Tuesday, October 27, 2020

கடைசியில் எஞ்சி நிற்பது

https://images.app.goo.gl/dq563dAy1QNehLKbA

வரலாறு முழுக்க மனித சிந்தனை ஒரு மாபெரும் பரிணாம வளர்ச்சியில் பயணித்து கொண்டிருக்கிறது. நேற்றைய சிந்தனை இன்று இல்லை. இன்று எதை இலட்சியக் கனவாக உறுதியாக பற்றி பிடித்துக் கொண்டிருக்கிறோமோ அது நாளை காலாவதியாகிவிட்டிருக்கும். உண்மை என்னவெனில் மனிதர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சிந்திப்பவர்கள் அல்ல. மனிதன் யோசனை செய்யும் விலங்கு என்று சொன்னால் அது பொய்.

அவன் எதையோ நம்புவதற்காக   படைக்கப்பட்ட பிராணி.  மனிதர்கள் எதையோ நம்புகிறார்கள். அதனை உறுதியாக பற்றி பிடித்துக் கொள்கிறார்கள். இங்கே சொந்தமான யோசனை என்று எதுவும் யாருக்கும் இல்லை. சிந்திக்கிறவர்கள் யாரும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு இனக்குழுவுக்காக அல்லது மனித இனம் அனைத்திற்காகவும் யாரோ ஒருவர் என்றோ ஒரு நாள் யோசித்து வைத்து விட்டு போய் விட்டார். அந்த ஒருவரின் யோசனையை அவனுக்கு பின்பு வந்த மக்கள் அனைவரும் ஒட்டுண்ணியைப் போன்று அதனை சார்ந்து அதையே யோசிக்க ஆரம்பித்தார்கள். வரலாற்றில் ஒரே ஒருவன் மட்டுமே சிந்தித்து இருக்கிறான். மற்றவர்கள் அனைவரும் அச்சிந்தனையை மீண்டும் தங்களுடையதாக மாற்றி சிந்திக்க ஆரம்பித்தார்கள். இல்லை இல்லை நம்ப ஆரம்பித்தார்கள். அதனை கேள்வி கேட்காமல் அப்படியே நம்பி எற்றுக் கொண்டார்கள். மாற்று சிந்தனை ஒன்றை முன்வைத்து யாரேனும் கேள்வி கேட்டால் அவர்களை எதிர்க்க ஆரம்பித்தனர். அவர்களை  தீயிலிட்டு கொளுத்தவும் செய்தனர். கருத்தை முதலில் எதிர்க்கிறார்கள் பின்பு பரிசீலனைக்கு உட்படுத்துகிறார்கள் முடிவாக அதனை எற்றுக் கொள்கிறார்கள். அதனை பரிசளித்தவனை மாத்திரம் தண்டிக்கிறார்கள்.

யோசனையை முன்வைத்தவன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள படுவதில்லை. ஆயிரம் பேருக்கு மத்தியில் அவன் ஒருவன் மாத்திரம் அத்தனை பேருக்கும் எதிரியாக கருதப்படுகிறான். ஒருவனை ஆயிரம் பேர் எதிர்க்கிறார்கள். எந்தவித சமரசமுமின்றி அவனும் ஆயிரம் பேரை எதிர்த்து நிற்கிறான். இந்த இரண்டு சாராருக்கு மத்தியில் சமரசம் என்பதே இல்லை. சமரசம் நடந்து இருக்குமானால் இன்று நெருப்பு இல்லை. சக்கரம் இல்லை. எனினும் மனித சிந்தனை, அது தனி மனிதனுடையதாகவே இருந்தாலும் அது ஒட்டு மொத்த சமுகத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது.  

