Monday, August 19, 2019

ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை


ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை
இந்த பூமி ஜீவராசிகளின் வாழ்வாதாரத்திற்காக சுழன்று கொண்டிருக்கிறது. மற்றெந்த கிரகமும் ஜீவராசிகளின் இருத்தலுக்கு உகந்ததாக இல்லை. பூமியின் மீதான மனித ஜீவன்களுக்கு அத்தனை கிரகங்களும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் உள்ளன என்று நம்பப்படுகிறது. எது ஒன்று ஜீவனுக்கு உரியது இல்லையோ அது வணக்கத்துக்கு உரியதாக பூமியில் இருந்து போற்றப்படுகிறது. ஆனால் எது ஒன்று ஜீவராசிகளின் வாழ்வியலுக்கு ஆதாரமாக இயங்கிக் கொண்டிருக்கிறதோ அது முற்றிலும் கணக்கில் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகிறது. பூமியின் மீதான உயிரினங்களின் வாழ்வியல் தொடர்ச்சி சுற்று வட்டத்தில் சங்கிலித் தொடராக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த சுழற்சியின் ஒரு சரடு அறுபட்டாலும் பூமியும் மற்ற கிரகங்கள் போன்று உயிரற்ற பாலைவனமாக மாறிவிடுமோ என்னும் சந்தேகம் ஏற்படுகிறது. நீரற்ற, பச்சையமற்ற ஒரு நிலபரப்பை பாலைவனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது.
உயிரினத்தின் இருத்தலுக்கும் இயங்கியலுக்கும் பூமியின் மீது இவ்வளவு பந்தோபஸ்து அவசியப்படுகிறது. இவைகளை எளிமையாக பஞ்சபூதங்கள் என்று சொல்லிவிடலாம். பஞ்சபூதங்களும் ஒன்றாக சேர்ந்து உயிரினங்களின் இருப்பை சாத்தியப்படுத்துகின்றன. போதாதற்கு உணவு சங்கிலி வேறு.  உணவு சங்கிலி என்ற விதிமுறை ஒன்று இல்லை என்றால் வெறும் பஞ்ச பூதங்கள் தான் எஞ்சியிருக்கும். உணவு சங்கிலியின் ஏதேனும் ஒரு சரடு  கூட அறுந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். உணவு சங்கிலியின் மூலமாக பாதுகாக்கப்படும் இந்த உயிர் இயக்கத்தை நிரந்தரமான உயிர் இயக்கம் என்று சொல்வதற்கு நமக்கு தைரியம் இல்லை. அற்பப் பதர்கள் இந்த உயிரினங்கள். தங்களை இந்த சங்கிலித் தொடரில் வைத்துக் கொண்டு சுயநலத்தின் பேரில் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
இவைகளின் இயங்கியலை உயிரிக்கம் என்றும் வாழ்வு என்றும் சொல்வதற்கு நம்மால் முடியவில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லித்தான் ஆக வேண்டும் அற்பப் பதர்கள் இத உயிரினங்கள். ஆற்றலை நாம் அழிவற்றது என்று சொல்கிறோம். அந்த ஆற்றலை இந்த ஜீவராசிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. போதாதற்கு வயிற்றுப் பசியை தீர்த்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் வாழ்வை நீட்டிக் கொள்கின்றன. பஞ்ச பூதங்கள் என்ற ஆற்றலை கொண்டு மாத்திரமே வாழட்டுமே. வாழ்வியல் தொடரவே தொடராது.
இந்த உணவு சங்கிலியில் ஆற்றலுக்கும் மீறி ஏதோ ஒரு வகையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தை கொன்று உண்டு வாழ வேண்டியிருக்கிறது. மிகப்பெரிய டைனோசரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதனுடைய பசி மிகப்பெரியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். உணவுச் சங்கிலியின் விதி அதற்கு பொருந்தியிருக்காது. உணவுச் சங்கிலியின் சரட்டுக்குள் தன்னை தக்க வைத்திருந்திருக்குமாயின் ஒருவேளை அந்த ராட்சத உயிரினம் தன் உயிர் வாழ்தலை தொடர்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
இதனையே பிரபஞ்சத்தில் அதற்கு எதிர் நிலையில் உள்ள கண்ணுக்கு புலப்படாத உயிரினங்களை பற்றி யோசிக்கும் போது ராட்சத டைனோசரின் அழிவு எவ்வளவு அற்பமானது என்பது தெரியவருகிறது. கண்ணுக்கு தெரியாத நூண்ணுயிரி காலம் காலமாக தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டு வந்திருக்கிறது. பாக்டிரியாவும், வைரசும் மனித இனத்திற்கு மிகபெரிய சவாலான உயிரினங்களாக இருந்து வருகின்றன. இவ்விரண்டையும் உயிரினங்கள் என்றும், உயிர்கள் என்றும் யார் சொல்லக்கூடும். அப்படி சொல்வதற்கே தயக்கமாக இருக்கிறது. கிருமிகள் என்று சொல்லிக் கொள்ளலாம். அதற்கு மேல் உயிர் என்ற அந்தஸ்த்தை அவைகளுக்கு தரமுடியாது. பல செல்களால் ஒன்று திரட்டப்பட்ட பேர் உருவமான அந்த டைனோசரையே நம்மால் உயிர் என்றும், ஜீவ ராசி என்றும் சொல்வதற்கு முடியவில்லை. இதில் கண்களுக்கு புலப்படாத இந்த கிருமிகளை எப்படி நாம் உயிர்கள் என்று அழைக்க முடியும். இதில் மனிதனுக்கு மாத்திரம் உயர்ந்த உயிர் என்று சொல்லிக் கொள்ள சிறப்பு அந்தஸ்து. இந்த உயிரும் அழிந்து போகக்கூடியது. எனினும் ஆன்மாவுக்கு அழிவில்லை என்று சொல்கிறார்கள். இருக்கட்டும்.
உயிரின் மதிப்பு பெரியது எனில் அதன் உணர்வுகளுக்கும் சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. வெப்பத்தைக் உணர்ந்து நெளியும் நுண்ணியிரிகள் சிறு சலனங்களை மாத்திரமே கொண்ட உயிரின் உணர்வு நிலை. மிகபெரிய டைனோசர் தன் வெறிப்பசியை மாத்திரமே தீர்த்து கொண்டு பசியாறும்  இன்னொறு உயிரியின் உணர்வு நிலை. உயிரியின் அந்தஸ்து பெரியது எனில் அதன் உணர்வு நிலையும் உயர்ந்தது என்று சொல்வோமாக. அது ஒரு ஏகாந்த நிலை.
நாம் வியந்து காணும் அல்லது அற்பமாக காணும் சிறியது முதல் பெரியது வரைக்கும் அவைகளின் உயிர்களுகான சிறப்பு அந்தஸ்து என்று எதுவும் இல்லை. அவர்கள் உணவு சங்கிலிக்கு உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் வாழ்ந்து அழிந்து தங்களின் சுவடு கொஞ்சம் கூட எச்சம் மீதி வைக்காமல் போகிறார்கள். மனிதன் மாத்திரம் இதில் தானே தலைமகன் என்ற அந்தஸ்தை தொடர்ந்து தனக்கு உரியதாக்கிக் கொண்டாடி வருகிறான். இவனும் உணவுச் சங்கிலிக்கு வெளியே இருப்பவன். எனினும் முழு உணவு சங்கிலியும் இவனுக்காக இயங்குவது போன்று உள்ளது.
இப்போது கேள்வியே இதுதான் அதாவது இந்த உணவுச் சங்கிலிக்கு உட்படாத ஏதேனும் ஒரு உயிர் இருக்க முடியுமா? அது மனிதன் போன்று இந்த சக்கிலித் தொடரைப் பயன்படுத்திக் கொள்ள கூடாது. அந்த டைனோசர் போன்று உணவு சங்கிலியை பாதிக்காத ஒரு உயிரியாக இருக்க வேண்டும். ஏதோ சிறு வெப்பசலனங்களைக் உணர்ந்து நெகிழும் ஒரு செல் உயிரியாகவும் இருக்கக் கூடாது.
மேற் சொன்னவைகள் அனைத்தும் உயிரிகள் பற்றியவை. ஆனால் உயர்ந்த அந்தஸ்தை உடைய உயிர்! அது தன்னில் தானே இயங்கும் ஒரு உயிராக இருத்தல் வேண்டும். காலத்தால் வயதில் மூப்பு காணாத உயிராக இருத்தல் வேண்டும். கூடுமானால் மற்ற உயிர்களை அதாவது உணவு சங்கிலியை சார்ந்து ஜீவிக்காமல் தன்னையே உணவாக இ(ரை)யாக்கி மற்றொரு ஜீவராசியை வாழ்விக்கும் உயிராக இருத்தல் வேண்டும். தன்னை உணவாக்கும் அதே நேரத்தில் தானும் தீர்ந்து போகாமல் இருத்தல் வேண்டும். எனவே அழிவற்றதும், சார்ந்திராததும், தன்னையே உணவாக்கியும் தீர்ந்து போகாததுமான ஒரு உயிரே ஒப்பற்ற உயிர்.  

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...