இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Thursday, October 27, 2016

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்


இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்
இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் கோட்பாடுகள் தான் மிக திடமானவைகள். அந்த வகையில் ஹென்றி ஜேம்சின் நாவலின் கலைத் தன்மை என்ற கட்டுரை பொதுவாக நாவல் வடிவம் என்ற பொதுப்படையில் முன்வைக்கப்படும் கருத்தாக்கங்களாக அல்லாமல் தன்னுடைய படைப்புகளில் இருந்தே முன் வைக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.
யதார்த்தம் உருவாக்கும் கோட்பாடுகள் அந்தக் காலத்திற்கானவைகள். குறிப்பாக அந்த ஒரு குறிப்பிட்ட வாழ்நாளில் வாழப்பட்ட வாழ்க்கையை மதிப்பிட்டு காட்டுபவைகள். இமையம் சொல்ல முற்படும் அழியாத சொற்கள் என்பது தன்னுடைய படைப்பின் மொழியைப் பற்றிய கருத்தாக்கம் ஆகும். இமையத்தின் மொழி அவருடைய தனித்தன்மையைக் கொண்ட மொழி. அது அந்த பிராந்தியத்திற்கான மொழி. தன் கலைவடிவத்திற்கான மொழி. ஒரு சுவாரசியக் கதையை வாசித்த பின்பு அதனை இலக்கியம் இன்றோ கலைத்தன்மைக் கொண்டது என்றோ கூற ஒருபோதும் துணிய மாட்டோம். கதையின் சுவாரசியத்திற்காக அந்தக் கதைகள் வாசிக்கப்படுகின்றன அவ்வளவுதான். அதே நேரத்தில் சீரியஸான ஒன்றைப் பேசுவதற்கும் எழுத்து ஏதோ ஒரு விதத்தில் தன்னை இலக்கியம் என்று நிலைநிறுத்திக் கொள்கிறது. இருப்பினும் மொழி என்பது ஒரு பிராந்தியத்தின் மொழியை போலச் (imitate) செய்வதற்கான சாதனம் அதில் தான் அதனுடைய அழகியல் மேலோங்கி நிற்கிறது. மொழியும் கதையும் யதார்த்ததிற்கு மிக நீண்ட தூரத்தில் தன்னை வைத்துக் கொண்டு இயக்கும் பட்சத்தில் அதனுடைய இலக்கிய தரத்திற்கான தேடல் என்பது சம்பந்தப்படாத ஒன்றாகும். மொழியும் சரி கதையும் சரி யதார்த்ததை போலச் செய்ய வேண்டும் அதே நேரத்தில் அது யதார்த்ததை தன்னுடைய வெற்று நிலையில் அப்படியே கட்சிப்படுத்தவும் கூடாது, முடியாது.
ஒரு இலட்சியத்தை கதையாக்குவது ஓவியனுக்கும் சரி கதையாளனுக்கும் சரி மிகவும் எளிதானக் காரியம். ஏற்கனவே காலம் காலமாக இதையேதான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். இலட்சிய வாழ்க்கையைப் பற்றியும் அதன் மதிப்பீடுகளைப் பற்றியும் வரைவதோ எழுதுவதோ நமக்கு மிக ஏளிதான செயல். யதார்த்த வாழ்க்கையை போலச் செய்வதற்குத் தான் மிகப் பெரிய பிரயத்தனம் தேவைப்படுகிறது. அது அவ்வளவு எளிதானது அல்ல. எழுத்தாளன் ஒரு பிராந்தியத்தின் மொழியை போலச் செய்வது அப்படியே மக்கள் பேசும் மொழியை வார்த்தைக்குள் கொண்டுவருகின்றான் என்று அர்த்தம் அல்ல. அதனை டேப் ரெக்கார்டர் எளிதில் சாதித்து விடும். அதே போன்று ஒரு கேமரா அல்லது இன்றைய நவீன ஸ்மார்ட் ஃபோன் எளிமையாக செய்து முடித்து விடும். இதில் ரெக்கார்டரின் குரலும் எழுத்தாளனின் போலச் செய்யும் குரலும் ஒன்றாகி விடுமா என்ன. கேமரா பதிவு செய்யும் படமும் ஓவியன் தீட்டும் சித்திரமும் ஒன்றாகி விடுமா என்ன. பொது புத்திதான் இதனை ஒன்றாக வைத்துப் பார்க்கும். அதனிடம் இலட்சிக் கதைகளைக் காட்டினால் தான் இலக்கியம் என்று ஏற்க்கும்.
இமையம் ”சொற்களை வீணடிக்கிறார்கள்” என்று சொல்வதின் அர்த்தம் இதுதான். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மொழியைக் கொண்டு ஒரு வாழ்க்கையை போலச் செய்யமுடியும் என்ற துடுக்குத் தனத்தைத்தான் இமையம் இன்றளவும் சாடிக்கொண்டிருக்கிறார். கேமரா ஒரு நொடியில் படத்தை கிளிக் செய்து விடுகிறது. எந்த பிரயத்தனமும் தேவை இல்லை மக்களின் பேச்சை அது அப்படியே பதிவு செய்து விடும். இருப்பதை அப்படியே செய்வது என்பது கலை அல்ல. அங்கு ஒரு இலக்கிய பரிசோதனையே நடைபெறுகிறது. இந்தப் பரிசோதனையின் விளைவுதான் வட்டார இலக்கியங்கள். கி. ராஜநாரயணன் சொல்லுவார் ”எங்களுடைய மொழி என்பது கதை உருவாக்கும் மொழி அது கதைக்கான மொழி. அவர்களுடைய மொழியோ அது தன்னில் தானே தன்னிச்சையாக செயல்படும் மொழி. அதில் இருந்துதான் அவர்கள் கதைகளை உருவாக்குகிறார்கள்” என்று. இதில் காவிரி டெல்டாக்களில் உருவான மொழியும் சரி சுவாரசியக் கதைகளை உருவாக்கிய மொழிகளும் சரி அவைகள் எதோ ஒரு விதத்தில்  தன்னிச்சையில் செயல்படுபவைகள். இதில் தி. ஜானகிராமன் விதிவிலக்கு.

இமையம் எழுதும் சொற்கள் வீணடிக்கக் கூடாத சொற்கள். அது யதார்த்த வாழ்க்கையை, மொழியை போலச் செய்யும் சொற்கள். அந்த சொற்களில் தான் உயிர் இருக்கிறது அந்த சொற்களில் தான் ஒரு வாழப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. இந்த வாழ்க்கைதான் அடுத்த தலைமுறைக்கான கல்வி அறிவு அனைத்தும். மற்றப்படி படைப்பாளன் என்று கூறிக்கொண்டு கதை எழுதினால் கதையின் மொழிக்கும் தினசரி பத்திரிக்கையின் மொழிக்கும் என்ன வித்தியாசம். இப்பொழுது என்னளவில் நான் ஒரு குற்ற உணர்வில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன். இமையம் வசைபாடியது என்னை அல்ல. நான் படைப்பளி அல்ல. ஏதோ கதைகளைப் படித்து விட்டு ஆஹா ஓஹோ என்று பாராட்டி விட்டு அதனை மதிப்புரைகள் என்று பிதற்றிக் கொண்டிருப்பவன். ஆக, நான் தொடர்ந்து எழுதளாம். எந்த தடையும் எனக்கு இப்போது இல்லை.  
இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள் Reviewed by Arul Scott on 1:31 AM Rating: 5 இமையத்தின் வீணடிக்கப்படாத போலச் (imitate) செய்யும் சொற்கள் இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு ...

No comments: