Saturday, July 15, 2017

ஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு


சாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம். இதனை அதிகம் ஒழுக்கத்தோடு தொடர்புப்படுத்தி பார்த்துவிட்டோம். ஐந்து பேர் மாத்திரம் சாராயம் குடித்துவிட்டு மற்ற ஆண்கள் அனைவருமே யோக்கியர்களாக இருந்தால் அந்த ஐந்து பேரை ஒழுக்கத்தின் சாட்டையால் தண்டித்துவிடலாம். இப்போது பிரச்சனை ஐந்து பேர் யோக்கியர்களாகவும் மற்ற அனைத்து கிராமத்தார்கள் குடிகாரர்களாகவும் இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அந்த ஐந்து பேரைக் கொண்ட குழு இயல்பானதா? அல்லது ஊர் முழுக்க குடிகாரர்களாக இருப்பது இயல்பானதா? என்பதும் கேள்வியே.
இந்தக் கேள்வி என் சிறுவயதுமுதல் கேள்வியாக இல்லாமல் ஒருவித குழப்பமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த ஐந்து பேர் மாத்திரம் ஏன் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதுவும் ஆச்சரியமூட்டுகிறது. அவ்வளவு சுய கட்டுப்பாடு கொண்டவர்களா அந்த ஐந்து பேர்கள்? இமயம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் “ஏன் எங்கள் தெரு பெண்களுக்கு மாத்திரம் பேய் பிடிக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்பார். அதே கேள்வியை நானும் “ஏன் அந்த ஐந்து பேரைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் குடிகாரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.
இன்று போரும் வாழ்வும் படித்துக் கொண்டிருக்கும் போது அதற்கான விடை கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க அஃக்மார்க் பதில் என்று இல்லாமல் இருந்தாலும் எதோ ஒருவித்ததில் ஏற்புடையதாக இருந்தது. மனதிற்குள் சரியான பதில்தான் என்பது போன்று தோன்றியது. எனினும் இதனை பொதுவெளிக்கான பதில் என்று கொள்ள முடியாது.
இளவரசர் ஆன்ருவும், கோமகன் பீயரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள் (முக்கிய பாத்திரங்கள்). பீயர் அடிமைகளை விடுதலையாக்க வேண்டும் என்றும் அதிகம் வேலைபளு அவர்கள் மீது சுமத்தக் கூடாது என்றும் சொல்லுகிறார். பீயருக்கு முழு அடிமைகளும் உழைக்கும் மக்களும் அவர்கள் துன்பத்தில் இருந்து விடுதலையாக வேண்டும் என்று ஆசைபடுகிறார். ஆன்ருவோ அதற்கு எதிரிடையான ஒரு கருத்தை முன்வைக்கிறார். ஆன்ருவின் கண்ணோட்டத்தில் அடிமைகள், உழைப்பாளிகள் என்று வேறுபிரித்து அவர்கள் பாவப்பட்டவர்கள் என்று பார்க்கும் புதியதொரு பார்வை கிடையாது. அவருடைய வாழ்க்கையும் இன்னும் நாவலில் சிறிது நேரத்தில் முடிவடையப்போகிறது. அவருடையக் கருத்து மிக முக்கியமானதாகவும் நமக்குத் தோன்றுகிறது.
உழைக்கும் ஒரு விவசாயிக்கு அவனுடைய இன்பமே அவனது உடலில் இருக்கும் மிருக பலம். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் கடுமையான வேலையில் ஈடுபடுகிறானோ அது அவனுக்கு இன்பத்தை அளிக்கிறது. அவனுக்கு எதிரிடையில் யோசிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அவர்களுக்கு யோசிப்பது ஒன்றே இன்பம். நாள் முழுக்கவும் அவர்களால் யோசித்துக் கொண்டே இருக்க முடியும். அதில் இருந்து அவர்கள் ஏதோ ஒரு திட்டத்தையோ வேலையையோ அறுவடை செய்துவிடுகிறார்கள். இதே செயலை விவசாயிடம் விட்டால் அவரால் ஒரு நிமிடம் கூட தன் மண்டையை யோசனைக்கு கொடுக்கமாட்டார். யோசனைக்காக அவருடைய மனது பக்குவப்படவில்லை. மாறாக அவர் முழுக்க முழுக்க தன் ஆற்றல் அனைத்தையும் தன் உடல் உழைப்பிற்கே கொடுத்துவிடுகிறார். மனதிற்கான வேலை என்று வரும் போது அவரால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. நாள் முழுவதும் உழைத்துவிட்டு இருக்கும் மிச்ச நேரம் யோசனைக்கனதாக மாறிவிடுகிறது. ஒருவேளை அந்த இடைவெளியில் ஒரு வெற்றிடம் கூட ஏற்பட்டிருக்கலாம். அந்த வெற்றிடத்திற்கான ஒரு நிரப்புதல் அவருக்கு எதுவும் இல்லாமல் போகிறது. இந்த இடைவெளியும் மிகக் குறைந்த நேரத்திலானது. அந்த குறைந்த நேரத்தை அவர் யோசனைக்கான நேரமாக மாற்றாமல் யோசிக்கும் தன் மனதை மந்தமடைய செய்யவேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே அவர் மதுவைக் கொண்டு தன் நினைவைச் செயலிழக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.
இதுவே அதிகம் யோசிக்கும் கூட்டத்திற்கு அவசியம் அற்றதாகப் போய்விடுகிறது காரணம் அவர்கள் தக்களுடைய இன்பத்தை யோசனையில் கழித்து விடுகிறார்கள். தத்துவவாதிகள்தான் இதில் கைதேர்ந்தவர்கள் போலும். அவர்கள் மனது இருபத்து நான்கு மணி நேரத்திற்கும் யோசனைக்கே பழக்கப்பட்டிருக்கிறது.
இதில் இந்த விவசாயிகள் மாத்திரம் மாட்டிக்கொள்கிறார்கள். ஒழுக்கம் என்ற ஒற்றை கோடு அவர்களை குடிகாரர்கள் என்று ஒழுக்கமின்மையின் பக்கம் தள்ளிவிடுகிறது. சாராயம் இவர்களுக்கு இன்றியமையாத வஸ்துவாக மாறிவிடுகிறது. இது வெறுமனே போதைக்கானது கிடையாது. இது முற்று முடிய தன் மூளையை அந்த யோசனை என்னும் அச்சுறுத்தும் அசுரனுக்கு அடிமையாக்காமல் இருப்பதற்காகவே. இவர்கள் கால் மணிநேரமாவது தங்கள் மண்டையை யோசனைக்கு கொடுத்தாலும் விளைவு தற்கொலையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இவர்கள் யோசிக்க திரணற்றவர்கள். அதற்கு மாறாக தங்கள் உடல் முழுவதையும் உழைப்பிற்காக பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதற்கு நேரிடையில் நகரம் சார் ஆண்கள் தங்கள் மனதை யோசனைக்காக தயார்படுத்தி வைத்திருக்கின்றனர். யோசிப்பது ஒன்றுதான் நகரத்தாரின் ஒரே வேலை. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு உடல் உறுப்பு மூளை. கிராமத்தானுக்கு முழு உடலும் உழைப்பிற்கான மூலதனம் அதில் மூளை  மாத்திரம் செயலற்று போகிறது. நகரத்தார்களுக்கோ முழு உடலைத்தவிர மூளை மாத்திரமே உழைப்பிற்கான முலதனமாக இருக்கிறது.
இதில் நகரத்தானை கிராமத்தான் போன்று கடின உழைப்பில் ஆழ்த்தினால் அவன் இறந்துவிடுவான். கிராமத்தானை நகரத்தான் போன்று எதையும் செய்யாமல் சும்மா யோசிக்க விட்டால் அவனும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவான். அப்படி எதுவும் அசம்பாவிதம் நிகழாவிட்டாலும் அவன் உடல் ஊதி பருமனாகிவிடுவான். இந்த இரண்டு துருவ வாழ்க்கையை நம்மால் மாற்றியமைக்கவே முடியாதுபோலும்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...