Monday, September 18, 2017

விரியும் கனவுகளும், உருகும் மெழுகுச்சிறகுகளும்


அவனுக்கு மெழுகுச் சிறகுகள் கொடுக்கப்பட்டன. பறப்பதற்கான சுதந்திரம் அது. அதைக் கொண்டு எவ்வளவு அகலத்திற்கு வேண்டுமானாலும் அவன் பறக்கலாம். அதிக உயரம் மாத்திரம் கூடாது. எச்சரிப்பு அவன் தந்தையிடம் இருந்து வந்தது. செய்யாதே என்று சொல்லும் போதுதானே அதை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. அதுவே மனித இயல்பு. Icarus உயரத்தின் எல்லையை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எச்சரிக்கையை தடையாகக் கருதாமல் தடையை விசாசலமான வாசலாகக் கருதி மெழுகு றெக்கைகளை படபடத்துக் கொண்டு மேல் நோக்கி இன்னும் அதிகம் இன்னும் அதிகமாக பறக்க ஆரம்பித்தான். கனவுகள் இன்னும் விரிய ஆரம்பித்தன. இன்னும் மேலும் மேலும் செல்ல உயர பறக்க ஆசை உந்தித் தள்ளியது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மெழுகு வெப்பம் தாளாமல் உருக ஆரம்பித்துவிட்டது. சிறகுகள் உருகிக் கொண்டே அவன் பூமியின் மீது இறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் பூமியை நெருங்கும் போது பூமியின் குடிகள் அனைவரும் அந்த வீழ்ச்சியின் காட்சியை கண்டு கொண்டிருந்தனர். அன்று அந்த காட்சிக்கு பார்வையாகத கண்கள் எதுவும் கிடையாது. அவர்களுக்கு இருந்த ஒரே விசேஷித்தக் காட்சி அந்த வீழ்ச்சி மாத்திரமே. அந்த சம்பவத்தை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் சம்பவமாக அவர்கள் கதையில் அமரத்துவம் பெற செய்தனர். மெழுகு சிறகுகளும், அவன் தந்தையின் அறிவுறுத்துதலும், அவனுடைய கீழ்படியாமையும் காலம் காலமாக அன்றிலிருந்து கதையாக மக்களுக்கு சொல்லப்பட்டு வந்தன.
Icarusன் கனவு இலட்சியத்தை நோக்கிய கனவு. அதுவே அவனுக்கு பெரிதாகப் பட்டது. அவன் மற்றவர்களைப் போல பூமியின் மீது ஊர்ந்து கொண்டிருக்க விருப்பம் இல்லை. தான் இருக்கும் பூமி அவனுக்கு பிடித்தமானதாக இல்லை. மற்றொரு உலகை கண்டடைய விரும்பினான். போதாமை இதுதான்: மெழுகுச் சிறகு அவனுடை இலட்சிய உலகத்திற்கு ஒருபோதும் அழைத்துச் செல்லவே செல்லாது. அவனுக்கு என்று எல்லை ஓன்றை அந்த மெழுகு அவனுக்கு நினைப்பூட்டிக் கொண்டே இருந்தது. “உன் கனவுகள் வானத்துக்கு ஏறுவதாக இருக்கலாம். என்னைக் கொண்டு நீ அதனை அடைய முடியாது. அதற்கு வேண்டியது அக்கினிச் சிறகுகள். முடிந்தால் அதனை நீ கண்டுபிடித்துக் கொள். அப்படியே நீ அதனை கண்டடைந்தாலும் அதனை தாக்கிக் கொள்ளும் ஆற்றல் உன் உடலுக்குக் கிடையாது. நீ இந்த பிரபஞ்சத்தில் ஒரு எல்லைக்குள் ஆட்பட்டவன் என்பதை நினைவில் கொள். என்னுடைய ஆற்றலே உன்னுடைய பயணத்தின் எல்லை. உன் கனவுகள் அல்ல. என்னுடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு உன் கனவுகளின் எல்லையை மட்டுப்படுத்திக் கொள். பத்தாம் வகுப்புத்தான் என் ஆற்றல் என்றால் அதோடு நிறுத்திக் கொள். பன்னிரெண்டு என்றால் அதுதான் உன்னுடைய எல்லையும் கூட. அதற்கு மீறி மருத்துவம் அது இது என கனவு காணாதே. உன்னிடம் இருப்பது அக்கினிச் சிறகுகள் அல்ல. மெழுகாகிய நான் தான். எல்லையை மீறினால் அதிகார வெப்பத்தை தாக்குபிடிக்க என்னால் முடியாது. உருகிவிடுவேன். நீ இறந்து போவாய்.”
