எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Wednesday, July 15, 2015

எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள்

www.jeyamohan.in960 × 540Search by image
எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள்                                                                                                                                  
கால அளவையில் வினாடிகள் கண் இமைக்கும் நேரத்தில் கடந்து செல்பவை. ஒளி வீச்சுகள் மட்டுமே இக்கால வினாடிக்குள் நடைபெறும் நிகழ்வுகள். மற்றபடி எந்த நிகழ்வும் நடத்தப்படுவதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டியிருக்கிறது. சாகசக் காவியங்களின் யுகங்கள் கால அளவில் அளக்க முடியாததாயினும் சாகச வீரனின் இளமைப் பருவக் காதல் நேரத்தில் அளக்கப்படுகிறது. நாடகங்கள் ஐந்து மணி நேரங்களில் இருபத்துநான்கு மணி நேரக் கதை அளக்கப்படுகிறது. இங்கு நம்ப முடியாத இதிகாச காலங்களும், யதார்த்த காலங்களும் இலக்கியக் காலத்தால் நாம் ஏற்றுக்கொள்ளுமாறு அளவிடப்படுகின்றன.

இவைகளை இலக்கிய கால அளவைகளில் அளப்பது எளிது. காரணம் கற்பனைக் காலமும் யதார்த்தக் காலமும் காலத்தில் நீண்டவை. அதில் கலைஞன் தான் செய்ய முற்படுவதை எளிதாக இலக்கியக் காலத்தில் சாதித்துவிடுகிறான். நம்முடைய மனமும் அதனை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் இப்பிரபஞ்சத்தின் யதார்த்தம் இவ்விரண்டு கால நிலைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. இப்பிரபஞ்சந்தின் நிஜம் அதனுடைய அணு வடிவில் இருக்கின்றது, அதன் இயக்கம் காலத்தில் மிகக் குறைந்த அளவான வினாடிகளில் உறைந்திருக்கின்றன. இப்பிரபஞ்சத்தின் நிதர்சனத்தை உணர அதன் அணுத்துகள் வடிவில் இருக்கும் இருப்பை ஆராய வேண்டியிருக்கிறது. தன் கரமசாவ் சகோதரர்கள் நாவலில்  தாஸ்தாவஸ்கி இவ்வாறு கூறுவார், "கடவுளுடைய படைப்பில் அனைத்தையும் நேசியுங்கள், அதில் உள்ள அனைத்தையும் துகள் துகள்களாக, ஒவ்வொரு இலையையும் நேசியுங்கள். படைப்பின் வெளிச்சத்தில் ஒவ்வொரு கதிரையும் நேசியுங்கள்" என்பார். இப்படிப்பட்ட காலத்தின் நுணுகிய வடிவத்தையும், அணுவை ஒத்த குன்றிய அளவினையும் இலக்கிய வகைமைகளில் கவிதையால்  மாத்திரமே அளக்க முடியும் என்பதை தேவதச்சன் தன்  எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது  கவிதைத் தொகுப்பில் சாதித்துக் காட்டுகிறார்.

