Sunday, April 29, 2018

எனக்கு ஐந்து[1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும்


எனக்கு ஐந்து[1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும்
சாலையின் திருப்புமுனையில் நின்று கொண்டு ஒருவர் கைப்பிரதிகளை விநியோகித்துக் கொண்டிருப்பார். வேண்டாம் என்று உதாசினம் செய்பவர்கள் பலர். வாங்கி ’ஜோபியில்’ (சட்டைப் பை) போட்டுக் கொள்பவர்கள் சிலர். ஐந்து நிமிடங்கள் அதில் உள்ள உள்ளடக்கத்தை வாசிப்பவர்கள் மிகச் சொற்பம். எத்தனை கதைகள்! அவைகளை வாசித்த பின்பு ஒருவர் இலக்கியம் படிக்க நேரிட்டால் அது டாஸ்டாய் கதை அல்லவா? தாஸ்தாவஸ்கி கதை அல்லவா? என்று ஆச்சரியப்படக் கூடும். அப்படி அந்த கைப்பிரதியில் இருந்து என் ஒன்றாம் வகுப்பில் படிக்கக் கேட்ட கதை இன்றளவும் அது டால்ஸ்டாய் கதையல்லவா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. டாட்ஸ்டாயின் அந்த கதையைப் இப்போது படிக்கும் போதெல்லாம் எனக்கு அந்த ஐந்து வயதில் கதை கேட்ட அனுபவம் அந்த கதையின் மீது மெல்லியதொரு உணர்வாக படர்ந்து செல்லும். கைப்பிரதிகளை வாங்கும் போதெல்லாம் நிச்சயம் ஒரு அருமையான கதை அதில் இருக்கும் என்ற நிச்சயம். வாங்கிய உடன் இரயிலில் ஓரத்தில் அந்த கைப்பிரதியில் இருக்கும் கதைக்கு கொஞ்சம் மரியாதை செலுத்தி வாசிப்பேன்.
இறைமைந்தன் ஒரு உவமைக் கதையைச் சொல்வார். விதைக்கிறவன் விதைக்கப்புறப்பட்டான். சில விதைகள் முட்கள் நிறைந்த இடத்தில் விழுந்தன. சில விதைகள் பாறைகள் நிறைந்த இடத்தில் விழுந்தன. சில விதைகள் வழியோரம் விழுந்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து முளைத்து ஐம்பதும் நூறுமாக பலன் கொடுத்தன. நம்மீது இவ்வாறு விதைக்கப்படும் கதைகள் என்னும் விதைக்கு நம் மனதின் நிலம் கொஞ்சம் இடம் கொடுத்தால் மிக நலமாக இருக்கும். அப்போது வாசிக்கவே ஆரம்பிக்காத பருவம். சிறு பையன் பாதுகாப்புக்காக ஏழாம் வகுப்பு படிக்கும் என் ஊர் அக்காக்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கைப்பிரதி விநியோக்கிக்கப்பட்டிருந்தது. வற்றிய ஏரியில் அந்த ஐந்து பேர் நற்செய்தி கதையை மெல்ல மெல்ல படித்துக் கொண்டே சென்றோம். அதுதான் என் வாழ்க்கையின் முதல் கதை. அந்த கதையின் ஆசிரியன் ஒரு மாபெரும் ரஷ்ய எழுத்தாளன் என்று அன்று தெரியாது. அதுவே முதல் விதையும் கூட. உறைந்து கிடந்த உள்ளம் எழுச்சிக் கொண்டு மலர்ந்த அந்த அனுபவம் இன்னும் எந்தப் பிரதிக்கும் ஏற்படுகிறதில்லை. கதை கேட்டல் என்பது அவ்வளவு அலாதியான அனுபவம்.
பெரிய பணக்காரன் ஒருவன் தன் நிலத்தில் வேலை செய்யும் அடிமைகள் அனைவரையும் அழைத்து நிலங்களை இலவசமாக கொடுக்கப்போவதாக வாக்களிக்கிறார். அது ஒரு நிபந்தனையின் பேரில் நடக்கப்போகிறது. தன் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு தனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ அவ்வளவு தூரம் ஓட வேண்டும். போதும் என்று திருப்தி உண்டான பின் ஓடி முடித்த அந்த இடத்தில் மண்வெட்டியால் ஒரு அடையாளத்தை இட வேண்டும். ஓட ஆரம்பித்ததிலிருந்து அந்த அடையாளமிடப்பட்ட இடம் வரையிலான நிலம் ஓடியவனுக்கே சொந்தமாகும். ஒரு அடிமை மாத்திரம் பேராசையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறான். திராணி உள்ள மட்டும் ஓடுகிறான். அவனுக்கு போதுமான நிலத்தை ஓடி முடிக்கிறான். இன்னும் நீண்ட தூரத்திற்கு நிலம் விரிந்து கிடக்கிறது. ஓடியதில் போதுமான நிலம் கையகப்படுத்தியாயிற்று அதற்கான உழைப்பையும் செலவழித்தாயிற்று. உழைப்பிற்கு ஆதாரமான ஆற்றலும் செல்வழித்தாயிற்று.
ஆசைக்கு ஏது ஆற்றலின் அளவு அல்லது எல்லை? பேராசை தனக்கான எல்லையை உதாசினம் செய்துவிடுகிறது. அதன் ஆற்றலின் விரையத்திற்கும் மீறி ஆசை கொடுத்த உத்வேகத்தில் மேலும் ஓட ஆரம்பிக்கிறான். திரும்பிச் செல்வதற்கான ஆற்றலும் இப்போது விரையமாக்கப்பட்டாயிற்று.
நிபந்தனை என்னவெனில் நிலத்தின் அடுத்த எல்லையில் அடையாளத்தைப் போட்டுவிட்டு திரும்ப வந்துவிட வேண்டும். திரும்பி வந்தால் மட்டுமே நிலம் இல்லையேல் நிலம் கிடையாது. திரும்பி வருவதற்கான தன் ஆற்றலை அவன் ஏற்கனவே தன் எல்லையை மீறி சென்று செலவழித்துவிட்டான். திரும்புவதற்கான ஆற்றல் ஆசை கொடுத்த ஊக்கம். அது தன் உடல் சக்திக்கு மிஞ்சினது. திரும்ப துவங்கிய இடத்திற்கு சென்று நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். ஆசை கொடுத்த ஊக்கத்தில் திரும்ப ஓட ஆரம்பிக்கிறான். எஜமான் நிலத்தைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார். ஓடிவந்தவன் எஜமானனுடைய காலடியில் பொத் என்று விழுகிறான். அவனுக்கான நிலம் இப்பொது உடமையாக்கப்பட காத்துக்கிடக்கிறது. கொடுமை என்னவெனில் அதனை அடைவதற்கு இப்போது அவன் இல்லை.
அவன் ஓடிய அதே நிலத்தில் அவனை புதைக்கிறார்கள். பரந்து விரிந்த அந்த நிலத்தில் அவனுக்கு கடைசியில் எஞ்சியது ஆரடி நிலம் மாத்திரமே! அவன் ஓடிய அத்தனை தூரமும் இந்த ஆரடி நிலத்திற்காக மாத்திரமே. அத்தனை ஏக்கர் நிலமும் இப்போது அவனுக்கானதுதான் அவன் உடல் உடமையாக்கப்போவதோ அந்த சிறிய அளவு உடல் தாங்கும் நிலம் மாத்திரமே.
இப்போது டால்ஸ்டாயின் ”How Much Land Does a Man Need” கதையை வாசிக்கும் போதெல்லாம் 1995ல் கேட்ட அந்தக் கைப்பிரதியின் கதை ஞாபகத்தில் வருகிறது. நான் கேட்ட அந்த கதை இந்தக் கதைதான். அப்போது யாருக்கு தெரியும் அந்த கதை டால்ஸ்டாயின் கதை என்றொ அல்லது அவர் ஒரு ரஷ்ய எழுத்தாளர் என்றோ என. ஆனால் அந்த கைப்பிரதிக்கு கொடுத்த அந்த பதினைந்து நிமிட மரியாதை அதுதான் வாழ்வில் முதல் கதை என்ற விதையின் ஊன்றுதல். அந்தக் கதை அப்போது ஏற்படுத்திய பிரம்மாண்டம் இப்போது போரும் வாழ்வும் நாவலைப் படிக்கும் போது கூட அவ்வளவு பிரம்மாண்டமாக இல்லை. அச்சிறுவயதின் மூளைக்கு அதுதான் பிரம்மாண்டம்.
இப்போதும் கைப்பிரதிகள் கொடுக்கப்படும் போது வாங்கி கதையை வாசிக்க தோன்றுகிறது. அதனை வாங்கி இரயிலின் ஓரத்தில் பத்து நிமிடங்கள். வாசிப்புக்கு நம்மைச் சுற்றிலும் பிரதிகள் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் ஒதுக்குகின்ற அந்த ஐந்து நிமிட வாசிப்புதான் நம் மனது எப்படிப்பட்ட நிலம் என்பதை தீர்மாணிக்கப்போகிறது.


[1] ஐந்தை ’அய்ந்து’ என எழுதினால் எவ்வளவு கடுப்பாகும் என யோசித்து பாருங்கள். ’மை’யை மய் இடமாற்றம் செய்யும் போது ’ஐ’யை அய் இடம் மாற்றினால் தவறு ஒன்றும் இல்லை.


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...