அன்று Icarus வீழ்ச்சி இந்த முழு பூமியின் குடிகளுக்கே காட்சிப் பொருளாக இருந்தது. பண்டைய ஓவியம் ஒன்று இந்த வீழ்ச்சியை சித்திரப்படுத்துகிறது. அதில் உழவன் தன் ஏரை நிறுத்திவிட்டு அந்த காட்சியைக் காண்கிறான். கப்பலில் பயணிக்கும் மாலுமிகள் Icarus கடலில் வீழ்ந்து கிடக்கும் காட்சியைக் காண்கிறார்கள். முழு உலகமே ஸ்தம்பித்துப் போய் அவனையே உற்று நோக்கினர். அந்த இலட்சியவாதியின் வீழ்ச்சி அன்றைக்கு அனைவருக்குமான ஈர்ப்பு மற்றும் பேசு பொருள்.
இதே காட்சியை நவீன கலைஞன் ஒருவன் சித்திரப்படுத்துகிறான். முந்தைய ஓவியத்தின் மையாம் Icarus. நவீன ஓவியம் அந்த மையத்தை இல்லாமல் செய்துவிடுகிறது. பார்க்கிற நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. யாரோ ஒருவர் வந்து இந்த படம் Icarusன் வீழ்ச்சி என்று சொல்லுகிறார். நாமும் துணுக்குற்றவர்களாக எங்கே எங்கே என்று அவனை படத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம். Icarus என்ற மையமும் அவனுடைய வீழ்ச்சியும் கதையில் இல்பொருளாக்கப்படுகிறது. ஏன் இந்த கண் கட்டி வித்தை.
நம்முடைய பார்வைக்கு அந்த சிறிய பையனுடைய இருப்பு தெரிவதில்லை. அதற்கான முக்கியக் காரணம் ஓவியத்தின் பிரச்சனை, ஓவியத்திற்கு வெளியில் இருந்து பார்க்கும் நம்மிடம் இல்லை. அது ஓவியத்திற்கு உள்ளேயே இருக்கிறது. மையம் இல்லாமல் ஆனது ஓவியத்தில் இருக்கும் சுற்றுவட்டம் தன் செயல்பாட்டை சரிவர செய்யாததுதான். மையம் Icarus என்றால் சுற்றுவட்டம் உழவனும், மாலுமிகளும் ஆவர். அவர்கள் Icarusஐ பார்க்க வேண்டும். அவனைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டும். நவீன ஓவியத்தில் இருக்கும் அந்த உழவனுக்கு அந்த வீழ்ச்சி பொருட்டே அல்ல. அவனுக்கு அவன் பிழைப்புதான் முக்கியம். கடலைப் பார்ப்பதற்கு பதில் தான் உழுவதிலேயே நோக்கமாக இருக்கிறான். உழவு மாட்டை இன்னும் கொஞ்சம் அதட்டி உழவைத் தொடர்ந்தால் பொழுது சாய்வதற்குள் அந்த துண்டு நிலத்தையாவது முழுவதும் உழுது முடித்துவிடலாம். தேவையில்லாமல் யாரோ ஒருவனுடைய வீழ்ச்சியை ஏன் பார்க்க வேண்டும் அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்.

ஒரு Icarus விழுந்தால் பரவாயில்லை. எத்தனை வீழ்ச்சிகள். அனைத்து வீழ்ச்சிகளும் இலட்சியக் கனவின் வீழ்ச்சி என்று சொல்லிவிட முடியாதே. பேராசையில் ஒருவன் நான் வானத்துக்கு ஏறுவேன் என்று உயர சென்று விழுந்தான். பழத்தை புசிக்காதே என்று சொல்லியும் மற்றொருவன் அதை மீறி புசித்து சிங்காரத் தோட்டத்தில் இருந்து விழுந்தான். இந்த உலகம் எத்தனை வீழ்ச்சிகளை இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருக்கும். நம் வேலையை பார்ப்போம். அக்கினிச்சிறகாம் அக்கினிச்சிறகு. அதை வைத்துக் கொண்டு கனவு வேறு காண வேண்டுமாம். இனி நம்மால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...