இவரது கவிதைகள் காலத்தின் மிகக் குறைந்த நேரமான வினாடிப் பொழுதை தன்னுள் உள்வாங்கி அந்நேரத்தை ஒரு நீண்ட செயல் நடக்கும் நேரமாக மாற்றுகிறார். இதில் எவ்வாறு இமைப்பொழுதில் இத்தகைய காரியங்கள் நடக்கின்றன என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. "உச்சி" என்ற கவிதையில்,
வேகமான பஸ் பயணத்தின்
நெருக்கடி சாலையில், என்
இடது பக்கம் தெரிகிறது
பூங்கா ஒன்று
என ஒரு வினாடிப் பொழுதில் சற்றென கடந்து போகும் பூங்காவை தன் கவிதையில் படம் பிடித்துவிடுகிறார். இந்த இமைப்பொழுதேயான காலம் கவிதையில் சற்று நீட்டிக்கப்பட்டு ஒரு விளையாட்டே நடத்தப்படுகிறது. அனைத்தும் ஒரு நொடிப் பொழுதில்.
ஒரு வினாடி
தொன்மையான
பல நடை பாதைகளில்
நடந்து சுற்றி வந்தன
ஒரு வினாடி
அங்கிருந்த
சறுக்கில் ஏறி-
இறங்கும் முன் நகர்ந்து விட்டது பஸ்
என இமைப்பொழுதில் நீண்ட நேர செயல்பாட்டை நடத்தி விடுகிறார். இங்கு வினாடி என்பது மணி நேரங்களாக விரிவாக்கப்படுகின்றன. இதே போன்று "தருணம்" என்ற கவிதையில், தன் இரயில் பயணத்தில் இறந்த தன் தந்தையை பார்க்க பயணிக்கும் ஒரு பெண்ணை முதியவளின் மடியில் பார்க்கிறார். இங்கு அவருக்கு ஒரு இமைப்போழுதுதான் அவகாசம் அதில் தன் அப்பாவுடனான நீண்ட நாளைய அனுபவத்தை கவிதைக்குள்ளாக்குகிறார். அவருடைய "பேச முடியாத தருணங்களின் எண்ணிக்கைகள் கூடிக்கொண்டே போகிறது".
சிலக்கவிதைகளில் எளிதில் நகரும் நேரமும் அதில் இடம்பெரும் செயல்பாடுகளும் தக்கவைக்கப்படுகின்றன. "அவசர அவசரமாய்" கவிதையில் சடுதியில் நடைபெறும் செயல்களை கவிதைக்குள் உள்வாங்கிக் காட்டுகிறார். இந்தக் கவிதையில் பல பயனுள்ள அவசரமான செயல்கள் காட்டப்பட்டாலும் அவசியமற்ற ஒரு செயல் உட்செருகப்படுகிறது.
குப்பைத் தொட்டி அருகே
மன நோயாளி ஒருத்தி
அவசர அவசரமாய்
பூவை பிய்த்து தன்
மடியில் கொட்டுகிறாள்.
இங்குதான் கவிதை தன் உன்னத நிலையை அடைகிறது. இதுவரை நடைபெற்ற அவசரத்தில் அவசியம் என்று செய்யப்பட்ட  அனைத்தும் அவசியமில்லாத இந்த மன நோயாளியின் செயலால் அர்த்தம் அற்றவைகளாக ஆக்கப்படுகின்றன. அதே நேரத்தில் யதார்த்தத்தில் பொருளற்ற செயல் கவிதையில் பொருள் கொண்ட செயலாக மாறுகிறது. இங்கு நாம் இரசிப்பது மன நோயாளியின் அவசர செயலை தானேயன்றி மற்ற பயனுள்ள செயல்களை அல்ல.
தாஸ்தாவஸ்கி கூறுவது போன்று பெரும்பான்மையால் இப்பிரபஞ்சத்தில் கண்டு கொள்ளாமல்  விடப்பட்ட காரியங்களை கவிஞராகிய தேவதச்சன் கவிதைப் படுத்துகிறார். இங்கு நாம் எதை கவனத்திற்குரியவை என்று கருதுகிறோமோ அதனை முற்றிலும் நிராகரித்துவிட்டு நம்மால் சற்றும் கவனம் பெறாதவைகளை  கவிதையாக்குகிறார். "மணல் துகள்" கவிதையில்,

கடற்கரையில்
ஒலிப்பெருக்கிகள் அலறிக்கொண்டிருக்கின்றன
என ஒரு பிரமாண்ட அரசியல் கூட்டத்தை நம் கண்முன் காட்டுகிறார். இதில் நம் கவனம் இயல்பாக  தலைவர்களின் பேச்சைப்பற்றிதான் பேசப்போகிராறோ  என்ற எதிர்பார்ப்பு தோன்றும். அவைகள் அனைத்தும் அர்த்தம் அற்றவையாகி விடுகின்றன. பெருங்கூட்டம், ஒலிப்பெருக்கிகள், தலைவர்களின் குழுமம் என அனைத்தையும் உதாசினப்படுத்திவிட்டு தன் கவிதையை 
ஏகமாய்
பரந்திருக்கும்
பழுப்புநிற மணல் வெளி
எனத் தொடர்ந்து,
பின்மாலை நேரம் என்பதால்
காற்று பலமாய்
வீசத் தொடங்குகிறது
மாபெரும் மணல்வெளி  அல்ல.
மணல் துகள்கள்
சின்னஞ்சிறு மணல் துகள்கள்
தன்னந்தனியாய்
தனித்தனியாய்

என்று வாழ்வின் பொய்மை முற்றிலும் நிராகரிக்கப்பட்டு துகள்கள் வடிவில் உருக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தை காட்சிப்படுத்துகிறார் . இங்கு வாழ்வின் அழகியல் அதன் பிரம்மாண்டத்தில் இருக்கும் போலித்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு அதன் துகள்களின் நிலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. கவிதையில் வாழ்வின் பெரும்பகுதியில் இருக்கும் பொய்மையிலிருந்து சிறிது சிறிதாக நகர்ந்து அணுத்தன்மையிலான பிரபஞ்சத்தை காட்சிப்படுத்துகிறார். இங்கு பிரபஞ்சத்தின் விஸ்தாரம் படமாக்கப்படாமல் அதன் துகள் வடிவம் காட்சி படுத்தப்படுகிறது. "துளிகள்" கவிதையில்
மின்னலோடு
மழை பெய்யத் தொடங்கிவிட்டது
எங்கள் ஊரின் ஜனத்தொகை
நாலு லட்சத்து
75,447 பேர். மதிய நேரம் என்பதால்
சாலையில் அதிக
கூட்டம் இல்லை
4,75,447 துளிகள்
பெய்து கொண்டிருக்கின்றன
என பெரும் மக்கட்தொகை புறக்கணிக்கப்பட்டு மழைத்துளிகள் கணக்கிடப்படுகின்றன. மழைத்துளிகள் எண்ணப்பட கூடுமா என்ற கேள்வி எழும்போதே மக்கள் தொகை கணக்கும் எந்த அளவில் நம்பகமானது என கேட்கத் தோன்றுகிறது. இங்கு முதல் குறிப்பிடப்படும் எண்ணிக்கை நம்மை திகைப்பூட்டவில்லை. ஆனால் இரண்டாவது வகை எண்ணிக்கை வெறுமனே குருட்டுக் கணக்காக இல்லாமல் வாசகனின் மனதில் மழையின் காட்சி விரிவுபடுத்தப்படுகிறது. எண்ணிக்கை என்ற நிலையை கடந்து காட்சிப்படுத்துதல் என்ற மற்றொரு நிலைக்கு நம் மனது நகர்த்தப்படுகிறது. இதே போன்ற காட்சி பிம்பம் "துளிகள் - 2" கவிதையிலும் நாம் பார்க்க முடியும்.
லாரி ஓட்டுனர்
குளித்து முடித்து விட்டார்
சாலையோர
குளக்கரையில்
விரிந்தபடி கிடக்கிறது
அவரது
காக்கிச் சீருடை
சற்று தொலைவில்
அவரது லாரி.
 என வாழ்வின் அலுத்து விட்ட செயல்பாடுகளை நம்முன் காட்டுகிறார். இதைத் தொடர்ந்து,
....அதன்
நிழலில் இரண்டு ஆடுகள்
வாய்மென்றபடி சாவகாசமாய்
அவருக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள்:
ஆடுகள் லாரியை தின்று விடாது என்று
என்று கவிதையை இரண்டாவது நிலைக்கு நகர்த்துகிறார். இங்கு அலுத்துப்போன வாழ்க்கையை சற்று விநோதமாக காட்சிப்படுத்துகிறார். இதிலும் வாழ்க்கையின் தனித்தன்மை பெரிதாக காட்டப்படவில்லை. மூன்றாவது நிலையில்தான் கவிதை தன் உன்னதத்தை தொடுகிறது. இங்கு வாழ்க்கையின் அன்றாட நிலையும், வினோத நிலையும் கடந்து
முதுகை
துவட்டியபடி
சடார் சடார் என்று
உதறுகிறார் நீலநிறத் துண்டை
அவரது நெற்றியில், கழுத்தில்
தோளில்
தெறிக்கின்றன
நூற்றுக்கணக்கான துளிகள்
நூற்றுக்கணக்கான கணங்கள்

