Sunday, January 20, 2019

பிரதிபிம்பம்: கண்ணாடியில் கண்கிறது போலக் கண்டு


பிரதிபிம்பம்: கண்ணாடியில் கண்கிறது போலக் கண்டு
அழகு என்பதை வரையறை செய்ய தான் அல்லாத மற்றொன்று அவசியப்படுகிறது. தன்னிலையில் எது ஒன்றும் தன்னுடைய மதிப்பை அறிந்திருக்க முடியாது. பொருள் ஒன்றின் மதிப்பை அறிய மற்றமையின் நிலை அவசியப்படுகிறது. அல்லது தான் என்ற ஒன்றே மற்றமையின் நிலையில் நின்று தன்னையே பார்க்க வேண்டி இருக்கிறது. எது ஒன்றுக்கும் பிரிதொன்றின் இருப்பு அவசியமாகிறது. பிரதிபிம்பத்தையே உதாரணமாக சொல்லலாம். ஒருவர் தன்னை தானே பார்த்துக் கொள்ளும் வரை தான் இன்னார் என்ற பிரக்ஞை அவருக்கு ஏற்படுவதில்லை. தன்னைக் காணும் போது மாத்திரமே அவர் தன்னிலையை அறிகிறார். அதுவரை மற்றவர் பற்றின பிரக்ஞையே அதிகம் மேலிடும். எது ஒன்றின் அழகும் அப்படிப்பட்டதுதான். இதைப் பற்றி பொருள் பட புறிந்து கொள்ள வேண்டுமெனில் Fairy Tale ஒன்று உதவியாக செய்யும்.
கதையின் தலைப்பு ”மூன்று கண் சகோதரி, ஒற்றைக் கண் சகோதரி, இரண்டு கண் சகோ
தரி”. இது மூன்று சகோதரிகளில் யார் அழகானவர் என்பதைப் பற்றின கதை. மூவரும் அடர்ந்த காட்டின் நடுவில் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மூவருக்கும் வெளி உலக தொடர்பே கிடையாது. தங்கள் வாழ்நாளில் மூவரும் ஒருவர் மற்ற இருவரைத் தவிற அல்லது இருவர் மற்ற ஒருவரைத் தவிற வேறு எவரையும் சந்தித்ததே கிடையாது. மூத்த சகோதரிக்கு நெற்றியில் ஒரு கண்ணும், தலையின் இரண்டு பக்கங்களில் இரண்டு கண்களுமாக மொத்தத்தில் மூன்று கண்கள் இருந்தன. இரண்டாவது சகோதரிக்கு நெற்றியில் மாத்திரம் ஒரே ஒரு கண். கடைசி சகோதரிக்கு நெற்றிக்கு கீழ் இரண்டு கண்கள். இவர்கள் மூவரும் தங்களைத் தவிற நான்காவது ஒருவரை பார்த்ததே கிடையாது. ஆகையால் எந்த முகம் இலட்சணமான முகம் என்று ஒப்பிட்டு பார்க்க தெரியாது. பெரிய சகோதரி நெற்றியில் ஒரு கண்ணும் தலையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கண்களும் இருக்கும் தன் முகமே மிகவும் அழகான முகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். இரண்டாவது சகோதரிக்கும் தன்னைப் போன்றே ஒரு கண் நெற்றியில் இருப்பதனால் அவளும் அழகானவள் என்றும் ஆனால் தன்னை போன்று அவ்வளவு அழகானவள் கிடையாது என்றும் நினைக்கிறாள். காரணம் தனக்கு இருப்பது போன்று மீதம் உள்ள இரண்டு கண்கள் அவளுக்கு கிடையாது. பரவாயில்லை அவளும் அழகுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் மூத்தவள்.
முதல் இருவருடைய பார்வையிலும் கடைசி சகோதரி அசிங்கமானவள். காரணம் அவளுக்கு இரண்டு கண்களும் அசிங்கமாக நெற்றிக்கு கீழே இருக்கின்றன. அதனால் அவளை அருகில் சேர்க்காமல் அடிமையை விட மிக மோசமாக நடத்துகின்றனர். அழகான தங்கள் முன்பாக நிற்பதற்கு கூட அவளுக்கு தகுதி கிடையாது என வீட்டிற்குள் சேர்ப்பதே கிடையாது. தாங்கள் சாப்பிட்ட மிச்ச மீதியை அவள் சாப்பிட வேண்டும். வீட்டு வேலை செய்ய வேண்டும். வீட்டில் உள்ள ஆடுகளை அவளே புல் வெளிக்கு கொண்டு போய் மேய்க்க வேண்டும்.
