மில்லரின் சாபம் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Wednesday, October 26, 2016

மில்லரின் சாபம்மில்லரின் சாபம்

நாராயணனும் கோபாலனும் அக்கல்விச்சாலைக்குட் புகுந்து மாணாக்கர் தொகுதியையும் ஆரவாரத்தையுங் கண்டு அதிசயித்துக்கொண்டே பிரதம ஆசிரியராகிய டாக்டர் மில்லர் துரையவர்களிருக்கும் அறையை தேடிச் சென்றார்கள். அப்புலவர் திலகருக்கு அபொழுது ஐம்பது வயதுக்கு மேலிருக்கலாம். அவர் சரீரத்தின் உன்னத எழுச்சியையும் நிமிந்த கம்பீர நடையையும், மயிர்செறிந்த களையும், எப்பொழுதும் பிறர் நன்மையைச் சூழவெழும் நினைவுக்களால் உண்டான வரிகளோடிய விசாலமான நெற்றியையும், உதடுகள் பொருந்தி மன உறுதியைக் குடிகொண்டு விளக்கும் தோற்றத்தையும் கண்டவர்கள் நெஞ்சில், ஒருவித ஆர்வமும் அச்சமும் வியப்பும் செல்வமும் உண்டாதல் இயல்பே.  அவர், ஸ்கோத்லாந்து தேசத்தில் செல்வமும் கண்யமும் பொருந்திய ஒரு நற்குடும்பத்தில் பிறந்து கல்வியில் சிறந்த பண்டித் தியத்தையடைந்து கீர்த்திப் பட்டங்கள் பெற்றவராயினும் சுயநயத்தையும் பொருளீட்டலையும் சிறிதும் பாராட்டாதவராய், ஔவையார் “திரைகலலோடியுங் கீர்த்தியைத்தேடு” என்ற முது மொழியைக் கைப்பற்றியவர்போல், மாதர் வலைச்ச்சிக்கி மனமுறுக்கும் இளம்பிராயத்திலேயே இத்தேசத்திற்கு வந்து, சென்னைக் கிறிஸ்தவ கலாசானையில் ஓராசிரியராயமர்ந்து, தம் சாமர்த்தியத்தினால் அக்கல்விச்சாலையின் தலைமை பூண்டு, அது பண்டிதராலும் பாமரராலும் தம் பெயராலேயே வழங்கும் படியான கீர்த்திப் பிரதாபத்தைக் கொள்ளை கொண்டிருதுமன்றி, செல்வப் பொருளைச் சிறிதும் மதியாது, மாணாக்கர்களின் சௌகர்யத்தின் பொருட்டும், வித்தியாசாலையின் பொருட்டும் கல்வியை ஏழை மாணாக்கர்களுக்குப் புகட்டும் பொருட்டும் தம் குடும்பச் சொத்திலிருந்து ஏராளமான திரவியத்தை செலவிட்டும், சிற்றின்பசுகத்தையும் சந்தானவிருத்தியையும் கருதாது ஆயுள்மட்டும் பிரமசாரி விரதத்தையே கைக்கொண்டு, கலைமகளே மணமகளாகவும், தம் அளவிறந்த மாணக்கரே புதல்வராகவும், பரோபகாரமே உத்தி யோகமாகவும் வாழ்ந்து வந்தார்.


மேற்கூறிய வரிகள் பத்மாவதி சரித்திரம் நாவிலின் வரும் பகுதியாகும். கதையின் நாயகன் நாராயணன் தன்னுடைய நண்பன் கோபாலனுடன் சென்னைக்கு மேற்படிப்புக்காக வருகிறான். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் நுழையும் போது அவர்களுக்கு ஏற்படும் மனவெழுச்சிதான் இந்த வரிகள். இது நடந்தது பதொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில். மாதவையா இக்கல்லூரியிலேயே பயின்றிருக்கிறார் பாடம் நடத்தியும் இருக்கிறார். அன்றும் சரி இன்றும் சரி மில்லர் நம்மை திகைக்க வைக்கிற ஒரு ஆளுமை. அன்று ஐம்பது வயதையுடைய மில்லர் மாணவர்கள் மத்தியில் பெரும் மதிப்பிற்குறியவராக இருந்திருக்கிறார். ஒரு நூற்றாண்டு கழித்து இதனை இன்றும் பசுமையுடன் நம்மிடம் தருவது நாவல் வகைமை மாத்திரமே. நாவல் தன்னுடைய வடிவத்தில் மாத்திரம் புதினம் அல்ல அது காலத்திற்கும் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கும் புதினமாக இருக்கிறது. கதையில் மில்லர் இன்றும் ஐம்பது வயதுடைய அதே கம்பீரமான பேராசிரியதான். மற்ற கலை வடிவங்கள் செய்யமுடியாததை நாவல் என்கிற கலைவடிவம் செய்து முடித்துவிடுகிறது. நாவலை தொடும் போதெல்லாம் மில்லர் அன்றிருந்த அதே மிடுக்குடன் நம் கண்முன்னே நடக்க ஆரம்பித்துவிடுகிறார்.  
அன்றைய மாணவர்கள் பார்த்த மில்லரை விட நான் அறிந்த இன்றைய மில்லர் தான் மிகவும் சுவாரசியமானவர். கிறிஸ்தவ கல்லூரியில் இன்றும் ஒரு கட்டுக்கதை இருக்கிறது. பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் ஒருபோதும் மில்லர் சிலையிடம் மறந்தும் கூட செல்ல மாட்டார்களாம். மில்லர் என்றால் அவர்களுக்கு அப்படியொரு பயம். பயம் ஏற்படுவது பரீட்சைக் காலங்களில் மாத்திரமே. மற்ற நேரங்களில் அவர் வெறும் சிலைதான். பரீட்சைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மில்லர் உயிர் பெற்றுவிடுவாராம். மாதவையா கூறும் அன்றிருந்த மில்லரை பார்க்க மாணவர்கள் எவ்வளவு அஞ்சினார்களோ தெரியாது. இன்று இருக்கும் மாணவர்களுக்கு மில்லர் என்றால் மரண பயம். கிட்ட நெருங்க மாட்டார்கள். நெருங்கினால் அவ்வளவுதான் தாங்கள் செய்த தவறுக்காக காலம் முழுவதும் (இல்லை) குறைந்தது ஒரு செமஸ்ட்டர்க்காவது வருத்தப்பட்டாக வேண்டும். அதற்காக மில்லர் அன்று ஒரு நாள் மாத்திரம் உயிர்பெற்றுவிடக்கூடியவர். இப்படி ஒரு முறை நடந்திருந்தால் பரவாயில்லை ஏறக்குறைய நான்கு முறை நாங்கு மாணவர் குழுக்களுக்கு நேர்ந்து விட்டது.
ஒரு முறை என்றால் கூட பரவாயில்லை. ஏதோ தற்செயல் என்று விட்டுவிடலாம். தொடர்ந்து நடைபெற்றால். அதனை தற்செயல் என்று உதாசிணம் செய்து விட முடியாது. அன்றையத் தேர்வுக்கு நன்றாக முழு செமஸ்டரையும் படித்திருந்தால் தான் தகுதி பெற முடியும். அறைகுறையாக பரீட்சைக்கு ஒரு நாள் முன்பதாக இரவு முழுவதும் ஏனோ தானோவென்று படித்திருந்தால் மில்லர் பரிட்சைக்கு அனுமதிக்க மாட்டார். அல்லது அவருடைய கோபமான பார்வை மாணவர்களை ஃபெயிலாக்கிவிடும்.
அவர்கள் தேர்வில் முன்னேற ஒரே ஒரு வழிதான் உண்டு. ஒன்று மில்லரை தவிர்த்து பரீட்சை ஹாலுக்குள் சென்றுவிடுவது. மற்றொன்று நன்றாக தேர்வுக்கு தயார் செய்திருப்பது. இவைகளையும் மீறி ஏதோ தேய்வ சங்கல்ப்பம் மாணவனை பாஸ் செய்து வைத்து விடும். ஆனால் மில்லர் விடமாட்டர். அதே இடத்தில் அதிகார தோரணையோடு நின்று கொண்டேயிருப்பார். மற்ற நாட்களில் அவர் வெறும் சிலை மட்டும் தான். பரீட்சைக் காலம் என்று வந்து விட்டால் போதும். பரமண்டலமே கல்லூரிக்கு சென்று மேற்பார்வை செய்ய அவருக்கு அனுமதி அளித்து விடும். அன்று மாத்திரம் அவருக்கும் அப்படியொரு ஆமானுஷ்ய சக்தி. நாம் கதையில் பார்த்த அந்த உயிருள்ள மில்லர் கூட இப்படி மாணவர்களை ஏற இறங்க அளந்து பார்த்து எது படித்தது எது படிக்காதது என்பதை கணிக்க முடியாதவர். தற்போது சிலையில் இருக்கும் மில்லர் பார்த்த பார்வையிலேயே அளந்து அப்போதே மார்க்கை பூஜ்ஜியம் என்று சுழித்து விடுவார். மில்லருக்கு அதிகம் மரியாதை செய்தாக வேண்டும். அதுவும் இப்போது இருக்கும் ஆசிரியர்களுக்கு செய்யும் மரியாதைக்கு இனையாக.