என நீர்த்துளிகள் நூற்றுக்கணக்கில் கவிதை-கணக்கில் கணக்கிடப்படுகின்றன. முன்பு கூறிய இரண்டு நிலைகளும் நம்மை திகைப்பூட்டுவதில்லை. கடைசியில் படமாக்கப்படும் துளிகளும், கணங்களும் மட்டுமே நம் ரசனையை தூண்டுகின்றன. கவிதைக்கான நம் ரசனை அதன் மிக நுண்ணிய நிலையிலான பிரபஞ்சத்தை காட்சிப்படுத்துதலில் இருக்கிறது.
தேவதச்சனின் மற்றுமொரு கவிதை உத்தி, இன்மையில் நிலை கொண்டிருக்கும் இருத்தலின் நிலையை  உருவப்படுத்துதலில் இருக்கிறது. பொதுவாக இருத்தலை விநோதமாக்குவதுதான்  கவிதையின் சிறப்பாக இருந்துவருகிறது. ஆளால் இன்மைக்கும் கூட ஒரு இருத்தல் உண்டு என்பதை காட்டுவது கவிதையில் மட்டுமே சாத்தியம் என்பதை தேவதச்சன் நிருபித்து காட்டுகிறார். "நிர்வாணம்" என்ற கவிதையில்,
யாரும் இல்லை என்பதால்
வீட்டில் சில நேரம்
நிர்வாணமாக இருந்தாள்.
யாருமில்லை என்பதால்
நிர்வாணமாக இல்லை
இங்கு தனிமையில் பெண்ணின் ஆடையின்மை நிர்வாணமாக காட்டப்படாமல் மற்றவர்களின் இன்மையினால் நிர்வாணத்தையே அவள் ஆடையாக்கிக் கொண்டிருக்கிறாள் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. நிர்வாணமே ஆடை என்ற நிலையின் தத்துவத்தை கவிதை பேசுகிறது. "மொழி" என்ற கவிதையில்  பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளையும் படிப்பதற்கு மொழி பயன்படுகிறது என்பதை முன் வைத்து மொழியே இல்லாத இன்மை நிலையில் படிக்கப்படும் மொழியை  நமக்கு காட்டுகிறார். இதில் மொழியற்ற மொழியில்
நானோ
தமிழ் மொழி கூட சரியாகத்
தெரியாத தறுதலை
இரண்டு கழுகுகள் சதா
சுற்றிக் கொண்டிருக்கும்
வானத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்
என் இமைகளின் மொழியில்
"என் கண்ணாடி" என்ற கவிதையிலும் இதேபோன்ற தனக்குத் தெரியாத ஒன்று தெளிவாக தெரிகிறது என நகைச்சுவை ததும்ப இன்மையின் இருத்தலை சாத்தியப்படுதுகிறார். இவ்வாறு வினாடிகள் கதை நிகழும் களமாக நீட்டிக்கப்படுவதும், மாபெரும் பிரபஞ்சம் துகள்கள் நிலையில் காட்சிப்படுத்தப் படுவதும், யதார்த்தத்தின் இன்மை நிலை உருவம் கொண்டு இருத்தல் நிலைக்கு கொண்டுவரப்படுவதும் இலக்கிய வகைமைகளில் கவிதையால் மாத்திரமே சாத்தியம் என்பதை தேவதச்சன் தன் எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது கவிதைகளில் நிருபித்து காட்டுகிறார். அதே நேரத்தில் இப்படிப்பட்ட யதார்த்தம் மற்ற எந்த இலக்கிய வகைமைகளிலாவது சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள் Reviewed by Arul Scott on 2:51 AM Rating: 5 www.jeyamohan.in 960 × 540 Search by image எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள்               ...

No comments: