Saturday, May 6, 2017

திருநெல்வேலியும், திருவல்லிக்கேணியும்


திருவல்லிக்கேணியில் ஒரு உயர்தர சைவ ஓட்டலில் அமர்ந்து கொண்டு புரட்சியைப் பற்றியும் பசியைப் பற்றியும் ஒருவன் சிந்தித்தால் அது எப்படிப்பட்ட புரட்சி சிந்தனையாக இருக்கும். பசியைப் பற்றி பேசுவதென்றால் பசியில் வாடும் மக்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் உள்ளம் பதபதைக்க வேண்டும். அதன் பின்பு பேனா முனை கூர்மையாக வேண்டும். ஆனாலும் பேனா முனை அதன் குமிழியில் இருக்கும் மையை இது போன்ற சைவ ஓட்டல்களில் உடகார்ந்தால்தான் மையை சீராக வெளியேற்றுவேன் என்று அடம் பிடிக்கிறது. உண்மையில் அது பேனாவின் பிடிவாதம் கிடையாது, சிந்தனையின் பிடிவாதம். என்னை நானே குற்றப்படுத்திக் கொள்ள முடியாது அல்லவா? அதனால்தான் முழுப் பழியையும் அந்த அய்யோப் பாவம் பேனாவின் மீது போட்டுவிட்டேன். எனக்காக அந்த உயிர் அற்ற ஜடம் பழி ஏற்றுக் கொண்டால் அதற்கு மனம் வலிக்கவா போகிறது. வீச்சரிவாளை விட தனக்குத்தான் சக்தி அதிகம் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார் அல்லவா? இதையும் சற்று சுமந்து திரியட்டும். அழட்டும் நன்றாக அழட்டும்.

சொல்ல வந்ததை மறந்துவிட்டேனே. என்ன சொல்ல வந்தேன்? எதையுமே சொல்ல ஆரம்பிக்கவில்லை இதில் சொல்லவந்ததைச் சொல்ல என்ன இருக்கிறது. வெறும் எழுத்துக்காக எதையாவது எழுதுகிறேன் பேர்வழி என்று கையை வைத்தால் இதுதான் விளைவு. நினைவிற்கு வந்துவிட்டது. அதுதான் எற்கனவே சொன்னேனே பசி, புரட்சி இத்தியாதி சிந்தனைகள். அவைகள் இதுபோன்ற சொகுசான இடங்களில் மாத்திரமே உதயமாகின்றன. ஏழ்மையைப் பற்றி பேச ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் ஏற்பாடு செய்து சொகுசாக ஒரு சிறு கதை எழுதினால் என்ன? நம்ம ஊர் சிந்தனையாளர்களுக்கு சைவ உணவகமே அதிகம். மற்றவர்கள் சூரிட்ச், சுவிட்சர்லாந்து என்று மேற்குலகின் சொர்க்கபுரிகளுக்கு செல்லட்டும். நாம் இந்த அமைதியான மிக மன மகிழ்ச்சியான சைவ ஓட்டலில் உட்கார்ந்துக் கொண்டு யோசிப்போமாக. அதைத்தான் ஏற்கனவே சொன்னேனே அதுதான் புரட்சியின் சிந்தனை. அது ரொம்ப முக்கியம். அதற்கு மிகவும் தோதான இடம் இந்த திருவல்லிக்கேணிதான்.
மற்ற இடங்களில் உட்கார்ந்து எழுதினால் யார் கண்ணுக்கும் கதைகள் சென்றடையாது. மிகப் பெரிய எழுத்தாளனாக வேண்டுமானால் முதலில் நெல்லைச் சீமையில் பிறக்க வேண்டும். பின்பு இந்த திருவிடத்தில் ஜாகை. அது போதும். இவைகள் இரண்டு மாத்திரம் தான் ஒரு சிறந்த சிந்தனையாளனுக்கான அடிப்படைத் தகுதி. பின்பு மற்றவைகள் எல்லாம் தானாக வந்துவிடும். திடீர் என்று ஒரு புரட்சிகரமான சிந்தனை ஏற்பட்டு விட்டது. அதுதான் என்னை இப்போது எழுதுவதற்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறது. முதலில் என்ன இது அசட்டுத்தனமான எண்ணம்? இப்படியெல்லாம் சிந்தனைகள் நமக்கு உண்டாகலாமா? உலகம் இதைப் பற்றி எல்லாம் சொன்னால் நம்புமா? முதலில் எனக்கே நம்பிக்கை வரவில்லையே. சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறதே. எனக்கே நம்பிக்கை இல்லாத நிலையில் நான் எப்படி இதைப் போய் மற்றவர்களிடம் சொல்வது.
அந்த நாடகக் கோஷ்டி செய்யும் குரும்புத்தனத்திற்கு என்னுடைய இந்த துணிகரமான செயல் எவ்வளவோ மேல். ஒருவர் தன்னை சர். லாரன்ஸ் ஒலிவியே என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்துத் திரிகிறார். இன்னொருவர் என்னடா என்றால் நான் தான் ஸ்டானிஸ்லாவஸ்கி நீதான் ஆன்டன் செக்கொவ் என்று பெருமிதப்பட்டுக்கொள்கிறார். பேராசிரியர் ஒருவர் என்னடாவென்றால் தான்தான் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் பக்தின் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டு திரிகிறார். விமர்சனம், நாடகம், நடிப்பு என ஓவ்வொருவரும் தங்களுக்கான ஒரு உயர்ந்த நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டு ”அவர்தான் நான் நான்தான் அவர்” என்று ஓயாத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் போது நம் பங்கிற்கு எதையாவது ”நானே அவர் அவரே நான்” என்று சொல்லிக் கொள்ளலாம் என்று ”ரஷ்ய இலக்கிய மகா மேதை தாஸ்தாவஸ்கியே நான் தான்” என்று என்னையேப் பார்த்து சொல்லிக் கொண்டால், ராத்திரி கனவில் நானே வேறொருவனாக மாறி என்னையே அடித்துக் கொள்வேன். வம்பு எதற்கு. நம்ம ஊர்க்காரர்களையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
திருவல்லிக்கேணிக்கும் திருநெல்வேலிக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும். பூந்தண்டலத்திற்கும் திருவல்லிகேணிக்கும் கொஞ்சம் முடிச்சிப் போட்டுப் பார்ப்போமே. பாரதிக்குப் பின்பு புதுமைப்பித்தன் என்று சொன்னால் இலக்கிய வட்டம் ஆட்சேபினை இல்லாமல் ஏகோபித்து ”அஹா ஓஹோ! உண்மை, உண்மையிலும் அக்மார்க் உண்மை” என்று பாராட்டுவார்கள். இவர்கள் இருவருக்கு அடுத்து இந்த **** என்று சொன்னால் மூஞ்சியின் மீது முத்திரைவிழும். முறைக்காதீர்கள். ஏற்கனவே சொன்னேனே இது ஒரு புரசிட்சிச் சிந்தனை என்று. அந்த மூன்றாவது இடத்தை இன்னும் யாரும் பூர்த்தி செய்யவே இல்லையே. ஏன் நான் எடுத்துக் கொள்கிறேனே. காசா பணமா.
என்ன ஒரு சிறுகதைத் தொகுதி. அதில் பத்துக் கதைகள் போதும். ஆரம்பம் மிகச்சிறப்பாக அமைந்து விடும். ஊருக்கெல்லாம் நான் ஒரு எழுத்தாளன் என்று பெருமையாக் தம்பட்டம் அடித்துக் கொள்வேன். நான் திருவல்லிக்கேணியில் இருப்பதனால் மாத்திரமே இந்த அதிகப்பட்ச உரிமையை எடுத்துக் கொள்கிறேன். தாம்பரத்திலோ, ஐனாவரத்திலோ அல்லது அம்பத்தூரிலோ இருந்தால் இதை உரிமையைக் கோரவாப் போகிறேன். என்ன நல்லத்தம்பித் தெருவில் கடைசி வீட்டில் இருக்கும் எழுத்தாளர் கட்டியங்காரன்தான் சண்டைக்கு வருவார். போகும் போதெல்லாம் சதா புதுமைப்பித்தன் புராணம். இதில் நான்தான் புதுமைப்பித்தனின் அடுத்த இலக்கிய வாரிசு என்று சொன்னால் அவர் உள்ளத்தில் இருக்கும் இல்லாத ஆசை உயிர் கொண்டு பேராசையாகிவிடும். போட்டிக்கு வந்துவிடுவார். அவரை சரிகட்டிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும்.
மசால் தோசை கொடுத்த இந்த புரட்சி எண்ணம் இன்று ராத்திரிவரைக்கும் நீடிக்குமா என்று பார்ப்போம். நாளைக் காலை வழக்கம் போல் சராசரி திருவாளர் **** ஆக மீண்டும் தினசரியில் ஒரு ரொட்டீன் வாழ்க்கை. ஆனால் என்னுடைய இப்போதைக்கான சிந்தனை மிக முக்கியமானது. இது கனவாக இருந்தாலும் சரி போதையானாலும் சரி அப்படியே எழுதிவிடவேண்டியதுதான். வரலாறு முக்கியம் அமைச்சரே.  

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...