பைத்தியங்கள் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Sunday, January 7, 2018

பைத்தியங்கள்

பைத்தியங்கள்
கரமசோக்களின் உலகத்தில் இருந்து தூர இருக்க வேண்டும் என்பது என்னுடைய தற்போதைய விருப்பம் அல்லது கட்டாயம். தாஸ்தாவஸ்கியின் நாவலில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை தூர தூக்கி எறிந்து நிம்மதி காணும் அனுபவம் நம்முடையது அல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு நடுக்கடலில் தூக்கி எறிகிறோமோ கடலலைகள் நம்முடைய அந்த எதிர்முகத்தை அதாவது கண்ணாடி போல் பிரதிபளிக்கும் முகத்தை துக்கிக் கொண்டு வந்து நம் கண் முன் வைத்து “பார் இதுதான் நீ” என்று மீண்டும் மீண்டும் நினைப்பூட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த காரணத்தினாலேயே தாஸ்தாவஸ்கியின் உலகத்தைக் கைவிட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இப்போது கோமாளித்தனம் நிறைந்த வகுப்புகளை எதிர்கொள்வதால் ஆத்திரம் சில நேரங்களில் என்னுடைய உறுதியான மன வலிமை சோதித்து கண்ணாடி போன்று சுக்கு நூறாக உடைக்கிறது. முற்றிலும் கோமாளிகளின் உலகமாக இந்த உலகம் மாறிக்கொண்டே வருகிறது போன்ற உணர்வு. மாணவர்களின் பைத்திய நிலையை சில நேரங்களில் புரிந்து கொள்வதற்கு யாராவது ஒருவரோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டுமே என முயற்சி செய்ததுண்டு. நினைவுக்கு எட்டிய ஒரே ஒரு முகம் பேட் மேனில் வரும் ஜோக்கர். கன்னங்களில் சிரிப்புத் தழும்போடு வரும் அந்த ஜோக்கரை “இழுத்து ஒரு அறை வைக்க வேண்டும் போல் இருக்கும்”. அதே மனநிலையின் உச்சத்தில் சில மாணவர்களிடம் அணுகும் போது ஏற்படுவதுண்டு.
ஜோக்கர் ஒரு ஒப்பீட்டுக்கான நிலையில் தான் இருக்கிறான். எனக்கு தேவை தீர்வு. அல்லது மனதிற்கு நிம்மதி அளிக்கக் கூடிய பதிலாக இருக்க வேண்டும். அது தீர்வைக் கொண்டுள்ளதா என்பது பொருட்டே அல்ல. நமக்குத் தேவையானது நம் மனதை அமைதிப் படுத்தும் ஒரு பதில். ஜோக்கர் அதற்கு சரிபட மாட்டார். ஏன் எந்த ஐரோப்பிய சீரியஸ் மற்றும் காமெடியனின் முகமும் நமக்கு ஒருபோதும் பதிலை அல்ல முடிவற்ற தேடலிலேயே நம்மை தத்தளிக்க விட்டுவிடுகிறார்கள்.
மாணவர்களின் பைத்தியக்காரத்தனம் கரமசோவ் சகோதர்கள் நாவலில் வரும் ஒரு இடத்தை நினைவூட்டுகிறது. அந்த பகுதிக்கு பொருத்தமற்ற சந்திப்பு என தாஸ்த்தாவஸ்கி பெயரிட்டிருப்பார். அப்பாவுக்கும் மூத்த மகனுக்கும் இடையில் கொடுக்கள் வாங்கள் பிரச்சனை. பணத்தை தரவே மாட்டேன் என்கிறார் அப்பா கரமசோவ். மகன் டிமிட்ரி கரமசோவ் அப்பாவையே அடித்துக் கொல்லும் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிடுகிறார். அந்த ஊர் துறவி சோசிமோவிடம் பிரச்சனைக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இருக்கும் பெரிய மனிதர்களைக் காட்டிலும் சோசிமோவுக்கே அப்பா கரமசோ செவிகொடுப்பார் என்பது அவர்கள் எதிர்ப்பார்ப்பு.
துறவி சோசிமோவின் அறையில் பொருத்தமற்ற சந்திப்பு நடக்கிறது. ஆம் அது பொருத்தமற்ற சந்திப்புத்தான். இதுதான் அந்த சந்திப்பின் கோர்வை: ஒரு புனிதத்துறவி, சாதுவான இளையவன் அல்யோசியா கரமசோவ், கோமாளி அப்பா கரமசோவ், மூர்க்கன் டிமிட்ரி கரமசோவ், அறிவாளி இவான் கரமசோவ். எத்தனை வகைகள். அனைவரும் ஒன்று சேர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காண வந்திருக்கிறார்கள். அப்பா கரமசோவின் கோமாளித்தனம் அனைவரையும் சங்கடத்திற்குள் ஆழ்த்துகிறது. துறவி சோசிமோவையே கேளி செய்யும் அளவிற்கு கோமாளித்தனம் நாகரிகத்தை மறந்துவிடுகிறது. அவையில் இருக்கும் அனைவருக்குமே அந்த கோமாளித்தனத்தின் மீது கடும் வெறுப்பு ஏற்படுகிறது.
ஆத்திரம் எல்லையைத் தாண்டி சொந்த அப்பாவையே அடிக்கும் அளவிற்கு டிமிட்ரி தன் நிலையை இழந்துவிடுகிறான். அப்பா கரமசோவின் மீது அனைவருக்கும் ஆத்திரம்தான் அதில் டிமிட்ரி மாத்திரம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறான். அமளி அடங்கிய பின்பு துறவி சொசிமோ அமைதியாக எழுந்து டிமிட்ரியிடம் சென்று அவன் காலில் விழுந்து மன்னிக்கும் படி கூறுகிறார். ஏன் டிமிட்ரி மாத்திரம் மண்ணிக்க வேண்டும். கரமசோவ் ஏன் திருந்த கூடாது. திருந்தும் படி ஏன் கரமவோவ் அறிவுறுத்தப்படவில்லை.
கோமாளித்தனத்தின் உச்சத்தில் இருக்கும் மாணவர்களை இந்த கரமசோவ் போன்றே நான் பாவித்துக் கொள்கிறேன். மற்ற பேராசிரியர்களின் கோபம் வெடித்து சிதறுவதில்லை. எனக்கு மாத்திரம் நரம்புகள் பாதிப்படையும் அளவிற்கு கோபம் இந்த கோமாளிகளை திருத்த வேண்டும் என அவர்களை திட்டும் போது உச்சத்திற்கு சென்று வெடித்து சிதறுகிறது.
ஞானி சொசிமோவ் மன்னிக்கும் படி சொன்னது யாருடைய நலனுக்காக? கரமசோவுக்கா? அல்லது டிமிட்ரிக்கேவா? என்னுடைய தற்போதைய அனுபவத்தில் அது நிச்சயம் டிமிட்ரியின் நன்மைக்காகத்தான் என இப்போது விளங்கிக் கொள்கிறேன். அநீதியின் மீதான கோபம் நியாயமானது. ஆனால் இந்த கோமாளிகளின் மீதான கோபம் அர்த்தமற்றது. கோமாளித்தனம் நம் சுயக்கட்டுப்பாட்டை இழக்கும் படி செய்துவிடுகிறது. ”அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே” என்பதை விட்டு ”கோமாளிகளைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே” என பாட வேண்டும் போல் இருக்கிறது.
பொதுவாக கோமாளித்தனம் நம்மை சிரிப்பூட்டுவதறக்காக இருக்கிறது. அது அரசர்கள் அவையோடு முடிந்து விட்டதோ என தோன்றுகிறது. இப்போது இருக்கிற  கோமாளித்தனம் மிகவும் ஆபத்தானது. அது என்னவோ நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறது. பாதிக்கப்படுவது நாம்தான்.

