Friday, November 13, 2020

கரைந்த நிழல்கள்



வீட்டின் பின்புறம் காட்டுவா மரம் ஒன்று இருக்கிறது. பசுமையான இலைகள் மூடி  தழைத்து நிற்கிறது.   மொட்டை மாடிக்கு சென்று சிறிது நேரம் தனிமையில் இருக்கும் போதெல்லாம் அந்த மரத்தில் வந்தடங்கும் பறவைகளை உற்று நோக்குவது வாடிக்கை. சில  நேரங்களில் பச்சைக் கிளிகள் ஒன்று இரண்டு என வந்து அமர்ந்திருக்கும். தண்ணீரில் சிறு ஓடு ஒன்றை விட்டெறிந்தால் எப்படி தத்தி தத்தி  குதித்து செல்லுமோ அது போன்று சிறு கிளைகளில் சிட்டு குருவிகள் ஓர் இடத்தில் உட்காராமல் சதா குதித்துக் கொண்டே இருக்கும். காகங்கள் இல்லாமல் அந்த மரம் ஓய்ந்திருப்பதில்லை. 

வண்டுகள், பூச்சிகள் என அனைத்து உயிர்களும் வந்த வண்ணம் அந்த மரம் எப்பொழுதும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கிறது. அண்ணாந்து வானத்தை பார்த்து விட்டு மீண்டும் மரத்தையே உற்று நோக்குவது தனிமையில் அரைமணி நேரத்தில் பார்க்கக் கிடைக்கும் அழகிய தருணம். மாடியில் இருந்து கீழ் இறங்கி அந்த பக்கமாக மரம் இருக்கும் தெருவில் நடந்து செல்லும் போது மரம் அவ்வளவு அழகாக தெரிவதில்லை. மரத்தின் அடியில் நின்று  பார்க்கும் போது அது வெறும் மரமாகத்தான் காட்சியளிக்கிறது. பார்வைக் கோணம் சற்று மாறும் போது பார்த்து பழகிப்போன ஒன்று புதிதாக காட்சி அளிக்கிறது. 

மரம் உயிர்கள் வாழும் அழகிய உலகம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். இன்றைக்கு போய் பார்த்தால் கூட நிச்சயம் புதிதாக விருந்தினர் ஒருவர் வருகை தந்திருப்பார். புதியவர்களை பார்ப்பது கூட அழகிய அனுபவம்தான். இந்த பெருந்தொற்று காலத்தில் வாகனங்களின்  இரைச்சல் சற்று குறைந்திருக்கிறது. குருவிகள், வண்டுகள் என உயிர்கள் அனைத்தின் சத்தமும் தெளிவாகக் கேட்கிறது.  பார்ப்பதற்கு பெரிதாக தெரியும் வண்டு ஒன்று ரீங்காரம் இட்டுக் கொண்டு மரத்தில் வந்து அமர்கிறது. அந்த ரீங்காரம் நிச்சயம் வண்டு இடும் ஓசை அல்ல. அது வண்டின் சிறகின் படபடப்பில் இருந்து எழும் ஓசை. ஏற்கனவே கேட்டுப் பழகிய சத்தம் அது. இருப்பினும் நினைவில் இருந்து அழிந்து போன சத்தம். கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் சத்தத்திற்கு உரியவர் யார் என்று எளிதில் ஞாபகபகத்திற்கு  கொண்டுவந்துவிடலாம். கண்டிப்பாக அந்த வண்டு குளவி அல்ல. பூக்காத இந்த நேரத்தில் பச்சை மாரத்திடம் பூக்கள் தேடி சாதாரண வண்டுகளும்  குளவிகளும் இங்கு வரத் தேவை இல்லை. தூரத்தில் இருந்து பார்க்கும் போது வண்டினுடைய தலை பச்சை மஞ்சள் கலந்த நிறத்தில் தெரிகிறது. அதுவே தான். பொன்வண்டு! 

பார்த்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது ஊரில் இருந்த கொருக்கலிக்கா மரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் வெட்டி விட்டனர். அனைத்தும் வயதான மரங்கள். எல்லா மரத்தின் காய்களும் ஒரே சுவையில் இருப்பது இல்லை. ஒன்று நெஞ்சை அடைக்கும் அதீத துவர்ப்பு. மற்றொன்று துவர்ப்புக்கும் சற்று கூடின இனிப்பு. அவைகள் பொன் வண்டுகளுக்கேயான  மரங்கள். மரங்கள் வெட்டப்பட்ட பின்பு பொன் வண்டுகளின் வருகையும் நின்று போய் விட்டது. பொன் வண்டுகள் கொருக்கலிக்கா மரத்தில் மாத்திரமே வந்தடங்கும் என்று சொல்வார்கள். அந்த மரம் இல்லை என்றால் அடுத்து இருப்பது காட்டுவா மரங்கள். காட்டுவா மரம் கணிகள் அற்ற மரம். நிழலுக்கு கூட தோதான மரம் அல்ல. காட்டுவா மரத்தின் நிழலில் அமர்ந்தால் எங்கிருந்துதான் தூங்கி வழியும் சோர்வு வந்து சேருமோ தெரியாது.  வண்டுகளின் ஓடுகளை பொன்னிறமாக தக்க வைத்துக் கொள்ள கிடைக்கும் உணவு உண்மையில் உயர்ந்த உணவுதான். கொருக்கலிக்கா மரத்து இலைகள்  அப்படிப்பட்டது.  கொருகலிக்கா மரத்தில் இருந்து கிடைத்த வண்டுகள் எல்லாவற்றையும் சிறு பெட்டிக்குள் வைத்து அந்த இலைகளைக் கொண்டு உணவளித்து அழகு பார்த்ததுண்டு. வண்டின் முதுகுக்கு மேல் கழுத்து நடுவில் விரலை வைக்கக் கூடாது. வைத்தால் விரலை வெட்டிவிட்டும். பச்சை கிளி அலகுகால் கடிப்பது போன்று இது பின் முதுகு கழுத்தால் கடிக்கும். வேடிக்கைக்காக அதன் கழுத்தை நூலில் கட்டி வட்டமிட்டபடி சுற்றுவார்கள். சுற்றும் போது பறப்பதாக நினைத்துக் கொண்டு சிறகுகளை வேகமாக படப்படக்கும். அந்த சத்தம் அதனை துன்புறுத்துபவர்களுக்கு மிகுந்த மகிழிச்சியை அளிக்கும்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்  கையில் கிடைத்த அந்த வண்டு பொக்கிஷத்தை விட மேலானதாக இருந்தது. அதன் தங்க நிறம்  உண்மையில் தங்கத்தின் மதிப்பைக்  காட்டிலும் மிக உயர்ந்தது. தங்கத்தை பார்ப்பதினால் மகிழ்ச்சி வருவது இல்லை. அப்படி மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் நகைக் கடையில் சற்று நேரம் நின்று வேடிக்கை பார்த்தால் போதும் மகிழ்ச்சி கிட்டும். உண்மை அது அல்லை. உடைமை ஆக்குவதில் கிடைப்பதே பெரிய மகிழ்ச்சி. பொன் வண்டு உடைமை ஆகும் போது தங்கத்தைக் காட்டிலும் பெரும் சந்தோஷத்தை அளிக்கும். ஆசை தீர பார்க்க வேண்டும் என்று எண்ணி பெட்டியை திறக்கும் போது  சற்று கவனம் தப்பினால் பொக்கிஷம் பறந்து போய் விடும். 

இப்போது இந்த காட்டுவா மரத்தில் அமர்ந்திருக்கும் பொன்வண்டு பதினைந்து ஆண்டுகளின் இடைவெளியை எளிதில் கடக்கும் படி செய்து விட்டது. அரிய பொக்கிஷம் அது. அதுவும் சென்னையில் அது காணக் கிடைப்பது வைடூரியத்தை கையில் அள்ளிக் கொள்வதற்கு சமம். நம் கைகள் அதனை ஸ்பரிசிக்காமல் இருக்கட்டும். சின்னஞ் சிறிய பொன் வண்டு சுதந்திரமாக சுற்றி திரியட்டும். சொந்தமாக்கிக் கொள்ள ஆசைப்படுவது சிறுபிள்ளைத்தனம். பொன்வண்டு மரத்தில் சுததிந்திரமாக சுற்றித் திரிவது மரத்திற்கும் அழகைக் கூட்டுகிறது.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...