கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்: வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Tuesday, May 10, 2016

கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்: வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல்

கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்: வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல்

அபிலாஷின் சமீபத்திய நாவலான கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் நாவலை வாசிக்கும் போது அதை ஒரு குறிப்பிட்ட நாவல் வகைமைக்குள் புகுத்துவது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது. இது துப்பறியும் நாவலா, திரில்லர் வகைமையா அல்லது வெறுமனே நாவல் மட்டுமா என்ற கேள்வி எழுந்துகொண்டிருக்கிறது. எழுத்தாளன் இந்த வகைமையில் தான் தன் கதையை பரிசோதிக்க போகிறேன் என்று முயற்சி செய்து ஒரு கதையை உருவாக்கி விடுகிறான் ஆனால் கதை தான் எதிர்பார்த்த வகைமைக்கு மீறி எதுவும் அல்லாத ஒரு வகைமையில் நிற்கிறது. இதற்கு காரணம் கதையை பரிசோதனை என்ற முயற்சியில் செய்ததினால் உண்டானதாகும். விளைவு வகைமைப்பாட்டிற்கு வெளியில் பிரதி தன்னை நிறுத்திக் கொள்கிறது. இங்கு கேள்வி பரிசோதனையில் படைப்பிற்க்கான உயிர் அதில் தக்கவைக்கப்படுகிறதா அல்லது பரிசோதனையில் எதுவும் அற்ற நிலையில் நிறுத்தப்படுகிறதா என்பதுதான்.

பொதுவாக கவிதைக்கு மாத்திரமே உயிர் சம்பந்தமான விவாதம் வைக்கப்படும். ஆனால் நாவல் வடிவத்தில் இந்த மையமான ஒரு உயிர்நிலையை படைப்பாளன் உருவாக்குவது என்பது மிக பிரயத்தனமாக காரியம். கவிதைக்கான ஓர் ஆன்மாவை தக்கவைப்பது சற்று எளிதான காரியம், காரணம் அதில் தொடர்ச்சியான செய்முறைப் பயிற்சியில் தன்னையும் அறியாமல் ஓர் உயிர் நிலை வடிவம் அடைகிறது. அதே உயிர் நிலையை மீண்டும் கொண்டுவர கவிஞன் முயன்றாலும் அது முடியாது காரணம் கவிதை உணர்வு மிகுதியில் வெளிப்படும் ஒரு படைப்பு அவ்வளவுதான். ஆனால் நாவல் வகைமையில் இந்த நிலையை எட்டுவது மிகசிரமமானது. அது மாபெரும் கட்டிடத்தை கட்டுவதற்கு சமம் அங்கு உணர்வுகள் அல்ல மெய்யறிவு பெரும் பங்கு வகிக்கிறது. இங்கு எழுத்தாளன் தன் படைக்கும் திறனுக்கும் மீறி கலை என்ற நிலையை இந்த கட்டுமானத்தில் அடைய முயற்சிக்கிறான். எனவே நாவல் இந்த இரண்டு நிலையில் அதாவது பிரம்மாண்டத்தைக் கட்டமைக்கும் ஒரு முயற்சி மற்றும் அதில் ஒரு உயிர் நிலையை தக்கவைக்க அக்கலைஞனின் தேடல். இவ்விரண்டு முயற்சியில் நாவல் தன்னை கலை வடிவமாக இனம் கண்டு கொள்ள வேண்டி இருக்கிறது.
அவ்வாறு ஒரு பிரதி உயிர் நிலையை அடையும் போது அங்கு அந்நாவலுக்கான அந்தஸ்து வெறுமனே நாவல் என்ற நற்பெயர் மட்டுமே. அத்தகைய நிலையில் அதனை துப்பறியும் கதை என்றோ, சுவாரசியக் கதை என்றோ அழைக்க முடியாது. இன்று வரை குற்றமும் தண்டனையும் ஒரு சிறந்த உலக இலக்கியமாக நாவல் என்ற நிலையில் வைத்துதான் பார்க்கப்படுகிறதே தவிர அதை யாரும் ஒரு திரில்லராக வாசிப்பதில்லை.  இலக்கிய நிலையை அடைந்த பிரதிக்கு எந்த வகைமைப்பாடும் கிடையாது. இதையேதான் ஜெயமோகனின் உலோகம் நாவலும் சிருங்காரத்தின் புயலிலே ஒரு தோனி நாவலும் தாங்கள் அடைய வேண்டிய வகைமைக்குள் சிக்காமல் தங்களை பொதுப்படையில் நாவல் என்ற பெயரிலேயே இன்னும் அடையாளங்காண்கின்றன. அவர்கள் முயற்சித்தது என்னவோ ஒரு சிறந்த துப்பறியும் நாவல் வகைமையில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். ஆனால் வகைமையே ஒரு பரிசோதனை என்றான பின்பு அங்கு வகைமை தன்னை ஹோல்ம்ஸ் ஆகவோ, அல்லது ஹாட்லி சேசாகவோ தன்னை வைத்துக்கொள்ள முடியாது. இந்த வகையில் அபிலாஷ் தன் கதையை ஒரு திரில்லர் வடிவத்தில் முயற்சி செய்து அது கடைசியில் அபிலாஷின் கவிதையியலில்தான் ஒரு பரிசோதனையாக செய்யப்பட்டிருக்கிறதே ஒழிய அது திரில்லரின் இலக்கண முறைமைக்கு முற்றிலும் தூரமாய் இருக்கிறது. இங்கு திரில்லரை விட அபிலாஷின் கவிதையியல் பரிசோதனையே பெரிதுபட்டு நிற்கிறது
இக்கதை பீடியோபைலின் சிறுமிகளின் மீதான பாலியல் தொந்தரவுகளும் அதைத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளையுமே மையமாகக் கொண்டிருக்கிறது. ஒரு சிறுமி தான் தினமும் ஒரு நீள நிற மனிதனால் இம்சிக்கப்படுவதையும் அதை தொடர்ந்து ஒரு நீல நிற மனிதன் தப்பியோடுவதையும் பலர் பார்க்கிறார்கள். அந்த நீல நிற மனிதன் யார் என்ற துப்பு துலக்குதல் கதையை சுவாரசியமாக நகர்த்துகிறது. சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு ஆளாகிறார்கள் மற்றும் அதை சுற்றி கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த நீல நிற மனிதன் மாத்திரம் யார் என்று யாருக்கும் தெரியவில்லை. கதையில் துப்பறியும் போலீஸ் அதைத் தொடர்ந்து ஒர் கதை நாயகனாக தன் முயற்சியில் பேராசிரியர் ஒருவர்தான் இதற்கு எல்லாம் காரணம் என்று கண்டுபிடிக்கிறான். ஆனாலும் முக்கிய குற்றவாளி அகப்படாதது கதையை இன்னும் முன்னுக்கு இழுக்கிறது. பேராசிரியர் தான் குற்றவாளி என்று கைது செய்யப்படுகிறார். இதில் டி வளாகத்தில் பேராசிரியரின் உரை கதைக்கு மிகவும் சிறப்பை தருகிறது. ஆனால் உண்மையான குற்றவாளி வேறொருவன்.  கதையில் துப்பறியும் போலிஸ் குற்றவாளியை கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பது தான் அதன் க்ளைமேக்ஸ்.
இந்த அளவில் கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள் வெறுமனே ஒரு வழக்கமான துப்பறியும் கதைதான். ஆனால் பிரதிக்குள் பயணிக்கும் போது அதில் கையாண்டிருக்கும் பரிசோதனை ஒரு வழக்காற்றில் இருந்து கதை வேறொரு தலத்தில் செயல்படுகிறது. கதை கொடுக்கும் வாசிப்பு உணர்வு இதில் மிகவும் வித்தியாசம். துப்பறியும் கதைக்கும் கூடுதலாக எதோ ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கிறது. அது முதலாவது உளவியல் சார்ந்த பரிசோதனை. வழக்காற்றில் இருக்கும் துப்பறியும் நாவல்களில் கதை நடத்தப்படும் போது கதை தனியாகவும் வாசிப்பு தனியாகவும் இருக்கும். கதையும் வாசிப்பும் இரண்டுபட்ட நிலையில் இயங்குகின்றன. ஆனால் எப்போது உளவியல் என்ற பரிசோதனை நடத்தப்படும் போது கதை நடத்தப்படுதல் வாசிப்பு என்ற இரண்டும் வேறுபட்ட செயல்பாடுகளாக இல்லாமல் அவைகள் இரண்டும் ஒன்றாகிவிடுகின்றன. இங்கு கதைக் கரு என்று தனியாக எதுவும் இல்லை. கதைக்கரு ஆரம்பம் நடுப்பகுதி முடிவு என இருந்து தேவைக்கு ஏற்ப அவைகள் அழகியல் காரணத்திற்காக மாறி மாறி வடைவமைக்கப்படுகின்றன. இங்கு கதை கதைக்கருவில் நிலைக்கொண்டிருக்கிறது. ஆனால் உளவியல் என்ற பரிசோதனை இந்த கதையில் நடத்தப்படும்போது கதை என்பது நாவலின் கருவில் இல்லாமல் அது வாசிப்பிற்கு இடம்மாற்றப்படுகிறது. இங்கு கதையும் அதின் அர்த்தமும் பிரதிக்குறியது அல்ல மாறாக வாசிப்புக்குறியதாக மாறுகிறது.
இவ்வகையில் இந்த நாவலில் யார் குற்றவாளி என்பது துப்பு துலக்குதல் அதன் கதைக்கருவில் இல்லை மாறாக வாசகனின் உளவியல் ஓட்டத்தில் இடம் பெறுகிறது. கதையின் இறுதியில் கண்டுபிடிக்கப்படும் குற்றவாளி ஒருவர் மட்டும் அல்ல இதில் அனைவரும் சந்தேகிக்க படுகிறார்கள். இதற்கும் சற்று முன்னேறி சென்று கதையின் குற்றவாளி கதையில் உள்ள பாத்திரங்களாக இல்லாமல் யார் துப்பு துலக்குகிறார்களோ அவரே கொலை செய்த குற்றாவாளியாக இருப்பார். இந்த நாவலில் நாயகனே கடைசியில் குற்றவாளியாக்கப்படுகிறான். இது போன்ற ஒரு பரிசோதனையை அகத்தா கிறிஸ்டி தன் நாவலான ரோஜர் அக்ராய்டுவில்  செய்து இருப்பார். இதில் வழக்கத்திற்கு மாறாக கதை அதன் கதைக்கருவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கதையாடல் என்ற நிலைக்கு சென்றுவிடுகிறது. ஆனால் அபிலாஷின் நாவல் கதையின் குற்றவாளியை கதையில் அல்ல மாறாக கதையாடல் நடைபெறுகிற வாசகனின் உளவியலில் தேடுகிறது. இங்கு உளவியல் நிலையில் கதை குற்றவாளியை பிரதிக்கு வெளியில் சென்று வாசிப்பில் வாசகனையே குற்றவாளியாக கண்டுபிடிகிறது. கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் என்பது கதையின் இறுதியில் பீடியோபைல் என்ற குரூரம்தான் குற்றாவாளி அது எல்லாரின் ஆழ்மனதில் உள்ளன என்ற உண்மையை கதை கண்டுபிடிக்கிறது. இந்த குற்றந்தீர்ப்பிலிருந்து வாசகர் எவராலும் விடுவிக்கப்பட முடியாது. காரணம் கதை பிரதியில் அல்ல மாறாக அது வாசிப்பில் இருக்கிறது. அப்படிப்பட்ட வாசிப்பில் கண்டுபிடிக்கப்படும் குரூர உணர்வு யோக்கியன் அல்லது அயோக்கியனுக்குறியது அல்ல அது எல்லாருக்குமான பொதுப்படையான எதிர்மறையான உணர்வு. அது வாசிப்பில் துப்பறிப்படுகிறது.
கதை அதன் பிரதியிலிருந்து உளவியலுக்கு நகர்த்தப்படும்போது பிரதி மற்றொரு முக்கியமான பரிசோதனையைக் கண்டடைகிறது. எந்தவொரு கதையும் அதீத உளவியலுக்குள் உள்ளாகும் போது அது வேறொரு பரிமாணத்தை அடைகிறது. உளவியல் என்ற நிலையில் இருந்து கதை மாயத்தில் நடைபெற ஆரம்பிக்கிறது. கதையில் மர்ம குற்றவாளி நீல நிறத்தில் வருகிறான். இந்தக்கதையில் வரும் மர்மமான குற்றவாளி மாத்திரம் நீலநிறமானவன் அல்ல முழுக்கதையும் நீலத்தால் வியாபிக்கப்படுகிறது. வாசிப்பின் இறுதியில் நம் வாசிப்பு உளவியல் முழுவதும் நீல நிறத்தால் வர்ணம் பூசப்படுகிறது. இப்படிப்பட்ட மாயத்தில் கதை நடத்தப்படுவது அதீத உளவியல் பரிசோதனையினால் ஏற்படுகிற விளைவாகும்.
இவ்வாறு கதை பரிசோதனையில் நடத்தப்படும் போது அது வெறுமனே உயிரற்ற பொழுது போக்கு கதையாக துப்பறியும் கதையாக இல்லாமல் ஒரு உயிர் தன்மையை தன்னில் அது இறுத்திக்கொண்டு நாவல் என்ற பொதுத் தலத்தில் இயங்குகிறதாக மாறுகிறது. வழக்காற்றில் உள்ள துப்பறியும் கதை மீண்டும் மீண்டுமான வாசிப்பை கோருவதில்லை காரணம் அதன் கதை பிரதியில் இருக்கிறது அங்கு கதை உயிரற்ற நிலையில் ஒருமுறை வாசிப்பிற்க்கான பிரதியாக மாத்திரமே இருக்கிறது. ஆனால் பரிசோதனையில் உருவாக்கப்பட்ட கதை மீண்டும் மீண்டுமாக வாசிப்பை கோருகிறது. கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள் அப்படிப்பட்ட வாசிப்பை நிச்சயம் கோருகிற தன்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் உயிர்த்தன்மை வாசகர்களாலும், விவாதங்களினாலும் மேலும் வெளிக்கொணரப்படும் என்று நம்புகிறேன்.


கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்: வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல் Reviewed by Arul Scott on 10:37 AM Rating: 5 கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் : வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல் அபிலாஷின் சமீபத்திய நாவ...

No comments: