Monday, August 26, 2019

கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது



கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது
             நாவலின் சில வரிகள் மின்னல் போன்று நம் வாசிப்பில் சொற்ப நேரத்தில் மின்னிவிட்டு போகின்றன. அப்படிப்பட்ட மின்னல் போன்ற வரிகளை உடைய நாவல்கள் மிகவும் அரிதானவை. நல்ல மழை காலத்தில் மின்னல் வீச்சுகளுக்கு கணக்கே கிடையாது. தொடர்ந்து மின்னல்களும் இடிகளும் வந்து கொண்டே இருக்கும். தொடர் மின்னல்களை உடைய நாவல் என ஆரம்ப கால பிரெஞ்சு நாவலான கார்கென்டுவா மற்றும் பென்ட்டகுரல் நாவலை சொல்வேன். மறுமலர்ச்சி கால கட்டத்தில் உருவான அந்த நாவலை மனம் உட்கிறகித்துக் கொள்ள கொஞ்சம் ஆற்றல் தேவைப்பட்டது.
தொடர் மின்னல்கள் வெளிச்சத்தின் தொடர் நிகழ்வாக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே வாசிப்பில் சிறு சிறு மின்னல் கற்றைகளை உருவாக்கியது கசாக்கின் இதிகாசம். மொழிபெயர்ப்பில் யூமா வாசுகி இப்படிப்பட்ட ஒளிக் கடத்துதலை நிகழ்த்தியது பெறும் சாதனை. கார்கன்டுவா போன்று இல்லாவிட்டாலும் வாசிப்பில் ஏதோ தூரத்தில் கீழ்வானத்தில் மின்னல் வெளிச்சம் மழைக்கான முகாந்திரம் இன்றி மின்னுவது போன்று இருக்கிறது ககசாக்கின் இதிகாசம். கசாக் என்னும் வட்டார இலக்கியம் உலக இலக்கியத்திற்கு இணையான சாதனை கண்டிருப்பது வியப்புக்கு உரியது.
வாசிப்பில் மின்னல் தாக்கம் என்பது வசிப்பை சற்று நேரம்  நிறுத்த வல்லது. அல்லது தாக்கம் அப்படியே நம்முள் சேமிக்க படுவது போன்றது. கதையின் நாயகன் கசாக்குக்கு வந்து ஓராசிரியர் பள்ளியை நடத்துகிறான். பெறும் பனிப்போருக்கு இடையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இஸ்லாமியரின் மதராசா கல்வி இந்த நவீன கல்வியான ஓராசிரியர் பள்ளியால் பாதிப்படையும் என்ற பயம் ஒருபுறம். நவீன கல்வி என்பது யார் விரும்பினாலும் வெறுத்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று என்பது மறுபுறம். கசாக் இந்த குழப்பமான நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு கசாக்கின் நம்பிக்கையின் பெரும் ஞான புதையல்களை அப்படியே வைத்துக் கொள்வதா அல்லது நவீனத்திற்குள் பயணித்து பழமையை தியாகம் செய்வதா என்ற குழப்பத்தில் கசாக் சிக்கிக் கொள்கிறது.
நாவலின் ஒரு சிறிய சம்பவம் இதனை மிக அழகாக விளக்கும் என நினைக்கிறேன். கசாக்குகளின் விளக்குகள் இரவில் வீணாக எறியவிடப்படுவதில்லை. தேவைக்கு மாத்திரமே விளக்கின் வெளிச்சம் அவசியப்படுகிறது. தேவை இல்லை என்றால் கசாக்குக்காரர்கள் விளக்கை அனைத்து வைத்து விடுகிறார்கள். இருட்டு என்பது தூங்குவதற்கு மாத்திரம் அல்ல என்பது நாவலை படிக்கும் போது உணர்த்துவிக்கப் படுகிறது. இருட்டை வெளிச்சம் கொண்டு விரட்டுவது மிகவும் அபத்தமானது என்பது தெரிகிறது. ஆனால் நடப்பியலில் இருந்து பார்க்கும் பொது தேவைக்கு மீறி விளக்கை அனைப்பது கசாக்குக்காரர்களின் கஞ்சத்தனம் என்று மேலோட்டமாக சொல்லிவிடலாம்.
இரண்டாம் அடுக்கின் உள் அர்த்தம் வேறு. விளக்கை அனைத்து வைப்பது அபத்தம் அல்ல. இருட்டு இயல்பானது. இந்த இருட்டை அவசியம் இன்றி வெளிச்சம் கொண்டு விரட்டுவதுதான் அபத்தம். நூற்றாண்டு தனிமையில் முதல் முதலில் பனிக்கட்டியை கண்டு அதை தொட்டு பார்த்தவுடன்இது சுடுகிறது” என்று புயெந்தியா சொல்வது நமக்கு அபத்தம். ஆனால் நாவலின் வாசிப்பில் குளிர்ச்சிக்கு வார்த்தை கண்டுபிடிக்காத அந்த ’பிரிமிட்டிவ்’ காலத்தில் சூடு என்று சொல்லும் போது பனிக்கட்டி நாம் கண் முன் மார்க்வேசின் மேஜிக் பொருளாக மாறுகிறது. அதே போன்று இருட்டை இயல்பாக எற்றுக் கொள்ளும் இந்த கசாக்குகரர்களின் இந்த கஞ்சத்தனம் ஓ வி விஜயனின் மேஜிக் உலகமாக மாறுகிறது.
ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் வி இருட்டில் விளக்கை ஏற்றி எதையோ வாசித்துக் கொண்டு இருக்கிறான். மதராசாவின் மொல்லாக்கா அவனை சந்திக்க வருகிறார். விளக்கு எறிவதையும் ரவி அதன் வெளிச்சதில் எதையோ வாசிப்பதையும் கண்டு மொல்லாக்கா வி வேதம் வாசிக்கிறான் என்று யூகித்துக் கொள்கிறார். அது வேதம் அல்ல கதை புத்தகம் என்று தெரிந்தவுடன் உரிமையுடன் விளக்கை அனைத்துவிட்டு பேச்சை ஆரம்பிக்கிறார். இந்த இடத்தில் இருட்டு, கதை புத்தகம், ரவியின் வாசிப்பு ஆகிய இவைகளை ஒரு பக்கமும், இருட்டு, மொல்லாக்கா, அவருடைய யூகமான வேத புத்தகம் இவைகளை இன்னொரு பக்கமும் எதிரும் புதிருமாக வைத்து பார்க்கும் போது அந்த பகுதி வாசகனுக்கு ஒரு மின்னல் வெளிச்சம். இதை மேற்படி வைத்து வியாக்கியானம் செய்ய முடியாது. இது விளக்கு தரும் சுடர் போன்றது. வாசிப்பில் கதையை இருட்டாக உணர்ந்து நகர்த்தும் போது அவசியத்திற்காக வெளிச்சம் ஒரு நொடியில் பிரகாசித்து அனைகிறது.
ரவியின் வெளிச்சம் வேறு, வாசிப்பு வேறு , இருட்டை பற்றின அவன் புரிதல் வேறு. அவனுக்கு இருட்டு அவசியம் இல்லாதது போன்று இருக்கலாம். அவனுடைய வெளிச்சம் கதைகளை வாசிக்க தொடர்ந்து எரியட்டும். ஆனால் கசாக்குகளுக்கு அவசியமான வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று இருட்டும் பகலைப் போன்று மிக மிக முக்கியமானதும் இயல்பானதும் தான். அவர்கள் பாகலை ஏற்றுக் கொள்வது போன்றே இருட்டையும் எற்றுக் கொள்கிறார்கள். அந்த இயல்பான இருட்டில் அவர்களின் அவசியமான சிறிது நேர வெளிச்சத்தில் அவர்களின் வேதம்  அதிக முக்கியத்துவம் பெற்ற பிரதியாகிறது. வெளிச்சம் என்பது சிறிது நேரத்திற்கேயான மனதை தெளிவடைய செய்யும் வேதத்தின் புனிதச் சுடர். அந்த புனித சுடர் சிறிது நேரத்திற்கேயானது. மற்றபடி கசாக்கின் இருட்டு பாகலைப் போன்றே இயல்பானது.


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...