போரும் அமைதியும்: ஈடேறிய கனவு - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Tuesday, July 5, 2016

போரும் அமைதியும்: ஈடேறிய கனவு


ஞாயிறு இரவு ஒரு மணிக்கு போரும் அமைதியும் நிறைவுற்றது. இதை வாசித்து முடிப்பதே வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தேன். இப்போது பெரும் நிம்மதி. இனி அமைதியாக மற்ற பிரதிகளில் பயணம் செய்யலாம். இக்காவியத்தை வாசித்து முடிக்க எனது முதுகலை இரண்டாம் ஆண்டில் முயற்சி செய்தேன். நல்ல வேலை அது ஈடேராமல் போய்விட்டது. அப்போதைக்கு ஆறுதலாக  Dumasன் Count of Monte Cristoவை மாத்திரம் முழுவதுமாக வாசித்து முடிக்க முடிந்தது. அது ஒரு இளம் வாலிபனின் சாகசக் கதை. எனது வாசிப்பில் அது ஒரு மைல் கல். பல நீண்ட வருடங்களாக போரும் அமைதியும் ஒரு ஈடேராதக் கணவாகவே இருந்து வந்தது. பயணத்தின் அடுத்த சந்திப்பாக தாஸ்தாவஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்னை அதிகம் பாதித்தது. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் என்னை தாஸ்தாவஸ்கி பைத்தியமாக்கி விட்டது. காரணம் அது மனிதனின் ஆழத்தையும் அதின் நிஜத்தையும் பற்றிய ஒரு மாபெரும் தத்துவ அலசல்/தேடல். தாஸ்தாவஸ்கியின் உலகத்தை எட்டிப்பார்ப்பது என்பது பாதாளத்தின் ஆழத்தை எட்டிப் பார்ப்பது போன்றதாகும். அதில் பயணிக்க மரணம் என்ற நுழைவு வாயிலை நாம் கடந்தாக வேண்டும். உண்மையில் அது ஒரு எல்லையற்ற பாதாளம் அதில் விழுந்தால் நாம் நம்மையே தொலைத்து விடுவோம். நம் மனதின் எண்ண ஓட்டங்கள் கூட சலனமற்று ஒரு நிசப்தமான ஏகாந்தத்தில் திளைத்து விடும். என் பேராசிரியரிடம் கூறினேன் என் எல்லா பிரச்சனைகளுக்கும் அந்த அயோக்கியன்தான்/தாஸ்தாவஸ்கி (செல்லமாக) தான் காரணம் என்று புலம்பினேன். என் சலனமற்ற நிசப்தம் மற்றவர்களை அதிகம் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.
நண்பர் அபிலாஷ் டால்ஸ்டாய் பற்றி அதிகம் சிலாக்கித்துப் பேசுவார். ஏறக்குறைய ஆங்கிலத்துரைக்கு அவருடைய வருகை எனக்கு தாஸ்தாவஸ்கியிடமிருந்து விடுதலையாகவே இருந்தது. எங்களை எழுதத் தூண்டியதும் அவர்தான். அதுவரை நாங்கள் வெருமனே படித்ததைப் பற்றி டீக்கடையில் பேசுவோம் அவ்வளவுதான். அதை எழுதவேண்டும் என்ற உணர்வே எங்களுக்கு இருந்தது கிடையாது. தன்னிடம் ஒன்று இருந்தால் தானே மற்றவர்களை அதைக் கொண்டு பாதிக்க முடியும். அது வரை எழுத்து ஒரு அச்சமூட்டும் செயலாகத்தான் இருந்து வந்தது. இப்போது எழுத்தை நான் அதிகம் நேசிக்கிறேன். அதற்கு காரணம் அபிலாஷின் தாக்கம் தான் என்னவோ. ஒருவேலை அவருடைய நட்பு முடிவடைந்து விட்டால் எழுத்தின் மீதான என் விருப்பமும் முடிந்து விடுமோ என்ற பயம் எப்போதும் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. எழுத்தைப்போலவே போரும் அமைதியும் நாவலை வாசிக்க அதிகம் தூண்டினார். பயம் கலந்த இலட்சிய எண்ணம் தீராத வேட்க்கையாக மாறியது. ஒவ்வொரு பாத்திரத்தையும் கண்டு ஆச்சரியப் பட்டேன். இந்த உலகத்தில் இத்தனை மனிதர்களா என்ற வியப்பு மேலோங்கியது.  இலக்கியத்தைப் பற்றியும் வரலற்றைப் பற்றியும் ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தியது. நல்ல வேலை வெகு தாமதமாகவே இதை வாசித்தேன்.
இருப்பினும் தாஸ்தாவஸ்கி என்னை விட்டு விலகவில்லை. பியர் என்ற பாத்திரத்தின் மூலம் அந்த அயோக்கியனை சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் பியர் டால்ஸ்டாயின் பிரதிபலிப்பு என்று சொல்லுவார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் நான் அவனுள் டால்ஸ்டாயை பார்க்கவில்லை. தாஸ்தாவஸ்கி என்ற பேய் மீண்டும் தன் கூறிய பற்களை காட்ட ஆரம்பித்து விட்டான்.
பியர் பிரெஞ்சு காவலாளிகளால் கைது செய்யப்பட்டு படைத்தலைவனிடம் ஒற்றன் என்று நிறுத்தப்படுகிறான். அவர்கள் ஏதோ காதில் இரகசியம் பேசிக் கொள்கிறார்கள். பியருக்கு ஒன்றும் புரியவில்லை. கொல்லப்படுவதற்கு அவனை அழைத்து செல்கிறார்கள். அவன் வரிசையில் நான்காவது ஆள். ஒரு முதியவன் அடுத்தது ஒரு வாலிபனின். பரிதாப சாவு பியரை முற்றிலும் நிலைகுலைய வைத்து விடுகிறது. இப்போது பியரின் தருணம் ஆனால் விடுதலையாக்கப் படுகிறான். அவன் மரணத்தின் விளிம்பை கண்டு விட்டு மீண்டும் சிறைக்கைதியாக செல்கிறான். இந்த பகுதியில் என்னால் பியரில் டால்ஸ்டாயை பார்க்க முடியவில்லை அங்கு தாஸ்தாவஸ்கிதான் என் கண்முன் தெரிந்தார்.
தாஸ்தாவஸ்கி ஒரு கலகத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு வரிசையில் நாண்காவதாக கொல்லப்படபோகிறார். மண்ணிப்புக் கடிதம் சார் மன்னரிடம் இருந்து வருகிறது. மரணத்திற்கு தப்பியவர்கள் அநேகர் புத்தி பேதலித்து பைத்தியங்களாகி விடுகிறார்கள். தாஸ்தாவஸ்கி மட்டும் தன்னை தன் எழுத்தில் பாதுகாத்துக் கொள்கிறார்.
பின்பு தான் புரிந்தது டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாவஸ்கி என்பவர்கள் இருவேறு ரஷ்ய எழுத்தாளர்கள் அல்ல. அவர்கள் உண்மையின் இரண்டு பக்கங்கள். தாஸ்தாவஸ்கியில் வாழ்வின் ஆழத்தை நாம் பார்க்க முடியும். டால்ஸ்டாய் அந்த வாழ்க்கையின் மிக உயர்ந்த உன்னத்ததைக் காட்டுவார். இப்போது எனக்கு மலைச் சிகரத்தின் உச்சியில் இருந்து இப்பிரபஞ்சத்தை காண்பது போல் இருக்கிறது.
போரும் அமைதியும்: ஈடேறிய கனவு Reviewed by Arul Scott on 10:26 AM Rating: 5 ஞாயிறு இரவு ஒரு மணிக்கு போரும் அமைதியும் நிறைவுற்றது. இதை வாசித்து முடிப்பதே வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தேன். இப்போது பெரும் நி...

No comments: