Thursday, August 23, 2018

சந்தி கிழவனின் பாக்கு வெட்டி


சந்தி கிழவனின் பாக்கு வெட்டி
பித்தன் பாக்கு வெட்டியைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். கட்டுரை காணாமல் போன பாக்கு வெட்டியைப் பற்றியது. பாக்கு வெட்டி கவிஞரின் உதவிக்காரனா அல்லது உண்மையிலேயே பாக்கு வெட்டி வெறும் இரும்பு கருவியா என தீர்க்கமாக சொல்லாமல் கட்டுரையை சிறிய அளவில் மாபெரும் சூட்சமமாக நீட்டுகிறார் பித்தன். வாசிக்கும் நமக்கு “பாக்கு வெட்டி” என்ற வார்த்தை விளையாட்டு படு ஜாலியாக இருக்கிறது. முதல் முறை வாசிக்கும் போது பாக்கு வெட்டி என்ற கருவியை மனதில் பதிய வைத்துக் கொண்டு வாசித்தால் கட்டுரை முழுவதும் பாக்கு வெட்டியின் பிரஸ்தாபம்  மேலிடுகிறது. வாசிப்பு மேலும் போக போக பாக்குவெட்டி  கருவியில் இருந்து ஒரு நபராக உருவெடுக்கிறது. கட்டுரை முடியும் போது “பாக்கு வெட்டி என்பது ’அது’ அல்ல ’அவன்’ என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவர் என்ன கட்டுரையில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாரே என சிரிப்புத்தான் வருகிறது. கட்டுரைக்குள் கவிதை.
 ’கழுதகை’ என்ற ஒரு சொல்லை இன்னொரு கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறார். இதனை வாசகசாலை நண்பர்கள் வட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தக் கேட்டிருக்கிறேன். இன்னொரு முறை இச்சொல் இலக்கிய வட்டத்தில் பயன்படுத்தப்படும் போது சற்று சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
பாக்கு வெட்டி என்றதும் எனக்கு எங்கள் ஊர் ’சந்தி கிழவன்’ பாக்குவெட்டித்தான் ஞாபகத்திற்கு வருகிறது. பாக்கை உரலில் போட்டு இடித்து வாயில் போட்டு குதப்பிக் கொண்டிருக்கும் கிழவிகளுக்கு மத்தியில் அதனை நறுக்கி வாயில் போட்டு மென்று தீர்க்க ஒரு இரும்பு கருவி என்றால் அவர் பணக்காரர்தான். 90களுக்கு முன்னர் வரை ஊர்பக்கங்களில் யார் பெரிய பணக்காரன் என கேட்டால் குறைந்தது இருபது எருமை மாடுகளும் பத்து பசு மாடுகளும் வைத்திருப்பவரே பணக்காரர் என்பார்கள். சந்தி கிழவனுக்கு அந்த பணக்காரன் என்ற அந்தஸ்தை நான் அப்போதே அவருடைய மாடுகளை கணக்கிட்டு கொடுத்துவிட்டேன். அதிலும் உயரமான சேலத்து எருதுகளை வைத்திருந்தால் அவரே அவ்வூரின் குறுநில மன்னன். எது எப்படி இருந்தாலும் சந்தி கிழவன் பெரிய செல்வந்தன் என்று நான் சொல்லக் காரணம் அவ்வளவு சொத்துக்களுடன் அவைகளின் கிரீடமாக உச்சியில் அந்த பாக்கு வெட்டி வீற்றிருந்ததினால்தான். கிழவனுக்கு பாக்கு வெட்டி மணிமகுடம்.  
அவர் வீட்டில் எது தொலைந்து போனாலும் அந்த பாக்கு வெட்டி தொலைந்து போகாது. காலையில் உழுதுவிட்டு பன்னிரெண்டு மணிக்கு வீடு சேர்ந்தால் அவர் கை துருதுருவென்று பாக்குவெட்டியையே நாடிசெல்லும். Cutting Player போன்று இரண்டு கால்களை கொண்டது அந்த பாக்கு வெட்டி. தலை உச்சியில் Cutting Player தன் வெட்டும் பணியை வைத்திருக்கும். பாக்கு வெட்டிக்கு தன் கால் இடுக்குகளில் வெட்டும் பணி. பாக்கை அதன் கால் இடுக்குகளில் வைத்து கைக்குள் வைத்து நன்கு ஒரு அழுத்து அழுத்த பாக்கு இரண்டு துண்டாகி விடும். கால்கள் இரண்டில் கத்தி போன்ற வடிவமைப்பு. பாக்கை துண்டாக்கிவிட்டு அயர்ச்சியே இல்லாமல் திரும்பவும் ஓய்வெடுக்க சென்று விடும். சந்தி கிழவன் பன்னிரெண்டு மணிக்கெல்லாம் மாடுகளை மேய்க்க கிளம்பிவிடுவார். எருமை மாடுகளும், பசுமாடுகளும் காலை பத்துமணிக்கே மேய்ச்சலுக்கு கிளம்பிவிடும். எருதுகள் நிலத்தை உழுதுவிட்டு தாமதமாகவே மேய்ச்சலுக்கு கிளம்பும். மாடுகளை மேய்த்து விட்டு நான்கு மணி அளவில் சந்தி கிழவன் வீடு திரும்புவார். இருக்கும் ஒன்று அல்லது இரண்டு மணி நேர இடைவெளியை மாடுகளை கட்ட கயிறுக்காக கற்றாழை நார் பின்னுவதில் செலவிடுவார். ஊர வைத்து அடித்து பின்னிய கற்றாழை நாரைக் கொண்டு மாடுகளுக்கு செய்யப்படும் கயிறுகள் மிக வலுவானவை. எளிதில் அறாது.
வீடு திரும்பும் சந்தி கிழவனுக்காக பாக்கு வெட்டி மீண்டும் ஒருமுறை சேவகம் செய்ய ஆயத்தமாகிவிடும். பாக்குவெட்டி சந்தி கிழவன் வீட்டில் இருந்த ஒரு அலங்கார பொருள். ஊரில் இருக்கும் எவரைவிடவும் சந்தி கிழவனே பெரிய பணக்காரர் என்பதை தன் இருப்பின் மூலம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருந்தது. தேக்காய் நாற் கயிற்றால் பின்னிய அந்த நாற்கட்டில் கூட அவ்வளவு பெரிய அந்தஸ்தை கிழவனாருக்கு கொடுக்கவில்லை. பாக்குவெட்டியின் இருப்பு அவ்வளவு பெரிய மதிப்பு அந்த வீட்டிற்கு. ஊரில் உள்ளவர்கள் விவசாய பாசனத்திற்கு ஆயில் என்ஜின், மின் மோட்டார் என முன்னேறி சென்றாலும் சந்தி கிழவனுக்கு அந்த கமலையை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. இரும்பாளான மிகப் பெரிய சால் எப்போதும் அவர் வீட்டு முன் இருக்கும். கிணற்றின் ஆழத்தில் இருந்து அவ்வளவு பெரிய சால் தண்ணீரை அள்ளிக் கொண்டு மேலே செல்வதை பார்க்கும் போது அலாதியாக இருக்கும். அந்த பக்கத்தில் மாடு குழியில் முன்னுக்கு இறங்குவதும் பின்னுக்கு ஏறுவதுமாக முக்காள் மணி நேரம் அந்த தண்ணீர் இறைக்கும் ஜாலம் தொடரும். உண்மையைச் சொல்வதானால் சந்தி கிழவனின் அந்தஸ்தை அந்த கமலையைக் கொண்டுதான் வரையறுக்க வேண்டும். என்மட்டில் அந்த சிறிய பாக்கு வெட்டி எப்போதும் ஒரு புராதனப் பொருளாகவே அவர் அருகில் அமர்ந்து கொண்டிருக்கும். வெற்றிலை ஒன்றை எடுத்து காம்பைக் கிள்ளி தொடையில் முன்னும் பின்னுமாக இரு இழு இழுத்து சுத்தம் செய்து கொள்வார். பின்பு அதற்கான இத்தியாதி திருப்பணிகள் தொடரும். வெட்டி வைத்த பாக்கோடும், சுண்ணாம்போடும், அரைகாத தூரத்திற்கு சுண்டி இழுக்கும் பட்டணம் புகையிலையோடும் வாய் சிவக்க சிவக்க அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அரைபடும்.
கிழவன் என்னிடம் அதிகம் பேசியது கிடையாது. ஒரே ஒரு முறைதான் என்னிடம் பேசியிருக்கிறார். தன் பொறாமை அனைத்தையும் கொட்டித்தீர்த்த விஷத்தின் வார்த்தைகள் அவை. தன்னை மாத்திரம் இருந்த இடத்திலேயே விட்டுவிட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் ஊராரின் மீது கொப்பளித்திருக்க வேண்டிய பொறாமையை சுடு சொல்லாக ஒரே முறை என் மீது பாய்ச்சினார். அனைத்தையும் அந்த பாக்கு வெட்டிநிமித்தமாக அதுவும் அது கொடுத்த செல்வந்தன் என்ற அந்தஸ்துக்காக சந்தி கிழவனாரின் சுடு சொல்லை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். அந்த ஒருமுறைதான் அவர் சிறுமைப்பட்டவராக என்முன் காணப்பட்டார். மற்ற எல்லா நேரங்களிலும் ராஜாவாக அமர்ந்து கொண்டு சாவகாசமாக பாக்குகளை வெட்டி வேண்டிய சம்பிரதாயங்களை செய்து நாக்கை சிவக்க வைத்திருந்த சந்தி கிழவன் என்னளவில் பெரிய செல்வந்ததான். அனைத்தும் அந்த பாக்கு வெட்டி தந்த அந்தஸ்த்து. பித்தனின் பாக்குவெட்டியை படிக்கும் போது எனோ மனம் சந்தி கிழவனின் பாக்குவெட்டியிடம் சென்றுவிட்டது.       

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...