Tuesday, December 31, 2019

ஜேம்ஸ் ஜாய்ஸின் Ulysses: Hades

நம்மை சுற்றின உலகத்தை கதைகளால் கட்டமைத்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுல்லிஸஸ் வாசிக்கும் போது ஏற்படுகிறது. கதைகள் மாத்திரம் அல்ல நம்பிக்கைகளாலும் அதனை கட்டமைத்து வைத்திருக்கிறோம். நம் முன்னோர்கள் உருவாக்கிய கதைகளைக் கொண்டும் நம்பிக்கைகளைக் கொண்டும் வாழ்வின் யதார்த்தத்தை அணுகுகிறோம். அல்லது இப்படியும் சொல்லலாம், வாழ்வின் யதார்த்தம் என்பதே நம்பிக்கைகள், கதைகளின் கூட்டுமொத்தம். இந்த மாயைக் கொண்டே வாழ்க்கையை அதன் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்ந்து முடித்துவிடுகிறோம். நம்மை சுற்றிலும் பிராண வாயு மூடியிருப்பது போன்று இந்த மாயை நம்மை ஆட்கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின், கதைகளின் கட்டமைப்பிற்கு எதாவது ஒரு ஒற்றை சொல் கொண்டு அழைப்பதற்கு வேறெதுவும் சொற்கள் அகப்படவில்லை. மாயை என்ற வார்த்தையும் அதிக மத நம்பிக்கையின் சாரம் ஏற்றப்பட்ட வார்த்தை. ஆங்கிலத்தில் உத்தேசித்த வார்த்தை என்னவோ illusion. இந்த ஜட உலகத்தை இந்த illusionனைக் கொண்டே புரிந்து கொள்கிறோம், வாழ்கிறோம். இறுதியாக இந்த illusionனைக் கொண்டே கடந்து செல்கிறோம்.
நாவலின் Hades பகுதியில் கதையின் முக்கிய பார்த்திரங்களான Bloom, Steephen Dedulus ஆகியோர் தங்கள் இறந்து போன நன்பர் ஒருவரின் மரண அடக்கத்திற்கு செல்கிறார்கள். கல்லரை வரை இவர்கள் சென்று சேரும்வரை நாவலின் இந்த பகுதி புளூமின் மன ஓட்டத்தில் நகருகிறது. கதையோ Bloomன் உள்மன ஓடையில் நகர்ந்து செல்கிறது. இதனை பிரக்ஞை வெளி என்று சொல்லலாம். முழு நாவலும் ஒன்று Dedulusன் பிரக்ஞை வெளியில் நடக்கிறது அல்லது புளூமின் பிரக்ஞை வெளியில் நடக்கிறது. இதில் யதார்த்தத்தின் கதை என்னவோ சிட்டிகை அளவுதான். ஒருவேளை Joyce இந்த நாவலை யாதார்த்த கதையாக எழுதியிருந்தால் அவருடைய Dubliners கதைகளோடு இதுவும் ஒரு சிறிய கதையாக முடிந்திருக்கும். முழு நாவல் இரு பாத்திரங்களின் பிரக்ஞை வெளியாக வடிவம் கொள்கிறது. முன் சொன்ன இந்த illusion என்பது இந்த மனதின் பிரக்ஞை ஓட்டமாகக் கூட இருக்கலாம். மிருகங்கள் இந்த பிரக்ஞைவெளி உலகத்தைக் கொண்டு வாழ்வதில்லை. அவைகள் ஜட உலகத்தில் தோன்றி மறைந்து விடுகின்றன. மனிதன் மாத்திரம் தனக்கென ஒரு Consciousnessயை உருவாக்கி வைத்திருக்கிறான். அவனுடைய வாழ்வில் அவனுக்கு என உருவாக்கப்பட்ட தொன்மையான இந்த consciousnessக்குள் இருந்து புற உலகத்தை பாக்கிறான் புரிந்து கொள்கிறான். மிருகங்கள் எதுவும் எதற்கும் பெயர் வைத்தது கிடையாது. மனைதன் மாத்திரம் இந்த பிரக்ஞை வெளிக்கு தேவையான மொழியை உண்டாக்கி அதைக் கொண்டு ஜட உலகத்தை தொடர்பு கொள்கிறான்.
Ulyssesயை வாசிக்கும் போது நவீனத்துவம் இந்த தொன்மையான கூட்டு பிரங்ஞையை கேள்விக்குள்ளாக்குகிறதோ என்று தோன்றுகிறது. இந்த மாபெரும் illusion வலைக்குள் இருந்து ஒருவன் மாத்திரம் வெளியே துண்டிக்கப்படுகிறான். வெளியேறியவனுக்கு தான் இதுவரை எதற்குள் பிறந்து பயணித்தானோ அதுவே பிரிதொன்றான மற்றமையாக போய் விடுகிறது. இப்போது அவன் பிரக்ஞைக்கு முன் இருப்பது இந்த கூட்டு பிரக்ஞை மற்றும் இந்த ஜட உலகம்.  கூட்டு பிரக்ஞை வெறும் கட்டுமானம் செய்யப்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பு என்பதை அவன் புரிந்து கொள்கிறான். இந்த illusion இல்லாமல் ஜட உலகத்தை எதிர் கொள்வது என்பது இயலாக காரியம்.
அடக்கத்திற்கு செல்லும் புளூம், அதுவும் ஒரு யூதன், மரணத்தை மதம் கட்டமைத்த, புராணங்கள் கட்டமைத்த நம்பிக்கைகளின் பொய்மையில் இருந்து பார்க்க ஆரம்பிக்கிறான். இப்போது பொய்மை என உணரப்படுகிற அனைத்து நம்பிக்கைக்களும் தனி ஒருவனின் பிரக்ஞையால் கேள்விக்குள்ளாக்க படுகிறது. புளூமிற்கு ஒரு கேள்வி எழுகிறது, ஏன் மனிதன் மாத்திரம் தான் மரிக்கும் போது இந்த அடக்கம் என்னும் சடங்கு தேவைப்படுகிறது. ஏன் புதைக்க வேண்டும். மிருகங்கள் மரிக்கும் போது புதைக்கப்படுவதில்லையே.
இந்த சின்ன விசயம், புதைத்தல் என்பது மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானதாக மாறிவிடுகிறது. இந்த புதைக்குழியில் இருந்துதான் Shakespeare தன் Hamletல் (grave diggers) மாபெரும் தத்துவ விசாரத்தை வழங்குகிறார். இங்கு புதை குழி வெறும் புதை குழியாக இல்லை. அது தன்னை சுற்றிலும் மாபெரும் கதையாடலையும், நம்பிக்கைகளையும், தத்துவ விசாரங்களையும் வைத்திருக்கிறது. மனிதனின் பிரக்ஞை இந்த சவக்குழியை கண்டு அஞ்சுகிறது போலும். அதனால் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றை புராணத்தின் மூலம் உண்டாக்கி வைத்திருக்கிறது. அதுதான் மரணத்துக்கு பின்னான வேறொரு உலகம். ஜட பொருளாக அது வெறும் சவக்குழிதான். ஆனால் அந்த சவக்குழியை நம்பிக்கைகள் மூலம் பிறிதொரு உலகத்திற்குள்ளான வாசலாக பார்க்கிறோம்.  தத்துவம் இந்த ஜட உலகத்தை எதிர்கொள்ள மனிதனை இயல்பு நிலைக்கு கொண்டுவர முற்படுகிறது போலும். புராணமோ யதார்த்தத்தின் வாழ்க்கையைக் காட்டிலும் மிக நம்பிக்கை உடைய மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை கட்டமைக்கிறது. சவக்குழி வேறொரு உலகத்திற்கான வாசல்.
புளூமுக்கோ இந்த வேறொரு உலகத்தின் வாசல் வெறுமனே சவக்குழி. யதார்த்தம் என்னவெனில் இந்த சவக்குழியில் ஒருவன் புதைக்கப்படும் போது அவனுடைய உடல் அழுகி நாற்றம் எடுத்து திரவம் அந்த உடலில் இருந்து வழிய ஆரம்பிக்கும். இங்கேயே putrefy ஆகிவிடுகிறது. இந்த உடலுக்கு வேறொரு உலகம் இல்லை. ஆனால் புளூமின் இந்த கான்ஷியஸ்னஸ் அது என்னவாகும். மிருகங்களுக்கு இந்த கான்ஷியஸ்னஸ் இருக்குமா என்பது தெரியாது. இருக்காதுதான். ஒருவேளை அவைகளுக்கு அது இருந்திருந்தால் அதில் இருந்து அவைகளுக்கும் சில நம்பிக்கைகள் உண்டாகி இருக்கும். பாவம் மனிதன் மாத்திரம் இந்த மாபெரும் மாய வலைக்குள் சிக்கிக் கொள்கிறான். தன்னை விடுவித்துக் கொண்ட புளூமின் இந்த தனிப்பட்ட பிரக்ஞை கூட்டு பிரக்ஞையை கேள்விக்குள்ளாக்கி அதன் நம்பிக்கைகளை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. ஆனால் பிரக்ஞையின் இருப்பை மறுக்க முடியாது. துண்டிக்கப்பட்ட பிரக்ஞையே என்றாலும் அதுவும் பிரக்ஞைதான். புளூம் மற்றும் Dedalus பயணித்த இந்த டப்லின் நகர Hades பயணம் மரணத்தை நோக்கிய தனிப்பட்டவர்களின் பயணம். இது கிரேக்க புராணத்திற்கு ஒப்பானது. பயணமும் தனிப்பட்டவர்களின் பிரக்ஞைக்குள்ளாக நடைபெறுகிறது.      

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...