Thursday, November 30, 2017

ஆதித் தேடலும், செட்டிக்கடை வட்டியும்

ஆதித் தேடலும், செட்டிக்கடை வட்டியும்
புலன்களுக்கு சிக்காத எதுவொன்றும் நம்மை அச்சமூட்டக்கூடியவை. அதுவே ஐம்புலன்களின் ஆளுகைக்குள் உட்படும் போது அச்சம் நீங்கி ஆளுகை செய்ய வேண்டும் என்ற ஆவல் மேற்கொள்கிறது. நாம் எவ்வளவு தீரர்கள் என்பது பொருட்டல்ல. நம்முடைய பிரக்ஞையில், உணர்வுகளில் உட்படும் போது அது நமதாக மாறிவிடுகிறது. வானத்தின் உயரமும் கடலின் ஆழமும் நம்மை எப்போதும் பிரமிக்க வைக்கக்கூடியவைகள். யாரேனும் ஒருவர் அவைகளின் எல்லையைத் தொட்டுவிட்டு வரும் போது அந்த ஒருவரின் அனுபவம் நம் அனைவரின் அகந்தையாக மாறிவிடுகிறது. அந்த ஒருவரின் எல்லையைப்பற்றியக் கண்டுபிடிப்பு நம்முடையதாகவும் மாறிவிடுகிறது. காரணம் இதுதான்: அதுவரை எல்லையே ஒன்று கிடையாது என்ற சூட்சமத்தில் வாழ்ந்துவந்தோம் அதனால் அச்சம் பீடித்திருந்தது. எல்லை ஒன்று உண்டு என சொன்ன பின்பு அச்சம் நீங்கி “இப்பிரபஞ்சம் என்னுடையது” என்ற கர்வம் ஏற்படுகிறது. முடிவே இல்லாத ஒன்றில் நம் அச்சத்தை எப்போதும் வைத்திருக்கிறோம். முடிவற்றதின் எல்லையைக் கண்டடையும் போது அதுவரை நாம் வைத்திருந்த அனைத்துக் கற்பிதங்களும் தகர்ந்து தர்க்கத்திற்கு உள்ளாகிறது. புலன்களுக்கு அகப்படாதவரை எதோ ஒன்று நமக்கான வணக்கதிற்குறிய பொருளாக துதிபாடப்படுகிறது. அதுவே நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வரும் போது அது தர்க்கத்திற்குள்ளாக்கப்பட்டு முற்றும் முடிய அலசி ஆராயப்படுகிறது.
நம் கண்கள் நோக்கும் தூரமே நம்முடைய ஆதிக்க எல்லை. நம் உடலின் உணர்வுகள் தாங்கும் புற சூழல்களே நம்முடைய பலம். நம் மனதிற்கு ஆட்பட்ட இப்பிரபஞ்ச அறிவே நம்முடைய சித்தத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. இவைகளுக்கு மீறின ஒன்றினை போனால் போகட்டும் என்று விட்டு வைப்பதில்லை நாம். அதனை கண்டடையும் வரை தேடி அலைகிறோம். அந்த தேடலின் பயணமே நம்முடைய வாழ்வினை அர்த்தங்கொள்ளச் செய்கிறது. மற்றபடி எப்போது ஒன்று கண்டுபிடிக்கப்பட்டாயிற்றோ அதோடு நம்முடைய பயணமும் முடிவடைகிறது, வாழ்வின் மீதான இச்சையும் முடிந்துவிடுகிறது. இச்சை முடிந்த பின் மரணமே நமக்கான ஒரே ஒரு வாயில். அதில் நுழைந்து இன்மையின் அமைதியில் உறைய வேண்டியதுதான்.
தேடல் மனிதனை முன் நோக்கி நகரச் செய்து கொண்டே இருக்கிறது. தேடல் நின்றுவிடும் தருணம் உயிர் இயக்கம் நிற்கும் தருணமாகிறது. இது போய்க்கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை தேடுகின்ற பொருள் கிடைக்காவிட்டால் விரக்தியில் அது இல்லவே இல்லை என்று மூட்டையைக் கட்டிவிடுகிறோம். எனினும் இல்லை என்ற அது இருக்குமோ என்ற கேள்வி நம்மை போட்டு துளைத்துக் கொண்டே இருக்கத்தான் செய்யும். அதனை சரி கட்ட அதற்கான மாற்றுத் தேடல் ஒன்றை கண்டுபிடித்தாக வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எவ்வளவு அற்பமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த ஒற்றை தேடல் முளைப்பித்த ஆயிரமாயிரம் கோடி தேடல்கள் தன்னில் சீக்கரத்தில் முடிவுக்கு வந்துவிடுகின்றன. தேடலில் திருப்தி கண்ட பின்பு மற்றுமொன்று. ஆனால் அந்த ஆதித் தேடலை மாத்திரம் நாம் விடப்போவதே இல்லை. செட்டிக்கடை வட்டி போன்று அதன் பருமன் பெருத்துக் கொண்டே இருக்கும். வானை முட்டும் அளவிற்கு வளர்ந்து கொண்டே இருக்கும். நாமும் அதைப் பற்றி கவலைப்படாமல் அதனை அசட்டை செய்து கொண்டே அதனை வளர விட்டுக் கொண்டிருப்போம். அது நம்மை விடப்போவதில்லை.
சரி, என்னதான் அந்த ஆதித் தேடல்? இன்னது என்று தெரிந்தால் நாம் ஏன் அதனை தேடிக் கொண்டிருக்கிறோம். அதன் பெயர் தெரியாததினால் தானே அதனை அது என்றும் இது என்றும் அழைக்கின்றோம். மேற்கத்திய நாடக ஆசிரியர் ஒருவர் அதன Godot என்கிறார். அந்த சூட்சமம் நம்மை இன்னும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. அச்சுறுத்தலின் நடுவே நமக்கும் ஒரு கட்டியங்காரன் தேவைப்படுகிறான். நம் கண்முன்பதாக வந்து நின்று சேட்டைகள் செய்துவிட்டு சிரிக்கவைத்துவிட்டு போய்விடுகிறான். சிரிப்பு அதன் உச்சத்தில் வயிற்றை வலிக்கச் செய்யும் அளவிற்கு உடலில் ஒரு மாற்றத்தையும் மனதளவில் ஒரு கிளுகிளுப்பையும் உண்டாக்கிவிட்டு மறைந்து விடுகிறது. ஹாஸ்யம் முடிந்த பின்பு மீண்டும் பூதாகரமான அந்தத் தேடல் கண் முன்பு கோரத்தாண்டவம் ஆடுகிறது. “கட்டி அழும்போதும் தாண்டவக் கோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக் கோனே”. பணமா? மரணமோ! இருக்காது. வேறு ஏதோ ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அந்த எதுவுமற்ற ஒன்றுதான் எது.
நாமும் அதற்கு கொஞ்சம் மரியாதைக் கொடுத்து ”சரி” தேடலாமே என ஆரம்பிப்போம். “கண்டுபிடி பாக்கலாம்”ன்னு கண்ணாமூச்சியாட்டம் ஆடுகிறது. தேடி தேடி களைத்து விட்டு வேலையைப் பார்க்க போய்விடுவோம். மீண்டும் நம்மை தொந்தரவு செய்து நான் இருப்பதையே மறந்து போய்விட்டாயா? என ஒரு குற்றச்சாட்டு. நாமும் அது போங்கு காட்டுகிறதே என்று அதனை விட்டுவிடாமல் மீண்டும் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு உடன்பட்டுவிடுகிறோம்.
நமக்கும் வேறுவேலையில்லை. அதற்கும் ஓய்வு உலைச்சல் இல்லை. காலங்கள் தோறும் மக்களை படாத பாடுபடுத்துகிறது. இதற்கிடையில் அதனை சரிகட்டுவதற்கு நாமே உண்டாக்கி கண்டுபிடுத்துக் கொண்ட கண்ணாமூச்சி ஆட்டங்கள் நூறு ஆயிரம் கோடி. அனைத்தும் ஒருபுறம் இருக்க அந்த ஒன்றை கண்ணாமூச்சி ஆட்டத்தை ஒருவரும் நிறுத்தப் போவதில்லை. ஆட்டம் தொடர்ந்து கொண்டே போகும் போலிருக்கிறது. இதற்கிடையில் நம்மக்கிருக்கும் ஒரே ஒரு ஆசுவாசம் அந்த கோமாளிக் கூட்டம் மாத்திரமே. அவர்களை கூப்பிட்டு சேட்டைகள் பல செய்யவைத்து கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள வேண்டியதுதான். அவர்களும் காலத்திற்கு ஏற்றார்போன்று ஓவ்வொரு பெயரில் வந்து கொண்டே இருக்கிறார்கள். பதினாறாம் நூற்றாடிர்க்கு ஃபால்ஸ்டாப், சான்கோ பான்சா, நம்முடைய காலத்திற்கு சார்லிசாப்லேன் என அவர்கள் உடலை சுருக்கியும் பெருக்கியும் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களாவது அந்த தேடலின் வலியில் இருந்து தப்பித்து இருந்தார்களா என்று பார்த்தால். அவர்கள் நம்மைவிட மோசமானவர்கள்.  

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...