Thursday, May 25, 2017

அறிதலே அதிகாரத்தின் ஆரம்பம்


ஒரு பொருளை அதன் பௌதிக நிலையில் வைத்து அதனை விளங்கிக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறாது. முதலில் அதனைப் பார்க்கிறோம், பின்பு அதனை மனதில் இருத்திக் கொள்கிறோம். இவ்வளவுக்கும் பிறகு அதனைக் கற்றல் என்ற அவசியம் ஏன் தேவைப்படுகிறது? ஒரு பொருளை, அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பார்த்து அதனை மனதில் பதிய வைத்துக் கொண்டால் மாத்திரம் போதாதா? அதற்கும் மேல் சென்று ஏன் அதனை ஒரு பெயர் இட்டு படிக்கிறோம். இப்பிரபஞ்ச வெளியில் இருக்கும் அனைத்தையும் நாம் படித்தாக வேண்டுமா? படித்தல் மூலமாகத்தான் நாம் இவ்வுலகத்தையே அறிகிறோமோ? அப்படியெனின் அந்த அறிதல் என்பதுதான் என்ன?
ஆதி மனிதன் பொருட்களை அப்படியே பார்த்துவிட்டு அமைதியாக பத்தோடு பதினொன்றாக அவைகளுடன் வாழ்ந்திருக்க வேண்டியதுதானே. இதில் அவனுக்கு மாத்திரம் ஏன் ”இது அது” ”அது இது” என்று பெயர் இட்டு படிக்க வேண்டும். மிருகங்களும் மற்ற ஜீவராசிகளும் இதனை செய்கின்றனவா? அவைகள் இதனை செய்யாததினால் அவைகள் மனிதர்களைவிட மேன்மையானவர்களோ? அல்லது சிலாக்கியம் செய்தவர்களோ? அப்படி எனில் இந்த கற்றலுக்கும் அந்த ஆறாவது அறிவுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதோ என்னவோ? எது எப்படியாயினும் அந்த ஆறாவது மேட்டர் தான் மிக முக்கியம்.
இந்த ஒரு முக்கியமான ஆறாவது விசயத்தினால் மனிதன் முக்கியமானவனாக அல்லது கீழ்மையானவனாக ஆகிறானா என்பதெல்லாம் பெரிதல்ல. அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரு படி மேலே சென்று, பார்த்தல், புரிந்துகொள்ளுதல் என்று இன்னும் அதிகப்படியாக கற்றல் என்பது வரும்போது அதைப் பற்றி நாம் சற்று யோசித்துத் தான் ஆக வேண்டும். தத்துவவாதிகள் இதனை கருத்தில் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு என்ன நேராக இருக்கும் ஒன்றை தலைகீழாக்கித்தான் பார்ப்பேன் என்று அடம்பிடிக்கும் ஆசாமிகள். “ஏன் அது நேராக இருக்க வேண்டும். அதனை நேர் என்று யார் சொன்னது” என்று விதண்டாவாதம் செய்வார்கள். அதில் கூட பாருங்கள் அவர்கள் ஒன்றை தலைகீழாக்கிப் பார்ப்பது கூட ஒரு கற்றலின் வழிமுறைதான். ஏன் என்று கேட்கிறீர்களா?
காலம் முழுவதும் ஒரு பொருளை ”இதுதான் அது” என்று ஒரு பாடத்தை நமக்கு புகட்டிவிட்டார்கள். நாமும் கூட “ஆமாம் ஆமாம். அதுதான் இது” என்று யோசிக்காமல் அதனை பார்த்து புரிந்துக் கேள்வி கேட்காமல் புரிந்து கொண்டுவிட்டோம். அது அந்த ஆறாவது மேட்டருக்கு மிகக் கீழாக இருக்கும் ஒரு செயல்பாடு. இங்குதான் தத்துவவாதிகள் ”அதுதான் இது” என்பதை ”அது ஏன் அப்படி?” என்று சித்திரத்தை தலைகீழாக்கிவிடுகிறார்கள். தலையை காலாகவும், காலை தலையாகவும் படித்தாக வேண்டும். வேறு வழியில்லை. அவர்களால் முடிந்த வரையில் ஒரு கற்றலின் அனுபவத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள். வழிமுறை முடிந்தவுடன் சித்திரத்தை மீண்டும் அதன் சுய நிலைக்கு திரும்பக் கொண்டுவந்துவிட வேண்டும். இல்லையெனில் விளைவு விபரீதம் ஆகிவிடும்.
ஆதி மனிதன் முதற்கொண்டு அந்த ஆறாவது செயல்பாடு மிகவும் நமக்கு அவசியப்படுகிறது. அதனை மிகக் கூர்மையாகப் பயன்படுத்துகிறவன் கல்விமான், பெரியவன், புத்திசாலி, அரசன், ஞானி, அசடன் மற்றெல்லாம். அனைத்தும் அந்த ஆறாவதுக்கு கிடைக்கும் வெகுமதிகள். யார் அதனை அதிகம் பயன்படுத்தாமல் இருக்கிறார்களோ அவர்கள் அடிமைகள். பயன்படுத்துகிறவர்கள் ஆண்டைகள். அடிமைகள் அடிமைகளாக இருப்பதும், ஆண்டைகள் ஆண்டைகளாக இருப்பதும் அந்த ஆறாவதாக இருக்கிற சூட்சமத்தில் இருக்கிறது.
இந்தக் கற்றல் முறையில்தான் அதிகாரமும் அடங்கியிருக்கிறது என சொல்லலாம். முதல் மனிதன் தன் பிரக்ஞை தெளிந்து பார்த்த போது தன் ஆள்காட்டி விரலை நீட்டி ”நீதான் அது அதுதான் நீ” என்று கற்க ஆரம்பித்தான். அன்று முதல் பூமி அவன் வசம் ஆகிவிட்டது. குழந்தைகளை வளரும் பருவத்தில் அந்த விரலைக் கொண்டுதானே எழுதக் கற்றுக் கொடுக்கிறோம். அதுதான் கற்றல் என்பது. கற்றலே அதிகாரத்தின் ஆரம்பம். கற்காதவரை அவன் ஒரு மண்டூகம், மங்கினி.
இப்போது கேள்வி என்னவெனில் கற்காத மனிதன் எவன்? இந்த உலகத்தில் ஒருவன் கற்காமல் இருந்துவிட முடியுமா? ஏன் என்று கேள்வி கேட்காமல் வாழ்ந்துவிடும் ஒரு மனிதனை நம்மால் பார்த்துவிட முடியுமா? ஞானத்தின் ஊற்றுகண் திறக்காத ஒரு மனிதன் என்று இந்த பூமியில் வாழ்ந்துவிட முடியுமா? நிச்சயமாக இருக்க முடியாது என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். அபிப்பிராயம் கிடக்கிறது. ஒரு ரூபாய் கருவேப்பிலைக்கு தேறுமா. இருந்தாலும் அதிகாரமாகச் சொன்னால் சண்டைக்கு வருவார்களே. இருக்கட்டும் அது என்னுடைய அப்பிப்பிராயமாகவே இருந்துவிட்டு போகட்டும்… டும்.
எது எப்படியோ நாம் விசயங்களைக் கற்கிறோம். குண்டூசி முதல் இராட்சத இயந்திரம் வரை நாம் கற்றுக் கொண்டே இருக்கிறோம். என் கேள்வி எல்லாம் அந்த நடுக் காட்டில் சுற்றித்திரிகிறானே அந்த நாடோடி அவன் என்ன மண்டூகமா அல்லது மங்கினியா? அவனுக்கும் ஞானம் என்ற அகக் கண் திறந்து விசயங்களைக் கற்காமலா இருந்து கொண்டு இருக்கிறது. அப்படியே அவன் கற்றுக் கொண்டிருக்கிறவனாக இருப்பானானால் அவன் நம்மில் இருந்து எப்படி வேறுபட்டு விசேஷமானவனாகிறான். கற்றல் என்ற ஒரு வழிமுறையை நாம் மையப்படுத்தி அதற்குள் அந்த ஆறாவது மேட்டரை வற்புறுத்தி உள்ளே திணிக்கிறோம் என்ற ஒரு பிரம்மை ஏற்படுகிறது.

எது எப்படியே அந்த ஆறாவது ஒன்றிற்காக நாம் கற்றுத்தான்தீர வேண்டும். அது மையப்படுத்தப்பட்ட அறிவாக இருந்தால் என்ன இயற்கையின் எழிலில் படிக்கும் பாடமாக இருந்தால் என்ன? முடிவு அதிகாரம் அதுதான் முக்கியம். கற்கிறவர்களுக்கு செல்கிற இடமெல்லாம் அதிகாரம்.    

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...