Saturday, January 26, 2019

கீழ் வானம் சிவக்கும்


கீழ் வானம் சிவக்கும்
பெட்ரிசியன் கல்லூரியில் Phantasia என்னும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களே முன் நின்று  நடத்தும் நிகழ்வு இது. பேராசிரியர்களின் உதவியும் தேவைப்பட்டதால் எங்கள் பங்கிற்கு Face Painting நிகழ்வை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு எனக்கும் மற்றொரு பேராசிரியருக்கும் கிடைத்தது. போட்டியின் Judge ஆக வந்தவர் ஓவியர் சுஜித் குமார் கந்தன். இளங்கலை மற்றும் முதுகலை ஓவியம் பயின்றவர். இவ்வளவுதான் அவரைப் பற்றி எனக்கு கிடைத்த முன்தகவல். அவர் வரும் வரை அவரைப் பற்றியும் அவரது ஓவியங்கள் பற்றியும் அறிய கூகுளில் சொஞ்சம் நேரம் செலவழித்தேன். அவர் வந்தவுடன் கல்லூரி முதல்வரிடம் அறிமுகம் செய்துவிட்டு, சிறிது நேரம் அவருடன் உரையாடினேன். ஓவியர்களுடனான என் உரையாடல்களில் அதிகம் பேசு பொருட்களாக இருப்பவை இரண்டு: ஒன்று நீல நிறம், மற்றொன்று கியூபிசம். இவ்விரண்டைப் பற்றியும் எவ்வளவு பேசினாலும் அல்லது கேட்டாலும் சோர்வடைய செய்யாதவைகள். புலப்படும் நிறமும்  உருகொண்ட Geometry வடிவங்களும் ஓவியத்தை எப்போதும் புத்தம் புதிதாக காட்டி கொண்டே இருக்கும். புரிதல்கள் புதிது புதிதாக ஓவியத்தைப் பற்றி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஒவியர்கள் ஏன் நீல நிறத்தை தங்கள் ஓவியங்களுக்கு தெரிந்தெடுக்கிறார்கள் என்பதை ஒவியர்களிடமே கேட்டு அறிவது சுவாரசியமான விசயம். சுஜித்தின் ஓவியங்களில் கூட இந்த நீல நிறத்தின் இடம் அதிகம் இருப்பதாக அவரிடம் சொன்னேன். ஓவியத்தில் ஏன் இந்த நீல நிறம் என்ற கேள்வியை அவரிடமே கேட்டேன். அவருடைய பதில் இதுதான்:

“உங்களுடைய கேள்வி மிக முக்கியமானது. கடலின் நிறம் நீலம், வானத்தின் நிறமும் நீலம். என்றாலும் நாம் பார்க்கும்  இயற்கையின் பெரும்பான்மைப் பகுதிகளான வானதிற்கும் கடலுக்கும் சொந்தமாக நிறங்கள் என்று எதுவும் கிடையாது. இந்த நிறமற்றவைகள் ஏதோ ஒரு நிறத்தை பகல் பொழுதில் தங்கள் முழு ஆகிருதிக்கும் பூசிக் கொள்கின்றன. அதுதான் நீலம். மற்ற நிறங்களைக் காட்டிலும் நீலம் தான் முழுமைக்கான நிறம். அதுவே வியாபிக்கும் நிறம். அதனால் தான் ஓவியத்திற்கு நீலம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.”

ஏற்கனவே ஓவியத்தில் நிறத்தைப் பற்றி மற்றுமொரு கேள்வி இருந்தது. ஏன் நீல நிறத்திற்கு இணையாக மஞ்சலும் சிவப்பும் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை? சுஜித் மேற்கூறிய விளக்கம் இந்த கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டது. கடலும் வானமும் மஞ்சல் நிறத்தையோ சிவப்பு நிறத்தையோ முழுமையாயக உள்வாங்கிக் கொள்ள முடியாதவைகள். இந்த நிறங்கள் வானத்தின் அல்லது கடலின் குறைந்த ஒரு சிறு பகுதியை மாத்திரம் வண்ணமாக்குகின்றன. ஆனால் நீலமோ முழு வானதையும் கடலையும் நீலமாக்குக்கிறது. சிவப்போ கீழ் வானத்தை கொஞ்சமாகத்தான் சிவக்கச் செய்யும்.
பின்பு Face Painting போட்டிக்கு ஒவியரை அழைத்துச் சென்றேன். பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்து போட்டியில் கலந்து கொண்டனர். எங்கள் கல்லூரியின் அடுத்த வளாகத்தில் இருந்து வாய் பேச முடியாத காது கேளாத  தூய லூயிஸ் பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள் என்பது போட்டிக்கான தனிச்சிறப்பு. அவர்கள் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றனர்.   மீனம்பாக்கம் A. M. ஜெயின் கல்லூரி மாணவர்கள் முகத்தில் வரைந்த பழைய சென்னை பற்றின ஓவியம் மிக அற்புதமான ஓவியம். செழிப்பை காட்ட நீலத்தை முகத்தில் ஒருபக்கத்திலும், பேரழிவை சித்தரிக்க செம்மஞ்சல் நிறத்தை முகத்தின் மறு பக்கத்திலும் வரைந்திருந்தனர். சுஜித்திடம் அவர்கள் ஓவியத்தை விளக்கியபோது: ”இந்த பேரழிவில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது அதனால் தான் நாங்கள் மஞ்சள் மற்றும் சிவப்பின் குழைவை பயன்படுத்தியிருக்கிறோம் என்றனர்”. வண்ணங்களின் தேர்ந்த குழைவு முதிர்ந்த ஓவியனை அடையாளப்படுதிக் காட்டியது. போட்டி ஆரம்பித்த ஒருமணி நேரத்தில் மாயாஜாலம் கண் முன் காட்சியானது. மாணவர்கள் தீட்டியது  கோட்டொவியம் அல்ல வண்ணங்களின் குழைவு. கோடுகள் இணைந்து உருவாகும் ஓவியம் ஒரு அழகு என்றால், வண்ணங்களை குழைத்து ஓவியம் தீட்டுவது மற்றொரு அழகு.
போட்டியில் A. M. Jain கல்லூரி மாணவர்களுக்கே முதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டி முடிந்ததும் முகத்தை கழுவி விடுவார்களே என்ற ஆதங்கத்தில் முந்திக் கொண்டு போய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். முகத்தில் வரையப்பட்ட அந்த வண்ணங்களின் குழைவு சிறிது நேரத்தில் நீர் இட்டு கழுவப்படப்பொகிறது. இதுவே ஒரு கேன்வாசில் தீட்டப்பட்டிருந்தால் காலத்திற்கும் பாதுகாக்கக்கூடிய பொக்கிஷம் அந்த ஓவியம். மாணவர்கள் ஜெயின் கல்லூரி என்றதும் கூடுதல் மகிழ்ச்சி. காரணம் நானும் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவன்.
போட்டி முடியும் போது சுஜித் கடைசி மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் பயன்படுத்திய நிறத்தை தவிர்க்கும்படி சொன்னார். அவர்கள் பயன்படுத்தியது ’ugly colour’ என்று சொன்னார். அவர்கள் முகம் முழுவதும் வெளிர் பழுப்பு நிறத்தை கொண்டு பழைய சென்னையை வரைந்திருந்தனர். வெளிர் பழுப்பு ஓவியத்தில் வித்தியாசம் எதுவும் ஏற்படுத்தவில்லை. சுஜித் கூறிய இந்த விளக்கமும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  நிறங்களில் எத்தனைவிதமான உணர்வுகள்! ஒரு நிறம் நம்மை துள்ளல் அடைய செய்கிறது. மற்றொரு நிறம் நம்மை சோர்வுற செய்கிறது. வேறொரு நிறம் நம்மை சொகமடையச் செய்கிறது. இன்னுமொரு நிறம் நமக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. நிறங்களில்தான் எத்தனை விதமான ஜாலங்கள்!

பி.கு
எட்டாம் வகுப்பில் எங்கள் சரவணன் மாஸ்டர் கேட்ட கேள்வி ஒன்று நினைவிற்கு வருகிறது. ஏன் ட்ராபிக் சிக்கனலில் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களைப் பொறுத்தியிருக்கிறார்கள்? ”சார் சிவப்புன்னா டேஞ்சர் சார் என்று பதில் சொல்வோம்”. நான்றாக வாங்கிக்கட்டிக் கொள்வோம். ஏது ஒன்றுக்கும் அறிவியல் பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்பார். பதிலும் அவரிடம் இருந்தே வரும். 
வண்ணங்களில் சிவப்பு சிதறல் அடையாத நிறம். எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும் சிவப்பு லைட் மாத்திரம் மறையாமல் அல்லது சிதறாமல் பளிச்சென்று தெரியும். மஞ்சள் நிற விளக்கு அருகில் செல்ல செல்லத்தான் புலப்படும். பச்சைக்கு மிக அருகில் சென்று பார்க்க வேண்டும். ஆபத்தான விசயங்களை சுட்டிக்காட்ட சிவப்பு நிறம் தேவை. நீண்ட தூரத்தில் இருந்து பார்க்கும் போதே நிறம் சிதறாமல் கண்ணுக்கு தெரியும். அதனால்தான் Ambulance மேல் சிவப்பு விளக்கு உள்ளது. 
சரி, வானம் ஏன் நீலமாக உள்ளது? சூரிய வெளிச்சத்தில் உள்ள ஏழு நிறங்களில் சிதறள் அடையும் நிறம் நீலம். நம் கண் முன் வந்து சேருவதற்குள் நீலம் வானத்திலேயே சிதறிவிடும். அதனால்தான் வானம் நீலமாக உள்ளது. நீலம் சிதறும் வண்ணம் என்பார்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...