Saturday, May 6, 2017

நியூட்டனியத் தருணம்


நியூட்டன் பலமுறை அந்த மரத்தடிக்கு சென்றிருக்கலாம். அங்கு பழங்கள் விழுவது அவரது எண்ணங்களை ஈர்க்காமல் இருந்திருக்கலாம். அவருடைய கவனமும் அவைகள் மீது செலுத்தப்படாமல் இருந்திருக்கலாம். அந்த ஒரு நாள் மாத்திரம் சூழ்நிலை முற்றிலும் ஒருமித்து ஒரு மாபெரும் புதிய கண்டுபிடிப்பிற்கான தருணமாக அமைந்துவிட்டது. அது ஒரு கண்டுபிடிப்பிற்கானத் தருணம். இப்படித்தான் சொல்லியாக வேண்டும். அந்த ஒரு பொறிதட்டல்தான் ஒரு யுகத்திற்கான மாபெரும் கண்டுபிடிப்பை சாத்தியமாக்கியது. அதனையே மக்கள் நம்பவும் ஆரம்பித்தனர். இது போன்று ஒரு தருணத்தை என்னுடைய ஆய்வேட்டை பிரிண்ட் எடுத்து பைண்டிங் செய்ய பெல்ஸ் ரோட்டில் காம்லக்ஸ் ஒன்றிற்கு சென்றபோது ஏற்பட்டது. அது ஒரு நியூட்டனியத் தருணம் என்று சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் அது ஒரு அகவிழி திறந்தத் தருணம் என்றாவது சொல்லலாம்.
படபடப்பில் காத்துக் கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்சம் போனால் இரத்த நாளங்கள் அனைத்தும் வெடித்துவிடும் நிலையில் இருந்தது. நல்ல வேலை வெளியே ட்ரான்ஸ்ஃபார்மரின் ஒயர் வெடித்து எரிய ஆரம்பித்துவிட்டது. கரண்ட் நின்றுவிட்டது. அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டது. படபடப்பு அடங்கி அமைதியானேன். சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த காம்ப்ளக்ஸில் உள்ள கடைகளின் அமைப்பைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். ஆரம்ப காலங்களில் நாங்கள் நகல் எடுக்க செல்வது ஒரு முக்கியமான நகலகம். அந்த கடைக்குள் செல்லும் போது வெள்ளை சட்டை அணிந்த முதலாளி கடையின் பிரதானமான ஒரு இடத்தில் உட்கார்ந்துக் கொண்டிருப்பார். ஸ்டேப்லரை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்குக் கூட வேலையாட்கள் தேவைப்படுவார்கள். அவர் பணத்தை மாத்திரமே தொட முற்படுவார். மற்றபடி உற்பத்தியில் தலையிடவே மாட்டார். எனினும் கழுகின் கண்களைக் கொண்டு வேலைகள் எப்படி நடக்கின்றன என்று கூர்ந்து நோட்டமிடுவார். வேலைகள் நன்றாக நடக்கும். ஒருவேளை அவருடைய அந்தக் கழுகுப் பார்வை வேலையாட்கள் மீது இல்லையென்றால் வேலைகள் எல்லாம் முடக்கப்பட்டுவிடும் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய அந்த பார்வையிடும் திரன்தான் அந்த நகலகத்தின் உற்பத்தி செயல்பாட்டிற்கான இயங்கு சக்தி.
ஆனால் இப்போது சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. மாணவர்கள் அனைவரும் படைதிரண்டு செல்லும் ஒரு நகலகம் இளம் முதலாளி ஒருவரின் கடையை நோக்கிதான். இந்தக் கடையை நாம் முன்பு கூறிய கடையோடு ஒப்பிடலாம். கடையில் இருக்கும் பொருட்களுக்கு உடைமைக்கான உரிமை மாத்திரம் இருப்பதினால் அவரை முதலாளி என்று சொல்லிவிட முடியுமா என்பது அப்போது எனக்குத் தோன்றியது. முதலாளி என்பது ஒரு பொருளின் மீதான ஒருவரின் உரிமை என்பது மாத்திரம் கிடையாது என்பதை இந்த புதியக் கடைக்கு போகும் போது நமக்கு ஏற்படும். எனினும் அப்படிப்பட்ட ஒரு எண்ணம் மற்ற நேரங்களில் ஏற்பட்டதேக் கிடையாது. மூன்று நாட்களுக்கு முன்பு உண்டான அந்த தருணம் தான் அதிகம் முக்கியமானது. அந்தத் தருணத்தில் எனக்குள் உண்டான அந்த ஒரு அகவிழித் திறபுதான் மிக முக்கியமான ஒரு நியூடனியத் தருணம் என்று சொல்லிக் கொள்வேன். இந்த வாலிப முதலாளிக்கு தன் கடையில் கல்லாப் பெட்டி என்று ஒன்று கிடையாது. கல்லாப் பெட்டிக்குப் பதில் உற்பத்தியும் உழைப்பும்தான் அந்த கடையை இயக்கும் காரணி. அவர் முதலாளி என்று சொன்னாலும் அவருடைய நிலை கடையில் ஒரு முதலாளி என்றும் சொல்லமுடியாது. தன் கடையில் வேலை அனைத்தையும் செய்து முடிக்க ஆட்களை அமர்த்தியிருக்கிறார். எனினும் உழைப்பிற்கான முதல் மூலதனம் தன்னுடைய உழைப்புதான். இங்கு நம்முடைய கண்களுக்கு தெரிவது பணப்பெட்டியும் அதன் மீது இருக்கும் முதலாளியின் அதிகாரமும் கிடையாது. மாறாக முதலாளியின் முதல் மூலதனமான அவருடைய உழைப்பு. கொடுக்கப்படும் பணம் மேஜை டிராயரில் அலட்சியமாக வீசியெறியப்படுகிறது. வேலை சமச்சீர் விகிதத்தில் பகிரப்படுகிறது.
            இந்த இரண்டு கடைகளைத் தவிர அங்கே பலக் கடைகள் இருக்கின்றன. சிறு சிறு கடைகள். எனினும் இவர்கள் இரண்டுபேர்களிடம் எதிர்ப்பார்க்கும் அதே உற்பத்தையையும் அதன் தரத்தையும் மற்றவர்களும் தருவார்கள். இருந்தாலும் இவர்கள் இரண்டுபேர்களுடையக் கடைகளுக்குத்தான் கிராக்கி அதிகம். இது சற்று நூதனமாக இருக்கிறது. நமக்குத் தேவை நாம் எதிர்ப்பார்க்கும் உற்பத்திப் பொருள். அதனை இவர்கள் இரண்டுபேரைக் காட்டிலும் மற்ற சிறு கடைக்காரர்கள் மிகத் தரமாகவே செய்து தருவார்கள். இருந்தாலும் நம்முடைய எதிர்ப்பார்ப்பு இந்த இரண்டு கடைகள் மாத்திரமே. அதற்காக இவர்கள் இரண்டுபேரும் மற்றவர்களுடையை உற்பத்தித் திரனை பாதிக்கிறார்கள் அல்லது இல்லாமல் செய்துவிடுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களும் தேவைபடுகிறார்கள். இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் நேரடியாக செல்வது இந்த இரண்டு கடைகளுக்கு மாத்திரம்தான்.
            அவர்கள் தங்கள் கடையை காட்சிப்படுத்தும் பாங்குதான் மிக முக்கியமானது. அதிலும் நாம் இரண்டாவது சொன்ன முதலாளியின் கடையின் காட்சிதான் நம்மை அவர் கடையின் பக்கம் அதிகம் ஈர்க்கிறது. இப்போது இவருடைய கடை, முன்பு கூறிய கடைக்காரருடைய வியாபாரத்தை நலிவுறச்செய்யும் அளவிற்கு தன்னுடைய வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார். கடைக்குச் செல்பவர்களுக்கு ஒன்றும் பெரிதாக மரியாதையெல்லாம் கிடையாது. அதே பழையக் கடைக்குச் சென்றால் வாங்க சார் என்ன வேணும் என்பதுதான் அவர்கள் முதல் கேள்வி. அந்த ’சார்’ என்ற மரியாதை மட்டில்லாமல் அந்தக் கடையில் கிடைக்கும். ஆனால் நம்முடைய வாலிபரின் கடையில் நாம் அதை எதிர்ப்பார்க்கவே முடியாது. நீங்கள் ஒரு பத்து நிமிடம் கடையில் உட்கார்ந்தால் “அண்ணே இந்த பேப்பர கீழ நம்மக் கடையில கொடுத்திடுங்க”. அதில் ரெக்வெஸ்ட் கூட கிடையாது. கட்டளை. இருந்தாலும் நீங்கள் அங்குதான் செல்வீர்கள்.

            இந்த இரண்டு கடைகளுக்கும் இடையேயான வித்தியாசம்தான் என்னை அதிகம் யோசிக்க வைத்தது. நேரமும் போக வேண்டுமல்லவா. இதுபோன்றுதான் யோசித்தாக வேண்டும். வேறு வழியேயில்லை. பின்புதான் யோசித்தேன் காரணமே இல்லாமல் ஏன் இந்தக் கருத்தாக்கம் இந்த காம்ப்ளக்ஸ் மீது எனக்கு ஏற்பட்டது என்று. இருந்தாலும் அது யோசிப்பதற்கானத் தருணம் அதுவும் நியூடனியத் தருணம். நானும் பலமுறை அந்தக் கடைக்குச் சென்றிருக்கிறேன். இருந்தாலும் இப்படிப்பட்ட தருணம் நம்மைக் கேட்காமலேயே அமைந்துவிடுகின்றன. இரண்டு நாட்கள் கழித்து காரல் மார்க்ஸின் 200வது பிறந்த நாள். அப்பாடா இதற்குள் இருநூறு ஆண்டுகள் ஓடிவிட்டனவா. முகநூலில் அவரைப் பற்றி பல பகடிச் செய்திகள். இருந்தாலும் மார்க்சின் ஆவி இவர்களை விடப்போவதில்லை. இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் அது இவர்களைப் (நம்மை) பின் தொடரும். 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...