் சார் என்று நான் தப்பித்து விடுவேன். எனக்கு சந்திரவதனத்தைப் பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. அவளுக்காக ஒரு சொட்டு கண்ணீர் சிந்தி விட்டு என் பாராட்டை கதைக்கான மரியாதையாக தெறிவித்து விடுவேன். ஆனால்ஈசன் அருள்வெறுமனே கதையாக நின்றுவிடவில்லை. அது ஒரு வாழப்பட்ட வழ்க்கை. கலியம்மாள் பாத்திரமாக அல்ல ஒரு வாழ்க்கையை மனிஷியாக கதையில் வாழுகிறாள். இங்கு கலியம்மாவாள் கதை அதன் கற்பனை நிலையில் இருந்து யதார்த்தம் என்ற தளத்திற்கு நகர்த்தப்படுகிறது.
கதையிலிருந்து இந்த யாதார்த்தம் என்ற தளத்திற்கு நகரும் போது அதற்கு நிஜ-யதார்த்தத்தின் மீதான தன் பொறுப்பு அதிகமாகிறது. இந்த கற்பனை-யாதார்த்தத்தில் ஆசிரியன் தன் சொந்தக் கருத்தை சொல்ல எந்த இடமும் இல்லை. தன் சொந்தக் கருத்து இங்கு உட்செருகப்படும் போது கதை சிதைந்து நிஜ யதார்த்தை முதன்மைப் படுத்துவதற்கு பதிலாக அதை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. இதைத்தான் யதார்தவாதம் என்ற பெயரில் அனேகர் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கதையின் முக்கியமான சிறப்பம்சம் அதில் ஆசிரியன் தன் கருத்துக்களை திணிக்கவில்லை என்பதுதான். ஆசிரியனுக்கும் கதைக்கும் மிக நீண்ட இடைவெளி இருப்பதை நான் இங்கு பார்க்கிறேன். இந்த இடைவெளியின் மூலம் கதை தன் உயிரை பாதுகாத்துக் கொள்கிறது. இங்கு கதை ஒரு தனித்த படைப்பாக ஆசிரியனின் எண்ணங்களுக்கு விடுபட்டு நிற்கிறது. இது என்னுடைய முதலாவது அவதானிப்பு. இரண்டாவது, என்னதான் கதையை அதன் தற்சார்பு நிலையில் வைக்க ஆசிரியன் முயன்றாலும் கதை சொல்லி என்ற உயிர்குரல் கதையில் இல்லை என்றால் சொல்லப்பட்ட கதை ஆசிரியனின் கதையாகத்தான் இருக்கும். பின்பு கதை கலியம்மாளின் கதையாக மாறிவிடும்.
கதை ஒரு வாழ்க்கையாக நிகழ்த்தப்படுவது கதை சொல்லியின் கையில் தான் இருக்கிறது. கதை சொல்லியின் குரல் இல்லாமல் கதை பட்டைப்பாகாது. கதை சொல்லியின் நிலைப்பாட்டால் இந்தக் கதையில் ஒரு மாபெரும் பிரச்சனை தவிர்க்கப் படுகிறது. பொதுவாக வாசிப்பில் நாம் நம்முடைய நிலைப்பாட்டை கதையின் போக்கில் நாமே எடுத்துக் கொள்வோம். ஒருவேளை நான் தலித்தாக இருந்தால் கதை கலியம்மாளின் கதையாக வாசிக்கப்படும். ஒருவேளை நான் மேல் சாதிக்காரனாக இருந்தால் கதை முழுக்க முழுக்க சந்திரவதனத்தின் கதையாக வாசிக்கப்படும். வாசிப்பவர்களின் அரசியல் நிலைப்பாட்டை பொருத்து வாசிப்பும் மாறுகிறது. உண்மையில் இது யாருடைய கதையும் கிடையாது. இங்கு ஒரு வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது அந்த வாழ்க்கையைதான் ஆசிரியன் முதன்மைப்படுத்துகிறானே ஒழிய அதை கதையாக விமர்சிப்பது அல்ல. அது சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் பிழைப்பு. நமக்கு தேவை எல்லம் ஒரு வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது அதை ஆசிரியன் எவ்வாறு முதன்மைப் படுத்துகிறான் என்பதுதான் முக்கியம். அப்படிப்பட்ட முதன்மைப் படுத்தப்பட்ட வாழ்கை நீங்கள் கையாண்டிருக்கும் கதை சொல்லியின் மூலமாக படைப்பாக்கப் பட்டிருக்கிறது. இங்கு வாசிப்பவனின் வாசிப்பு அரசியல் மிகவும் பிரச்சனைக்குறியது. அது முற்றிலும் கதை சொல்லியினால் தவிடு பொடியாகிறது. கதை சொல்லி என்ற வடிகட்டி வாசகனின் அரசியல் சாக்கடையை கதையில் வரவிடாமல் வடிகட்டுகிறது. கலியம்மாள் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள் சந்திரவதனமும் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள் அவ்வளவுதான். இதை சாத்தியப்படுத்துகிறவன் கதை சொல்லி.

குறிப்பு:
சார், இந்த கதைக்கான பரிமானம் நாவல் வடிவம் என்று நினைக்கிறேன். இது என்னுடைய வெறும் கருத்து மட்டும் தான்.


      

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...