Ayn Randஇன் Howard Roark புதிதாக ஒன்றை கொடுக்க முன் வருகிறான். அது சமூகத்துக்கான பரிசோ சேவையோ அல்ல. ஒன்றை யோசித்தான் கண்டடைந்தான் அவ்வளவே. புதிய தரிசனம் புதிய பார்வை அதுதான் அவனுக்கு முக்கியம்.  எதை புதிதாக முழு சமூகத்துக்கும் பரிசளிக்கிறானோ அது நிராகரிக்கப்படுகிறது. நிராகரிக்கப்படுவது கண்டுபிடிப்பு அல்ல. அதனை சிந்தித்து உருவாக்கிய  Howard Roark மற்றும் அவனது  யோசனை. மக்கள் புதிதாக ஒன்றை பெற்றுக் கொள்ள தயார் ஆனால் அது ஒருவனுடைய  யோசனையின் வழியே வரக்கூடாது. Fountainhead அவர்களுக்கு வேண்டாம் ஆனால் அதன் வற்றாத நீர் பிரவாகம் மாத்திரம் வேண்டும். The Fountainhead  நாவலில் கதை முழுக்க Howard Roark ஒருவரிடமும் தன்னை சமரசம் செய்து கொள்ளவில்லை. தன்னிடமே கூட.  கொஞ்சம் இசைந்து கொடு architect பட்டம் உனக்குத்தான். கொஞ்சம் Compromise செய்து கொள் அமெரிக்காவின் அத்தனை building contractகளும் உனக்குத்தான்.  உன் இலட்சியக் கனவுகள் அனைத்தையும் விட்டு விட்டு என்னுடன் வா என் காதல் முழுமையும் உனக்கே. இப்படி கதை முழுக்க Roark சோதிக்கப்படுகிறாரன். இவைகள் எதுவுமே தன்னை பாதிக்காதது போன்று தன் உயர்ந்த இலட்சியத்தில் உறுதியாக நிற்கிறான். கடைசியில் எஞ்சி நிற்பது Roark க்கும் அவனது இலட்சிய சிந்தனையுமே.  மற்ற அனைவரும் காலத்தில் பழமை அடைந்து பின் தங்கி போய் விடுகிறார்கள். 

புறச்சூழலில் இருந்து எழும் அத்தனை  சோதனைகளும் தாக்குதல்களும் Roarkக்கை எப்படி சோர்வடைய செய்யாமல் வைத்திருக்கிறது என்பது பெரிய ஆச்சரியம். கதையில் அவனை சற்று உற்று நோக்கும் போது Friedrich Nietzscheவின் Super Man நினைவிற்கு வருகிறான். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிற அனைத்து ஒழுக்க மதிப்பீடுகாளுக்கும் அப்பாற்பட்டவன் இந்த சூப்பர் மேன். இந்த சூப்பர் மேன் முன்பதாக மானுடத்தின் மிக உயர்ந்த நற் குணமான கருணை என்பதே அபத்தமான கற்பிதம் என்பது வெளிப்படையாகிறது. கருணை என்பது  அடுத்தவன் சிறுமைப்படும் நிலையைக் கண்டு ஆனந்தமடையும் அகங்காரத்தின் spiritual வடிவம். இவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும் போது  Nietzscheவின் Super Man அசாதாரண மனிதனாக தோற்றம் அளிக்கலாம். விழுமியங்கள் அனைத்தையும் களைந்துவிட்டால் மனிதம் ஏது.  உணர்வுகள் அற்ற மனித ஒழுக்க மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் அந்த  சூப்பர் மேன் தத்துவவாதியின் படைப்பு. அங்கு உணர்வுகளுக்கு எந்த இடம் இல்லை. தத்துவம் உணர்வு நிலையை புறக்கணிக்கிறது. ஆனால் புனைவு தத்துவ சிந்தனையையும்  உணர்வு நிலையையும் ஒன்று சேர  தன்னுள் தக்கவைத்துக் கொள்கிறது. சூப்பர் மேன் கொஞ்சம் அச்சமூட்டும் அசாத்திய ஆளுமை என்று நினைக்க தோன்றுகிறது. Howard Roark மற்றவர்கள் அவனிடம் சென்று தங்கள் மனம் திறந்து பேசுவதை அதிக கவனத்துடனும், கரிசனையுடனும் நிதானமாக கவனிக்கும் இயல்பான மனிதன். எனினும் மற்றவர்கள் அவன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை விட தான் பாதிப்படையும் அளவுக்கு மிகவும் vulnerable மனிதன் அல்ல Roark. அமெரிக்கா வரும்போது Ayn Rand கொண்டுவந்த புத்தகங்களில் Friedrich Nietzscheவின் Thus Spoke Zarathustra முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. சூப்பர் மேனுக்கு Ayn Rand புனைவில் கொஞ்சம் மனிதம் சேர்க்கப்பட வேண்டியிருக்கிறது. Howard Roark அதனை பூர்த்தி செய்து விடுகிறான். 




1 comment:

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...