இப்போது இருக்கும் ஆசிரியர்களுக்கு அருகில் சென்று வணக்கம் வைத்தாலே மிகவும் கோபித்துக் கொள்வார்கள். மாணவர்கள் தங்களைக் கண்டு பயந்து ஓடி மறைந்து கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் தாங்கள் ஒரு மகா புருஷர்கள் என்பது பொய்யாகி விடும். அதே மரியாதையை இன்று நம்முடைய மில்லருக்கு கல்லூரியில் செய்து வருகிறார்கள் நம்முடைய 21ம் நூற்றாண்டின் மாணவர்கள். தியேட்டர், க்ரிக்கெட் என்று கேளிக்கைகளுக்கே நம்முடைவர்களுக்கு நேரம் போதவில்லை. இதில் பாடமாவது பரீட்சையாவது. ஆசிரியர்களின் இந்த தெய்வ நிலையின் அதிகாரத்திற்கு முழுக்க முழுக்க இவர்கள் தான் காரணம். எனவே மில்லர் ஒரு கட்டுக்கதையாக மாறிவிட்டார். அவரை தரிசித்து செல்ல வேண்டுமென்றால். நிச்சயம் ஒரு நாள் தவறாது எல்லா வகுப்புகளிலும் இருந்திருக்க வேண்டும். பாடக் குறிப்புகளையும் எழுதியிருக்க வேண்டும். இல்லையென்றால் மில்லரின் சாபம் அவர்களை ஒரு செமஸ்ட்டர் முழுவதும் வருத்தப்பட வைக்கும்.
இருப்பினும் மாணவர்களின் பெற்றோர்கள் அன்றைக்கு ஒருநாள் விண்ணுலகை நோக்கி பிராத்தனைகள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அவைகள் வீண் போக செய்து விடச் செய்யாது. அவைகள் எப்படியும் தங்கள் பிள்ளைகளின் கிறுக்கள்களுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுத்தர செய்துவிடும். அவைகளையும் மீறி மில்லர் ஒரு கறார் பேர்வழி என்பது பெற்றொர்களின் மன்றாட்டுக்கு தெறியாது.  அவர்கள் மில்லரை அன்று மாத்திரம் என்றென்றும் போல் கவனிக்காது சென்று விட வேண்டும். அப்படி அவரை பார்த்தாலோ அல்லது தொட்டாலோ கதை முடிந்தது.
மில்லர் பற்றிய இந்தக் கட்டுக்கதையை நான் ஏற்கனவே கேட்டிராவிட்டால் நாம் படித்த இந்தக் கதையின் பகுதி இந்த அளவிற்கு மில்லரின் மீது நம் கவனத்தை ஈர்த்திருக்காது. மாதவையாவின் அன்றைய மில்லரை விட மாணவர்களின் கட்டுக்கதையில் இருக்கும் இன்றைய மில்லரைத்தான் நான் அதிகம் இரசிக்கிறேன். MCC என்றால் மில்லர், மில்லர் என்றால் MCC, அவ்வளவுதான். 
மில்லரின் சாபம் Reviewed by Arul Scott on 1:10 AM Rating: 5 மில்லரின் சாபம் நாராயணனும் கோபாலனும் அக்கல்விச்சாலைக்குட் புகுந்து மாணாக்கர் தொகுதியையும் ஆரவாரத்தையுங் கண்டு அதிசயித்துக்கொண்டே...

No comments: