Saturday, July 20, 2019

தீபெட்டி: நெருப்பின் உறைவிடம்


தீபெட்டி: நெருப்பின் உறைவிடம்

நெருப்பின் உறைவிடம் எது என கேட்டால் தீப்பெட்டி என்று சொல்ல தோன்றும். உரசப்படாத வரை ஆழ்ந்த தூக்கத்தில் சிறு பெட்டியினுள் நெருப்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. உரசிய உடன் ஜாலம் நிகழ்கிறது. வீட்டின் அத்தியாவசியத் தேவைகளில் இன்றியமையாதது தீபெட்டி. அதுவே உணவுக்கான ஆதாரம். ஆனால் அதுவே உணவு அல்ல. சமைத்தல் என்ற வழிமுறைக்கு மிகவும் அத்தியாவசியமானது நெருப்பு. வெறும் பாத்திரங்களையும், காய்கறிகளையும் வைத்துக் கொண்டு ஆண்டுகள் பல தவம் கிடந்தாலும் உள்ளது உள்ளபடியே இருக்கும். நெருப்பு பிறக்கும் போது சமைத்தல் நடைபெறுகிறது. தீக்குச்சியை பெட்டியின் ஓரத்தில் உரசும் போது நெருப்பு பிறக்கிறது. விழித்துக் கொள்கிறது என்று சொன்னால் அறிவியல் சிந்தனைக்கு சற்று ஏற்புடையதாக இருக்கும். ஏனெனில் எந்த ஆற்றலையும் நம்மால் உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக கடத்தி நம் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
தீப்பெட்டியில் இருந்துதான் நெருப்பு வருகிறது என்பது ஒரு காலத்தில் நம்முடைய அசைக்கபடாத நம்பிக்கையாக இருந்து வந்தது. திடீரென்று வரலாற்று பாடத்தில் மனிதன் சிக்கி முக்கி கல்லை உரசி நெருப்பை கண்டுபிடித்தான் என்று படித்த போது மிகவும் விந்தையாக இருந்தது. ஏனென்றால் நெருப்பு தீப்பெட்டியில் இருந்து வருகிறது என்பது நம்முடைய அசைக்க முடியாத நம்பிக்கை. வேறெதாவது ஒரு அடிப்படையில் இருந்து நெருப்பு வரும் என்று யாராவது சொல்வார்களானால் அது நம்முடைய ஆச்சரியத்திற்குரிய நிகழ்வாகும். தீப்பெட்டியை தவர்த்து நெருப்பு எங்கிருந்தும் நம்முடைய தேவைக்கு வருவதில்லை என்று நம்பியிருந்தோம்.
சமையலறையில் அதிகம் கவனத்தைப் பெறாத பொருள் ஒன்று இருக்குமானால் அது தீப்பெட்டி என்றுதான் சொல்ல வேண்டும். யாரும் அதனை கண்டு கொண்டிருக்கவே மாட்டார்கள். மரக்குச்சியில் செய்த தீக்குச்சி ஒரு ரகம், காகிதத்தை உருட்டி மெழுகு பூசிய தீக்குச்சி மற்றொரு ரகம். மிகப்பெரிய பட்டாக்கத்தியை ஓங்கிக் கொண்டு ஒருவர் சிறுத்தைப் புலியை வெட்டுவடு போன்ற படம் மனதின் ஓரத்தில் பதிந்து போனது மற்றொன்று. சமையல் அறையில் எது பத்திரப்படுத்தப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் தீப்பெட்டி அதிக பாதுகாப்பில் பத்திரப்படுத்த வேண்டியிருக்கிறது. தீக்குச்சியை பெட்டியுடன் உரசிய பின்பு அலட்சியமாக ஓரத்தில் தூக்கி எறிய முடியாது. ஈரப்பதம் இல்லாத இடத்தில் அலமாரியின் உச்சியில் வைக்க வேண்டும். கூடுமானால் ஈரக்காற்று புகாதபடி பாட்டிலினுள் வைக்க வேண்டும். ஈரப்பதம் கண்டுவிட்டால் தீப்பெட்டிக்கு ஜுரம் கண்டு விடும். தைலத்தை நெற்றியிலும், மார்பிலும் இட்டி சூடு பறக்க தேய்ப்பது போன்று நம் கையின் பின் புறத்தில் வைத்து சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின்பு ஒரெ ஒரு உரசல் சிறு குழந்தைகள் ஜுரத்தில் இருந்து விடுபட்டு இரும்புவதைப் போன்று தீ சத்தத்தோடு பற்றிக் கொள்ளும். இதைச் செய்யாமல் எத்தனை முறை ஈர குச்சியை பெட்டியின் ஓரத்தில் உரசினாலும் தீ பற்றாது. தீக்குச்சியில் உள்ள மருந்து வேண்டுமானால் நைந்து உதிர்ந்து போகும்.
மற்ற உபகரணங்களான சிக்கி முக்கி கல்லோ, கேஸ் அடுப்பிற்கு பயன்படுத்தும் லைட்டரோ நெருப்பை தான் உண்டாக்கும். தீப்பெட்டியோ நேரடியாக சிறு கொழுந்து தீயை பரிசளிக்கிறது. தீ பற்றும் போது எஞ்சுவது சாம்பல். நெருப்பு ஒன்றை பீடிக்கும் போது நெருப்பின் செக்கச் சிவந்த நிறம் கொண்ட பொருளின் மீது கொஞ்சம் நேரம் தாக்கு பிடிக்கும். பின்பு அதுவும் சாம்பலில் போய் முடியும். நெருப்பை தீ என்றும் தீயை நெருப்பு என்றும் நாம் சொல்வது கிடையாது. நெருப்பை ஊதி அதன் ஆற்றலை தீவிரப்படுத்தும் போது தீயாக மாறுகிறது. அதே போன்று தீயை அதன் சொற்ப ஆயுலில் தீப்பற்றக்கூடிய ஒன்றின் மீது செலுத்தும் போது தீயில் இருந்து நெருப்பாக ஆற்றல் கடத்தப்படுகிறது.
தீப்பெட்டியின் காலகட்டத்தில் ஒருவர் நம்மிடம் வந்து ஒரு சிறிய இரும்பு சாதனத்தை அதன் உச்சியில் பட்டன் ஒன்றை அழுத்தும் போது அதில் இருந்து சிறு பொறி உண்டாகும் அதனை தீயாக மாற்றிக் கொள்ளலாம் என்று யாராவது சொல்லியிருப்பார்கள் என்றால் நாம் நம்பியிருக்கவே மாட்டோம். ஒருவேளை அதுவே செயல்முறைப்படுத்தப்பட்டிருக்குமானல் அது நமக்கு ஆச்சரியமூட்டக்கூடியதாக இருந்திருக்கும். இது கற்கால மனிதன் சிக்கி முக்கி கல்லை உரசி உண்டாக்கிய தீயை போன்றது. கற்கால மனிதனை நாம் எப்படி விசித்திரமாக வரலாற்றில் படித்திருப்போமோ அதே போன்று அன்று நவீன மனிதனின் இந்த லைட்டரையும் விசித்திரமாக பார்த்திருப்போம்.
நகரத்து பெட்டிக்கடைகளில் நாம் கண்ட மற்றொரு அதிசயம் தீயைக் கக்கும் லைட்டர். கைக்கு அடக்கமான சிறிய பிளாஸ்டிக்கில் பட்டனை அழுத்தும் போது தீபெட்டியை போன்றே நெருப்பு பற்ற ஆரம்பித்தது. திரவமாக தென்படும் கேஸ் காலியான பிறகும் எஞ்சியதை கொண்டு மீண்டும் மீண்டும் தீயை உமிழச்செய்தது ஒரு பொழுது போக்கு.
சிக்கி முக்கி கல்லின் நெருப்பும், லைட்டர்களின் நெருப்பும் விந்தையானவைகள். அவைகள் தீப்பெட்டியை போன்று ஒருபோதும் இயல்பாக மனிதர்களிடம் நடந்து கொண்டதே இல்லை. ஊரில் புதிதாக முதல் முதல் ஒரு வீட்டில் கேஸ் பயன்படுத்தப்பட்டது. ஆச்சரியத்துடன் சிவப்பு நிற சிலிண்டரையும், லைட்டரையும் பார்த்த போது ஒரு அறிவியல் தகவல் கிடைத்தது. இந்த லைட்டரில் ஒரு இலட்டம் பொறிகள் உள்ளன. ஒரு இலடசம் முறை இந்த பட்டனை அழுத்திக் கொள்ளலாம் என்று அந்த வீட்டு பையன் சொன்ன போது, தீபெட்டியினுல் இருக்கும் தீக்குச்சிகளின் கணக்குதான் நினைவுக்கு வந்தது. அப்படியென்றால் இந்த லைட்டரில் ஒரு இலட்சம் தீக்குச்சிகளின் திறன் உண்டு போலும்.
இன்றைக்கும் நமக்கு நெருப்பு தேவை என்றால் நினைவில் வந்து நிற்பது தீபெட்டி ஒன்றுதான். தீபெட்டிக்கு மீறி நெருப்பு வேறெங்கும் இருந்து நமக்கு கிடைப்பதில்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
  


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...