Friday, January 21, 2022

தி. ஜா. ராவின் அபூர்வ ராகங்கள்

 



மோகமுள் நாவலில் வரும் ரங்கண்ணாவுக்கு எப்பொழுதும் வீணையைச் சுருதி சேர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இசை பயில வரும் மாணவர்களின் அனுதினக் கடமை அது.  இல்லையெனில் தூர்வாசர் சாபம்தான். பாபுவைக் கண்டால் மத்திரம் உச்சிக்கு ஏறின கோபம் சட்டென்று தணிந்து விடும். சுருதி சேர்ந்த வீணையைக் கொண்டு ரங்கண்ணா பெரிய  சச்சேரி ஒன்றும் செய்யப் போவதில்லை. வெறும் சாதகம் மாத்திரம்தான். அனுதின சாதகத்திற்கும் சரி என்றோ ஒரு நாள் அரங்கேற போகிற கச்சேரிக்கும் சரி வீணையைச் சுருதி சேர்த்து வைத்திருத்தல் அவசியம். எது எப்படியோ,  நன்கு சுருதி சேர்த்து வசிக்கத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் வீணை பெறும் கலைஞன் ஒருவனுக்காகக் காத்திருக்கிறது. அல்லது ரங்கண்ணா போன்றவர்களின் இலக்கணம் மீறாத அனுதின சாதகத்திற்குக் காத்திருக்கிறது.  கலைஞனின் விரல்கள் பட்டதும் இசை தன் இருத்தலைக் கண்டடைந்து விடுகிறது. விரல்களின் இயக்கம் இருக்கும் வரையில், சங்கீதம் உயிர்ப்போடு இருக்கிறது. விரல்களின் ஜாலங்கள் முடிந்தவுடன் இசையும் காணாமல் போய் விடுகிறது.

ரங்கண்ணா இசையின் அடிப்படைகள் கடைபிடிக்கப்படுவதில் மிகவும் கண்டிப்பானவர். ராகங்கள் அதனதின் இடத்தில் கட்டுப்படியாக இருக்க வேண்டும். எந்த கலப்போ விதி முறை மீறல்களோ நடக்கக் கூடாது. பாபு அடிப்படைகளை மீறுவதற்காகவே பிறந்தவன். ரங்கண்ணாவுக்கு இலக்கணம் மிக முக்கியம். அவர் அனுதின சாதகத்திற்கு உரியவர். பாபுவோ என்றோ ஒரு நாள் இலக்கணத்தை மீறி உன்னதத்தைத் தொடும் கச்சேரிக்காகக் காத்திருக்கிறவன். நல் இசைக்கு இலக்கணத்தின் கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை. இசை கட்டற்ற நிலையில் நிகழ்ந்தேறும் மாயாஜாலம். அது  ஓர் உன்னத நிலை. மீட்டுபவனின் விரல்களைப் பொறுத்தே அது தன் நிலையைக் கண்டடைகிறது. அவன் விரல்கள் நின்று விட்டால் இசை இல்லை; ஓசை ஒடுங்கி விடுகிறது. மிச்சம் இருப்பது வெறும் அமைதி மட்டும் தான்.

இசையைப் போன்றதுதான் மனித உள்ளத்து மோகமும் அல்லது மோகமும் இசையை போன்றதுதான். இசைக் கலைஞனுக்கு வீணையின் இசை என்றால் தி. ஜா. ராவுக்கு அவரது நாவலில் மைய நாதமாக இருக்கும் மோகம். நேர்த்தியான விகிதத்தில் கையாளப்பட வேண்டிய ஒன்று அது. கூடினாலோ குறைந்தாலோ அபத்தமாகிவிடும்.  கதைகளில் மோகம் தவறாக முதன்மைப் படுத்தப்படுமானால் அது ஆபாசம் அல்லது வரம்பு மீறிச் சென்றால் கேலிக்குரிய பாலியல் கதைகள். சரியான விகிதத்தில் சவாதப் படுத்தப்படும் போது அது கலைப்படைப்பாக மாறிவிடுகிறது. மோகமுள் கட்டற்ற நிலையும் அல்லாது இலக்கணத்திற்குள் அடங்கி நில்லாததுமான சுருதி பேதம் அடைந்த அபூர்வ ராகம். இந்த அபூர்வம் அவருடைய எழுத்து வாழ்க்கையில் அவருக்கு ஆரம்பத்திலும் நிகழவில்லை கடைசியிலும் வாய்க்கவில்லை போலும். இருப்பினும் இடையில் தோன்றிய மோகமுள் தி. ஜா. ராவின் அபூர்வ ராகம்.

