Tuesday, December 12, 2023

The Pillars of the Earth


Ken Follettன் The Pillars of the Earth ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகம் எண்ணிக்கைகளைக் கொண்ட வரலாற்று நாவல். நாவலின் கதை நடக்கும் இடம் இங்கிலாந்தில் உள்ள கற்பனை நகரமான கிங்ஸ் பிரிட்ஜ். கற்பனை நகரத்தில் பிரம்மாண்டமான தேவாலயம் ஒன்றும் கட்டப்படுகிறது. அது கட்டி முடிக்கப்பட சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. கட்டிடம் முடிவடையும் போது மூன்றாவது தலைமுறை அதன் முழுமையை காண்கிறது. நாவலின் பக்கங்களும் சரி, அதன் நீண்ட நெடிய காலமும் சரி, பாத்திரங்களின் எண்ணிக்கைகளும் சரி, கட்டி முடிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரம்மாண்டமும் சரி அனைத்தும் ஒன்று சேர்ந்து வாசகனை சற்று பயமுறுத்தக் கூடியவைகள் தான். வாசகனை தூரத்தில் நிற்க வைத்து அருகில் அண்ட விடாமல் விலக்கி வைக்கும் தன்மை கொண்ட பிரம்மாண்ட புனைவு இது. 

பதிமூன்று வருடங்களுக்கு முன்பு (2010) சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறைக்கு புத்தகங்கள் வாங்க மானியம் ஒன்று வழங்கப்பட்டது. வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்து முழுச் சுதந்திரமும் அளிக்கப்பட்டது. புத்தகங்களை வாங்கும் போது இலக்கிய மற்றும் இலக்கிய திறனாய்வு (literary theory) புத்தகங்களின் வரிசையில் கேளிக்கை புனைவுகளும் கொஞ்சம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பேரில் Ken Follettன் The Pillars of the Earth நாவலும் Mario Puzoவின் The Godfather நாவலும் வாங்கப்பட்டன. The Pillars of the Earth எண்ணிக்கைகள் அதிகம் கொண்ட அடர்த்தியான புத்தகம். புத்தகத்தின் அட்டைப் படமும், வடிவமைப்பும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. கையில் எடுக்கும் போதே வாசிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிடும். வாசித்தே ஆக வேண்டிய பாப்புலர் ஃபிக்‌ஷன் என்று வேறு அறிமுகப்படுத்தப்பட்டது. நாவலை இரவல் வாங்கி ஒருவாரம் வாசிக்க முயற்சி நடந்தது. வெறும் நூறு பக்கங்கள் மட்டும்தான் வாசிக்க முடிந்தது. அதற்கு மேல் கதை நகரவில்லை. M.Phil ஆய்வு வேறு அப்போது சென்று கொண்டு இருந்தது. அதற்கிடையில் நாவலை வாசிக்க முடியாமல் திருப்பி கொடுக்க வேண்டியதாயிற்று. 

புத்தகத்தை ஒப்படைத்த ஒருவாரம் கழித்து புத்தக அலமாரியில் நாவலைத் தேடிய போது நாவல் அங்கு இல்லை. M. A மாணவி ஒருவர் இரவல் வாங்கியதாக அறியவந்தது. சில மாதங்கள் கழித்து அந்த மாணவியிடம் புத்தகத்தைக் கேட்டபோது தான் அதனை borrow செய்யவே இல்லை என்று சாதித்து விட்டார். அதற்கு மேல் என்ன செய்ய. நாவல் தொலைந்து போன ஏமாற்றம் தான் மிச்சம். அந்த நாவலை வாசிக்க முடியாவிட்டாலும் திருடி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதனை பார்வையிடும் எவருக்கும் ஏற்படும். அது ஆங்கிலத் துறையின் நூலக புத்தகமாக இருந்தாலும் தனக்கே சொந்தம் என்ற உரிமையில் ஆன எண்ணம்  புத்தகம் அங்கே அலமாரியில் இருக்கும் வரையில் இருந்தது. திருடப்பட்ட பின்பு பெருத்த இழப்பு கொஞ்சம் காலம் நிலவியது. அவ்வளவு காலம் மிகவும் பரிட்சயமான உயிர் உள்ள பொருள் சட்டென்று காணாமல் போனால் அந்தப் பொருளின் இல்லாமை உண்டாக்கும் வெற்றிடத்தைப் போன்று இருந்தது அந்த இழப்பு.  

அந்த இழப்பை எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியவில்லை. அதே போன்று அட்டைப் பட வடிவமைப்பு கொண்ட மற்றொரு பிரதி கிடைக்கும் பட்சத்தில் ஒரு வேளை அந்த இழப்பு ஈடுகட்டப்பட்டிருக்கலாம். மற்றொன்று கிடைக்காத வரை இழப்பு இழப்புதான். அதற்கான ஈடு செய்யும் சந்தர்ப்பம் ஒன்று ஒருமுறை வாய்த்தது. திருவல்லி்க்கேணி கோகுல் மேன்ஷனில் Ph. D ஆய்வுக்காக தங்கி இருந்த போது அந்த சந்தர்ப்பம் வாய்த்தது. நல்லதம்பி தெருவின் முடிவில் உள்ள பார்த்தசாரதி கோயில் தெற்கு ஆர்ச்சை தாண்டினால் Pycrofts Road. சாலை முழுவதும் செகன்ட் ஹேன்ட் புத்தக கடைகளில் பழுப்பேறிய புத்தகங்கள் குவியல் குவியலாக குமிந்து கிடக்கும். Pycrofts Road என்று சொன்னவுடன் ஒருவருக்கு அது சென்னையில் உள்ள ஏதோ சாலை ஒன்றின் பெயர் என நினைவுக்கு வந்தால் அவருக்கும் புத்தகங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றுதான் அர்த்தம். Pycrofts Road என்றாலே செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள். செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள் என்றாலே Pycrofts Road.  ’தே ஆர் சினானிம் ஃபார் ஈச் அதர்’. தற்போதைய நிலையில் நாற்பது ரூபாய்க்கும் ஐம்பது ரூபாய்க்கும் புத்தகங்களை வாங்கலாம் என்று சொல்வார்கள். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு விலை நிலவரம் புத்தகம் ஒன்றுக்கு 20/- மற்றும் 30/- ரூபாய். சொன்னவர்களின் பேச்சைக் கேட்டு ஒருமுறை புத்தகம் வாங்க சென்றது இன்றும் நினைவில் இருக்கிறது. பெரிய புத்தகம் ஒன்றை எடுத்து ”20/- ரூபாய்” என்று சொன்ன உடன் ”கெளம்பு” என்ற ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது. பேரத்தை ஆரம்பிக்காமலேயே வியாபாரத்தை முடித்துக் கொண்டார் அந்தக் கடைக்காரர்.  

பேருக்குத்தான் அவைகள் செகன்ட் ஹேன்ட் புத்தக கடைகள். புத்தகத்தின் ஒரிஜினல் விலை 400 என்றால் அதன் செகன்ட் ஹேன்ட் விலை 300 என்பார்கள். எந்த ஒரு கடையிலும் பேரம் பேசி புத்தகங்களை அவைகளுக்கான தகுதியான விலைகளில் வாங்கி விட முடியாது. அந்தக் காலத்தில் அப்படி வாங்கக் கூடிய சாமர்த்தியசாலி பேராசிரியர் ரஜானி ஒருவர் மட்டும்தான். அவர் புத்தகம் வாங்க செல்லும் போது அவருடைய சிஷ்ய பட்டாளம் பெருந்திரளாக உடன் செல்லும். ஒரு முறை நண்பர் டேவிட் வெஸ்லி சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை சரிதை புத்தகத்தை பார்த்து விட்டு விலையைக் கேட்டார். அதாவது செகன்ட் ஹேன்ட் புத்தகத்தின் விலையை. கடைக்காரப் பையன் புத்தகத்தின் பின் அட்டையின் விலையையப் பார்த்து அந்த செகன்ட் ஹேன்ட் புத்தகத்திற்கான ஒரிஜினல் விலையை சொன்னான். 

