Wednesday, December 31, 2025

இரு துரதிருஷ்டசாலிகள்



இரு துரதிருஷ்டசாலிகள்

    என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி H அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.

    பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒன்றை பொருத்த வேண்டும் என்றார். மொத்தமாக ஏழாயிரம் செலவாகும் என்றார். புதிய ரேடியேட்டர் 3000 + தண்ணீர் களன் 1500 + கூலண்ட் ஆயில் 500 + பழுது பார்க்கும் கூலி மீதி 2000 = மொத்தம் ஏழாயிரத்து ஐநூறு. இன்று  வாட்ச் கடையாக இருந்தாலும் சரி கார் மெக்கானிக் கடையாக இருந்தாலும் சரி அவர்கள் அங்கே இருப்பது பழுது பார்ப்பதற்காக அல்ல பழைய உதிரி பாகங்களை நீக்கி புதியவைகளை ரீஅசம்பல் செய்வதற்காக. பாகங்களை தூசி தட்டி மீண்டும் பொருத்தினாலே போதும் இயந்திரம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்.

    இன்ஜினுக்கும் கொதி நீர் கலன் குடுவைக்கும் இடையில் உள்ள சிறு குழாய் பழுதுபட்டுவிட்டது. 2002 மாடல் என்பதால் நாட்கணக்கில் கிடந்து ரேடியேட்டரின் அடி பாகமும்  கொஞ்சம் பழுதாகிவிட்டது. இந்த பழுதுகளை ஒட்டியோ பற்ற வைத்தோ சரி செய்துவிடலாம். அவர்களுக்கு அதற்கு நேரமோ எண்ணமோ கிடையாது. புதியதை வாங்கி மாட்டும் வரையில் வண்டி ஷெட்டிலேயே இருக்கட்டும் என்றார்கள்.  நாட்கள் இரண்டு மூன்று எனக் கடந்தன. எங்கு விசாரித்தாலும் பழைய மாடல் என்பதால் புது ரேடியேட்டர் கையிருப்பு இல்லையாம். உதிரி பாகங்களுக்கு பேர் போன மௌன்ட் ரோட்டில் கூட கையிருப்பு இல்லையாம். கடைசியாக மெக்கானிக் தன் சுய நிலைக்கு வந்தார் அதாவது உண்மையாகவே இயந்தரத்தை பழுது பார்க்கும் மெக்கானிக்காக மாறினார். ரேடியேட்டரின் அடி பாகத்தை வெல்ட் செய்து சரி செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். இணைக்கும் குழாய் பற்றி பிரச்சனை இல்லை புதிதாக வாங்கிக் கொள்ளலாம் என்றார். நல்ல வேளை கையைக் கடிக்கும் பெரும் செலவில் இருந்து தப்பித்துக் கொண்டேன்.  

    கடைசியாக பழுது நீக்கியாகி விட்டது ஷெட்டில் மற்ற வண்டிகளுக்கு இடம் இல்லை தயவு செய்து வண்டியை எடுத்துச் செல்லவும் என்ற குறுஞ்செய்தி வந்தது. பெருமகிழ்சி என்னை ஆட்கொண்டது. வாகனத்தை அப்பொழுதுதான் புதிதாக வாங்கின உணர்வு மேற்கொண்டது. ஒரு வருடமாக ஓட்ட பழகியும் வாகனத்தை புதிதாக அணுகுவது போன்று இருந்தது. The Zen and the Art of Motorcycle Maintenance  புத்தகத்தில் ராபர்ட் ஃப்ரிஸ்ஸிங் இவ்வாறு கூறுவார்: யாரும் அற்ற நெடுஞ்சாலையில் காரை ஒட்டுவதை விட இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணிப்பது புதுமையான அனுபவம் என்று. நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது நாம் வெளி உலகத்தில் இருந்து கண்ணாடி தடுப்புகளின் வழியே முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறோம். அங்கு பயண அனுபவம் என்பதே கிடையாது. இரு சக்கர வாகனம் முழுக்க முழுக்க அந்த பயண அனுபவத்தில் தடுப்புகள் இன்றி நம்மை ஒன்றாக்கி விடுகிறது.  ஆனால் இந்தியர்களாகிய நமக்கு இருசக்கர மோட்டார் வாகனத்தை விட கார் ஓட்டும் அனுபவம்தான் மிகவும் அலாதியானது. பாதுகாப்பு கவசம் கூடு போன்று நம்மை சூழ்ந்திருக்க நெடுஞ்சாலையில் அச்சம் இன்றி பயணிப்பது அலாதியான அனுபவம்தான். நாம் எதோ ஒன்றினுள் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு நாம் காரை செலுத்தும் போது நம்மை குதூகலமடையச் செய்கிறது.

