Thursday, November 24, 2022

குற்றமும் தண்டனையும்: ஒரு ஏழை தாயின் பாசமிகு சொற்கள்

 


    Raskolnikovவுக்கு அவன் தாய் எழுதிய கடித்ததைப் போன்று உலகில் வேறு  யாராவது தனது மகனுக்கு அப்படியொரு ஆகச்சிறந்த கடிதத்தை எழுதியிருக்க முடியுமா என்று கேட்டால், தஸ்தாவஸ்கியின் காதலர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஒரு தாய் தன் மகனுக்கு எழுதிய அந்த ஆகச் சிறந்த கடிதம் குற்றமும் தண்டனையும் நாவலில் மூன்றவது அத்தியாயத்தில் இடம்பெறுகிறது. கடிதம் அத்தியாயத்தில் இருக்கிறது என்றா சொன்னேன்? இல்லை இல்லை தவறாக சொல்லிவிட்டேன்.  அத்தியாயத்தில் கடிதம் இல்லை. கடிதமே அத்தியாயமாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். நீண்ட நெடிய கடிதம் அது. அதுவும் தொடர்ந்து மேலும் எழுதுவதற்கு மூன்றாவது  காகிதம் இல்லாததால் கொஞ்சம் குறைவாகவே இரண்டாம் பக்கத்தோடு அந்தத் தாயார் கடித்தத்தை முடித்துக் கொள்கிறார். இல்லை என்றால் முழு நாவலும் அந்த ஏழைத் தாயின் கடிதமாக மாறியிருக்கும். நாவலில் அநேக பக்கங்களில் சொல்லி இருக்க வேண்டிய முன் கதையை சுருக்கமாக கடிதத்தின் வழியே தெளிவாக சொல்லப்படுகிறது. கடிதத்தை வாசிக்கும் போது கடிதத்தின் சொற்களுக்கும் அதனை எழுதுகிற தாயின் பாசமிகு உணர்வுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி ஒன்றும் இல்லை. கடிதத்தின் சொற்களே அத் தாயின் உணர்வுகள், அவள் உணர்வுகளே அச்சொற்கள். இரண்டிற்கும் இடைவெளி என எதுவும் இல்லை. 

    கடித்தத்தின் வழியே தாயின் அன்பு மாத்திரம் அல்ல சகோதரியின் அன்பும் வெளிப்படுகிறது. தாயும் சகோதரியும் கதையின் நாயகன் Raskolnikovவுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். சகோதரி Dounia தன் சகோதரனின் எதிர் காலத்திற்காக ஆபத்தான முடிவை எடுக்கிறாள். அந்த முடிவு அவள் வாழ்க்கையையே சூனியமாக்கிவிடும். ஐம்பது வயதை நெருங்கும் ஒருவரை அவள் மணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள். சகோதரன் எதிர்காலம் கருதி வயதான ஒருவரை இளம் பெண் ஒருத்தி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுப்பது அவள் செய்யும் பெரும் தியாகம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும். அனைத்தும் Rodyaவுக்காக (Raskolnikov) என கடிதம் கூறுகிறது. 

கடிதத்தில் Raskolnikovவின் தாய் இறுதியில் சொல்ல வருவது இதைத்தான், "Rodhya, எங்கள் நம்பிக்கை நீதான். எங்கள் மகிழ்ச்சி நீதான். நீதான் எங்களுக்கு அனைத்தும்". 

இந்த பாசமிகு கடிதம் உணர்த்துவது  தாய்க்கும் சகோதரிக்கும் என விருப்பு வெறுப்புகள் எதுவும் இல்லை என்றும் அவர்களின் ஒரே நம்பிக்கை Rodhya மட்டும் தான் என்பது போன்று தோன்றுகிறது. இருப்பினும், அவர் தாயே ஆனாலும் ஒருவரால் எப்படி தன் மகனை சுய நலம் இன்றி இந்த அளவுக்கு நேசிக்க முடியும்! இந்த தாயின் அன்பு களங்கம் அற்ற அன்பு. கடிதத்தில் Doinia வார்த்தைகள் எதுவும் பேசாதவள். Dounia அவள் அம்மாவின் வார்த்தைகள் வழியே பேசுகிறாள். ஒருவேளை அவளே கடிதத்தை எழுதியிருந்தால் கூட அவ்வளவு சிறப்பாக அவள் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கமாட்டாள். 

இங்கு கவனிக்க வேண்டியது ஒன்றுதான். ஒருவர் தன் பாச மிகு உணர்வுகள் அனைத்தையும் சொற்கள் ஆக்கிவிட முடியுமா என்பதுதான். உணர்வுகளை சொற்களுக்கு அருகே கொஞ்சம் நெருக்கமாக கொண்டு செல்லலாம். சொற்களும் உணர்வுகளை துல்லியமாக பிரதிபலிக்கக் கூடும். ஆனால் சொற்களே உணர்வுகளாகவும், உணர்வுகளே சொற்களாகவும் எழுத்தில் இரண்டறக் கலப்பது அசாத்தியமான காரியம். அந்த அசாத்திய நிலைதான் இந்த ஏழைத் தாயின் கடிதம். 

இந்தக் கடிதத்தை Raskolkinovவின் தாயின் கடிதமாக வாசகன் உருகி உருகி வாசிக்கும் அதே நேரத்தில் நாவலின் ஆசிரியன் என்ற முறையில் அது தஸ்தாவஸ்கியின் கடிதமாகவும் வாசிக்க வேண்டி இருக்கிறது. கடிதத்தில் தாயின் உணர்வுகளையும் சொற்களையும் ஒன்றாக்கியது அவரேதான். ஆனாலும் அது நூற்றுக்கு நூறு சதவீதம் Raskolnikov வின் தாயின் கடிதம். அது அவளுடைய உணர்வுகள். சொற்களோ அவளுடையது அல்ல. காரணம் யதார்த்தத்தில் எந்த ஒரு தாயும் அப்படி ஒரு கடிதத்தை அவ்வளவு எளிதில் எழுதி விட முடியாது. அப்படியே எழுதினாலும் அது இது போன்றுதான் இருக்க முடியும். நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை. அப்படி ஒரு நிகழ்வு குற்றமும் தண்டனையும் நாவலில் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. கடிதத்தில் பாசமிகு உணர்வுகள் முழுக்க முழுக்க அந்த தாயின் உணர்வுகள். இருப்பினும் சொற்கள் அவளுடையது அல்ல . அந்த உணர்வுகளின் சொற்களுக்கு சொந்தக்காரர் தஸ்தாவஸ்கி. உணர்வுகள் மட்டும் அந்த ஏழை தாயின் உணர்வுகள். 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...