கடைசி சோகதரிக்கு தான் அழகானவளா இல்லையா என்பது அவளுக்கு தெரியாது. மற்ற இரண்டு பேர் சொல்வதினால் தான் அசிங்கமானவள் என நம்ப ஆரம்பித்துவிட்டாள். அழகாகவும் இல்லை, பசிக்கு சரியான சாப்பாடும் கிடைப்பதில்லை, ஆடுகளையும் தானே மேய்த்தாக வேண்டும் என்று எப்போதும் வேதனைப்பட்டுக் கொள்வாள். ஒரு நாள் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது இது நடந்தது; இவ்வளவையும் நீண்ட நாள் தனக்குள் புதைத்து வைத்திருந்தவள் அன்று வேதனை தாங்க முடியாமல் புல்வெளியின் மத்தியில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அழும் சத்தத்தைக் கேட்டு அங்கு மாயமாக உளாவிக் கொண்டிருந்த சூனியக்காரக் கிழவி ஒருவள் அவள் கண் முன் தோன்றி ஏன் அழுகிறாய் என அவளை விசாரிக்கிறாள்.
தன்னுடைய மற்ற இரண்டு சகோதரிகள் போன்று தான் அழகாக இல்லை என்று சொல்லி அழுகிறாள். சூனியக்காரக் கிழவி உலகத்திலேயே அவள் தான் மிக அழகானவள் என்றும், நெற்றிக்கு கீழ் கண்கள் இருப்பதுதான் அழகு என்றும் மேலும் உலகத்தில் இருக்கும் பெண்களைக் காட்டிலும் அவள் தான் நிறைந்த அழகுள்ளவள் என்று ஆறுதல் சொல்ல ஆரம்பித்தாள். இதைக் கேட்டு கொஞ்சம் சந்தோசமடைந்த இரண்டு கண் சகோதரி தனக்கு வீட்டில் உணவே கொடுப்பது இல்லை என்றும் மற்ற இரண்டு பேர் சாப்பிட்ட மிச்சத்தைதான் தான் சாப்பிடுவதாக சொல்கிறாள். கிழவி அவளுக்கு மந்திரம் ஒன்றைக் கற்றுக் கொடுக்கிறாள். பசி எடுக்கும் போதெல்லாம் அந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் சுவை மிகுந்த உணவு வகைகள் அவள் கண் முன்னே தோன்றும். சாப்பிட்ட பின்பு மீண்டும் மந்திரத்தை சொன்னால் சாப்பாட்டு மேஜை காணாமல் போய்விடும்.
கதை இப்படியாக தொடர்ந்து கடைசியில் அவள் தன் சோகதரிகள் கையில் வசமாக மாட்டிக் கொள்கிறாள். அவர்கள் இவளை மந்திர ஜாலம் செய்யும் சூனியக் காரி என்று மேலும் துன்பப்படுத்துகின்றனர். கடைசியாக சூனியக்காரி கிழவியிடம் இருந்து இளையவளுக்கு ஒரு மந்திர விதை கிடைக்கிறது. அதை அவள் தன் வீட்டின் முன் புதைக்கிறாள். விதை வளர்ந்து பெரிய மரமாகி தங்க பழங்களையும், வெள்ளி பழங்களையும் காய்க்க ஆரம்பிக்கிறது.
அந்த வழியாக இளவரசன் ஒருவன் வருகிறான். தங்கப் பழத்தைத் தேடி அவன் பல நாடுகள் சுற்றித்திரிவதாகவும் இப்போது இங்கே அந்த மரம் இருப்பதாகவும் கூறுகிறான். பழத்தை கொடுப்பரை தானே மணந்து கொள்வதாகவும் உறுதி அளிக்கிறான். மரம் தங்களுடைய தங்கையினுடையது என்பதை மறைத்து மரம் தங்களுடையது என பொய் சொகிறார்கள். இரண்டு கண் சகோதரியை கூடையில் வைத்து மூடி விடுகிறார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கூடையின் கீழிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் இரண்டு கண் சகோதரி அங்கிருக்கும் கல் ஒன்றை உதைத்து தள்ளுகிறாள் அது இளவரசன் காலின் கிழ் போய் விழுகிறது. கல் வந்த திசையை நோக்கி அவன் கூடையின் அருகில் சென்று திறந்து பார்க்கிறான். தான் இதுவரை பார்த்திராத ஒரு பேரழகியை அந்த கூடையின் கீழ் அவன் அப்போது பார்க்கிறான். இளவரசன் உண்மையை அறிந்து கொண்டு இரண்டு கண் சகோதரியை திருமணம் செய்து கொண்டு தன் நாட்டிற்கு அவளை அழைத்து செல்கிறான்.
கதையில் இரண்டு கண் சகோதரிக்கு தான் அழகானவள் என்பது சூனியக்காரி கிழவி சொல்லியும் கூட முழுமையாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவள் அழகுக்கு இணையான இளவரசன் ஒருவன் வரும் போதுதான் அந்த அழகின் மதிப்பு விளங்குகிறது. அல்லது அந்த அழகின் இருத்தலே இளவரசனின் வருகையால் உறுதி செய்யப்படுகிறது என சொல்லலாம். கதையை படிக்கும் நமக்கும் கூட அவள் பேரழகு கொண்டவள் என்பது இளவரசன் வரும் வரை தெரிவதில்லை. விலைமதிப்பற்ற எந்த ஒன்றும் தன் தன் மத்திப்பை அறிந்து கொள்வது தன்னுடைய இணை வரும் போதுமாத்திரம் தான். தனக்கான இணையைக் கண்டறிவதே அழகின் பூரணத்துவம் என சொல்லலாம். இப்பிரபஞ்சத்தில் விலை மதிப்பற்ற அழகு என நாம் ஒன்றை சொல்லும் போது அந்த விலைமதிப்பற்றது தன் மதிப்பை கண்டடைய தன் இணையை தேடிக் கொண்டிருக்கிறது என சொல்லாலாம்.
 இப்போது பார்த்தது ஒரு Fairy Tale. இந்த சிறிய கதைக்கு சற்றும் சளைக்காத மாபெறும் காவியம் ஒன்று உள்ளது. அதுதான் விக்டர் யூகோவின் Les Misarables. நாவலின் ஒரு பகுதியை வாசிக்கும் போது இந்த மந்திரக்கதையின் இரண்டு கண் சகோதரி நினைவுக்கு வருகிறாள். கதையின் நாயகி Lark என்கிற Cosette. அவள் தன் தந்தையுடன் இருக்கும் வரை அவள் அழகு எவ்வளவு விலைமதிப்பற்றது என வாசகனுக்கு தெரிவதில்லை. அவளுக்கும் கூட. கதையின் நாயகன் Marius பிரான்சின் பூங்கா ஒன்றில் அவள் தந்தையுடன் அவளை சந்திக்கிறான். அந்தத் தருணமே Larkன் அழகு தன் இருப்பைக் கண்டடைகிறது. பின்பு பைத்தியம் போன்று நாயகன் அவளை தேடி கண்டடையாமல் என்றாவது ஒரு நாள் அவள் அங்கே வருவாள் என அந்த பூங்காவே உலகம் என அவ்விடத்தில் தவம் கிடக்கிறான்.
தன் அழகை ஒருவன் அடையாளம் கண்டு விட்டான் என்ற உணர்வு அவளையும் அறியாமல் அவளுக்குள் ஏற்படுகிறது. இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதில்லை. எனினும் இருவரும் ஒருவரை ஒருவர் அவர்களை அறியாமலேயே தேடிக்கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் அவள் தன் தந்தையுடன் நடந்து போகும் போது ஒருவர் அவள் அழகைக் கண்டு வியக்கிறார். ”இப்படிப்பட்ட அழகுக்கு பொருத்தமில்லாத உடை” என்று வார்த்தையை உதிர்த்துவிட்டு செல்கிறார். அந்த வார்த்தையை அவள் காதுகளின் கரங்கள் பொக்கிஷமாக அள்ளி எடுத்துக் கொள்கிறது. அப்போதிலிருந்து அவள் வேறொருவளாக தன்னுள் உருவாகி தன் அழகை தானே கண்டாடியில் தன் பிரதிபிம்பத்தை ஓயாமல், கண்கொட்டாமல் பார்க்கிறாள். 
இது போன்ற காதல் தருணத்தை இலக்கியத்தில் ஷேக்ஸ்பியருக்கு - ரோமியோ ஜூலியட் - பிறகு விக்டர் யூகோ ஒருவர்தான் Les Miserableல் சாத்தியப்படுத்தியிருக்கிறாறோ என்று வியக்க நேரிடுகிறது. இதனை ஆய்வின் முடிவாக வைக்காமல் இரசனையின் பாராட்டுதளாக வைத்துக் கொள்வோம். கருத்தைப் பதிவிடும் போது சந்தேகத்தின் தொனி அவசிம் என்கிறார்கள். பாராட்டுதளில் ”இது போன்று பிறிதொன்று எதுவும் இல்லை பிறிதொன்றை போல் இது அவ்வளவு அழகாக இல்லை என்று” கொஞ்சம் உச்சதொனியில் முடிவுக்கு வருவதும் நல்லதுதான். ஆழநெடுந்திரை ஆறுகடந்திரவர் போவாரோ? என்பதும் உச்சதொனிதானே.                      

1 comment:

  1. மூன்று கண் சகோதரி கதையின் முடிவுரை மிக அருமை சகோ😊🙌🙌

    ReplyDelete

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...