Friday, March 30, 2018

அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள்



அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள்
அப்பாக்கள் அனைவரும் ஒரே மாதிரி இல்லை. ஒருவரில் இருந்து மற்றொருவர் மாறுபடுகிறார். தங்கள் மகன்களைக் கண்டிக்கும் போதும் சரி, அன்பு செலுத்தும் போதும் சரி அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. இதுவரை என்னுடைய வகுப்புகளில் மாணவர்கள் என்ற மட்டில் பல பையன்களைப் பார்த்து அன்பு செலுத்தியிருக்கிறேன், கோபப்பட்டிருக்கிறேன், கேலி செய்திருக்கிறேன், பயந்திருக்கிறேன். அனைத்து குணங்களைக் கொண்டவர்களின் கூட்டு மொத்தம் ஒரு வகுப்பறை. வேறுபட்ட குணாம்சங்களை எதிர்கொள்வது என்பது மிக சுவாரசியமான அனுபவமும் கூட. வருடா வருடம் புதிது புதிதாக இந்த தொடர் சுவாரசியம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே செல்லும். மானுடப் படைப்பு எவ்வளவு விசித்திரமானது. நம்மை நாமே நாம் பார்த்து அலுத்து போய்விட்டது. ஒரே சுற்றத்தாரைக் கண்டும் வேதனைக் கொண்டோம். வகுப்பறையோ ஒரு புதுமையின் உலகம்.
எனினும் வகுப்பறை ஒற்றை குணம் கொண்ட மாணவர்களின் கூட்டுத் தொகுதியாக இருக்க வேண்டும் என்பது நமது விருப்பம். உள்ளே நுழைந்தவுடன் அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு நம் முகத்தையே உற்று நோக்கி கவனிக்க வேண்டும். இதனைச் செய்து முடிக்க ஒரு சர்வாதிகார அடக்குமுறை அவசியப்படுகிறது. வகுப்பறைக்குள் சென்ற உடன் ஆசிரியனின் தோரணை சர்வாதிகாரியை போன்றுதான் மிடுக்குடன் இருக்கிறது. அதற்கு நேரிடையில் வித்தியாசப்பட்ட குணங்களைக் கொண்ட அறுவது எழுபது மாணவர்கள்.
அடக்குமுறை நடந்து கொண்டு இருக்கும் போதே எதிரிடையில் உள்ளுக்குள் கலகமும் வெடிக்க ஆரம்பிக்கிறது. ஒற்றை குணத்தை நோக்கி நிர்பந்திக்கும் போது அதன் பின்விளைவு கலகம். பலதரப்பட்ட குணாமசங்கள் வெளிவர துடிக்கிறது. அந்த ஐம்பது நிமிடங்கள் அவைகளை முடக்கிப் போடுகின்றன.  இவைகளின் கலவையை எதிர்கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரியர் யார் அல்லது எத்தகையவர். இந்த புள்ளியில் நாம் சிக்கித் தவிக்கிறோம். பலதரப்பட்ட பண்புகள் நம்மை நோக்கி வேகம் கொண்டு பாய்கின்றன. அவைகள் அனைத்திற்குமான ஒரு தாங்கும் கேடையமாக இருக்க நம்மால் முடிவதில்லை. வேற்றுமைகளை அழித்துவிட்டு இயந்திரம் போன்று மாணவர்கள் என்னை நோக்கி கவனிக்க வேண்டும். இது சாத்தியப்பட்டால் என்னிடம் இருக்கிற மற்றுமொறு பிரச்சனை ஒன்று இருக்கிறது: நான் செயலற்று போய் விடுவேன். மொழியற்று போய்விடுவேன்.
கூச்சல் மிகுந்த ஒரு கூட்டத்தை மீறிக் கொண்டு என் மொழி வீரியமடைய தயாராக இருக்கிறது. மௌனத்தில் ”சரி பாடம் நடத்து நான் கவனிக்கிறேன்” என கூறும் மாணவர்களின் அமைதியின் பிரேதத்தன்மையை என்னால் சகித்துக் கொள்ள முடிகிறதில்லை. வாய் திக்க ஆரம்பித்துவிடுகிறது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற கல்லூரிகளில் இது போன்ற நிலை உண்டு. அங்கே மாணவர்களின் அமைதி நிச்சயம் கவனிப்பதற்கானது கிடையாது.
என்னுடைய தற்போதைய மாணவர்கள் அதற்கு மாறானவர்கள். “நீ பேசு. எனக்கு ஒன்றும் புரியாது அதனால் நான் கவனிக்க மாட்டேன்” என்று சொல்லாமல் ஒருவருக்கு ஒருவர் பேச ஆரம்பித்துவிடுவார்கள். என் மொழியின் வீரியம் எவ்வளவு வலுப்படுகிறதோ அதற்கு இணையாக அவர்களின் சலனமும் வலுப்பெறுகிறது. அவர்கள் வித்தியாசமானவர்கள் வித்தியாசத்தை எதிர்கொள்ளும் திறன் தான் அதிகம் அவசியப்படும் ஒன்று.
அவர்களின் வித்தியாசப்பட்ட குண லட்சணங்கள் அனைத்தும் அவர்கள் அப்பாக்களின் வழியே வெளியாகும் ஒன்று என்பதை ஒரு தருணத்தில் கண்டுபிடித்தேன். இதனை அவர்களை அவர்கள் அப்பாக்களோடு பொருத்தி பார்க்காதவரை நமக்கு தெரியவராது. அவர்களை அவர்கள் அப்பாக்களோடு இணைத்துப் பார்க்கும் போது மானிடப்பிறவி எவ்வளவு சிறப்பானது என்பது ஆச்சரியமூட்டும் ஒன்றாகிவிடுகிறது.
அதற்கு வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஒன்று சேர இருநூறு மாணவர்களின் பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பு அது. அனைவருடனும் பேச வேண்டியவர்கள் தமிழ் பேராசிரியரும் ஆங்கிலப்பேராசிரியரும் தான். இவர்களின் முக்கியத்துவமே தனித்தன்மையானது. ஒரு மாணவரின் அப்பா என்னிடம் வந்து மிக இயல்பாக “என்ன? இவரு எப்படி?” என்றார். அவர் முகத்தைப் பார்க்கும் போதே அந்த பையனை விட அதிகம் ’கலாய்க்கும்’ அப்பா போன்று தோன்றினார். சில நிமிடங்களுக்குப் பின்னர் மிக சகஜமான மனிதர் என எனக்கு பட்டது. அதற்கு ஏற்றார் போன்று என் தாளத்தையும் மாற்றிக் கொண்டேன். “ரொம்ப பொறுப்பற்ற தன்மை. முன் பென்சில் உட்கார்ந்தால் தன்னால் பொறுப்பு கூடிவிடும்” என்றேன். அறுபது பேரும் முன் பென்சில் உட்கார முடியாதே. எதாவது ஒரு தீர்வு சொல்லியாக வேண்டுமே. அவரும் மிக இயல்பாக கேட்டுக் கொண்டு. “சரிங்க, அவரு முன் பென்ச்சில் உட்காரலைனா உங்க அப்பா ரொம்ப வருத்தப்படுவாருன்னு சொல்லுங்க. அப்புறம் கண்டிப்பா கேட்டுப்பாரு. என் மேல அவருக்கு தனி பிரியம், மரியாதை. அதனால எனக்காக அதைச் செய்வார்” என்றார்.
அவரிடம் இருந்த தகப்பனின் மேன்மை எனக்குள் மரியாதையை ஏற்படுத்தியது. ஒரு மகன் தன் தந்தையின் வருத்தத்தை தனக்கான தண்டனையாக எடுத்துக்கொள்வது மகனின் மேன்மையும் கூட. இது மிக அகம் சார்ந்த நிலையில் நடக்கும் தந்தை மகன் உரையாடல். வார்த்தைகள் தேவையில்லை. தந்தையின் சிறிய வருத்தமே மகனை திருத்த போதுமானது. அடி உதை தேவை இல்லை. முகம் வாடட்டும் மகன் அதனைப் பத்து பிரம்படிகளைக் காட்டிலும் பெரிய தண்டனையாக எடுத்துக் கொள்வான். இது தந்தை மகன் தோழமை உறவு.
இது மாத்திரமே அனைவருக்கும் பொதுவான ஒரு உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் இது மாறுபடும். கண்ணீரால் மகன்களைத் திருத்தும் அப்பாக்கள் உண்டு. பிரம்பைக் கொண்டு திருத்தும் அப்பாக்களும் உண்டு. மிக மிடுக்கோடு மகன்களோடு இடைபடும் அப்பாக்கள் உண்டு. அப்பாக்கள் வித்தியாசமானவர்கள். அவர்களின் தொடர்ச்சியான பையன்களும் வித்தியாசமானவர்கள். இந்த உறவுமுறையை ஆசிரியர்கள் பார்க்காதவரையில் குடும்பங்கள் உருவாக்கி அனுப்பும் பலதரப்பட்ட குணங்கள் நமக்கு புரியாத புதிராகிவிடுகிறது. இவைகள் அனைத்திற்குமான விசைதாங்கும் கேடயமாக இருக்கும் ஆசிரியன் நிலை மிகவும் நுட்பமானது. சற்று தவறினாலும் குணங்களின் வேறுப்பாடு உடையக்கூடும். கலகம் அதிகம் வெடிக்கக்கூடும்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...