இப்போதெல்லாம் வகுப்பறையில் நான் கோபப்படும் போதெல்லாம் ”மன்னித்து விடு, தயவு செய்து மன்னித்துவிடு. உன்னுடைய நலனுக்காகவாவது நீ அந்த கோமாளியை மன்னித்துவிடு’ என சொல்வது போல் இருக்கிறது.  இப்போது அந்த பொருத்தமற்ற சந்திப்பை நினைக்கும் போது அந்த ஞானியின் போதனையே நினைவுக்கு வருகிறது. ஞானி சொல்லும் சொல் மிகவும் அர்த்தம் வாயந்தது. அது தற்போதைய விளைவைப் பற்றி பேசாமல் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏற்படப்போகும் மிக விபரீதமான விளைவை தவிர்க்கவே காலத்தை தாண்டி தூரத்தில் நடக்கப்போகும் பின்விளைவைப் பற்றி கவலைப்படுகிறது. அந்த அல்யோஷா மாத்திரம் எப்படி சலனமற்று இருக்கிறானோ.
பைத்தியங்கள் Reviewed by Arul Scott on 7:35 AM Rating: 5 பைத்தியங்கள் கரமசோக்களின் உலகத்தில் இருந்து தூர இருக்க வேண்டும் என்பது என்னுடைய தற்போதைய விருப்பம் அல்லது கட்டாயம். தாஸ்தாவஸ்கியி...

No comments: