நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Thursday, October 27, 2016

நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள்

நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள்

[ நேற்று டான் குயிக்ஸாட்டின் எட்டாம் அத்யாயத்தை வாசித்து கொண்டிருக்கும் போது கவிதையைப் பற்றியும் அதில் வரும் பாடு பொருள்களைப் (குறிப்பாக பெண்களின் அழகு) பற்றியும் செர்வான்டஸ் செய்த கோபம் மிகுந்த கேளிக் கிண்டல் அதனைப் பற்றி சிறிது யோசிக்க வைத்தது. அதுபோன்ற சிந்தனைகளை வீணடிப்பது மாபெறும் தவறு என்பதினால் உடனே சிந்தனையை ஐநூறு எண்ணிக்கைகளிலான வார்த்தைகளில் பதிவு செய்து விட்டேன். ]
கவிதை தன் இயல்பில் ஒருபோதும் எதையும் அதன் இயல்புதன்மையில் வைத்துப் பார்க்காது. ஒரு படி மேலே சென்று அதனை சற்று உயர்த்தி அல்லது அழகு படுத்தித் தான் காண்பிக்கும். கவிதையின் பாடுபொருள்களே இப்படித்தான். ஒன்று கிடைத்து விட்டால் போதும் அதனை மெருகேற்றி அதன் இயல்பு தன்மையில் இருந்து சற்று மாற்றித் தான் காண்பிக்கும். ஏன் இயல்பில் உள்ள பொருட்களை அவைகள் இருப்பது போன்று காட்ட கூடாதா? இயல்பு நிலை அவ்வளவு அவலட்சணமானதா? இதெல்லாம் நம்மை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறவைகள். இது கவிதையின் குணாதசியமா. அல்லது இயல்பு நிலையை ஒருபோதும் அதன் இயல்பு நிலைக்கு மீறி காட்டமுடியாது என்பதா. சில நேரங்களில் நாம் ஒரு பார்க்கின்ற அனைத்தும் அந்த நொடிக்கானவைகள் தாம். இது காலம் சம்பந்தப்பட்ட காரியம். பொருளின் இயல்புத்தன்மை என்பது நிகழ்காலத்தின் அப்போதைய அந்த நொடிப்பொழுதில் நம்மால் பார்க்கப்படுவதைக் காட்டுகிறது. அந்த கடந்து போகும் நொடிப்பொழுதுதான் இயல்பு நிலை நேரம். அந்த ஒரு நொடிக்கு முந்தைய எந்த ஒரு காரியமானாலும் சரி அது இயல்புக்கு மீறின ஒன்றாகும். நம்முடைய பார்வை அந்த துள்ளியமான நொடியிலிருந்து பயணம் செய்து கடந்த காலத்திற்கு சென்று விடுகிறது.
அந்த நொடிப்பொழுதின் முந்தைய நேரமும் சரி எதிர் நோக்கி இருக்கும் நேரமும் சரி அவைகள் முற்றிலும் இயல்பற்றவைகள். கடந்த அனுபவத்தின் காரியங்கள் ஒருவேலை நம்மை அதனுடைய இனிமையான அனுபவத்தில் வைத்திருக்க முடியும். அல்லது பீதியின் அனுபவத்தில் வைத்திருக்கவும் கூடும். அது இயல்பிற்குரியது அல்ல. வீட்டுப் பாடம் ஒழுங்காக செய்யா விட்டால் நளைக்கு கணக்கு வாத்தியார் விளாசு விளாசு என்று விளாசி விடுவார் என்ற பயம் முந்தைய நாள் இரவில் இருக்கும். அதுவும் அந்த இரவுகள் ஞாயிற்றுக் கிழமைகளின் இரவுகளாகத்தான் இருக்கும். அந்த ஒரு இரவைப் போன்ற ஒரு பீதியின் இரவு ஒன்று இருக்குமா என்றால் சந்தேகம் தான்.
நம்முன்னே வரவிருக்கும் ஒரு நிகழ்விற்காக கத்துக் கொண்டிருக்கிறோம். அது நம்மை ஒன்று மகிழ்ச்சியில் வைக்கிறது அல்லது பயத்தில் உறைய வைக்கிறது. எனினும் அடி வாங்கும் அந்தத் தருணத்திற்கு எந்த உணர்வும் கிடையாது. அடி எவ்வளவு பலமாக விழுந்தாலும் சரி அது அவ்வளாக அந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்படுத்திய பீதியைப் போன்று இருக்காது. நிகழ்காலத்தின் நிகழ்வுகவும் மிகவும் இயல்பானவைகள். அதை ஆவலோடு அல்லது பயத்தோடு சந்திக்க முணைகின்றோம். சந்தித்த அந்தத் தருணத்தில் அனைத்தும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. துன்பமும் சரி இன்பமும் சரி அவைகள் நிகழ்காலத்தின் முந்தைய அல்லது பிந்தைய காலங்களை சார்ந்தவைகள். நிகழ்காலம் எதையுமே உணராத ஒன்று. நிகழ்வில் நாம் அனுபவித்த ஒன்றை அந்த நிகழ்காலத்தில் ஒருபோதும் உணருகிறதே இல்லை. அதனை உணர எதிர்காலம் என்ற ஒன்று தேவைப் படுகிறது. நிச்சயமாக நிகழ்காலத்தில் இருந்து நம்மால் எதிர்காலத்தை உணர முடியும். அதே போன்று நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்தையும் உணர முடியும். நிகழ்காலம் மாத்திரம் ஒரு உணர்வற்ற காலம். அதனை உணர்வுள்ளதாக மாற்ற இருமுனைகளிலும் உள்ள காலங்கள் தேவைப் படுகின்றன.
இருப்பினும் அந்த உரணப்படமுடியாத இரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலைக் காலம் தான் மிக மிக முக்கியமான நேரம். அதனைதான் நாம் அனுபவமாக்குகிறோம். அந்த ஒரு நொடி மட்டுமே ஒரு உணர்வற்ற நிலை. அந்த ஒரு நொடிப்பொழுதில்  உணர்வுகள் அற்ற சடலங்களாக நாம் வாழ ஆரம்பித்து விடுகிறோம். உணர்வுகளே உயிர் நிலை என்றால் நம்முடைய உணர்வுகளின் உயிர்நிலை நிகழ்காலத்தில்  உயிர்க்கொண்டிருக்கவில்லை. நாம்முடைய உணர்வுகள் அனைத்தும் நாம் வாழும் அந்தக் நொடிப்பொழுதில் ஒருபோதும் தங்கி இருப்பதில்லை. நம்முடையது என்றால் அது வாழ்ந்தது அல்லது வாழபோவது. இதற்கிடைப்பட்ட தருணம் தான் மிகவும் ஆச்சரியத்திற்குறிய நேரம். அதனை நம்மால் உணர்ந்து இதுதான் இந்த அனுபவம் என்று அந்த நேரத்தில் நம்மால் கூறவே முடியாது.
கவிதைகள் இப்படிப்பட்ட ஒரு நேரத்தை தன்னுள் தக்க வைக்க கூடியவைகளா? அப்படி அவைகள் நிகழ்வின் தருணத்தை எழுத்தில் படம் பிடித்தால் அதனை எப்படி நம்மாள் பாராட்ட முடியும் என்பது கூட இப்போது கேள்விக்குறிய ஒன்றாக இருக்கிறது. எழுத்தில் இந்த நேரம் நம்மை அதிகம் ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது. இந்தத் தருணத்தைத் தான் கவிதைகள் தங்களுடைய நேரங்களாக வைத்திருக்கின்றன. நிஜத்தில் இருக்கும் நேரத்திற்கும் சரி கவிதையின் நேரத்திற்கும் சரி அந்தத் தருணம் தான் முக்கியமான நேரம். அதனை நாம் ஒருபோதும் நிஜத்தில் பார்க்க விரும்புவதில்லை. ஆனால் கவிதையின் அழகு அந்த ஒரு நொடிபொழுதின் நேரத்தில் தான் லயித்திருக்கிறது. இந்த ஒரு நொடிப்பொழுதில் தான் இலக்கியமே இயங்குகிறது. இந்த ஒரு நொடிப் பொழுதுக்கு மீறி எழுத்து வேறு ஒரு நேரத்தை அதாவது நடுப்பகுதியின் நேரத்திற்கு முன்பும் பின்புமான நேரத்தை எடுத்தால் அது கவிதைக்கான தகுதியை முற்றிலும் இழந்து விடுகிறது. நம்முடைய வாசிப்பு அந்த ஒரு நொடிப் பொழுதையே அதிகம் நேசித்து வாசிக்கிறது. காரணம் அதனை நிஜத்தில் உணரப்படாத ஒரு தருணம். எதை நாம் நம்முடைய இயல்பின் நிலையில் உணருகிறது இல்லையோ அதையே தேடிச் சென்று பார்க்க விரும்புகிறோம் அதனை இரசிக்கவும் செய்கிறோம்.
  
நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள் Reviewed by Arul Scott on 10:07 PM Rating: 5 நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள் [ நேற்று டான் குயிக்ஸாட்டின் எட்டாம் அத்யாயத்தை வாசித்து கொண்டிருக்கும் போது கவிதையைப் பற்ற...

No comments: