Friday, December 7, 2018

சொற்கள் உண்ட செய்தி

சொற்கள் உண்ட செய்தி
மூடி மறைப்பதற்கு அந்தரங்க ரகசியங்களும் இல்லை, ஊரே அறியும்படியான வெளிப்படையான உண்மைகளும் இல்லை. பொய்கள் உண்மையென நம்பப்படுகின்றன. உண்மை தர்க்கங்களால் நம்பும்படியான பொய்யாக உருமாற்றம் அடைகிறது. உண்மை/பொய் என்ற பெயரிடுதலே கூடிய சீக்கிரத்தில் அபத்தமாகிவிடும். எஞ்சியிருப்பது இரண்டு மாத்திரமே – இரகசியம், வதந்தி. பொருள் ஒன்றின் உண்மைத்தன்மையை அல்லது அதன் பொய்மையை அறிய/அடைய இந்த இரண்டு வழி பாதைகள் வழியே பயணிக்க வேண்டியிருக்கிறது. நிச்சயம் சென்று சேரும் இடம் இந்த இரட்டை நிலையங்களாகத்தான் இருக்கும். பொருள் ஒன்று தன்னை ஏதுமற்ற நிலையில் நிறுத்திக் கொள்ள முடியாது. தன் இருத்தலை மெய்ப்பிக்க பெயர் சுட்டிகளான உண்மை, பொய் என்பன அவசியப்படுகின்றன. ஒன்றினை சரி என்று முடிவு செய்து திரும்பிப் பார்க்கும் போதே அது பொய் என வேறொருவரால் மெய்ப்பிக்கப் பட்டுவிடுகிறது. ”சரி, நீ பொய் என்று ஒப்புக்கொள்கிறேன்” என்ற நிலைக்கு வரும் போது மெய்ப்பொருள் மூர்க்கம் கொண்டு சண்டைக்கு வந்துவிடுகிறது. இது புதிர் விளையாட்டு.
இது மிக ரகசியம், துளியளவும் கசியக்கூடாது என்று சொன்ன அரைமணிநேரத்தில் அதே வாக்கியம் ஊர் முழுக்க பயணித்து விட்டு மீண்டும் நம் காதுக்கே எதிரொலிக்கிறது. ரகசியங்கள் ஆயிரம் வாய்கள் கொண்டவை. வாய்களுக்கு பூட்டு போடுவது கூடாது. ஊருக்கே தெரிந்தாக வேண்டிய உண்மை அதுவும் அத்தியாவசியமான உண்மை வாய் திறப்பதில்லை. வெளியில் சொல்லிவிடாதே என்று சொன்னால் பிரச்சனை. ”எங்கே சத்தியம் செய்து கொடு பார்க்கலாம்.” அவசியமே இல்லை. உண்மைக்கு வாய் கிடையாது. ஏதோ சம்பவம் நடந்திருக்கிறது, காரணம் தான் புரியவில்லை. ”எப்படி புரியும்” அதற்குத்தான் வாய் கிடையாதே. ஆயிரம் வாக்குறுதிகள் கொண்டு கட்டுக்கோப்பாக நம் ஜோபிக்குள் வைத்திருக்கும் அந்த ரகசியம் மாத்திரம் நம்மை அறியாமலேயே “ஒன்று தெரியுமா?” என ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துவிடும். புரளிக்கு எப்போதும் சுவாரசியம் அதிகம். உண்மைக்கோ பயம். அச்சம் அவசியம். நீதான் என்று தெரிந்துவிட்டால் கொடுக்க போகும் விலை அதிகம். உயிராகக் கூட இருக்கலாம்.
நாம் எதை உண்மை என்று சொல்வது. இன்று ஒருவர் உண்மை என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குக் கூட பயம். வெறும் வார்த்தையே அதற்கான பொருளை இழந்து விட்டதோ? அல்லது அதனை பயன்படுத்தும் போது மற்றவர்கள் சீண்டப்படுகிறார்களோ? அனைத்தையும் புரளி என்றே எண்ணிக் கொள்வோமாக. நிச்சயம் ஒரு செய்தி மிகக் கமுக்கமாக வாய் பேசாமல் அமைதியாக இருக்குமானால் அது உண்மை எனக் கொள்ளலாம். அதுவே காட்டுத்தீ போன்று பரவி அனைவரின் காதுகளையும் தகிக்கும் போது அதனை பொய் எனக் கொள்ளலாமா? கெட்ட செய்திகள் நல்ல செய்திகளைக் காட்டிலும் வேகமானவை என்று ஜூலியட் சாகும் போது உரைக்கப்படும். இவ்விடத்தில் செய்தி உண்மையாக இருப்பின் ஊமைப்பட்டு போயிருக்கவேண்டுமால்லவா. அதன் வேகமே அதன் பொய்மை என சொல்லக் கூடுமோ. அது உண்மைச் செய்தி. எனினும் நன்மைக்கான செய்தி கிடையாது. அனைத்தும்  தீமைக்கானது, அழிவுக்கானது.
அது உண்மையாக இருந்தால் என்ன பொய்யாக இருந்தால் என்ன. தங்களின் இருப்பில் அல்லது அடையாளத்தில் பயன் என்ன. இருத்தலின் அவசியம் அதன் நன்மை தீமையினால் முடிவு செய்யப்படட்டும். ஜூலியட்டும் கற்னைதானே. அப்படியெனில் ஜூலியட் மூலமாக நிரூபிக்கப்படும் நல்லது/கெட்டது என்பன எப்படிப்பட்டவைகள். கண்ணை மூடிக்கொண்டு தர்க்கம் செய்தால் இந்த புதிர் விளையாட்டு தத்துவார்த்தமாக இருக்கும். நெருப்பு குளிரும், பனி சுடும். தர்க்கித்தால் பொய்யைக் கூட உண்மை என பொருட்படுத்திக் கொள்ளலாம். எல்லாம் கண்ணை திறந்து பார்க்கும் வரையில் தான். கண் திறந்து தொட்டுப்பார்த்தால் தெரியும் எது குளிர் எது சூடு என்று.
உறைபனியோ, தகிக்கும் சூடோ என்றால் பரவாயில்லை அவைகளின் இருப்பை என்னவென்று நிரூபித்துவிடலாம். தன்னில்தான் ஆற்றல் அற்ற பொருள் ஒன்றின் அல்லது சம்பவம் ஒன்றின் நிலைப்பாடு என்ன என்பதுதான் கேள்வியே. நமக்கும் அதற்குமாக இடைவெளியை பூர்த்தி செய்வது வெறும் தொடு உணர்வும் கிடையாது. செய்திகள் எதுவும் ’convey’ஆவது இல்லை. இன்று செய்திகள் அனைத்தும் விவாதித்து  குழப்பப்பட்டு கடைசியில் ‘இருக்கு ஆனா இல்ல’ என்றுதான் நம்மிடம் ஒப்படைக்கப்படுகின்றன. ஓராயிரம் சொற்கள் மண்டிக் கிடக்கின்றன. அவைகள் தங்கள் வெறிப்பசியை தீர்த்துக் கொள்ள ஒரே ஒரு செய்தியின் மீது பாய்கின்றன. சொற்கள் உண்ட செய்திதான் நம்மிடம் வீசப்படுகிறது. நாமும் அதனை மேலும் கீழும் இடமும் புறமும் பார்த்து ஒன்றும் புரியாமல் தூக்கியெரிந்து விடுகிறோம்.
நமக்கு வேண்டியதெல்லாம் செய்தியை convey செய்ய ஒன்றை வரி. அது ஒன்று போதும். நாம் அதனை உற்று பார்த்து தர்க்கிக்கப் போவதில்லை. சம்பவம் நடந்திருக்கிறது அவ்வளவுதான். நமக்கு ஒரு சம்பவம் ஒருவாரத்திற்கு தேவைப்படுகிறது. அதனை அலசி ஆராய்ந்து, விவாதித்து, விளக்கம் கொண்டு முடிவதற்குள் வேறொன்று. கையில் வைத்திருக்கும் முந்தையது அதற்குள் காலாவதியாகிவிடுகிறது. நாம் தொடர்ந்து செய்திக்குப் பின் செய்தியாக தொடர் வேட்டையில் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒற்றை வரி போதுமானதாக இருப்பதில்லை. ஒன்றுமற்ற விசயத்திற்கு ஐநூறு வார்த்தைகள் என்றால் ஒன்றை வரி போதுமானது அன்று. முதலில் தகவல். பின்பு அதன் உண்மைத்தன்மையை விவாதிப்பது. இறுதியில் இருக்கலாம் இல்லாமல் போகலாம் என்ற குழப்பம். முதல் சொன்ன தகவல் தன் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது. அதற்குள் ஐநூறு வார்த்தைகளும் முடிந்துவிடுகின்றன.  

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...