Saturday, March 31, 2018

கவித்துவத்தின் உச்சங்கள்


கவித்துவத்தின் உச்சங்கள்
தந்தை மகன் உறவைப் பற்றி கட்டுரை எழுதப்போக அது “Prodigal Son” உவமைக் கதையை நினைவுப்படுத்தியது. அதைப் பற்றின நல்ல படம் இருக்குமா என தேட Rembrandtன் இந்த ஓவியம் கிடைத்தது. இந்த ஓவியரைப் பற்றி எங்களுடைய பேராசிரியர் அதிகம் பேசியிருக்கிறார். பசுமாட்டிற்கு பிடில் வாசிப்பது போன்று அவர் பேசுவது அப்போதெல்லாம் இருக்கும். ஒன்றும் விளங்காது. இப்போது மிகவும் மானசீகமான ஒரு கதைக்கான Rembrandt ன் ஓவியம் எனக்கு ஓவியத்தைப் பற்றின பெரிய திறப்பை ஏற்படுத்திவிட்டது.
ஊதாரி மகன் கதை இதுதான்; அப்பாவிடம் இருந்து சொத்தை பாகம் போட்டுக் கொண்டு தூர தேசம் செல்கிறான் இளைய மகன். காமக் களியாட்டு என தகாத வழிகளில் பணத்தை செலவழிக்கிறான். பணம் மொத்தம் காலியாகிவிடுகிறது. ஊரில் பஞ்சம் வேறு ஏற்பட்டுவிடுகிறது. ஊரில் உள்ள குடியானவன் ஒருவனிடம் தஞ்சம் புகுந்து பன்றி மேய்க்கும் தொழில் செய்கிறான். பன்றி மேய்க்கும் போது பசிக்கு பன்றியின் உணவை சாப்பிடப் போக பன்றியின் உணவை அவனிடம் இருந்து தட்டிப் பறித்துவிடுகிறார்கள். இப்போது அவனது அப்பாவின் நினைவு வருகிறது. அப்பாவின் வீட்டில் வேலைக்காரர்களுக்கே நல்ல உணவு இருக்கும் போது தான் இங்கு பன்றியின் உணவைக் கூட சாப்பிட முடியாமல் இருக்கிறேனே என்று மனம் வருந்தி வீட்டிற்கு நடையைக் கட்டுகிறான். அவனுடைய அப்பாவோ அவன் சென்ற நாள் முதல் அவன் வீடு திரும்பும் இந்நாள் வரை அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மகன் தூரத்தில் வருவதைக் கண்டு ஓடிச் சென்று அவனை அரவணைத்துக் கொள்கிறார். அப்பாவும் மகனும் சந்திக்கும் தருணம்தான் இந்த ஓவியத்தின் காட்சி. மகனை வரவேற்கும் படமாகத்தான் முதலில் நாம் இந்த ஓவியத்தை பார்ப்போம்.  
ஓவியத்திற்குள் சூட்சமங்கள் பல உள்ளன. அதனை தேர்ச்சி பெற்ற ரசனையாளர் ஒருவர் அங்கம் அங்கமாக விளக்கும் போது வியப்பு மேலிடுகின்றது. முதலில் இந்த ஓவியத்தை வெறும் படமாக பார்க்க முயன்றேன். ஓவியத்தைப் பற்றி The Family Project.com ல் படிக்கும் போது எத்தனை புதிர்களை இந்த ஓவியம் தன்னகத்தே கொண்டுள்ளது என வியந்தேன். முதலாவது மிக அதிக வெளிச்சம் அப்பா மற்றும் மூத்த மகன் முகங்களில் செலுத்தப்பட்டிருக்கிறது. ஓவியத்தின் பின்புறமோ மிகவும் இருள் கவ்வியதாக இருக்கிறது. அப்பாவின் முகத்தின் மீது செலுத்தப்பட்ட வெளிச்சம் நற்கருணையை காட்டுவதற்கு. மூத்த மகன் (ஊதாரி மகனின் அண்ணன்) முதத்தில் இருக்கும் வெளிச்சம் அவனது பொறாமையக் காட்டுவதற்கு.

அப்பா தன் கைகளை அகல விரித்து தன் மனம் திருந்திய மகனை அரவணைக்கிறார். அந்தக் கைகள் ஒன்று ஆணின் கையாகவும் மட்றொன்று பெண்ணின் கையாகவும் இருக்கின்றன. இது தந்தைக்குள் இருக்கும் தாய்மை உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அதே போன்று மகனின் கால்களில் ஒரு பாதம் செருப்பு இல்லாமல் காயங்களால் நிறைந்திருக்கிறது. மற்றொன்றில் செருப்பு இருக்கிறது. வெறும் கால்கள் பலம் இழந்த நிலை அதனை தாய்மை அரவணைக்கிறது. பலம் இழந்த நிலையை இன்னும் பலம் கூட்ட மற்றொரு காலில் செருப்பு அணிந்த பக்கம் அப்பாவின் கை ஒரு ஆணின் கையாக அரவணைக்கிறது. இது இழந்த பலத்தை மீட்டெடுத்து அதிக பலம் பெறச்செய்வதற்கு.
ஓவியம் என்பது வெறும் படமாக இருக்கிறதில்லை. ஒரு கவிதையை வாசித்து பாராட்ட நமக்கு எப்படி டியூட்டர் தேவைப்படுகிறாரோ அதே போன்று ஓவியத்தை விளக்கவும் ஒரு interpreter அவசியப்படுகிறார். என் பேராசிரியர் வாசித்த பிடிலுக்கு இப்போது அர்த்தம் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன்.  வீடுதிரும்பும் ஊதாரி மகன் – கவித்துவத்தின் உச்சம்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...