ஒரு முறை நடந்த இந்த அபூர்வம் எடுத்த எடுப்பில் நிகழ்ந்த அற்புதம் என்றும் சொல்லி விட முடியாது. தி. ஜா. ராவின் முதல் படைப்பில் சுருதி சேராத வீணையாக அது ஆரம்பித்து இருக்கிறது. அமிர்தம் சுருதி சேராத வீணையில் மீட்டிய மிக ஆரம்பக் கட்ட படைப்பு. மற்ற எல்லா படைப்புகளையும் வாசித்து விட்டு அல்லது அவரது கடைசி நாவலுக்கு முந்தைய நாவலான அடி நாவலை மட்டுமாவது வாசித்து விட்டு அமிர்தத்தை வாசித்தால் தி. ஜ. ராவா து? என்ற வியப்பு ஏற்படும். சுருதி சேராத வீணை ஒன்று பெரும் இசை மழையைத் தருவிக்க முயன்று தோற்றுப் போன கதைதான் அமிர்தம். ஏனினும் முயன்று தவிக்கும் அமிர்தத்தின் அந்தப் பண்டித மொழிக்குள் இருக்கும் கதை தி. ஜா. ராவுக்கு  வாய்த்த அதி சிறந்த கடைசிக் காலத்து உரைநடையை ஏங்கித் தவிப்பது போன்று தோன்றுகிறது. அடி நாவலின் உள்ளடக்கம் அமிர்தம் நாவலின் பண்டித மொழிக்கு உரியது என்று சொல்லலாம். அவை:

தான் விரும்பி மணம் முடித்துக் கொள்ள விரும்பும் பெண் தன்னையும் விரும்புகிறாள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விடுகிறார்கள். அதற்கு தந்தை மறுப்பு எதுவும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை மகனுக்கு. அதை பற்றி யோசிக்கவும் கூட இல்லை. அது அவர்கள் இருவரின் தன்னிச்சையான முடிவு. இன்னொரு பக்கம் தந்தை கணிகை ஒருத்தியை விரும்புகிறார். சேர்ந்து வாழ அவளுக்காக, கால் லட்சம் பணத்தை அவள் அம்மாவிடம் பரிசாகக் கொடுத்து வைக்கிறார். அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. அம்மாவின் வற்புறுத்துதலின் பேரில் கணிகையாக அவருடன் வாழ்வதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். எனினும் நான்கு மாதங்கள் அவகாசம் கேட்கிறாள். தன் தாய் வாழ்ந்த காணிகை வாழ்க்கையை வாழ அவளுக்கு விருப்பம் இல்லை. மேலும் இப்பொழுது பணம் கொடுத்தவருக்கு வயது வேறு அதிகம்.

கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து விடுகிறது.  நான்கு மாதங்கள் கழித்து அவளைப் பார்க்க அவர் வருகிறார். அவள் வீட்டில் வேறொரு இளைஞன். ”நீயா” என்று அதிர்ச்சி அடைகிறார். கடைசியில் தந்தையும் மகனும் ஒரே பெண்ணை விரும்புகிறார்கள். பெண்ணோ தந்தையை அல்ல மகனைதான் விரும்புகிறாள். ஒருவேளை அந்த நான்கு மாத டைவெளியில் இவன் வராமல் இருந்திருந்தால் அவருடனேயே வாழ அவள் முடிவு எடுத்திருக்கக்கூடும். இது கதையின் சுருதி பேதம். கதை அளவில் இது கரமசோவ் சகோதரர்களின் நாவலில் வரும் தந்தை கரமசோவ் மற்றும் மகன் டிமிட்ரி கரமசோவ் தாங்கள் காதலித்த பெண்ணுக்காகச் சண்டையிட்டுக் கொண்ட கதையைப் போன்று இருக்கிறது இந்தக் கதை. எனினும் அமிர்தம் கதையை வாசிக்கையில் உரைநடைக்குச் சற்றும் பொருந்திப் போகாத பண்டித மொழியில் நாவல் சிக்கித் தவிப்பதையும் காண முடிகிறது. கதை இதுதான்.

சுருதி பேதம் அடைந்த இந்த ஆரம்பக் கதையான அபூர்வ கதைக்குச் சற்று நேர் எதிர் தன்மைக் கொண்டது தி. ஜா. ராவின் கடைசி நாவல் அடி. வாழ்வின் அடிப்படை இலக்கணத்தை மீறி செல்ல அச்சப்படும் நடுத்தர வயது கொண்டவரின் கதை அடி. அதுவரை தி. ஜா. ரா. படைத்த மனிதர்களில் மிகவும் வித்தியாசமானவர். சமூகம், மதம் போன்றவைகள் கட்டமைத்து இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு மீறல் எதுவும் இல்லாமல் கட்டுக்கோப்போடு வாழ வேண்டும் என்று, போதிக்கும் போதனைக் கதை எனலாம். சம்பிரதாயமானக் கதைக்கு நேர் எதிராக ஒழுகிச் செல்லும் உரைநடையைக் கொண்டது அடி நாவல். ஒரு வேளை இந்தக் கதைக்கு அமிர்தத்தின் பண்டித மொழி பொருந்தி அமைந்திருக்கலாம் அல்லது அமிர்தத்தின் கதைக்குப் பதிலீடாக அடி நாவலின் கதை அமைந்திருந்தால் அதுவும் ஓர் அபூர்வ ராகமாகதான் இருந்திருக்கும். இருப்பினும் தி. ஜா. ரா. என்னும் படைப்பாளியில் அவருடைய வாழ் நாள் முழுவதிலும் பெரும் மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அடி நாவலில் படைப்பு மொழியின் உரைநடை அடைந்த முன்னேறிய நவீனத்தன்மை கதை அளவில் நடைபெறவில்லை என்று தோன்றுகிறது. எனினும் உரைநடையில் எந்த நவீனத்தின் சாயலும் இல்லாத அமிர்தம்  தி. ஜா. ராவின் வாழ்க்கையில் கடைசியில் கண்டடைந்திருக்க வேண்டிய புத்தம் புதிய நவீனக் கதையோ எனத் தோன்றுகிறது.  

 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...