Thursday, June 16, 2016

டால்ஸ்டாய் என்கிற காந்தியப் புனிதம்


டால்ஸ்டாய் என்கிற காந்தியப் புனிதம்
நேற்று நண்பர் ராஜனுடன் டால்ஸ்டாய் பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். ஒரு ரஷ்ய எழுத்தாளன் எவ்வாறு தன் படைப்புகளின் மூலம் இந்திய தேசத்தின் மகாத்மாவை உருப்பெறச் செய்தார் என்பதைப் பற்றியதாய் இருந்தது அந்த உரையாடல். மெல்ல பேச்சு அம்பேத்கரிடம் திரும்பியது. இதுவரை தலித்திய பார்வையில் அம்பேத்காரைக் கொண்டு காந்தியைக் கண்டவர்கள் அவரை ஒரு தீமையின் வடிவமாகத்தான் கண்டனர். இடது சாரிய பார்வைக்கு (பெண்ணியம் உட்பட) அவர் ஒரு தீமையின் உருவம் தான். எனக்கும் இதில் அதிக உடன்பாடு இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இம்மாமனிதனை என்னால் ஒரு சாதாரண மனிதனாக அடையாளம் காண முடியவில்லை. நம்முடைய பிழையெல்லாம் நாம் அவரை மகாத்மாவாக ஆக்கி விட்டதுதான். மகாத்மா தவறு இழைக்கும் போது நம் மனது இயல்பில் அம்மாமனிதனை தீமையின் உருவமாக கண்டு விடுகிறது.
என்னுடைய M. Phil ஆய்வின் போது பேராசிரியரிடம் இவ்வாறு கூறினேன். “சார், காந்தியை இந்திய தேசத்திற்கு வெளியில் வைத்து பார்க்கும் போது அவர் ஒரு புனிதராகக் காணப்படுகிறார். ஆனால் தேசத்தின் சட்டகத்திற்குள் வைத்துப் பார்க்கும் போது அவரை நான் முற்றிலும் வெறுக்கிறேன்” என்றேன். அன்று நான் எப்படியாயினும் ஒரு ஸ்காலராகிவிடுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பேராசிரியர் மற்றவர்களிடம் கூறினார்.
எனினும், தெசியத்திற்கு வெளியே மற்றும் உள்ளான காந்தியை என்னால் பல நாட்களாக இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அது ராஜனுடனான உரையாடலில் சாத்தியமாயிற்று. எவ்வாறு ரஷ்ய கலாச்சாரத்திற்கு டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாவஸ்கி சூரியன் சந்திரன் போல் முக்கியமானவர்களோ அது போன்று நம் தேசத்திற்கு காந்தியும் அம்பேத்கரும் முக்கியமானவர்கள். இவர்களை நாம் தனித்தனியே பிரித்து பார்க்க முடியாது. நம்மிடம் மீண்டும் அதே பிரச்சனைதான் நாம் ஒருவரை சாதாரண மனிதனாக பார்த்து பழகி விட்டோம். மற்றொருவரை மகாத்தமாவாக்கிவிட்டோம். எனினும் இப்படிப்பட்ட ஆளுமைகள் நமக்கு தேவையானவர்களே. சொல்லப்போனால் நம் தேசியமே இவர்கள் இருவர் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது.
மீண்டும் இங்குள்ள பிரச்சனை இதுதான். நம்முடைய தேசிய மற்றும் கலாச்சார மதிப்பீட்டின் படி நாம் இவர்களை அளவிட முடியாது. அது நம் முகத்தை நாமே பார்ப்பது போலாகிவிடும். நம்மைப் பார்க்க ஒரு தெளிந்த கண்ணாடி தேவைப்படுகிறது. அது டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாவஸ்கி என்கிற ரஷ்ய கண்ணாடி ஆகும். என்னுடைய வாசிப்பில் நான் எவ்வளவுக்கதிகம் இவர்களை வாசித்தேனோ அதற்கும் அதிக அளவில் நான் நம்முடைய தேசியத்தின் இவ்விரு மனிதர்களிடம் திருப்பப்பட்டேன். உண்மையில் ரஷ்யாவை அரசாண்டது சார் மன்னர் அல்ல இவ்விரண்டு ஆளுமைகள் தான்.
சரி, இவர்கள் எவ்வாறு நம் தேசியத் தலைவர்களை அடையாளம் காண பயன்படுகிறார்கள் என்பதும் இதில் காந்தியை அவருடைய புனிதத் தன்மையை அகற்றி சராசரி மனிதனாக காண்பது என்பதுதான். டால்ஸ்டாய் பேசின உண்மையை விட அவருடைய புனிதத் தன்மையின் ஆளுமையே நமக்கு பெறிதுபட்டு நிற்கிறது. உண்மையை விட சொல்லும் நபர்தான் நமக்கு முக்கியமாககப் படுகிறார். அதுவே தாஸ்தாவஸ்கியின் காரியத்தில் அவருடைய ஆளுமையை விட அவருடைய உண்மையின் கவர்ச்சிதான் நம்மை அதிகம் ஈர்க்கிறது. இது வாசிப்பு நிலையில் மட்டுமே. இவர்களை பொது புத்தியின் (சாமான்யர்கள்) உரையாடளுக்கு  கொண்டு செல்லும் போது பொது புத்தி உண்மையின் கவர்ச்சியைவிட ஆளுமைகளின் வசீகரத்தையே அதிகம் நாடுகிறது. உதாரணத்திற்கு இளங்கலை மாணவர்களிடம் டால்ஸ்டாய்/காந்தி என்ற புனிதத்தின் வசீகரத்தையும் தாஸ்தாவஸ்கி/அம்பேத்கர் என்ற உண்மையின் கவர்சியையும் காட்டும் போது அவர்கள் ஈர்க்கப்படுவது புனிதத்தின் வசீகரத்தின் மீதுதான்.
எங்களுடைய உரையாடலில் பளிசென்று வெளிப்பட்ட காரியம் இதுதான். தேசியத்தின் ஜனநாயகக் கட்டமைப்பிற்கு காரணமாக இருந்தவர் அம்பேத்கரே ஆவர். எனினும் தேசியம் காந்தியின் மூலமே அறியப்படுகிறது. உழைத்தவன் ஒருவன் பலன் அனுபவிப்பவன் மற்றொருவனா என்ற ஆற்றாமை இடதுசாரி மனதில் எழும். இவர்களில் தாங்கள் செய்த பங்களிப்பை விட அவர்கள் மேற்கொண்ட வழிதான் அதிக முக்கியமானதாகப் படுகிறது. அம்பேத்கரின் உழைப்பில் உருவான உற்பத்தியோடு ஒப்பிடும்போது அவருடைய வாழ்க்கை மிகவும் அளவில் குறைந்தது. அதுவே காந்தி தான் செய்த பங்களிப்பைவிட அதை அடைய மேற்கொண்ட வழிதான் முக்கியமானது. ஐரோப்பியர் தந்த பைபிலின் நற்செய்தி ஒரு தர்க்க ரீதியிலேயே நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது இறுதில் மதமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த கருவியாக ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்பட்டது. கிறித்துவத்தின் நற்செய்தி தரும் மகத்தான மனித இயல்பைப் பற்றி ஐரோப்பிய மதப் பிரசங்கிமார்கள் பேசத் தவறிவிட்டார்கள். காந்தி கண்ட நற்செய்தியில் உண்ணதமான மனித இயல்புகள் ஐரோப்பியர்களின் இருந்து அல்ல அது டால்ஸ்டாயின் புனைவுகளில் இருந்து வந்தது ஆகும். ஐரோப்பிய ஏகாதிபத்தியம் தன்னை ஒரு அடிமை என்ற நிலையில் தான் வைத்தது. அதுவே அதை எதிர்த்துப் போராட அவரை தூண்டியது. ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் அதன் மதமும் ஒரு கலக்காரனை மட்டுமே உண்டாக்கி இருக்க முடியும். ஐரோப்பிய கிறித்தவம் தன் மனித உயர் நல் குணத்தை முன்நிருத்த தவறிவிட்டுருந்தது. இந்த சூழ்நிலையில் அதற்கு மாற்றாக டால்ஸ்டாயின் புனைவின் நற்செய்தி அவரை மகாத்மாவாக தென் ஆப்பிர்க்காவில் இவான் இலிச்சின் மரணம் என்ற கதை முற்றிலும் கலகக் குணத்தில் இருந்து மகாத்மாவாக மாற்றியது.
நாம் காந்தியை நம்முடைய தேசியத்தின் மத கட்டமைப்பைக் கொண்டோ, இடதுசாரிகளின் (பெண்ணியம் உட்பட) விரோத பார்வையைக் கொண்டோ அல்லது ஐரோப்பியர்களின் ஏகாதிபத்திய பார்வையைக் கொண்டோ காணக் கூடாது. இம்மூன்றும் அவரை ஒரு கலகக் காரணாகவோ தேசப்பிதாவாகவோ அல்லது தந்திரமான நரியாகவோ தான் அவரை பிரதிபலிக்கும்.

நாம் காண முற்படவேண்டியது ஒரு மாதிரியையும் அதற்கான வழியையும் ஏற்படுத்திய மகாத்மா. அந்த புனிதத்தின் தன்மை டால்ஸ்டாய் என்ற கண்ணாடி மட்டுமே பிரதிபலிக்கும். டால்ஸ்டாய் மனித மாண்பை புனைவாக்கினார் காந்தி அதை நடைமுறைபடுத்த முயற்சி செய்தார். இதில் அவர் வெற்றி கண்டாரா இல்லையா என்பது கேள்வி அல்ல அதை அடைய மேற்கோண்ட முயற்சிதான் முக்கியம். புறம்பாக காந்தி இந்து மதத்தின் மேன்மையும் வருணாஷ்ரமத்தின் குலத்தொழிலையும் அரசியல் காரணத்திற்காக ஆதரித்தாலும் அடிப்படையில் அவர் ரஷ்ய புனைவாக்கம் மதம் மாற்றிய ரஷ்ய கிருத்துவர். காந்தி மேற்கோண்டது ரஷ்யக் கிருத்துவத்தின் வழி. அம்பேத்காருடைய வழியோ ஐரோபியர் அளித்த மதசார்பற்ற நவீனத்தின் வழி. நவீனத்தின் வழி மிகவும் புதியது நம் ஆழ்மனம் அதை ஆமோதித்தாலும் அதை பின்பற்ற மறுக்கும். ஆனால், சமயம் காட்டும் வழி ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டு என்ற மனித இயல்பின் உண்ணத தன்மையாகும். அது சாத்திய படாது என்பது தாஸ்தாவஸ்கியின் தர்க்கம். சாத்தியப் படாவிட்டாலும் அதின் உண்ணதம் அதை அடைய நம்மை முன்னேறி செல்ல தூண்டும். மீண்டும் தாஸ்தாவஸ்கி கூறுவது போன்று இலக்கை விட அதை அடைய மேற்கொள்ளும் வழிமுறைதான் முக்கியம்.   

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...