”புது புக்ஸ் விக்கறயா? இல்ல செகண்ட் ஹாண்ட் புக்ஸ் விக்கறயா? அத மொதல்ல சொல்லு”. என்று ஆரம்பித்தார் நண்பர்.  

நண்பருக்கும் கடைக்கார பையனுக்கும் பேச்சு முற்றி வாய் சண்டையாகிவிட்டது. சண்டையை தடுப்பதற்குள் ஒரு வழியாகி விட்டது. ஏற்கனவே சொன்னது போல எந்தப் பழைய புத்தகக் கடையிலும் புத்தக விலை 400 என்று இருந்தால் அதனை 40 ரூபாய்க்கு வாங்கிவிட முடியாது. எடுத்த புத்தகத்தை நூற்று ஐம்பது ரூபாய்க்கு வாங்கிவிட்டால் அதுவே வாழ்நாள் சாதனைதான். 

இதில் இரண்டு கடைகள் மட்டும் விதிவிலக்கு. முக்கியமாக சங்கீதா ஓட்டலுக்கு முன்பு இருக்கும் முண்டாசு தாத்தாவின் புத்தகக் கடை. அவர் ஒரு விலை சொல்வார் அதற்கு நேர் மாறாக நாம் ஒரு விலை சொல்வோம். நாம் சொல்லும் விலை எவ்வளவு குறைவாக இருந்தாலும் மேற்கொண்டு பேரம் பேசாமல்  "எடுத்துக்கோ" என்பார். தாத்தாவின் கடையை பார்வையிடாமல் வந்துவிட்டால் நமக்கு வேண்டிய முக்கியமான புத்தகத்தை அன்று மிஸ் பண்ணி விட்டோம் என்றுதான் அர்த்தம். ஒவ்வொரு முறையும் நமக்கான புத்தகம் நமக்கு தோதான விலைக்கு தாத்தாவின் கடையில் கிடைக்கும். 

அன்று எதேட்சையாக புத்தகங்களை பார்வையிடும் போது அழகிய வடிவமைப்பில் கெட்டி அட்டையினால் ஆன Ken Follettன் பெரிய நாவல் ஒன்று இருந்தது. அது Pillars நாவலாகத்தான் இருக்கும் என்ற ஆவலில் அருகில் சென்ற போது தலைப்பு வேறாக இருந்தது. நாவலின் விலையை தாத்தாவிடம் கேட்டபோது 200 என்று சொன்னார். அந்த கெட்டி அட்டைக்கு பேரம் பேசாமல் 200 ரூபாயே கொடுத்திருக்கலாம். கைவசம் இருந்தது வெறும் நூறு ரூபாய் தான். அவர் சொன்ன விலையில் நான்கில் ஒரு பகுதியாக ஐம்பது என்றவுடன், "எடுத்துக்கோ எடுத்துக்கோ" என்றார். பெருங்கருணை. 

வாங்கிய அந்த கெட்டி அட்டை நாவல் World Without End. Pillars நாவலுக்கு sequel. நெடு நாட்கள் அதனை வாசிக்காமல் வைத்திருக்க வேண்டியிருந்தது. பெருந்தொற்று காலகட்டத்தில்தான் அதனை வாசிக்க முடிந்தது. நாவலின் முக்கிய நிகழ்வாக Black Death (from 1374 to 1351) இடம் பெரும். நாவலின் black death கதையும் சரி அப்போது இருந்த நோய் தொற்றின் காலமும் சரி ஒன்றுக்கு ஒன்று புனைவும் யதார்த்தமும்மாக இசைந்து போய் விட்டன. யதார்த்தத்தில் பின்பற்றிய சமூக விலகலை நாவலில் கதையாக வாசிக்கும் போது யதார்த்தத்தைவிடவும் புனைவு அதிகம் அச்சம் தரக் கூடியதாக இருந்தது. பின்பு Ken Follettன் மற்ற வரலாற்று மற்றும் திரில்லர் நாவல்களை வாசிக்க நேர்ந்தது. இருந்தாலும் Pillars நிறைவேறாத கனவாகவே நீடித்தது. ஒருவேளை இந்த நாவலை வாசிக்காமலேயே கூட போயிருக்கலாம். இழப்பு ஒன்றும் நிகந்திருக்காது. Ken Follett வெறும் வெகுஜன எழுத்தாளர் தானே. 

இருப்பினும் இந்த வருடம் இதனை வாசித்தே ஆக வேண்டும் என்ற தீர்மானம், கங்கணம். இதனை வாசித்து முடிக்காவிட்டால் மற்ற இலக்கிய புத்தகங்கள் அனைத்தும் வாசிக்கப்படாமல் தேங்கி நின்றுவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. இந்த ஒன்றை மட்டும் வாசித்து முடித்துவிட்டால் அலமாரியில் உள்ள அனைத்து புத்தகங்களும் வெகு சீக்கிரத்தில் வாசிக்கப்பட்டுவிடும் என்ற அசட்டு நம்பிக்கை மற்றொரு பக்கம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட நாவல் ஒன்று வாசிக்கப்படாமல் போனால் பெரும் மனச்சுமைதான். 

நாவலை வாசித்து முடித்த தற்போதைய மனநிலையில் அலமாரியில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் கொஞ்சம் வாசிப்புக்கு எடை குறைவானவைகளாகத்தான் காட்சி அளிக்கின்றன. மேலும் ஆங்கிலதுறைக்கு வழங்கிய மானியத்தில் வாங்கப்பட்டு திருட்டுப்போன அந்த அழகிய வடிவமைப்பில் ஆன Pillars மீதான ஏக்கமும் ஒரு வழியாக தீர்ந்தது. 

சில நேரங்களில் கிளாசிக் நாவல்களை மிக சீக்கிரத்தில் வாசித்து விட முடிகிறது. கிளாசிக் படைப்புகளோடு ஒப்பிடும் போது  Popular புனைவுகள் கொஞ்சம் வாசிப்புக்கு எளிதானவைகள் என்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இந்த இருதரப்பட்ட புத்தகங்களின் மீதான வாசிப்பு என்பது ஒன்று கடினமானது என்றும் மற்றொன்று எளிதானது என்று கூறி இரு வாசிப்பு அனுபவங்களை மிகவும் தட்டையாக எளிமைப்படுத்துவிட முடியாது போலும். ஆனால் கிளாசிக் படைப்புகளை வாசிக்க ஒரு குறிப்பிட்ட மன நிலை தேவைப்படுகிறது. நினைத்த நேரங்களில் வாசித்து விட முடிவதில்லை. Popular நாவல்களை எந்த மன நிலையில் இருந்தாலும் அவைகளை வாசிக்க முடிகிறது. கிளாசிக் படைப்புகளை வாசிக்கும் போது அதுவரையில் வாழ்க்கையில் உணர்ந்திராத உண்ணத மன நிலை ஒன்று வாசகனுக்குள் உருவாகிறது. அதனை கிளாசிக் பிரதி மட்டுமே அளிக்க முடியும். Popular நாவல்களையும் நினைத்த மாத்திரத்தில் எடுத்து வாசித்துவிட முடியாது. ஆனாலும் அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மனநிலை வேண்டும் என்ற அவசியமில்லை. Ken Follett கிளாசிக்கின் உண்ணத மன நிலையை வாசகனுக்கு வழங்க உறுதி அளிக்காவிட்டாலும் அது சாத்தியப்படும் கிளாசிக் படைப்புக்கு வாசகனை ஏதோ ஒரு விதத்தில் அவனை தயார் செய்கிறார் என்று சொல்லலாம்.   

 


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...