உசிலம்பட்டி காற்றாலையும், உள்ளூர் குயிக்சாட்டுகளும் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Thursday, June 8, 2017

உசிலம்பட்டி காற்றாலையும், உள்ளூர் குயிக்சாட்டுகளும்


கள்ளிப்பட்டியானால் என்ன? காற்றாலைகளே இல்லாத உசிலம்பட்டியானால் என்ன? நம்முடைய கட்டுரையின் கருவின் கட்டாயத்திற்காக புனைவிற்காகவாவது ஒரே ஒரு காற்றாலையை நம்முடைய அசகாய வீரனுக்காக தற்காலிகமாக அங்கே நட்டுவைப்போமாக.   
ஒரே ஒரு முறை புனைவில் ஒரு சாகச வீரன் அரக்கர்களை வீழ்த்த முயன்று தோற்று போனான். அந்த தோல்விதான் புனைவை யதார்த்தமாக்கியது. ஒருவேளை அவன் அந்த அரக்கர்களை அழித்திருந்தால் அவன் ஏறக்குறைய ஐநூறு நூற்றாண்டுகளுக்கு ஞாபகத்தில் இல்லாமல் போய் இருப்பான். அவனுடைய வெற்றி கற்பனைக்கதையாக வாசிக்கப்பட்டு என்றோ மறக்கப்பட்டிருந்திருக்கும். அவனுடைய தோல்வியும் அவனுடைய பார்வையில் இருந்த மாய வித்தையும் அவனை கோமாளியாக என்றென்றைக்கும் நம் நினைவில் வைக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. காலம் காலமாக இருந்து வந்த அந்த சாகச வீரம் அசட்டுத்தனமாக்கப்பட்டுவிட்டது. இதையெல்லாம் ஏற்படுத்தியது அந்த படைப்பாளியின் கதையாடல். அதுவரையில் என்றும் இல்லாத ஒரு கதையாடலையும் கதையையும் வைத்துவிட்டுப் போய் விட்டான். அது தன்னில் இன்றும் தனித்துவமாக நிலைநின்று கொண்டிருக்கிறது.
டான்குவிக்சாட் அசகாய வீரன். தன் உதவியாளன் சான்கோ பான்சோவுடன் வீர சாகசம் நிகழ்த்தி தனக்கென ஒரு நாட்டை பிடிக்க கிளம்பினான். அவன் அதுவரை புத்தகங்களின் உலகத்தில் தன்னை மூழ்கடித்து கொண்டிருந்திருந்தான். தனக்கென ஒரு சிந்தனை தனக்கென ஒரு உலகம், அதிலேயே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். வீர சாகச பயணத்தில் திடீர் என்று அவன் கண் முன்பதாக அரக்கர்கள் நின்று கொண்டிருந்தார்கள். சான்கோவிற்கோ அவர்கள் நம்முடைய உசிலம்பட்டி காற்றாலைகள். குவிக்சாட்டுக்கிற்கோ நிச்சயமாக அவர்கள் அரக்கர்கள்தான். சான்கோ நம்மைப் போன்று ஓரு சாமான்யன். அவன் கண்ணுக்கு காற்றாலை காற்றாலையாகத்தான் தெரியும். ஆனால் குயிக்ஸாட்டுக்கு அது காற்றாலை என்று என்னதான் அழுத்தம் திருத்தமாக சொன்னாலும் கேட்கவும் மாட்டான் நம்பவும் மாட்டான். ஈட்டியை எடுத்துக் கொண்டு அரக்கர்களை அழிக்க சென்று விட்டான். அசுரத்தனமாக இறக்கைகள் அவனை கொசுவை அடிப்பது போன்று ஒரு தாக்கு தாக்கி கீழே தள்ளி விட்டது. எலும்புகள் முறிந்து விட்டன.
குயிக்ஸாட்டுக்கோ அவர்கள் அரக்கர்கள், சான்கோவுக்கும் நமக்கும் அவர்கள் வெறுமனே காற்றலைகள். ஒருவேளை அன்று இருந்த வாசகர்களுக்கு அவைகள் யாரோ? அது அவர்களுக்குத்தான் தெரியும். அவைகள் அன்றைய ஸ்பெயின் நாட்டின் அரசியல் சிஸ்டமா அல்லது அரசியல்வாதிகளா என்று. அவர்கள் கண்டிப்பாக குயிக்சாட்டையும், காற்றாலையையும் நம்மைவிட மிக சுவாரசியமாக வாசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு அப்பட்டமாக அந்த நாவல் அன்றைக்கான அரசியல் நாவலாகத்தான் இருந்திருக்கும். நமக்கோ என்ட்டர்டெயின் பன்னும் வெறுமனே கதை அவ்வளவுதான்.
இருப்பினும் உசிலம்பட்டி காற்றாலைகளைப் பற்றிதான் யாரும் எதையும் எழுதுவதற்கில்லை. இருப்பினும் லா மான்சாவின் காற்றாலையைக் கொண்டு இன்றைய உசிலம்பட்டி காற்றாலையை நன்றாக விளங்கிக் கொல்லலாம் என்றுதான் நினைக்கிறேன். அப்படியெனில் நம்முடைய குயிக்சாட்டுகள் யார்?
சிஸ்டம் சரி இல்லை என்று புலம்பினால் சரி. அது நியாயமான புலம்பல். என்னைக் கேட்டால் அதைப் பற்றி புலம்பாதவன் ஒரு பொறுப்பற்ற இந்தியன் Anti இந்தியன் என்று கூட நான் சொல்லுவேன். சரி நான் சிஸ்ட்டத்தை மாற்றுகிறேன் பார் என்று கையில் இருக்கும் ஈட்டியை எடுத்துக் கொண்டு காற்றாலையை அடிக்க போனால்! ஒரு மாதத்திற்கு வீட்டில் மின் விளக்கு எரியாதே. இபோது உசிலம்பட்டி காற்றாளையின் மீது தவறா அல்லது நம்மூர் குயிஸாட்டுகளின் தவறா என்பது இன்னும் நமக்கு விளங்கவில்லை. இருப்பினும் இந்த குயிக்சாட்டுகள் சும்மா இருக்க போவதில்லை. காற்றாலையும் தன் அசுரத்தனமான சுழற்சியையும் விடப்போவதில்லை. சான்கோக்களாகிய நமக்கும் மின்சார நட்டம் எதுவும் வரப்போவதில்லை. அது அப்படியே சுழன்று கொண்டே இருக்கும். காற்றாலை வேகமாக சுற்றவில்லை என்று நம்மை நம்ப வைத்துவிட்டார்களே அதுதான் இப்போது நமக்கு மிகப் பெரிய பிரச்சனையே. அது காலம் காலமாக அப்படியேத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. வேகமாக சுற்றவேண்டுமானால் அது காற்றின் பிரச்சனை அதற்கு காற்றாலை என்ன செய்யும்.
“அடே காற்றாலை வேகமாக சுற்றவில்லையடா”.
 “ஆமாம் சுற்றவில்லைதான். அதற்கு என்ன செய்ய.”
”இப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறாயே. வேகமாக சுற்ற நாம் எதையாவது செய்தாக வேண்டாமா?”
“”ஆமாம் எதையாவது செய்துதான் ஆக வேண்டும் ஆனால் என்ன செய்ய?”
இப்போது குயிக்சாட்டிடம் குற்றவாளிகளாக நிற்பது நாம்தான். நமக்கு நன்றாகத் தெரியும் நம்மால் எதையும் செய்ய முடியாது என்று. இருப்பினும் அதனை அந்த அசடனிடம் எப்படி சொல்வது.
”அது அப்படித்தாங்க சுற்றும். ஆனா சுற்றிகொண்டே இருக்கும். கவலைப்படாதீங்க”
என்று சொன்னால் பதிலுக்கு நம்முடைய மனசாட்சியே நம்மை பொறுப்பற்றவர்கள் என்று குற்றப்படுத்திவிடும். இந்தப் பிரச்சனையில் இருந்து நம்மால் மீளவே முடியாது.
ஆனால் புதிது புதிதாக குயிக்ஸாட்டுகள் தோன்றும் போது நமக்கு மனதில் ஓரத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. “கண்டிப்பா இந்த முறை இந்த நெப்போலியன், இந்த ஹிட்லர், எதையாவது செய்துவிடுவான் என்று நம்புகிறோம்.” பத்து குயிக்சாட்டுகள் தோற்றுப் போய் எலும்பை முறித்துக் கொண்டாலும் நமக்கு குயிக்ஸாட்டுகளின் மீது இருக்கும் நம்பிக்கை மாத்திரம் மாறப் போவதே இல்லை. நாமும் அவர்களை அனுமத்தித்துக் கொண்டே இருக்கிறோம். அந்த உசிலம்பட்டி காற்றலையும் அவர்கள் எலும்பை தவறாமல் எண்ணிவிடுகிறது. கடைசியில் அவகளைப் பார்த்து நாம் சிரித்ததுதான் மிச்சம்.

இனியும் குயிக்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கப் போகிறார்கள் அந்த உசிலம்பட்டி காற்றலையும் தன் கைவரிசையை காட்டத்தான் போகிறது. கண்டிப்பாக நம்முடைய உசிலம்பட்டி காற்றாலை அது பாட்டிற்கு மெதுவாக தன் றெக்கைகளை சுழற்றிக் கொண்டே நமக்கு வேண்டிய மின்சாரத்தைக் கொடுத்துகொண்டேதான் இருக்கப்போகிறது. ஆனால் அந்த ஐயோ பாவம் குயிக்சாட்டுகளை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. இருப்பினும் அவர்களைப் பார்த்து நாம் சிரிக்கக் கூடாது. அவர்களுடைய தையிரியத்தை பாராட்ட வேண்டும். 
உசிலம்பட்டி காற்றாலையும், உள்ளூர் குயிக்சாட்டுகளும் Reviewed by Arul Scott on 7:22 AM Rating: 5 கள்ளிப்பட்டியானால் என்ன? காற்றாலைகளே இல்லாத உசிலம்பட்டியானால் என்ன? நம்முடைய கட்டுரையின் கருவின் கட்டாயத்திற்காக புனைவிற்காகவாவது ஒ...

No comments: