Friday, February 16, 2018

குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி


குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி
என்ன தப்பு செய்தார் என் கட்சிக்காரர் என்று வட்டசெயலாலர் வண்டு முருகன் மேடையில் முழங்குவார். பேச்சு வீராவேசமாக இருக்கும். அடிவாங்கியது அவர்தான் வேறு யாரும் கிடையாது. கூட்டத்தில் இருந்து இருவர் அதைச் சுட்டிக்காட்டி”இவந்தான் எங்கியோ செமத்தியா வாங்கியிருக்கான்” என்று சிரித்துக் கொள்வார்கள். வண்டுமுருகனும் அதை பொருட்படுத்தாமல் கண்டனக் குரலை மேலும் அதிகமாக்குவார். செய்தி என்னவெனில், மாபெரும் தத்துவங்களுக்கு பின்னால், வீர வசனங்களுக்கு பின்னால் ஒரு மூத்திரச்சந்து அனுபவம் நிச்சயம் இருக்கும். இல்லாமல் போகாது. மூத்திரச்சந்து தத்துவவாதிகளையும், இலக்கியவாதிகளையும், பெரும் பிரபலங்களையும் உருவாக்கியிருக்கியிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.


அதுமுதல் (எதுமுதல்?) இதுதான் குற்றத்தைப் பற்றிய என்னுடைய தெளிவு:       
சம்பவம் ஒன்று நிகழ வேண்டும். அச்சம்பவமே குற்றத்திற்கான சாட்சியம். எதுவுமே நிகழாவிடில் வெறும் கையை வைத்துக் கொண்டு நடந்த குற்றம் இதுதான் என முழம் போட முடியாது. ஏதாவது நடந்து இரத்த காயம் ஏற்பட வேண்டும். ஊருக்கே வெட்ட வெளிச்சமாக இதுதான் நடந்தது என அது காட்சியாக வேண்டும். அப்போது சம்பவங்களே சாட்சியங்களாக மாறிவிடுகின்றன. மற்றபடி குற்றம் நியாயமாகவும் நியாயம் குற்றமாகவும் வாதத்தில் மாறி மாறி தோற்றமளிக்கும். நம் மனக்கண்களும் எது குற்றம் எது பரிதாபம் என தெளிவாக கண்டுபிடிக்க மறுக்கிறது. சில நேரங்களில் குற்றம் செய்த ஒருவர் பரிதாபமாக ஐயோ பாவம் போன்று நம்பும்படி தோன்றுகிறார். கூட்டத்தில் தவறு செய்யாதவர்கள் நேரம் பார்த்து மாட்டிக் கொள்கிறார்கள். குற்றத்தின் இருப்பு நிலையை நம்மால் ஒருபோதும் நெருங்கவே முடியாதோ என தோன்றுகிறது.
உண்மையான குற்றத்தையோ குற்றவாளியையோ ஒருபோதும் சட்டத்தைக் கொண்டு அருகில் செல்லவே முடியாது போல. சட்டம் தன்னில் தான் செயலற்றது. அதனை செயல்படுத்துகிறவருக்கு அதனை கையில் எடுத்து எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு இருக்கிறது என்பதும் கேள்விக்குறியது. அப்பட்டமான குற்றத்தினிடம் ஒருவரும் ஒருபோதும் நெருங்கியதில்லையோ என பல நேரங்களில் யோசிக்கவும் வேண்டியிருக்கிறது. அருகில் நெருங்கும் போது ஒன்று சாட்சியம் தேவைப்படுகிறது அல்லது குற்றம் தன்னை பரிதாபம் போன்று காட்டிக் கொண்டு தப்பித்து விடுகிறது.
இதைவிட மிக சிக்கலான விசயம் எதுவெனில் தண்டிக்கும் ஒருவர் போதுமான சாட்சியம் கிடைக்காதவரை செயலில் இறங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தவறு செய்தவரை தண்டிக்க போதுமான சாட்சியம் கிடைக்கும் போது மாத்திரமே தண்டிப்பவருக்கும் தைரியம் ஏறபடுகிறது. ஒருவரை குற்றவாளி என தீர்ப்பதற்கு அநேக வலைகள் வீசப்பட வேண்டியிருக்கிறது. கையும் களவுமாக அவர் மாட்ட வேண்டும். அதனால் தான் என்னவோ “இரண்டு பேருடைய சாட்சியங்களாவது அவசியப்படுகிறது” என்கிறார்கள்.
தண்டனை அளிக்க நீதிபதியும், சாட்சியத்திற்கு இரண்டு மூன்று பேரும், இவை எல்லாவற்றிற்குமான மூலாதாரமான குற்றவாளியும் இருக்கும் போதும் கூட ஒரு நெருடல் “குற்றம் நடந்திருகாமல் இருந்திருக்கக் கூடுமோ” என. இது நன்மனசாட்சிக்காரர்களுக்கு. ஒருவருக்கு கேஸ் வேண்டும், மற்றொருவருக்கு தான் பாதிக்கப்பட்டதால் எப்படியாவது தீங்கிழைத்தவரை மாட்டிவிட வேண்டும். தீங்கிழைத்தவரோ சட்டத்தின் சூட்சமம் நன்கு தெரிந்தவர். கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ”இல்லையே? நான் செய்யவில்லையே?” என அண்ட புலுகை சத்தியம் செய்து சாதித்துவிடுகிறார் . இந்த மூன்று பேருமே எதோ ஒரு விதத்தில் தங்கள் நிலைபாட்டில் இருந்து தவறியவர்கள்.
தண்டனை கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது ஒருவருடைய பயம். தன்னை பாதுகாத்துக் கொள்ள எத்தனை பாதுகாப்பு வளையங்கள் தேவையானதோ அத்தனையையும் அந்த தண்டனை என்ற கையெழுத்து பத்திரத்தை சுற்றிலும் பாதுகாப்பு அரணாக வைத்துக் கொள்பவர் இன்னொருவர். இதில் துணிந்து ரிஸ்க் எடுப்பவர் யார் என்பதுதான் கேள்வி.
 இந்நிலையில் தேவையில்லாமல் ஆஜர் அவதோ அல்லது ஜகா வாங்குவதோ நம் மனசாட்சிக்கு நேர் விரோதமான செயல்கள். சம்பவம் நிகழட்டும் தானாக குற்றவாளி எந்தவிதமான சாக்கு போக்குக்கு இன்றி மாட்டிக்கொள்வார். எதையுமே சம்பவம் நடந்த பின்புதான் செய்யவேண்டும். சம்பவம் நடக்காமல் எதிலும் தன்னார்வமாக இறங்கக் கூடாது OK. அப்படி மீறி வக்காளத்து வாங்கினாலோ, அல்லது ஒருவரை குற்றம் சாட்டினாலோ மாட்டிக் கொள்வது நாம் தான். பொறுமையோடு காத்திருக்க வேண்டும். கல்ப்ரிட் தானாக மாட்டிக் கொள்வார்.
சம்பவம் நடந்தால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டாக வேண்டுமே? ரத்தக்காயம் வேறு. பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா? எல்லாம் சரிதான். தலையிட்டு தடுத்தால் பிரச்சனை ஒருபோதும் முடிவுக்கு வராது. நமக்கு பிரச்சனையைக் கண்டுபிடிப்பது மிக எளிது. பிரச்சனை செய்தவரைத்தான் நம்மால் ஒருபோதும் நெருங்க முடிகிறதில்லையே. ஐம்பது மாணவர்கள் இருக்கும் வகுப்பறையில் கைகலப்பு நடக்கிறது என வைத்துக் கொள்வோம் பிரச்சனையை தீர்க்க அதற்கு காரணமானவரை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. நூற்றில் தொண்ணூறொன்பது சதவீதம் அப்பாவிப் பிள்ளைகள்தான் மாட்டிக் கொள்கிறார்கள். வாலண்டரியாக மாட்டிக் கொள்பவர்கள் இவர்கள். பிரச்சனைக்கு மூல காரணம் கமுக்கமாக ஓரத்தில் ஒதுங்கி விடும். இப்படி சொல்லலாம்; அசுத்த வாயுவை மிக நாசூக்காக சத்தமின்றி வெளியேற்றுபவர்கள் இந்த அமுக்கிகள். அசுத்தமற்ற கெட்ட வாயு எப்போதுமே சத்தமாகத்தான் வெளியேறும். சத்தம் கேட்டவுடன் இவன் தான் பிடியுங்கள். சட்டம் தன் கடமையை செய்கிறது. அதற்காகத்தான் சொல்வது அதுபாட்டுக்கு பிரச்சனை தன் வேலையை பார்த்துக் கொண்டு ஒரு முட்டுசுவற்றில் போய் முட்டிக் கொள்ளட்டும். பின்பு ஜவாப்தாரி நாம் கிடையாது.
பிரச்சனைகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனை களைய முற்படுவது அசட்டுத்தனம். சத்தமின்றி வாயு வெளியேறட்டும். முகம் காட்டி கொடுத்துவிடும். அதுதான் பிரச்சனையைத் தீர்க்க நமக்கிருக்கும் சம்பவம்.    

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...