    என்னுடைய 800 பழுது நீங்கி சரியான புத்துணர்வின் மகிழ்ச்சியோடு பேராசிரியர் கட்டியங்காரனை சென்று பார்த்துவிட்டு வரலாமே என்று காரை திருவான்மியூர் நோக்கி செலுத்தினேன். அவரை அவரது புது ஜாகையில் முதன் முறையாக சந்திக்கப் போகிறேன். மூன்றாவது மாடி ஒன்றில் சிறு அறை ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார் என்ற செய்தி முன்கூட்டியே தெரியும் ஆகையால் நேராக அவரது  இருப்பிடத்திற்கே  விரைந்தேன். மருதீஸ்வரர் கோயிலின் பின் பக்கம் உள்ள தெப்பக் குளம் அருகில் தான் இருந்தது அந்தக் கட்டிடம். ரஸ்கோல்நிக்கோவின் அறை போன்று வாதுமைக் கோட்டையின் (nutshell) உள்ளளவுக்கு ஈடாக இருந்தது அந்த சிறிய அறை. குறுகலாக மேலே நீண்டு செல்லும் படிகளை அண்ணாந்து பார்க்கும் போதே அயர்ச்சி மேலிட்டது. அங்கு நான் சென்றடையும் போது மிகத் தீவிரமாக ஏதோ புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டு குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். புத்தகத்தின் முன் அட்டையில் Bakhtin and Cultural Theory என்று பெயரிட்டிருந்தது. அவரே வா என்று அழைக்கட்டும் என்று வாசலில் சில நொடிகள் நின்று பார்த்தேன். ஆசாமி என்னை கண்டு கொள்ளவே இல்லை. தெரிந்ததுதான். அவராகவே வா என்று அழைக்க மாட்டார். நாம் தான் உரிமை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று அமர வேண்டும். அது சண்டையானாலும் சரி, உவகை தரும் அறிவார்ந்த உரையாடலானாலும் சரி வெளியேறும் போது 'சந்திக்கலாம்', ' போய் வருகிறேன்' என்ற சம்பிரதாய வார்த்தைகள்  எல்லாம் அவசியம் இல்லை. நம் பாட்டுக்கு உள்ளே போகலாம் வெளியேறலாம். நான் வருவதைக் கூட கவனிக்காமல் நான் ஏதோ அவருடனே அந்த அறையை பல வருட காலங்கள் பகிர்ந்து கொண்டிருப்பவன் போன்று மிக இயல்பாக இருப்பார். இது வாடிக்கைதான். சற்று நேரம் கழித்து புத்தகத்தில் உள்ள பக்தின் பி எச் டி நேர்முகத்தேர்வு பற்றின கட்டுரையைப் பற்றி பேச ஆரம்பித்தார். பேராசிரியர் /Az:h/ அக்கட்டுரையை குறைந்து ஒரு மாதத்திற்கு  மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று சொன்னாராம். (குறிப்பு:  Az:h என்பது உருபன் அல்ல ஒலிப்பான். இதன் ஒலி வடிவம் தான் முக்கியம் வரி வடிவம் அல்ல). அப்போதுதான் அதன் சாரம் உள்ளே இறங்குமாம். பின்பு மடிக்கணினி பக்கம் திரும்பி வலைப்பூவில் ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்திருந்த ஆங்கிலக் கட்டுரையை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தார். வலைப்பூவில் கட்டுரை The Ridiculous Dream of a Fantastic Man என்று தலைப்பிட்டிருந்தது.

    கடைசியாக உரையாடல் என்னுடைய கார் பழுதான கதையின் பக்கம் திரும்பியது. எனக்கு உள்ளூர கொஞ்சம் எரிச்சல். கார் பழுதானதற்கு சென்ற வாரம் கட்டியங்காரன் அதில் அமர்ந்த துரதிருஷ்டம்தான் காரணம் என்று அவரிடம் பூடகமாக சொன்னேன். சீற்றம் உச்சிக்கு ஏறிவிட்டது. நீ ஒரு நவீன மனிதன் என்று நினைத்தேன். இப்படி தரம் கெட்ட ஒரு அடிப்படைவாதியைப் போன்று யோசிக்கும் ஆசாமி என்று தெரிந்திருந்தால் உன்னுடன் சகவாசமே வைதத்திருந்திருக்க மாட்டேன் என்று கத்த ஆரம்பித்தார். பதிலுக்கு என்னையும் ஒரு துரதிருஷ்டம் பிடித்த ஆள்தான் என்று சாட ஆரம்பித்தார். ஏன் என்று கேட்டதற்கு போனவாரம் என்னால்தான் அவர் ஐயாயிரம் தண்டம் காட்ட வேண்டியதாயிற்று என்றார். காரணம் கேட்டதற்கு சென்றவாரம் நடந்த கதையைச் சொன்னார்.

    சென்றவாரம் அவரை விட்டு பிரியும் போது சிகரெட் பிடித்தண்ணமாக தேனீர்கடையில் அமர்ந்திருந்தார் என்று சொன்னேன் அல்லவா. அன்றுதான் புகைபொருள் ஒழிப்பு இலாகாவைச் சார்ந்த அதிகாரி ஒருவர் அங்கு ஆய்வுக்காக வந்து சீருடையின்றி நோட்டம் விட்டிருக்கிறார். நம்முடைய ஆசாமி எதைப் பற்றியும் யாரைப்பற்றியும் கவலை இன்றி புகையை நன்கு உள்ளிழுத்து வெளியேற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அபராதம் ரூபாய் ஐயாயிரம் தீட்டியிருக்கிறார்கள். ஒருவரும் இன்று பொது வெளியில் புகை பிடிப்பது இல்லை. இவரோ புகைப்பிடிகக் கக்கூடாது என்ற பலகையைப் பார்த்த பின்பும் கூட மீறியிருக்கிறார் என்றால் என்ன நெஞ்சழுத்தம் அவருக்கு. போதாக்குறைக்கு அவர் தண்டம் கட்ட நான் தான் காரணமாம். நான் தான் துரதிருஷ்ட்டசாலியாம். இப்போது எங்கள் இருவரில் யார் அடிப்படைவாதி என்பது தெரியவில்லை.

    வீட்டுக்கு கிளம்பலாம் என்று எத்தனித்த போது மேசையின் மீது அழைப்பு மடல் ஒன்று இருக்கக் கண்டேன். இன்று சாயந்தரம் கலாக்ஷேத்ராவில் டான் குவிக்சாட் கதையின் கதக்களி நாடகம் அரங்கேற்றம் இருப்பதாக இருந்தது. இதுதானே விருந்துக்கு இணையான இன்றைய நற்செய்தி ஏன் இதைப் பற்றி அவர் முதலிலேயே கூறவில்லை என்று ஆவலோடு அழைப்பு மடலை எடுத்து பார்த்தேன். சாயந்தரம் ஆறு மணி அளவில் டான் குவிக்சாட் கதக்களி அரங்கேற்றம் நிழக இருப்பதாக இருந்தது. அது எப்படி நாவல் என்கிற நவீன கதையை பழைய பாரம்பரிய நாடக/நாட்டியக் கலையில் அரங்கேற்ற முடியும் என்று ஆச்சரியமடைந்தேன். முதலில் அது சாத்தியம்தானா. பல ஆண்டுகளுக்கு முன்பு இதே கலாக்ஷேத்ராவில் காஷ்மீர் உள்ளூர் கூத்துக் கலைஞர்கள் ஷேக்ஸ்பியரின்  கிங் லியர் நாடகத்தை கூத்து வடிவில் அரங்கேற்றினார்கள். அதைப் பார்த்து அசந்து போனேன். இன்று மற்றொரு அதிசயம் நிகழ இருக்கிறது. இருவருமாக காரிலேயே நாடக அரங்கிற்கு செல்லலாம்  என்ற முடிவுக்கு வந்தோம். டான் குவிக்சட் நாடகம் பார்க்க செல்லும் இருவரில் யார் குவிக்சாட் யார் சான்சோ என்று தெரியவில்லை. இருப்பினும் நாங்கள் இருவரும் கடைந்தெடுத்த அடிப்படைவாதிகள் என்பதை மட்டும் இந்த கொஞ்ச நேர உரையாடலில் ஒருவருகொருவர் மெய்ப்பித்துக் கொண்டோம்.  


No comments:

Post a Comment

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜி...